தேடல்!

நடுவணரசில் இந்தி & இந்துமத வெறியர்களின் ஆதிக்கம் நீடிக்கும்வரை இந்தியும், இறந்த மொழி சமஸ்கிருதமும் போற்றப்படுவதும் நீடிக்கும்!

Mar 25, 2017

ஒரு ‘பத்து’ ரூபாயும் புத்தி கெட்ட நானும்!

இந்தத் தலைப்பின் கீழ் வெளியாகியிருந்த பொழுதுபோக்குப் பதிவு, மீண்டும் மீண்டும் வாசித்ததில் எனக்கு மன நிறைவு தராததால் அதைப் பின்னுக்குத் தள்ளி, பழைய ‘பாக்யா’ இதழில் வெளியான என் சிறுகதையை இணைத்திருக்கிறேன். இது நெஞ்சை உருக்கும் தரமானதொரு படைப்பு. நம்பிக்கையுடன் நீங்கள் வாசிக்கலாம். நன்றி.

கதைத் தலைப்பு:      சுகுணா தூங்குகிறாள்!

“இன்ஸ்பெக்டர் இளங்கோ ஃபோன் பண்ணினார். கரூர் பக்கம் நடந்த சாலை விபத்தில் சிக்கிய ஒரு பெண்ணை ஆஸ்பத்திரியில் வெச்சிருக்காங்களாம். போய்ப் பார்க்கச் சொன்னார். கிளம்பலாமா சுகுணா?”

சதை வற்றி, சருமம் கறுத்து, கண்கள் குழிந்து, வாடி வதங்கிய கீரைத் தண்டுபோல் தரையில் சுருண்டுகிடந்த முன்னாள் அழகியான என் மனைவியிடம் மிகுந்த தயக்கத்துடன் கேட்டேன்.

அவளிடமிருந்து பதில் இல்லை.

அவள் உண்ணும் உணவும் உறங்கும் நேரமும் சுருங்கிவிட்டது போல உரையாடுவதும் சுருங்கிவிட்டது.

ஊட்டிவிட்டால் மட்டுமே நான்கு கவளம் உள்ளே போகிறது. தாகம் எடுக்கிறதோ இல்லையோ தண்ணீர் பருகுவதுகூடக் குறைந்துவிட்டது.

ஒட்டுமொத்த உடம்பும் உலர்ந்த நிலையில், வறண்டுபோன தொண்டையைக் கடந்து வார்த்தைகள் வெளிவருவது அரிதாகிவிட்டது.

“இன்ஸ்பெக்டர் இளங்கோ ஃபோன் பண்ணினார். கரூர் பக்கம் நடந்த சாலை விபத்தில் சிக்கிய ஒரு பெண்ணை ஆஸ்பத்திரியில் வெச்சிருக்காங்களாம். உடம்பு சிதைஞ்சிருந்தாலும் பார்வைக்கு நம்ம பொண்ணு மாதிரி தெரியுதாம். போய்ப் பார்க்கச் சொன்னார். கிளம்பலாமா சுகுணா?” -குனிந்து, அவளின் காது மடலில் உதடு பொருத்தி, வார்த்தைகளில் உரமேற்றி மீண்டும் ஒரு முறை சொன்னேன்.

என் வார்த்தைகளை அவள் உள்வாங்கியிருக்க வேண்டும்.

“என்ன சொன்னீங்க? இளங்கோ ஃபோன் பண்ணினாரா? நம்ம சுதாவைக் கண்டுபிடிச்சிட்டாங்களா?” என்று எழுந்து உட்கார்ந்தாள்.

ஆறு மாதம் போல செத்துச் செத்துப் பிழைத்து உருக்குலைந்து போயிருந்த அவளின் மெலிந்த தேகத்தில் அத்தனை பலம் எங்கிருந்து வந்ததோ, என் தோள் பற்றி உலுக்கி, “புறப்படுங்க போகலாம்” என்றாள்.

“முகம் கழுவி சேலை மாத்திட்டு வாம்மா.”

இரண்டே நிமிடங்களில் தயாரானாள்.

காரில் புறப்பட்டோம். வழக்கத்திற்குச் சற்றே கூடுதலான வேகம்.

“ஏங்க, நம் பொண்ணுக்கு விபரீதமா ஏதும் நடந்திருக்காதுதானே?”

தினம் தினம் எனக்கு நானே கேட்டுக்கொண்டு, விடை தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கும் கேள்வி இது. என்னவளுக்கு நான் என்ன பதில் சொல்வேன்?

சொன்னேன்: “கடவுள் நம்மைக் கைவிட மாட்டார்.”

“கை விட்டுட்டா அப்புறம் அந்தக் கடவுளை நான் கும்பிடவே மாட்டேங்க.”

படுத்த படுக்கையாகக் கிடந்தாலும் தினமும் பத்து நிமிடமாவது தியானம் பண்ணத் தவறாத என் சுகுணாதான் இப்படிச் சொன்னாள். மகளைத் தொலைத்த துக்கத்தில், ‘உண்டு, இல்லை’ என்று தலை மட்டும் அசைத்தவள் இன்றுதான் முழு வாக்கியம் பேசுகிறாள்.

ஆறு மாதம் முன்பு, கல்லூரியிலிருந்து வீடு திரும்பும்போது ரவுடிகளால் காரில் கடத்தப்பட்டாள் எங்கள் ஒரே மகளான சுதா. அன்றிலிருந்து சுகுணா வேண்டாத தெய்வம் இல்லை. செலுத்தாத காணிக்கை இல்லை.

“கடவுளே, இந்தப் பிறவியில் மனசறிஞ்சி நாங்க யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யல; பாவ காரியங்கள் பண்ணல. பூர்வ ஜென்மங்களில் பண்ணியிருந்தா, அதுக்கான தண்டனையை இப்பவே எங்களுக்குக் கொடுத்துடு. மிச்சம் மீதியிருந்தா அடுத்து வர்ற பிறவிகளில் அனுபவிச்சித் தீர்த்துடுறோம். நாங்க உயிருக்கு உயிரா நேசிக்கிற எங்க சுதாவை மட்டும் தண்டிச்சிடாதே. எந்தவித பங்கமுமில்லாம எங்களோடு சேர்த்துடு.” தினமும் இப்படி வேண்டினாள்.

மாதம் ஆயிரம் ஏழைகளுக்கு அன்னதானம் பண்ணுவதாகவும் அனாதை இல்லங்களுக்கு உதவுவதாகவும் கடவுளின் சந்நிதிகளில் சத்தியம் பண்ணினாள்.

ஆரம்பத்தில், கண்ட கண்ட தெய்வங்களிடம் கோரிக்கை வைப்பதே வேலையாகிப் போனவள், நாட்கள் செல்லச் செல்ல, ஒட்டுமொத்த நம்பிக்கையும் உடைந்து சிதற, முழு நேரமும் படுக்கையில் ஒடுங்கிவிட்டாள். நான் நடைப்பிணம் ஆனேன்.

எங்கள் சுதா கடத்தப்பட்டபோது, அவள் தோழி தரங்கிணி மட்டுமே உடனிருந்தவள். கடத்திய ஆட்களை அடையாளம் சொல்லியிருக்கிறாள். காரின் எண் பார்க்கத் தவறிவிட்டாள்.

அவர்கள் ரவுடிகள் என்பது போலீசாரின் அனுமானம். ஆனால், வேறு துப்பு எதுவும் கிடைக்கவில்லை. இங்கே விபத்து; அங்கே அனாதைப் பிணம் என்று சொல்லி எங்களை அலைக்கழித்த காவல்துறை இப்போது மௌனம் சுமந்திருந்தது.

நானும் சுகுணாவும் உறவினர்களின் துணையுடன் ஊர் ஊராகத் தேடினோம். பலன் மட்டும் பூஜ்யம்.

மனம் பேதலித்து, என் சுகுணா மரணப் படுகுழியில் விழுந்துகொண்டிருந்தாள். “தற்கொலை பண்ணிக்கலாம்னு இருக்குதுங்க.” வார்த்தை வார்த்தையாய் முனகி, கொஞ்ச நாளாய் என்னைக் குலை நடுங்கச் செய்கிறாள்.

மகளைத் திருடு கொடுத்துத் தவிக்கும் நிலையில் என் மனைவியையும் இழந்துவிடுவேனோ?

எந்த வகையிலும் ஆறுதல் பெற முடியாத அவல நிலையில், கனத்த சோகம் சுமந்து, என் மிக நெருங்கிய நண்பரான காவல்துறை அதிகாரி இளங்கோவைச் சந்தித்தேன்.

ருத்துவமனை.

கைத்தாங்கலாக சுகுணாவை மருத்துவமனைக்குள் அழைத்துச் சென்றேன்.

ஒவ்வொரு வார்டாக ஒதுக்கி, ஆப்ரேசன் தியேட்டரை நோக்கி நடந்தோம்.

“சொல்லுங்க, சுதா எப்படீங்க இருக்கா?” குரலில் பரிதாபம் பொங்கக் கேட்டாள் சுகுணா.

“அவளைப் பார்க்கத்தானே போறோம்...வா சுகுணா.”

அவளின் தோள்களை அழுந்தப் பற்றி அணைத்து, தியேட்டருக்குள் அழைத்துப் போனேன். அங்கே, என் காவல்துறை நண்பருக்கு நண்பரான டாக்டர் காத்திருந்தார்.

“சுகுணா, மனதைத் தேத்திக்கோ. நம்ம சுதா செத்துட்டாம்மா...”

சொல்லிக்கொண்டே, ஸ்ட்ரெச்சரை நெருங்கி, போர்த்தப்பட்டிருந்த வெள்ளைத் துணியை விலக்கி, பிணத்தின் இடது முழங்கையை ஒட்டியிருந்த சற்றே பெரிதான மச்சத்தைத் தொட்டுக் காட்டினேன்.

அதைப் பார்க்கும் நிலையில் சுகுணா இல்லை. அவள் மயக்க நிலையில் துவண்டு என் தோளில் சரிந்திருந்தாள்.

ப்போதெல்லாம், “என் மகளைக் கடத்திப் போய் எங்கே வெச்சிருக்காங்களோ..... காலிப் பசங்க அவளை எப்படியெல்லாம் சித்ரவதை செய்யுறாங்களோ.....ஐயோ....” என்று சொல்லி, உருகி மருகி என் சுகுணா நொறுங்கிப் போவதில்லை.

முழுப்பட்டினி என்ற நிலையைத் தாண்டி, ‘பரவாயில்லை’ என்று சொல்லுமளவுக்குச் சாப்பிடுகிறாள். ஒரு நாளைக்கு நான்கைந்து மணி நேரமாவது தூங்குகிறாள். இனி, அவள் பிழைத்துவிடுவாள். ஆனால், நான்.....

தினம் தினம் தனிமையில் கிடந்து அழுகிறேன். மலராய், மருக்கொழுந்தாய், இளம் மானாய், மயிலாய் வலம் வந்து எங்களை மகிழ்வித்த எங்கள் செல்ல மகள், கயவர்களின் பிடியில் என்ன பாடு படுகிறாளோ என்று எண்ணி எண்ணி மனம் பேதலித்துக்கொண்டிருக்கிறேன். சிதைந்து, சிறுகச் சிறுக அழிந்துகொண்டிருக்கிறேன்.....

........ஒரு அனாதைப் பிணத்தின் இடது முழங்கை அருகே செயற்கையாய் ஒரு மச்சத்தை உருவாக்கி, டாக்டரின் உதவியோடு அருமையாக ஒரு நாடகம் நடத்தி, என் சுகுணாவை நம்ப வைத்துத் தேற்றினேனே, அது போல என்னைத் தேற்ற யாரிருக்கிறார்கள்?

===============================================================================

     பொழுதுபோக்குக் கதை[பொழுது போகாதவர்களுக்கு]

“அடுத்தவன் காசு நமக்கு வேண்டாம்” - எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.

ஐந்தாறு முறை சொல்லி முடித்த பிறகு, அரை மனதுடன் கையிலிருந்த பத்து ரூபாய் நோட்டைத் தரையில் நழுவவிட்டேன். சற்று முன்னர் நடைபாதையில் கண்டெடுத்தது அது.
நகர முற்பட்டபோது உள்மனதின் அழைப்பு. ‘ஐநூறா ஆயிரமா, ஒரே ஒரு ஒத்தைப் பத்து ரூபா... எடுத்துக்கிறது பெரிய தப்பில்ல’ என்றது அது.

அக்கம்பக்கம் பார்த்துவிட்டு எறிந்த  ரூபாயை மீட்டெடுத்துச் சட்டைப் பையில் திணித்தவாறு நகர முற்பட்டபோது....

என்  மனசாட்சி குரல் கொடுத்தது: ‘அஞ்சோ பத்தோ நூறோ ஆயிரமோ, இது அடுத்தவனுக்குச் சொந்தம். அபகரிக்க நினைக்கிறது அநாகரிகம்.” 

பத்து ரூபாய் நோட்டை மீண்டும் தரையில் கடாசிவிட்டு நடந்தேன்.

பின்பக்கமிருந்து அழைப்பு: “கொஞ்சம் நில்லுங்க. இது நீங்க தவற விட்டது.” - அழைத்தவரின் கையில் அந்தப் பத்து  ரூபாய்!

“அது என்னோடது இல்லீங்க. யாரோ தவற விட்டது” என்று சொல்லி ரூபாயைப் பெற்றுக்கொள்ள மறுத்தேன்.

“தவறவிட்டவனைக் கண்டுபிடிச்சி ஒப்படைக்கிறது நடக்காத காரியம். வீதியில் வீசிட்டுப் போனா பின்னால வர்றவன் எடுத்துக்கப் போறான். கனமான காத்து வீசினா யார் கைக்கும் கிடக்காம சாக்கடையில் விழுந்து வீணாத்தான் போகும். நீங்க வேண்டாம்னு சொல்றதால இதை  நானே வைச்சுக்கிறேன். ஸ்ட்ராங்கா ஒரு டீ அடிக்கலாம்” என்று சொல்லி அந்த ஆள் நகர முற்பட்ட போது அவரைத் தடுத்தது எங்களுக்குத் தொட்டுவிடும் தூரத்திலிருந்த அந்த ஒற்றை நாடி மனிதரின், “ஹலோ...” 

“என்ன?” என்பது போன்ற கேள்விக்குறியுடன் அவரை நாங்கள் இருவரும் ஏறிட்டோம்.

“கொஞ்சம் முன்னாடி பாக்கெட்டில் பத்து ரூபாயோட இந்த வழியாப் போனேன். பாக்கெட்டிலிருந்து பீடியும் வத்திப்பெட்டியும்  எடுத்தப்ப அது தவறி விழுந்திடிச்சி. அந்தப் பத்து ரூபாதான் இது” என்று சொல்லி, பத்து ரூபாயை ஏற்கனவே தன் சொத்தாக்கிக்கொண்டவரிடம் கை நீட்டினார். அவரும் ‘பிகு’ பண்ணாமல் ரூபாயைக் கொடுத்துவிட்டு நடந்தார். இவர் வந்தவழியே திரும்பிப் போனார்.

நான் என் வழியே நடக்க முற்பட்டபோது, எதிரே நட்ட தலையுடன், தரையில் எதையோ துழாவியவாறு எதிர்ப்பட்டார் என்னைப் போன்ற ஒரு நரைத்தலைக் கிழவர்.

“என்னங்க, எதையோ தேடுறீங்க போலிருக்கே?” என்று அவரை வழி மறிப்பது போல் நின்றேன்.

“ஒன்னுமில்லீங்க, கால் மணி நேரம் முன்னாடி இந்த வழியே போனப்ப ஒரு பத்து ரூபாயைத் தவற விட்டுட்டேன். கிடைக்கும்கிற நம்பிக்கை இல்லை. இருந்தாலும் தேடிப் பார்க்கலாமேன்னு....” - என்னைப் பொருட்படுத்தாமல் அந்தப் பத்து ரூபாயைத் தேடித் தன் நடைப் பயணத்தைத் தொடர்ந்தார் அவர்.

அந்தப் பத்து ரூபாயை ஒரு எமகாதகப் பேர்வழி அபகரித்துச் சென்ற கதையை அவரிடம் சொல்ல நானும் விரும்பவில்லை. கொஞ்சமும் எதிர்பாராத அந்த அனுபவத்தை அசை போட்டவாறு நான் நடக்க முற்பட்ட சில வினாடிகளில்.....

‘கண்டெடுத்த ரூபா ரொம்ப அதிர்ஷ்டம்னு சொல்லுவாங்க. அதைப் பத்திரப்படுத்தி வைக்காம  ஏன் கீழே போட்டெ? புத்தி கெட்ட ஆளா இருக்கியே’ என்று என் உள்மனசு முணுமுணுத்தது. 

அன்று நாள் முழுக்க அதன் முணுமுணுப்பு அடங்கவே இல்லை!
===============================================================================