வியாழன், 27 ஏப்ரல், 2017

தலைவா வா! தலைமை ஏற்க நீ வா!!

“மூன்று மணி நேரம் அவரை[ரஜினி] நெருக்கத்தில் பார்த்தபோது நாவல் எழுதும் அளவுக்கு மனதில் ஒரு கதை பொங்கிப் பொங்கி வந்தது” என்கிறார்  எழுத்தாளர் சாரு. 

குமுதத்தில் தொடர் ஆரம்பித்தபோது[‘கனவு கேப்பசினோ...’], “வயாகரா என்றால் கெட்ட வார்த்தை,  அதைப் பற்றி[வயாகரா மேட்டர்] எழுதக் கூடாது என்கிறார்கள். நான் எழுதப்போகிறேன்” என்று சொல்லிவிட்டு, இன்றளவும் அதுகுறித்து[உடலுறவில் ‘திருப்தி’ பெறுதல்]  எழுதாமால் மனம்போன போக்கில் கதையளந்துகொண்டிருக்கும் அந்தச் சாருவா என்றுதானே கேட்கிறீர்கள்?

ஆம், அதே சாருதான்.
பாரதிராஜா தொடங்கியிருக்கும் நடிப்புப் பயிற்சிப் பள்ளியின் திறப்பு விழாவில் கலந்துகொண்ட 100 பேரில் தாமும் ஒருவர் என்று பீத்திக்கொள்ளும் சாருதான் மேற்கண்டவாறு ரஜினியை உச்சிமேல் வைத்துக் கொஞ்சிக் கொண்டாடியிருக்கிறார்.

ரஜினி சிறந்த நடிகர் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. சூப்பர் ஸ்டார் என உலகின் சினிமா ரசிகர்களால் அறியப்பட்டவர். 

அவ்வப்போது இமயகிரி சென்று தியானம் புரிந்து ஆன்மிகத் தேடலில் ஈடுபடுவதாகச் சொல்லும் அவரை, சூப்பர் ஆன்மிகவாதி என்றும் சொல்லலாம். “நடிகன் என்பதைவிடவும் ஆன்மிகவாதி என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன்” என்று அவர் அறிவித்ததும் இங்கு கருதத்தக்கது.

சூப்பர் ஸ்டாரும் சூப்பர் ஆன்மிகவாதியுமான இந்த ரஜினி குறித்து இந்த வாரக் குமுதத்தில்[03.05.2017].....

‘மொட்டை மாடியில் வந்து அமர்ந்த பிறகும் அவர் எதிரே முப்பது புகைப்படக்காரர்கள் அவரைப் புகைப்படம் எடுத்துக்கொண்டே இருந்தார்கள்’ என்று பிரமிக்கிறார் சாரு. பிரமிக்கட்டும்.

‘பிறந்த குழந்தையிலிருந்து பல் போன கிழவர் வரைக்கும் ரஜினியைப் பிடிக்கிறது. அதுவும் 40 ஆண்டுகளாக என்றால் அதற்குக் காரணம் அவரிடம் இருக்கும் வசீகரம்தானே? இதற்கு எப்பேர்ப்பட்ட புண்ணியம் செய்தவராக இருக்க வேண்டும்! எப்பேர்ப்பட்ட கர்மா!’ என்றெல்லாம் மெய்சிலிர்க்கிறார். சிலிர்க்கட்டும்.

‘ரஜினியை வைத்து நாவல் எழுதுவேன்’ என்கிறார். எழுதட்டும்.

‘அவருக்கு மராட்டி தாய்மொழி; கன்னடம் பேச்சுமொழி’ என்றும் சொல்லியிருக்கிறார்; ‘தமிழ், அவருக்கு உயிர்மொழி’ என்றும் புகழ் பாடியிருக்கிறார்  நடமாடும் வயாக்கரா[குமுதம் வழங்கிய பட்டம். மேலும்வாசிக்க..... 
http://kadavulinkadavul.blogspot.com/2016/04/transgressive.html... 
http://kadavulinkadavul.blogspot.com/2016/04/blog-post_60.html ]

ரஜினி ஒரு நடிகர்; ஓர் ஆன்மிகவாதி[!]; “கட்சி தொடங்கு”, “கட்சியில் சேர்” என்றெல்லாம் விரிக்கப்படும் எந்தவொரு சூழ்ச்சி வலையிலும் சிக்கிக்கொள்ளாமல், தானுண்டு தன் குடும்பம் உண்டு என்று வாழ்பவர்; யாருடனும் ‘வம்புதும்பு’க்கு இடம் தராதவர்;  தான் நடித்த புதிய படங்கள் வெளியாகும்போது, பஞ்ச் டயலாக்குகள் விட்டு, ரசிகன் மனத்தில் சில எதிர்பார்ப்புகளை விதைத்து வசூல் சாதனை நிகழ்த்தும் வித்தை தெரிந்தவர்.

மற்றபடி, தமிழில் பேசி நடிக்கிறார் என்பதைத் தவிர, இவருக்கும் நம் தாய்மொழியாம் தமிழுக்கும் எந்தவொரு பந்தமுமில்லை.

உண்மை இதுவாக இருக்க.....

தமிழ் ‘ரஜினியின் உயிர்மொழி’ என்கிறார் சாரு. இப்படிச் சொல்ல அவரால் எப்படி முடிந்தது?

“தமிழ் என் உயிர்மொழி” என்று நடிகர் சொல்லியிருக்கிறாரா?  ‘இந்த வகையிலெல்லாம் நான் தமிழுக்குத் தொண்டு செய்திருக்கிறேன்’ என்று பட்டியல் வெளியிட்டிருக்கிறாரா? “செய்வேன்” என்றாவது அறிக்கை விடுத்திருக்கிறாரா?

தமிழ் என்னும்  உயிர்மூச்சுக் காற்றுப் பட்டதால் இவரின் ரசிகர் பட்டாளம், “எங்கும் தமிழ்; எதிலும் தமிழ்” என்று தெருத் தெருவாய் முழக்கமிட்டுத் தமிழைக் காக்கவும் வளர்க்கவுமான சீரிய பணியைச் செய்திருக்கிறதா?

நடிகரின் திருவுருவப் படங்களுக்குப் பாலாபிஷேகமும் பழ அபிஷேகமும் செய்து குதூகளிக்கும் ரசிகர்கள் ஆண்டு தவறாமல், “நீயின்றித் தமிழகம் இல்லை; தலைவா வா, தலைமை ஏற்க வா” என்று வருந்தி வருந்தி உருகி உருகி அழைக்கிறார்கள்; அழைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

‘தமிழ், ரஜினியின் உயிர்மொழி’ என்ற சாருவின் வாசகம் அவர்களைப் புத்துணர்ச்சி பெறச் செய்யும்.

இனி, தங்களின் தலைவனை, “தமிழே, தமிழன்னையை வாழ வைக்கும் தெய்வமே” என்றெல்லாம் புகழ்மாலை சூட்டி ஆரவாரிப்பார்கள். அவர் தலைமை ஏற்கத் தவறினால் உண்ணாநோன்பிருந்து உயிர் துறக்கப்போவதாக அச்சுறுத்திப் பணிய வைப்பார்கள்.

ஆக, தாய்மொழிப் பற்றில்லாத தமிழர்களின் எண்ணிக்கை பெருகிவரும் அவல நிலையில், இங்கே எவன் வேண்டுமானாலும் தமிழினத்தின் தலைவனாக  ஆகலாம்.

இதற்குச் சாருவைப் போன்ற பிரபலங்களும் அடித்தளம் அமைக்கப் பாடுபடுவது கண்டிக்கத்தக்கது.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++







4 கருத்துகள்:

  1. வாழ்ந்தானுக்கு மாரடிப்பது என்பார்கள் ,அதுதான் நினைவுக்கு வருகிறது :)

    பதிலளிநீக்கு
  2. :) மராட்டி தாய்மொழி, கன்னடம் பேச்சுமொழி,தமிழ் உயிர்மொழி என்று ரஜினிகாந்தை புகழ்பாடுகிறார் சாரு என்பவர். தமிழகத்தை தலைமை ஏற்க வா என்றழைகிறார்கள் தமிழ் ரசிகர்கள். இப்போ தான் தமிழ்மணத்தில் ஒரு பதிவு பார்த்தேன் தமிழர் உலகை ஆளப்போகின்றார்களாம், அப்போ ரஜினிகாந் தானே உலகத்தின் முதல்வர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவன் தமிழகத்தை நிரந்தரமாக ஆண்டால் போதாதா? உலகை ஆளுகிறானாம் உலகை! சிரிப்புத்தான் வருகிறது.

      நன்றி வேகநரி.

      நீக்கு