செவ்வாய், 30 மே, 2017

அமரர் ஜெயலலிதாவும் அந்தக்கால மேட்டூர் அணையும் நம்மவூர்ப் பாதாளச் சாக்கடைகளும்!

மேட்டூர் அணையில் தூர்வாரும் நிகழ்ச்சியை முதலமைச்சர் தொடங்கிவைத்தது குறித்த செய்தியைத்  தமிழ் நாளிதழ்கள் பலவும் வெளியிட்டுள்ளன.

மற்ற நாளிதழ்களில் இடம்பெறாத ஒரு தகவல் தினத்தந்தியிலும் தினமலரிலும் இடம்பெற்றுள்ளது.
தினமலர்[29.05.2017]: ‘...முன்னதாக, ஜெயலலிதாவின் உருவப்படத்துக்குச் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன....’

தினத்தந்தி[29.05.2017]: ‘...தூர்வாரப்படும் இடத்துக்கு அருகில் ‘ஹோமம்’ வளர்த்துச் சிறப்புப் பூஜை செய்யப்பட்டது...’

இரண்டு செய்திகளையும் ஒருங்கிணைப்பதன் மூலம், ‘தூர்வாரப்படும் இடத்துக்கு அருகில், ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு முன்னால், ஹோமம் வளர்த்துச் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன’ என்னும் முழுமையானதொரு தகவலை நம்மால் பெற முடிகிறது.

இத்தகவலை அடிப்படையாகக் கொண்டு, தமிழ்நாட்டின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு நான் எழுதும் மடல். 

#தமிழக முதல்வர் அவர்களே,

மேட்டூர் அணையில் ‘தூர்வாரும்’ பணியை நீங்கள் தொடங்கி வைத்துள்ளீர்கள். பாராட்டுக்குரிய பணி இது.

இது தொடர்பான விழா தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டது.

தனிப்பட்ட முறையில், புதுமனை புகுவிழாவிலோ வாழ்க்கையில் சனி புகாமல் தடுக்கும் விழாவிலோ ‘ஹோமம்’ என்ன மலையுயர அக்கினிக் குண்டமே வளர்த்து, விடிய விடிய  வேத மந்திரங்கள் ஓதிப் பூஜைகள் நடத்தலாம். அதைத் தடுக்கவோ தட்டிக்கேட்கவோ எவருக்கும் உரிமை இல்லை.

ஆனால், மதச்சார்பற்ற அரசு நடத்தும் விழாவில், ஹோமம் வளர்த்துப் பூஜைகள் செய்வதென்பது குறிப்பிட்ட ஒரு மதம் சார்ந்த சடங்கு ஆகும். இது தவறான ஒரு முன்னுதாரணமும்கூட.  இதைத் தாங்களும் அறிவீர்கள்.

குறிப்பிட்டதொரு மதத்தின் கடவுளை நினைந்து பூஜைகள் நடத்துவதே தவறு என்னும்போது, காலஞ்சென்றவரும் முன்னாள் முதலமைச்சரும் ஒரு சராசரிப் பெண்ணுமான[தனிப்பட்ட முறையில் நீங்களும் உங்களைச் சார்ந்தவர்களும் அவரைக் கடவுளாகப் போற்றுவதையோ, கடவுள்களின் கடவுளாகத் துதிபாடுவதையோ எவரும் தடுக்கவோ தட்டிக்கேட்கவோ இயலாது; கூடாது] ஜெயலலிதாவின் உருவப்படத்தை முன்னிலைப்படுத்திப் பூஜைகள் செய்தது பெரும் தவறு ஆகும்.

இம்மாதிரியான தவறுகள் இனியும் நேர்தல் கூடாது என்பதே என் போன்றவர்களின் விருப்பமும் வேண்டுகோளும் ஆகும்.

அணை கட்டப்பட்டு 83 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இந்தத் தூர்வாரும் பணி நடைபெறுகிறது.

இதே வேளையில்,  தமிழ்நாட்டிலுள்ள பாதாளச் சாக்கடைகளைத் தூர்வாரும்[தூய்மைப்படுத்தல்] பணி தினம் தினம் பல்வேறு நகரங்களிலும் நடைபெறுவது தாங்கள் அறியாததல்ல.

அணையைத் தூர்வாரும் பணியில் ஆபத்துகள் மிக மிகக் குறைவு. அனைத்து அசிங்கங்களும் நோய்களும் சங்கமம் ஆவதால் சாக்கடைகளைத் தூர்வாரும் பணியில் ஏழைத் தொழிலாளர்கள் பலர் செத்திருக்கிறார்கள்; செத்துச் செத்துப் பிழைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இவர்களின் உடல்நலத்தோடு உயிரையும் காப்பதற்காக அவ்வப்போது ஹோமம் வளர்த்து பூஜைகள் செய்ய வேண்டும் என்று எப்போதாவது எண்ணியிருக்கிறீர்களா நீங்கள்?

அப்புறம் எதற்கு அணையைத் தூர்வாருவதற்கு மட்டும் ஜெயலலிதா, கடவுள், ஹோமம், பூஜைகள் எல்லாம்?!

சிந்திப்பீர்களா முதல்வர் அவர்களே?
===============================================================================







ஞாயிறு, 28 மே, 2017

கலக்கும் ‘காமக் கிழவன்’ பாலகுமாரன்!!!

இளமையும் அழகும் உள்ள ஆணும் பெண்ணும் காமம் கொள்வது இயல்பு. அதைப் பக்குவமாய்த் தம்முள் பகிர்ந்து இன்புறுவது ஒரு கலை. எழுபது வயதுக் கிழவன்ர் பாலகுமாரனுக்கு இது ‘கைவந்த கலை’ என்பதை இந்த வாரக் குமுதம்[லைஃப் 31.05.2017] உறுதிப்படுத்தியது.
‘கண்ணே, வண்ணப் பசுங்கிளியே!’ தொடர்கதையின் நாயகன் கார்த்திகேயனும் நாயகி பானுமதியும் மாமல்லபுரம் கடற்கரைச் சாலையிலுள்ள ஒரு விடுதியில் தங்குகிறார்கள்.

சற்று நேர உரையாடலுக்குப் பிறகு.....

#அவன் மேல் பாய்ந்து அவனை முத்தமிட்டாள் அவள். அவன் இறுக்கிக்கொண்டான். இறுக அணைத்த நிலையில் இரண்டுபேரும் வராண்டாவில் உருண்டார்கள்; மெல்ல எழுந்து மணல் தட்டினார்கள்[வராண்டாவில் ஏது மணல்? ‘தூசு தட்டினார்கள்’?].

அவள் நைட்டியை அவிழ்த்து உதறினாள்; உள்ளுக்குள் போனாள்; கட்டிலில் படுத்துக்கொண்டாள். இடுப்பில் மட்டும் அவளுக்கு ஆடை இருந்தது.

“கண்கள் இரண்டும் விடிவிளக்காக...கட்டழகு மட்டும் வெட்ட வெளியாக...” அவன் பாடினான். அவள் நாணமின்றி அவனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தாள்.

அந்த இரவு நேரத்தில் பூவில் வண்டு கூடிற்று; நிறைவுடன் சுற்றிச் சுற்றி வந்து முகர்ந்தது; தேன் உறிஞ்சியது; பூக்குள் சரசரத்து இறங்கியது; மகரங்களைத் தேய்த்து அனுபவித்தது.

பூ சிலிர்த்தது; வண்டை நெருக்கிக்கொண்டது.

திணறி வெளியே வந்த வண்டு மறுபடியும் சுற்றியது. 

உலகத்தில் எல்லாக் கூடல்களும் இப்படி ஸ்பரிசகந்தமாகத்தான் நடைபெறுகின்றன. வாசனை முகர்வும் உரசலும்தான் கிளர்ச்சியை ஏற்படுத்துகின்றன. மகரந்தச் சேர்க்கை என்பது அப்படித்தான் நடைபெறுகிறது#

‘விடிகாலை எழுந்து கடற்கரைப் பக்கம் நடந்தார்கள்...’ என்று கதையைத் தொடர்ந்து படித்தபோது..... 

‘சங்ககாலத்துத் தலைவனும் தலைவியும் இரண்டறக் கலந்து இன்பம் துய்த்த பிறகு[ஆளை விட்டால் போதும் என்று ஓட்டம் பிடிக்காமல்], தலைவியின் நெகிழ்ந்து கலைந்த ஆடை அணிகலன்களைத் திருத்துவதோடு, “உன்னை[இனியும்]ப் பிரியேன்” என்று அவளை அவன் தேற்றும் காட்சி நினைவுக்கு வந்தது.

இனி,  கதை.....

சூரியன் உதிக்கும்போது திரும்ப வந்தார்கள். சுடுநீர் இறங்குகிற ஷவரில் ஆனந்தமாகக் குளித்தார்கள்.

அவன், அவள் தலையை உதறித் துடைத்து டிரையர் போட்டு ஆற்றினான்; புசுபுசு தலைமயிரை ரப்பர் பேண்ட் போட்டு இறுக்கினான்.....

.....அடுத்த நாள் இரவும் ஆட்டமான ஆட்டம் ஆடினார்கள்; கூடினார்கள்; வெட்கம் விட்டார்கள்; நுரைக்க நுரைக்கக்[கிழவன்ர்ஆபாசத்தின் எல்லையைத் தொட்டுவிட்டான்ர்!!! இன்னொரு இடம்: ‘வெட்கமின்றிக் கால்களைப்.....’.....வேண்டாம். பத்திரிகை வாங்கி நீங்களே படித்துக்கொள்ளுங்கள்] கூடிவிட்டுக் களைத்துப் படுத்தார்கள்.

வேர்த்த அவன் உடம்பை அவள் ஈர டவலால் துடைத்தாள்; முகத்தைச் சுத்தம் செய்தாள்; தலையைக் கோதினாள்’ என்றெழுதி, புணர்ச்சிக்குப் பின்னரான பெண்ணின் பாசப்பொழிவைக் காட்சிப்படுத்தியிருப்பது நன்று. 

அவளின் ‘பரவச நிலை’ பற்றிய  வர்ணனை, இந்தக் கதாசிரியரின் எழுத்தாற்றலை வெகுவாகச் சிலாகிக்க வைக்கிறது. படியுங்கள்....

‘அவளுக்கு, தன்னை நிலவிலே உட்காரவைத்துத் தொட்டில் ஆட்டியது போல உணர்ந்தாள். உடம்பு, சூட்டிலும் குளுமையிலும் தவித்தது. அடிவயிறு சுட்டது. கழுத்து சில்லிட்டது. உதடுகள் இதழ்களுக்குக் கேவின[’கேவின’...எத்தனை அருமையான சொல்லாட்சி!]......

இது, வழக்கமான வெறும் காதல்கதைதான் என்றாலும், கிளுகிளுக்க வைக்கும் உரையாடல் மூலம் இளசுகளை எழுத்தாளர் கட்டிப்போடுகிறார் என்பது உண்மைதான்.

இந்த எழுபதைத் தாண்டிய[வயது 79 ஆகவும் இருக்கலாம்] கிழவனுருக்கு ‘எழுத்துச் சித்தர்’ என்பதைக் காட்டிலும் ‘காமக் கிழவன்ர் என்னும் பட்டமே பொருத்தமானது என்பது என் எண்ணம்.

வாழ்க ‘காமக் கிழவன்ர் பாலகுமாரன்!
===============================================================================
குமுதத்தை  இப்போதெல்லாம் நான் விரும்பி வாங்குவதில்லை.  இந்தக் கதையை வாசிப்பதில் தாமதம் ஏற்பட்டதற்கு இதுவே காரணம்.


சனி, 27 மே, 2017

மூளையை ‘பேக்அப்’ எடுக்கலாமாம்! எப்போ...எப்போ...எப்போது?

#மூளையின் ரகசியத்தை வெளிக்கொண்டுவர, ‘நியூரோசயின்ஸ்’ என்னும் துறை மிக வேகமாகச் செயல்பட்டு வருகிறது. ஒரு காலத்தில் சூப்பர் கம்ப்யூட்டராகக் கருதப்பட்டவை இன்று ஒன்றும் இல்லாதனவாக மாறிவிட்டன. 

நம் மூளையின் உத்தரவுகளுக்குக் கட்டுப்படும்[100%...?] வகையிலான அதிநவீன சூப்பர் கம்ப்யூட்டர்களைக் கொண்டுவருவதற்கான ஆய்வுகள் நடந்துவருகின்றன.

2050-களில் மனித மூளையை, ‘பேக்அப்’ எடுக்கும் அளவுக்கு அறிவியலும் தொழில்நுட்பமும் முன்னேறி இருக்கும்’ என்கிறார்கள் விஞ்ஞானிகள்#

[நவீன சூப்பர் கம்ப்யூட்டர், மூளைக்குள் பதுங்கியிருக்கும்[?] ‘ஆன்மா’வைக் கண்டுபிடிக்கணும்’...இது என் ஆசை!]

மேற்கண்ட தகவல், விகடன் பிரசுரமான, ‘மூளை’{முதல் பதிப்பு: டிசம்பர், 2016} என்னும் நூலிலிருந்து [அனுமதியின்றி] எடுத்தாளப்பட்டது.

விகடனாருக்கு நன்றி.
===============================================================================




வெள்ளி, 26 மே, 2017

உருகுது நெஞ்சம்! பெருகுது கண்ணீர்!!

இதை எழுதியவன் நான். பலமுறை படித்துக் கண் கலங்கியவனும் நானே[!?!?!]. ஏற்கனவே படித்தவர்களும் கலங்கியிருத்தல்கூடும்! நீங்கள்.....?

ரைவாசி திறந்திருந்த தட்டிக் கதவு தட்டப்பட்டது.

“வாங்க.” வார்த்தைக்கு அழுத்தம் கொடுத்து அழைத்தாள் கனகா. கதவு தட்டியவர் திரும்பிப் போய்விடக்கூடாதே என்ற கவலை அவளுக்கு.

‘சரக்கு’ ஏத்திக்கொண்டு சைக்கிள் மிதித்து, ’சரக்கு’ லாரியில் அடிபட்டுச் செத்தான் மாணிக்கம். அவளுக்கு அவன் புருஷன்; அவளின் ‘பலான’ தொழிலுக்குப் புரோக்கரும் அவனே. அவன் பரலோகம் போனதால் தொழில் வெகுவாகப் பாதித்தது.

வீடுவீடாகப் போய்ப் பத்துப்பாத்திரம் தேய்த்தவளைப் ‘பரத்தை’ ஆக்கியவனே அவன்தான். குடித்துப் பழகிய கொஞ்ச நாளில் குடிப்பதே தொழில் என்றான பிறகு, பெண்டாட்டி சம்பாதனை குடும்பச் செலவுக்கும் ‘குடி’ச் செலவுக்கும் போதுமானதாக இல்லை. ‘குட்டி’ தேடும் ’குஷால்’ பேர்வழிகளை அடிக்கடி தன் குடிசைக்கு அழைத்து வந்தான்.

ஆரம்பத்தில், அவனைக் கண்டித்த அவள், ஒரு நாள் முழுக்க வேர்வை சிந்திச் சம்பாதிக்க முடியாததை ஒரு மணி நேரத்தில் சம்பாதித்துவிடும் கலை அது என்பது புரிந்தபோது இணங்கிப்போனாள்.

அப்புறம் அதுவே பழகிப் போனது.

நல்ல துணிமணி, மூன்று வேளையும் வயித்துக்கு உணவு  என்று வாழ்க்கை ஓடியது.

அவளுடைய போதாத காலமோ என்னவோ, மாணிக்கம் செத்துப்போனான்.

புதிய நபர்களின் வரவு  தடைபட்டது. தெருவில், பலான தொழில்காரிகளின் எண்ணிக்கை கூடியதால், வாடிக்கையாளர்களின் வருகையும் மட்டுப்பட்டது. கனகா கவலையில் மூழ்கினாள்.

சரிந்துகொண்டிருந்த மார்க்கெட்டைத் தூக்கி நிறுத்துவது எப்படி என்று அடிக்கடி யோசிக்கலானாள். அப்படி ஒரு நாள் யோசித்துக்கொண்டிருந்த போதுதான் அவள் குடிசையின்  தட்டிக் கதவு தட்டப்பட்டது.

வெளியே தயங்கி நின்றவருக்கு, “உள்ளே வாங்க” என்று மீண்டும் அழைப்பு விடுத்தாள் கனகா.

அவளைத் தேடி வந்தவர் ஒரு நடுத்தர வயதுக்காரர். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர் போலவும் தெரிந்தார்.

சல்லடைப் பார்வையால் கனகாவின் வயதையும் உடல் வாகையும் வனப்பையும் ஆராய்ந்தார்.

முகத்தில் திருப்தி பரவி நிலை கொள்ள, அங்கிருந்த ஒரேயொரு பிளாஸ்டிக் சேரில் அமர்ந்து, “வெய்யில் வறுத்தெடுக்குது. குடிக்கத் தண்ணி கொடு” என்றார்.

தடுப்புச் சுவரைக் கடந்து உள்ளே போன கனகா, ‘ஆள் புதுசு. இவரை அனுப்பிச்சது யாராயிருக்கும்?’ என்று யோசித்தாள். ‘அவர் போகும்போது கேட்டுக்கலாம்’ என்று முடிவெடுத்தாள்.

அவருக்கு எலுமிச்சை ஜூஸ் கொடுத்து உபசரித்தாள்.

தரையில் பாய் விரித்தாள்; “என்னைப் பிடிச்சிருக்குதானே?” -பவ்வியமாய்க் கேட்டாள்; முந்தானை விலக்கிக் கவர்ச்சி காட்டினாள்; ‘இனி என்னைக் கையாளலாம்’ என்பது போல மேலாடை நெகிழ்த்து, மெல்லிய புன்னகையை அவர் மீது படர விட்டாள்.

மாதக் கணக்கில் பெண் வாசனையே நுகராதவர் போல, அவளைத் தாவி அணைத்தார் அவர்; செயலில் வேகம் காட்டினார். கனகா அவருக்கு ஈடுகொடுத்தாள். தான் கற்று வைத்திருந்த சாகசங்களால் அவரைத் தன்வயம் இழக்கச் செய்தாள்.

நிமிடங்கள் கரைந்தன.

தாபம் தணிந்ததும், ‘இருந்த’ நேரத்தைக் கணக்குப் பார்க்காமல், சில நூறுகளைக் கனகாவிடம் நீட்டினார் அவர். அவளும் திருப்தியுடன் பெற்றுக் கொண்டாள்.

அவர் வெளியேற முனைந்த போது, கேட்க நினைத்த கேள்வியைக் கேட்டாள் கனகா: “எப்படி இந்த இடத்தைக் கண்டுபிடிச்சீங்க?”

”தெரு முனையில் நின்னுட்டு ’நோட்டம்’ விட்டுட்டிருந்தேன். ஒரு பொடியன், ‘சார் பொம்பளை வேணுமா?’ன்னு கேட்டான்;  இந்த இடத்தையும் காட்டினான்” என்று சொன்னதோடு, சிறிது தொலைவில், ஒரு வேம்பின் நிழலில் நின்றுகொண்டிருந்த அந்தச் சிறுவனைச் சுட்டிக் காட்டிவிட்டு நகர்ந்தார்.

அந்தச் சிறுவன்..........

பத்து வயதுகூட நிரம்பாத, கனகாவின் செல்வ மகன்!

அதிர்ச்சியில் கனகாவின் சப்த நாடிகளும் அடங்கின. அவள் இதயம் கட்டுப்பாடு இழந்து தாறுமாறாய்த் துடிக்கலாயிற்று. நெஞ்சு கனத்தது; மூச்சுத் திணறியது.

“ஐயோ.....அவனா?..... என் புள்ளையா?....என் உதிரமும் சதையுமான நான் பெத்த புள்ளையா எனக்கு ஆள் பிடிச்சி அனுப்பினான்? ஈனத் தொழில் செஞ்சி, நான் சம்பாதிக்கிற பாவத்தில் இனி அவனுக்கும் பங்குண்டா?.....கடவுளே, என்னை எதுக்கய்யா ஒரு மனுஷியா பிறக்க வெச்சே?.....என்னை எதுக்.....” -நாடித் துடிப்பு அடங்கும்வரை, இப்படி ஈனஸ்வரத்தில் ஏதேதோ முனகிக்கொண்டிருந்தாள் கனகா.
00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000


செவ்வாய், 23 மே, 2017

காவிகளின் கனவு! ஓர் எச்சரிக்கை!!

‘பெண்கள் பாவயோனியிலிருந்து பிறந்தவர்கள்’ http://viduthalaidaily.blogspot.in/2012/06/blog-post_7046.html என்கிறது கீதை.   மேலே வாசியுங்கள்.
கீழே, கீதையின் போதனைகளும்[விக்கிப்பீடியா], அவற்றிற்கான சில கேள்விகளும்.....

*பற்றுகளை அறு. அதற்காகப் புலனடக்கம் என்ற யோகசாதனையைச் செய்துகொண்டே இரு.

கேள்வி: பற்றுகள் இல்லாமல் வாழ்க்கை என்பது இல்லை. பற்றுகளை  ஏன் அறுக்க/துறக்க வேண்டும்?[பற்றுகளை  வரையறைப்படுத்தலாம்; முற்றிலும் துறக்கச் சொல்வது முட்டாள்தனம்]


*பலனை எதிர்பாராமல் சுயதருமத்தை[?] ஒழுகு.

கேள்வி: நம் செயல்களால் நமக்கோ, நம்மைச் சார்ந்தவர்களுக்கோ, சமுதாயத்திற்கோ  பலன் விளையவேண்டும் என்று எதிர்பார்ப்பதுதான் அறிவுடைமை. எதிர்பார்க்க வேண்டாம் என்று கடவுள் கண்ணன் சொல்வதன் நோக்கம் என்ன? தான் விருப்பப்பட்டவர்களுக்கு அந்தப் பலன்களைப் பிரித்தளிப்பதா?


*ஈசனை மறக்காதே. அந்த இரண்டற்ற பரம்பொருளிடம் சுயநலமற்ற பக்தியைச் செலுத்து.

கேள்வி: நம்மைப் படைத்தவரே அவரென்றால் நம்மை மறவால் காப்பது அவர் கடமை. அப்புறம் எதற்கு பக்தி  குயுக்தி எல்லாம்?


*எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்ததது. எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.

கேள்வி: கடவுளுக்கா, நமக்கா?


*உன்னுடையதை எதை இழந்தாய் என்று நீ அழுகிறாய்?

கேள்வி: எத்தனையோ!!


*எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?

கேள்வி: எதையும் கொண்டுவரலேங்கிறது அவர்[கண்ணன்] சொல்லித்தான் தெரிஞ்சிக்கணுமாக்கும்?


*எதை நீ படைத்தாய், அது வீணாவதற்கு?

கேள்வி: நான் எதையும் படைக்கல. அவர்தான் படைச்சாருங்கிறதுக்கு என்ன ஆதாரம்?


*எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.

கேள்வி: எதுக்குக் கொடுத்தார்? அப்புறம் ஏன் பிடுங்குகிறார்?


ஆறறிவு வாய்க்கப்பெற்ற மனிதர்களைச் சிந்திக்கவே விடாமல் காட்டுமிராண்டியாக வாழத் தூண்டுவதுதான் கீதை. அதுமட்டுமல்ல.....

‘பெண்கள் பாவயோனியிலிருந்து பிறந்தவர்கள்’ என்கிறது.

‘சதுர்வர்ணம் மயாசிருஷ்டம். நான்கு ஜாதிகளை நானே உண்டாக்கினேன்’ என்று பகவான் கண்ணன் சொல்லுகிறான். ‘நானே நினைத்தாலும் மாற்ற முடியாது’ என்றும் சொல்லுகிறான். எனவே, சமுதாயத்தில் சாதிமத வேறுபாடுகள் உருவாக மூலகாரணமாக அமைந்ததே இந்தக் கீதைதான்.

நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் இதை[கீதை] வாசிப்பதைக் கட்டாயமாக்க வலியுறுத்தி பா.ஜ.க.எம்.பி. ரமேஷ் பிதுரி என்பவர் நாடாளுமன்றத்தில் தனி நபர் மசோதா கொண்டுவந்திருக்கிறாராம். வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறதாம்[இன்றைய{23.05.2017} நாளிதழ்ச் செய்தி].

சிறுபான்மையினரால் நடத்தப்படும் பள்ளிகளுக்கு இது பொருந்தாதாம்.

இதன்மூலம், சிறுபான்மை மதங்ளைச் சேர்ந்த மாணவர்கள் நீங்கலாக மற்ற அத்தனை மாணவர்களின் சிந்திக்கும் திறனை மழுங்கடித்து அவர்களுக்குக் காவி வர்ணம் பூசிட முடிவெடுத்துவிட்டார்கள் ஆளும் காவி வர்க்கத்தினர். ['நாங்கள் சிறுபான்மை மதத்தவரல்ல; ஆனால், கடவுள் நம்பிக்கை இல்லாததால் நாங்களும் சிறுபான்மையினரே, எங்கள் பள்ளிகளுக்கும் விதிவிலக்கு அளியுங்கள்’ என்று இவர்களின் அடாவடித்தனத்தை எதிர்ப்பவர்கள் கோரிக்கை வைத்தால் ஏற்பார்களா?] 

ஆக, இம்மாதிரி தொடர் நடவடிக்கைகளின் மூலம் மக்களின் ஆறாவது அறிவை முடக்கிப்போட்டு இந்த மண்ணைக் காட்டுமிராண்டிகளின் தேசம் ஆக்க முயல்கிறது ஆளும் பாஜக அரசு.

நாட்டு நலனில் அக்கறையுள்ள அறிஞர்கள் சிந்திப்பார்களா?

===============================================================================

ஞாயிறு, 21 மே, 2017

நான் அன்று சொன்னேன்! இன்று நடந்தது!!

கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர் கங்கேசானந்தா தீர்த்த அடிகளார் என்னும் ஸ்ரீஹரி சுவாமி[பெயர் சூட்டலில் இவனுக படு கில்லாடிகள்தான்!] .

சில ஆண்டுகளுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் உள்ள கண்ணன்மூளை பகுதியைச் சேர்ந்த ஒருவருக்குப் பக்கவாதம் ஏற்பட்டது. இவர், அவரைத் தன் பூஜை, இறை வழிபாடு ஆகியவற்றின் மூலம் குணப்படுத்துவதாகச் சொல்லி அவரின் வீட்டுக்குச் சென்றார்; குடும்பத்தினருடன் நெருங்கிப் பழகினார்; முதலில், நோயாளியின் மனைவியைத் தன் வலைக்குள் வீழ்த்தினார். தொடர்ந்து.....

அந்தப் பெண்ணின் 12ஆம் வகுப்பில் படிக்கும் மகளிடமும் அத்துமீறி நடந்துள்ளார்.

23 வயதாகும் அந்தச் சட்டக் கல்லூரி மாணவி, கடந்த வெள்ளிக்கிழமை இரவு மீண்டும் அத்துமீறிய சாமியாரின் பிறப்புறுப்பைக் கத்தியால் வெட்டினார்[காவல்துறை விசாரணையில், தானே தன் உறுப்பை அறுத்துக்கொண்டதாகச் சொல்கிறான் சாமியார். எப்படிச் சமாளிக்கிறான் பாருங்கள்! இச்செய்தி குறித்த பதிவை நண்பர் S.Raman வெளியிட்டுள்ளார்]

இந்தச் செய்திக்கும்[தி இந்து, 21.05.2017]‘ஒரு பெண் தன் கற்பைக் காத்துக்கொள்ள மிக எளிய வழி!’ http://kadavulinkadavul.blogspot.com/2013/04/blog-post_20.html என்னும் என் பழைய பதிவுக்கும் தொடர்பு உள்ளது. படியுங்கள்[இதே கதையை இரண்டு தடவை  மீள்பதிவு செய்தேன்].

கருப்பாயி கதை.....
ருப்பாயி, பெயருக்கேற்ப நல்ல கறுப்பு. ஆனாலும், அழகும் கவர்ச்சியும் கட்டுமஸ்தான தேகக் கட்டும் உள்ளவள்; கிராமத்துப் பெண்; கொஞ்சம் மேட்டுக்காடு [மானாவாரி] மட்டுமே இருந்தது. அவள் கணவன், சந்தை சந்தைக்குக் கால்நடைகளை வாங்கி விற்கும் ‘தரகு’த் தொழில் செய்தான்.

கருப்பாயி..... 
எருமை & மாடு[கள்] வளர்த்துப் பால் விற்பனை செய்தாள்.

பொழுது புலர்வதற்கு முன்னதாகவே, பால் கறந்து, மொபட்டில் எடுத்துச் சென்று, பக்கத்து டவுனில் உள்ள கடைகளுக்கும் வீடுகளுக்கும் கொடுத்து வருவாள்.

அன்றும், வழக்கமான நேரத்துக்குச் சுந்தரம் தேனீர்க் கடையை அடைந்தாள். முதல் விநியோகம் அவனுக்குத்தான்.

அவள் போகும்போது, பாய்லருக்குத் தீ மூட்டிக் கொண்டிருக்கும் சுந்தரம், அன்று கட்டிலில் போர்த்துப் படுத்திருந்தான்.

“எனக்கு உடம்பு சரியில்ல. பாலை உள்ளே வெச்சுட்டுப் போ” என்றான்.

அவன் நாடகம் போடுகிறான் என்பதை அறியாத கருப்பாயி, கடைக்குள் சென்றாள். கதவைத் தாளிட்டான் சுந்தரம். அவனுடன் வசித்த அவனின் அம்மாவும் அப்போது இல்லை.

திடீர் அதிர்ச்சிக்குள்ளானாலும், சுதாரித்துக் கொண்ட கருப்பாயி, “வேண்டாம். நான் அந்த மாதிரி பொம்பளையில்ல. வழி விடு” என்றாள்.

சுந்தரம், தன்வசம் இழந்திருந்தான்.  “உன்னை அடையணும்கிறது என் ரொம்ப நாள் ஆசை. மறுக்காதே கருப்பாயி” என்றவாறு அவளை நெருங்கினான்.

பதற்றப்படாமல் அவன் நடவடிக்கையைக் கவனித்தாள் அவள்.

அவளின் தோள்களைத் தொட்டு, மெல்லத் தரையில் சரித்தான் சுந்தரம். அவளிடமிருந்து எதிர்ப்பு இல்லாத நிலையில், அவள் மீது மெல்லப் படர்ந்தான். ஆடைகளைக் களைவதில் கவனம் செலுத்தினான். அப்போதுதான், அவன் சற்றும் எதிர்பாராத அது நடந்தது.

இத்தனை சீக்கிரம் அது எப்படி நிகழ்ந்தது என்று அனுமானிப்பதற்குள்ளாகவே, தன் விரைகளை அவள் தன் இரு கைகளாலும் பற்றி இறுக்க முற்பட்டுவிட்டதை அவனால் உணர முடிந்தது.

ஏதோ சொல்ல நினைத்தான். நாக்கு ஒத்துழைக்கவில்லை.

அவளிடமிருந்து ‘அவற்றை’ விடுவிக்க நினைத்தான். அதுவும் சாத்தியப்படவில்லை.

அவனின் ஒட்டு மொத்த உடம்பும் வெலவெலத்தது. நாடி நரம்புகள் முடங்க ஆரம்பித்தன. விழிகள் பிதுங்கின. கொஞ்சம் கொஞ்சமாக நினைவாற்றல் குறைய ஆரம்பித்தது.

இனியும் பிடியை இறுக்கினால் அவன் வைகுண்ட பதவி எய்துவது உறுதி என நினைத்த கருப்பாயி, அவற்றிற்கு விடுதலை அளித்து, “பிழைச்சிப்  போடா நாயே” என்று சொல்லிக் கதவைத் திறந்து கொண்டு வெளியேறினாள்.

தன் கணவனிடம் இது பற்றி அவள் பேசவில்லை.

அடுத்த நாள், பால் கொண்டு போன போது, சுந்தரத்தின் கடை அடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தாள்.

ஒரு வாரம் கழிந்த நிலையில், மீண்டும் கடை திறக்கப்பட்டது. அவள் கடையைக் கடந்த போது, கண்டும் காணாதது போல, குனிந்த தலையுடன் பாய்லருக்கு நெருப்பு மூட்டிக் கொண்டிருந்தான் சுந்தரம்.
=============================================================================================
எங்க ஊர்க் கருப்பாயிக்குக் கொஞ்சம் இளகிய மனசும்கூட. அதனாலதான், தடியனின் பிறப்புறுப்பைத் துண்டிக்கவில்லை.







வெள்ளி, 19 மே, 2017

பிள்ளையார் யாரு? கதைகள் ஆறு!

இப்பதிவில், நான் படித்தறிந்த பிள்ளையாரின் ‘தோற்றம்’ குறித்த கதைகளைப் பட்டியலிட்டிருக்கிறேன்; விமர்சனம் செய்வதைத் தவிர்த்துள்ளேன். காரணம்? 

வேறென்ன, வரம்பு மீறிடுவேனோன்னு பயம்...பயம்தான்!

ஒன்று:
திருக்கயிலாயத்தில் சிவபிரானும் அம்மையும் மகிழ்ச்சியோடு அமர்ந்திருக்கையில் கோயிலின் ஒரு பக்கத்துச் சுவரில் ஆண்-பெண் யானைகளின் வடிவங்கள் தீட்டப்பட்டிருந்தன. அவற்றைப் பார்த்ததும் யானை வடிவெடுத்து அம்மையைப் புணரவேண்டும் என்னும் காம விருப்பம் அய்யனுக்கு உண்டாயிற்று. அக்குறிப்பினைத் தெரிந்துகொண்ட அம்மையார் உடனே ஒரு பெண் யானை வடிவடுக்க, இறைவனும் ஓர் ஆண் யானை வடிவெடுத்து அம்மையைப் புணர்ந்தார். அப்புணர்ச்சியால் யானை முகமுடைய பிள்ளையார் பிறந்தார். இது கந்தபுராணக் கதை.

இரண்டு:
ஒரு சமயம், உமையம்மையார் குளிக்கப் போனார். போகுமுன் தன் உடம்பிலுள்ள அழுக்கையெல்லாம் திரட்டி எடுத்து உருட்டிப் பிடித்து தமது குளிப்பறையின் முன் வாயிலில் வைத்து, “சிவபிரான் வந்தனராயின் தடை செய்க” என்று கட்டளையிட்டுச் சென்றார். அப்போது, அந்த அழுக்கு உருண்டை உயிருள்ள பிள்ளையாராகி அக்குளியலறையின் வாயிலில் காவல் காத்தது.. அவ்வேளையில், சிவபெருமான் அம்மையைத் தேடி அங்கு வந்தார். அவரைக் கண்டதும் அவ்வழுக்குப் பிள்ளையார் அவரை “உள்ளே போகக்கூடாது” என்று தடை செய்ய இருவர்க்கும் போர் மூண்டது. நெடுநேரப் போருக்குப் பின்னர் சிவபெருமான் பிள்ளையாரின் தலையை வெட்டினார். அப்போது.....

குளியலறையிலிருந்து வெளிவந்த உமையம்மையார், “அய்யோ! என் பிள்ளையை வெட்டி விட்டீரே” என்று உளமுருகி ஆற்றாமல் அழுதார். சிவபெருமான் தாமும் ஆற்றாதவராகி, “நம் பிள்ளை என்பது அறியாமல்   வெட்டிவிட்டேன்.  வருந்தாதே. இப்போதே இதனை உயிர் பெற்றெழச் செய்வேன்” என ஆறுதல் மொழிந்து, வடக்கு நோக்கிப் படுத்திருந்த ஒரு யானையின் தலையை வெட்டிக் கொணர்வித்து அதனை அப்பிள்ளையாரின் உடம்பில் பொருத்தி உயிர்பெற்றெழச் செய்தார்[சிவபுராணம்].
மூன்று:
பார்வதி தன் உடல் அழுக்கைக் கழுவி அதைக் கங்கா நதியின் முகத்துவாரத்தில் உள்ள யானைத் தலை ராட்சஷி மாலினியைக் குடிக்க வைத்தார். இதன் விளைவாக மாலினி கர்ப்பம் தரித்து ஒரு யானைத் தலையுடனான குழந்தையைப் பெற்றாள். அக்குழந்தையைப் பார்வதி எடுத்துச் சென்றார்.
நான்கு:
கணபதி, தான் பிறந்த நேரத்தில் ‘சனிப்பார்வை’ தோஷத்தால் தலை இல்லாமல் பிறந்தாராம். கணபதியின் தாய் தன் குழந்தைக்குத் தலை இல்லையே என்று தேம்பித் தேம்பி அழ, விஷ்ணு பகவான் ஒரு யானைத் தலையை ஒட்ட வைத்தார். 

ஐந்து:
கணபதி, உமையம்மையின் வயிற்றில் இருந்தபோது சிந்துரா என்னும் ராட்சஷி வயிற்றுள் புகுந்து குழந்தையின் தலையைக் கடித்துத் தின்றுவிட்டாள். பிறந்த குழந்தைக்குத் தலை இல்லாமல் போகவே அக்குழந்தையானது யானைத் தலைகொண்ட கஜாசுரன் என்ற ராட்சஷன் தலையை வெட்டி தன் கழுத்தில் ஒட்ட வைத்துக் கொண்டது. “தலையும் கண்ணும் இல்லாத இக்குழந்தைக்கு, தனக்குத் தலை இல்லை என்று எவ்வாறு தெரிந்தது? கஜாசுரனின் தலையை எப்படி வெட்டித் தன் கழுத்தில் ஒட்ட வைத்துக் கொண்டது?”[சத்தியமா இந்தக் கேள்விகளை நான் கேட்கலைங்க] என்னும் கேள்விகளுக்குக் கந்த புராணம் விடை சொல்லவில்லை.
ஆறு:
ஒரு காலத்தில் உமாதேவி அம்மையாருக்கு ஒரு பிள்ளை பிறந்தது. அப்பிள்ளையைக் காணும் பொருட்டுத் தேவர்கள் எல்லாரும் அங்கு வந்தார்கள். வந்தவர்களுள் ‘சனி’யனெனும் தேவனும் ஒருவன். இச்சனியன், தான் அப்பிள்ளையைப் பார்த்தால் அதற்குத் தீது உண்டாகுமென்று நினைத்து, தலை குனிந்து அதனைப் பாராதிருந்தான். அவனின் கருத்தறியாத அம்மை அவன் தன் மகனை அவமதித்ததாக எண்ணிச் சினம் கொண்டார். அதை உணர்ந்த ‘சனியன்’.....

தலை உயர்த்திக் குழந்தையைப் பார்த்தான். அவன் பார்த்த உடனே குழந்தையின் தலை எரிந்து சாம்பலாயிற்று.

அம்மை கடும் சினம் கொண்டார். அது கண்ட நான்முகன் முதலான தேவர்கள் அம்மையிடம் அவனை மன்னிக்கும்படி வேண்டினர். சிவபிரானும் அம்மையின் சினத்தைத் தணிவித்ததோடு, வடக்கு நோக்கிப் படுத்திருக்கும் ஒரு யானையின் தலையை வெட்டிக் கொணரும்படித் தேவர்களுக்குக் கட்டளையிட, அவர்களும் அவ்வாறே சென்று ஒரு யானையின் தலையைக் கொண்டு வர, அத்தலையை அப்பிள்ளையின் முண்டத்தில் பொருத்தி அதனை உயிர் பெற்றெழச் செய்தார். அன்று முதல் அக்குழந்தைக்கு ‘யானை முகன்’ என்னும் பெயர் வழங்கலாயிற்று.

போற்றி போற்றி! யானைமுகன் போற்றி!! விநாயகப் பெருமான் போற்றி!!!
=================================================================================




வியாழன், 18 மே, 2017

‘சிடு மூஞ்சி’களைச் சிரிக்க வைக்கும் அதிரடி புதிர்க்கதை!

‘கிளு கிளு’ தொடக்கம்! ‘திக் திக்’ திருப்பம்! ‘கல கல’ முடிவு! மொத்தத்தில் இது ஒரு முப்பரிமாணக் கதையாக்கும்!!

‘உடலுறவில் மனைவியை மகிழ்விப்பது எப்படி? என்ற பலான புத்தகத்தைப் பூங்காவின் கடைக்கோடியில், சிதிலமடைந்த ஒரு சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து படிக்கத் தொடங்கியபோது[அப்போ நான் புது மாப்பிள்ளை!], “வணக்கம் ஐயா. நலமா? பார்த்து ரொம்ப நாளாச்சி” என்ற குரல் கேட்டுத் திடுக்கிட்டேன்.
பார்வை சுழற்றிக் குரலுக்குரியவரைத் தேடினேன். தொலைவில் சில மனித உருவங்கள் தென்பட்டன. பேச்சுச் சத்தம் கேட்கும் அளவுக்கு என்னைச் சுற்றி ஆட்களின் நடமாட்டமே இல்லை. என் அந்தரங்க வாசிப்புக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் அங்கே ஒருவர் குரல் கொடுத்தது எப்படிச் சாத்தியமாயிற்று? யாருமில்லை[எட்டி விழுந்து திருட்டுத்தனமாய்ப் படிக்க] என்று உறுதிப்படுத்தித்தானே அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தேன்!

“பார்த்து ரொம்ப நாளாச்சி...பார்த்து...சார்த்து...கோர்த்து...போர்த்து... வார்த்து...” 

எதுகை மோனைச் சொல்லடுக்கு எனக்குள் குழப்பம் விளைவித்தது. புத்தகத்தைக் கைப்பையில் திணித்துக்கொண்டு எழுந்து நின்று செவிப்புலனைக் கூர்மையாக்கினேன்.

“அவனா? அவன் பெரிய எத்தன் ஐயா. எத்தன்...வத்தன்...கொத்தன்...வத்தல்...தொத்தல்...மொத்தல்...”

சில வினாடி இடைவெளிக்குப் பிறகு மர்மக் குரல் தொடர்ந்து ஒலித்தது. “க் ச் ட் த் ப் ற்...க ச ட த ப ற...ய ர ல வ ழ ள...ல ள ழ ...ஒன்னு ரெண்டு மூனு... அஞ்சு பத்து... அம்பது நூறு...ஆறு...”

“ஆருடா அவன்...? நான் பேசுறதைக் கவனிக்காம ஒளிச்சி வெச்சிப் படிக்கிறியே என்ன புஸ்தகமடா அது?”.....

“கதையா, இல்ல, போர்னோகிராஃபி புத்தகமா?”

“மறைக்காதே. மரியாதையா என்கிட்ட குடுத்துடு. கொண்டாந்து குடுடா.”

“நீயா வர்றியா நான் வரட்டுமா?”

என் அடிமனதில்  பயம் கவ்வியது; நாடிநரம்புகளிலெல்லாம் அது ஊடுருவியது. கால்கை உதறலைக் கட்டுப்படுத்திக்கொண்டு எழுந்து நின்று, வரிசை கட்டியிருந்த குரோட்டன்ஸ் செடிகளுக்கு அப்பால் பார்வையைச் செலுத்தினேன்.

செடிகளின் மறைவில் அறுபது வயதைக் கடந்த ஒரு ஜிப்பா உடுத்த மொழுமொழு மண்டை மனிதர் நின்றுகொண்டிருந்தார்.

எனக்குள் நிம்மதி பரவியது. 

‘ஐயோ பாவம். அந்த வழுக்கை பைத்தியம் போலிருக்கு.”’  -மனதுக்குள் அனுதாபத் தீர்மானம் போட்டுவிட்டு, வேறு தனியிடம் தேட முடிவெடுத்துப் பெஞ்சிலிருந்து தரையில் குதித்தேன்.

நான் குதித்த சத்தம் பைத்தியத்திற்குக் கேட்டிருக்க வேண்டும். “மிஸ்டர்...” என்று உரத்த குரலில் விளித்தது; ஒரே தாவலில் என்னை நெருங்கிவிட்டது. “வத்திப்பெட்டி இருந்தால் கொடுங்களேன்” என்றது.

கடந்த வாரம் என் நண்பருக்கு இதே பூங்காவில் ஏற்பட்ட அனுபவம் நினைவுக்கு வந்து என்னை மிரள வைத்தது. ஓசிப் பீடி கேட்டுவந்த ஓர் ஆளிடம்[பைத்தியம்], இவர் “இல்லை” என்று சொல்ல, “உள்ளே ஒளிச்சி வெச்சிருக்கே” என்று நயமாய்ச் சிரித்துக் கண்மூடித் திறப்பதற்குள் அவருடைய வேட்டியை உருவிவிட்டதாம் அது!

“தீப்பெட்டி இருந்தால் கொடுங்களேன்.” -கோரிக்கையைப் புதுப்பித்தது பைத்தியம்..

சந்தேகமில்லை. இந்தக் கிழவன்தான் அந்தப் பைத்தியம்!

நான் ஓடிவிட நினைத்து,  இரண்டு அடிகள் எடுத்து வைத்தேன்.

“மிஸ்டர், சத்தியமா இந்தப் பூங்காவில் உலவுற பைத்தியம் நான் அல்ல. நான் தனிமையில் பிதற்றினதைப் கேட்டா அப்படித்தான் நினைக்கத் தோணும். நான் பள்ளிக்கூட வாத்தியார். புதுசா பல்செட் போட்டிருக்கேன். பேசிப் பிழைக்கிறதுதானே என் தொழில். சரியாப் பேச வருதான்னு தனியான இடம் தேடிவந்து சோதிச்சிப் பார்த்திட்டிருந்தேன். நீங்க இங்கே வந்ததைக் கவனிக்கல. சந்தேகம் இருந்தா பார்த்துக்கோங்க” என்று வாய் திறந்து புதிய பல்செட்டைக் கழற்றிக் காட்டினார் வழுக்கை மனிதர்.

“ஹி...ஹி...ஹி...” அசடு வழியச் சிரித்துவிட்டு புத்தகப் பையுடன் மீண்டும் தனியிடம் தேடி நகர்ந்தேன்.
***********************************************************************************************************************
கதைகள்கிற பேருல எதை எதையோ எழுதினேன். பிரபலம் ஆக முடியல. போட்டிக்கு ஆளே இல்லைங்கிறதால இனி சிரிப்புக் கதைகள் எழுதுறதுன்னு முடிவு பண்ணியிருக்கேன்.

இன்னிக்கி, ‘சுபமுகூர்த்த தினம்’ ஆச்சே. அதிகாலையிலேயே எழுந்து எழுத ஆரம்பிச்சேன். சற்று முன்னர்வரை, ஏழெட்டு தடவை எழுதியும்[ஒரே கதையைத்தான்!] திருப்தி இல்ல. படித்தபோதெல்லாம் சிரிப்புக்குப் பதிலா அழுகைதான் வந்தது. எப்பவோ எழுதின [தளத்தில்] ‘தேவலாம்’ கதையை மீண்டும் படிச்சி மனசைத் தேத்திகிட்டேன்.

அதை இங்கே பதிவு செய்திருக்கிறேன். நீங்கள் படித்துச் சிரிக்கலாம்; பின்னூட்டத்தில் சீண்டிவிட்டு வேடிக்கையும் பார்க்கலாம்!




புதன், 17 மே, 2017

ஆணும் பெண்ணும் ஒன்னு! இதனை அறியாதார் மண்டையில் களிமண்ணு!!

‘ஓவியா’ என்பவர் பெண்ணியச் செயல்பாட்டாளர்; எழுத்தாளர்; சொற்பொழிவாளர். பெண் வளர்ப்பு குறித்து அதிரடியாய், ‘தி இந்து’[14.05.2017] வில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதை வாசிக்கும் வாய்ப்பிழந்தவர்களுக்காகவே இந்தப் பதிவு!
‘உடையும் நகையும் வன்முறை ஆயுதங்கள்’[ஆணும் பெண்ணும் ஒன்னு] என்று தலைப்பிட்டுக் கட்டுரையைத் தொடங்குகிற ஓவியா, ‘கடைகளில் பொம்பளைப் புள்ளைகளுக்காகக் காட்சிக்கு வைத்திருக்கும் விதம் விதமான வண்ண வண்ண உடைகளைப் பார்த்துப் பிரமிக்கிறோமே, அந்த உடைகள்தான் சமூகம் பெண்களின் மீது ஏவும் முதல் வன்முறை ஆயுதம்’ என்று நம் செவிட்டில் அறைந்து சொல்கிறார்.

‘குழந்தைப் பருவத்திலிருந்து ஏன் வேறுபட்ட உடைகள் தரப்படுகின்றன? அந்தக் குழந்தைகள் இந்த வேறுபாட்டை அறிவார்களா? அவர்களை வேறுபடுத்தி நாம்தான் இரு உலகங்களாகப் பிரிக்கிறோம்’ என்று குறிப்பிடும் கட்டுரை ஆசிரியர்.....

‘பெண்களைக் காட்சிப் பொருளாக்குவது என்பது அவர்களின் குழந்தைப் பருவத்திலேயே தொடங்கிவிடுகிறது. பெண் என்பவள் பிறர் பார்த்து ரசிக்கப்படுபவளாக இருக்க வேண்டும் என்ற சிந்தனை அவளுடைய அம்மா மற்றும் குடும்பப் பெண்களிடமிருந்தே தொடங்குகிறது. ஆண் குழந்தைகளுக்குக் குறிப்பிட்ட மாதங்களோடு நின்றுபோகும் பவுடர் டப்பாவும் கண் மையும் பெண் குழந்தைகளுக்கு மட்டும் தொடர்வது ஏன்?’ என்று அவர் முன்வைக்கும் கேள்வி பெண் குழந்தை பெற்ற அத்தனை பெற்றோரையும் விடை தெரியாமல் விழி பிதுங்க வைக்கிறது.

‘தன்னைக் காட்சிப் பொருளாக்கிக் கொள்ளும் இயல்பைக் குழந்தையிலிருந்து பெண்ணின் மீது திணித்துவிட்டு, அவர்கள் மீது பாலியல் வன்முறை நிகழ்த்தப்படும் நேரங்களில் அவளின் உடையைக் காரணம் காட்டுவது எத்தகைய முரண்பாடு? எவ்வளவு பெரிய வன்முறை?’ என்று அவர் எழுப்பும் கேள்விகள் பெற்றோரைத் தலை குனிய வைக்கின்றன.

‘பெண்ணுக்கும் ஆணுக்கும் அவர்களின் பால் வேறுபாடு தெரியாத வகையில்  ஒரே மாதிரியான  உடைகள் வேண்டும்’ என்ற பெரியாரின் அரிய கருத்தை மேற்கோள் காட்டுவதோடு, எளிய உடையான கைலியைத் தான் உடுத்தியதோடு, தன் மனைவியையும் உடுக்கச் செய்த அவரின் மேன்மைக் குணத்தை ஓவியா நினைவுகூர்வது நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.

‘குழந்தைகளுக்கு ஐந்து வயதுக்குள் காது குத்துகிறார்கள். சிறு வயதிலேயே ஆணுக்கு அதைத் தூர்த்துவிடுகிற பெற்றோர் பெண் குழந்தைகளுக்கு அவ்வாறு செய்வதில்லை. அதன் விளைவு,  காதணி என்பது பெண்ணுக்கு வாழ்நாள் சொந்தமாக ஆகிறது. 

விதம் விதமாய், கண்ணைக் கவரும் வண்ணங்களில் பெண்களுக்கு ஆடை உடுத்துவிடுவதும், சரம் சரமாய் நகைகள் அணிவிப்பதும் அவர்கள் மீது ஏற்றப்படும் அடிமைச் சின்னங்களாகும்’ என்றெல்லாம் மக்கள் செய்த, செய்துகொண்டிருக்கும் தவறுகளைப் பட்டியலிடும் ஆசிரியர், முத்தாய்ப்பாக, ‘ஆண்களின் சமுதாயச் செல்வாக்கைப் பறைசாற்றும் அலங்கார ஊர்திகளாக வாழ்வது அவமானம் என்பதைப் பெண்களுக்கு உணர்த்தாமல் பெண் விடுதலையும் மானுட விடுதலையும் சாத்தியமில்லை’ என்று அடித்துச் சொல்கிறார்.

ஓவியா போன்ற சீரிய சிந்தனையாளர்களின் தரமான கட்டுரைகளை மக்கள் படித்தால் மட்டும் போதாது; பாடம் படிக்கவும் வேண்டும்.

செய்வார்களா?
===============================================================================
குறிப்பு:
‘உடையும் நகையும் வன்முறை ஆயுதங்கள்’ என்பது ஓவியா அவர்கள் கொடுத்த தலைப்பு. ‘ஆணும் பெண்ணும் ஒன்னு’ என்பதும் அவர்கள் இட்டிருந்த தலைப்புதான்[துணைத் தலைப்பு?]. 

‘ஆணும் பெண்ணும் ஒன்னு’ வுடன் ‘அறியாதார் மண்டையில் களிமண்ணு’ என்பதை இணைத்துப் பதிவின் தலைப்பாக்கியவன் நான்! ஓவியா என்னை மன்னிப்பாராக.




செவ்வாய், 16 மே, 2017

‘பாலகுமாரன் பற்றிய என் பதிவுக்கு ‘வருண்’ அவர்களின் கருத்தும் என் பதிலுரையும்!



15.05.2017இல் வெளியான என் பதிவு:  
http://kadavulinkadavul.blogspot.com/2017/05/blog-post_14.html

‘வருண்’ அவர்களின் கருத்துரை:

#பாலகுமாரன் எப்போவுமே இப்படித்தானே எழுதினார்? பொண்டாட்டியை "தேவடியாள்"னு சொன்னால்த்தான் காமம் நல்லாயிருக்கும்னு நம்புபவர் அவர். இப்போ "நாட்டுக்கட்டை" பட்டம் காதலிக்கு. :) 

இதே மாதிரி பொம்பளைங்க ஆம்பளைங்க விமர்சிக்கிறாப்பிலே எழுதினால் ஆம்பளைக்கு அன்னைக்கு நைட் வயாகராவும் உதவ முடியாது என்பதையும் கவனிங்க. ஆம்பளைங்க பொம்பளைங்களை இப்படிப் பேசித்தான் தங்களை "தேர்த்த" முடியுது. அவளை ஓரளவுக்கு கவனிக்க முடியுது என்பது பரிதாபம். வயசான காலத்தில் பொம்பளைகளை அவர் இப்படித்தான் திருப்திப் படுத்த முடியும். படுக்கையில் முடியாது பாருங்க?! பாவம் விடுங்க!

மேலும் வயதாக ஆக அசிங்கம் எல்லாம் தெரியாதுனு நீங்க சாண்டில்யன் பிற்கால நாவல்களை முந்தைய நாவல் களுடன் இணைசெய்து பார்த்தால் உங்களுக்குப் புரியும்.

நான் என் சொந்த அனுபவத்தில் கண்டதென்னவென்றால் படைப்பாளிக்கு காமம் பற்றி எழுதும்போது தான் எல்லை கடப்பது உணர முடியாது என்பதே.

காதலன்-காதலி, கணவன் -மனைவி இடையில் உள்ள உறவைத்தானே நான் எழுதுறேன். அதில் காமம் தூக்கினால் "சுப(க)ம்"தானே என்பார். எனக்கும் அதில் ஓரளவுக்கு ஒப்புதல் உண்டு.

சரோஜாதேவிக் கதையில் எவனுமே காதலன் காதலி உறவு கொள்வதையோ, கணவன் மனைவி உறவு கொள்வதையோ எழுதுவதில்லையே. இன்றைய காமக் கதைகளிலும் அப்படித்தான். இல்லையா? தகாத உறவை மையமாக வைத்துத்தானே எழுதுகிறார்கள்? அதனால் நீங்க இவ்விரண்டையும் "கம்பேர்" பண்ணக் கூடாதுனு நினைக்கிறேன்.

நான் பார்த்தவரைக்கும், காமம் பற்றி எழுதும்போது நமக்கு நாம் செய்வது தவறாகத் தெரிவதில்லை. மற்றவர்கள் எழுதினால் அருவருப்பாகவும் தவறாகவும் தெரியும் என்று நம்புகிறேன். மற்றபடி நான் எழுதும்போது என் கதைக்கு வந்த விமர்சங்களை வைத்துத்தான் இந்த முடிவுக்கு வந்தேன். நான் பாலகுமாரன் விசிறி என்று என்னைத் தவறாக புரிந்து கொள்ளாதீர்கள்#



என் விளக்கவுரை:

மகிழ்ச்சி வருண்.

//நான் என் சொந்த அனுபவத்தில் கண்டதென்னவென்றால் படைப்பாளிக்கு காமம் பற்றி எழுதும்போது தான் எல்லை கடப்பது உணர முடியாது என்பதே// என்கிறீர்கள். 

உண்மைதான். என்னுடைய பழைய சில கதைகளிலும்[வலைத்தளத்தில் பதிவிட்டதில்லை] இது நேர்ந்திருக்கிறது.

//காதலன்-காதலி, கணவன் -மனைவி இடையில் உள்ள உறவைத்தானே நான் எழுதுறேன். அதில் காமம் தூக்கினால் "சுப(க)ம்"தானே என்பார். எனக்கும் அதில் ஓரளவுக்கு ஒப்புதல் உண்டு// என்றும் சொல்கிறீர்கள். 

‘கணவன் - மனைவி’ இடையே...சரி; ‘காதலன் - காதலி’ இடையே ‘காமக் கிளர்ச்சி’யை உண்டுபண்ணும் உரையாடல் தவறல்லவா? அதனால் பாதிக்கப்படுவது அப்பாவிப் பெண்கள்தானே. எத்தனை எத்தனை வெறித்தாக்குதல்கள் ! கடத்தல்கள்! கற்பழிப்புகள்! கொலைகள்!

“ரெஜிஸ்டர் மேரேஜ் செய்துகொள்ளலாம்” என்று கார்த்தி சொன்ன பிறகும் பானுமதியின் உச்சக்கட்ட ‘வெறிப்பேச்சு’ தேவைதானா? மணமான பிறகு எப்படி வேண்டுமானாலும் வெறியாட்டம் ஆடட்டும்[‘அந்தரங்க’ உறவின்போது, ஆண்களைக் காட்டிலும் படு படு ஆபாசமாகப் பேசும் பெண்கள் எதார்த்த உலகில் உள்ளனர்]. மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை.

திருமணம் ஆகாத நிலையில், ‘உன்னைக் கைவிட மாட்டேன்’ என்று காதலன் வலியுறுத்திச் சொல்லிக்கொண்டிருக்கும் நிலையில்[போராட்டத்திற்கு ஒரு தீர்வு கிட்டும் நிலையில்] காதலியின், “இங்க தொடு, அங்க தொடு... எங்கேயோ பத்திகிச்சுன்னா அதை முடிச்சாகணும்.....” என்னும் பேச்சு விரசத்தின் உச்சம் என்பதுதான் என் குற்றச்சாட்டு.

பாலகுமாரனின் இம்மாதிரியான உரையாடல்களை விமர்சன உலகம் வரவேற்குமேயானால்.....

இன்னும்  வரம்பு கடந்து,  “எனக்குத் தாங்கல. இப்பவே, இந்த இடத்திலேயே நான் மல்லாந்து படுத்துடுறேன். படு...என்னோட படுடா. என்னைப் பரவசப்படுத்துடா” என்று பானுமதி சொல்வதாக எழுத்துச் சித்தர் பாலகுமாரன் எழுதக்கூடும்[இது போல இதைவிடவும் ஆபாசமான எழுத்துக்குத்தான் ‘சரோஜாதேவி’யை உதாரணம் காட்டினேன்].

மற்றபடி, பாலகுமாரன்மீது அழுக்காறோ அவரைப் போல் நாம் பிரபலம் ஆகவில்லையே என்னும் ஆதங்கமோ எனக்கு இல்லை.

என்னுடைய, பாலகுமாரனின் ‘பச்சை’ எழுத்து பற்றிய பதிவு, கூடுதல் விளக்கங்களுடன் அமைந்திருத்தல் வேண்டும் என்பதைத் தங்களின் சீரிய பின்னூட்டம் உணர்த்தியதன் விளைவே இப்பதிவு.

மிக்க நன்றி வருண்.

ஞாயிறு, 14 மே, 2017

இன்னும் இன்னும் இன்னும் ‘பச்சை’யாக எழுதுங்கள் பாலகுமாரன்!!!

எழுத்துச் சித்தர் பாலகுமாரன் ‘லைஃப்’இல்[குமுதம் இணைப்பு] ‘காதல் கதை’ எழுதிக்கொண்டிருக்கிறார். நாயகி கவர்ச்சிக் கன்னி; மகா துணிச்சல்காரியும்கூட. அதற்குச் சான்று பகரும் நிகழ்வு[கள்] கீழே.....
நாயகன் கார்த்திகேயனும் நாயகி பானுமதியும் இணைந்து ‘பைக்’கில் பயணிக்க நேர்ந்தபோது, மழையில் நனைகிறார்கள்; பயணம் முடிந்து ஒரு காஃபி ஷாப்புக்குள் நுழைகிறார்கள். நுழையும்போது தெப்பமாய் நனைந்துவிட்ட தன் மேனியை ஆராய்கிறாள் பானுமதி.

‘அவள் அணிந்திருந்த அரைக்கைச் சட்டையின் முதல் பட்டன் மூடமுடியாமல்[காரணம் புரிகிறதுதானே?] இருக்கிறது. இரண்டாவது பட்டன் நன்கு மூடியிருக்க, அந்த இடைப்பட்ட வெளியில் மார்பின் மேல் பகுதி அவளுக்கே தெளிவாகத் தெரிந்தது.

காஃபி ஷாப்பில் இருந்த கண்ணாடியில் தன் உருவத்தை நின்று பார்த்துக்கொண்டாள். “செம கட்டையடி நீ. அவன் [காதலன்] சாகப் போறான் பார்”என்று நினைத்துக்கொண்டாள்.....’

பானு ரொம்பத்  துணிச்சல்காரிதானுங்களே?

நாயகனோ ரொம்ப நல்ல பையன்.

‘...எதிரே உட்கார்ந்து எந்தப் பயமுமின்றி, வெட்கமும் இன்றி அவள் மார்பின் மேல்பகுதியையே அவன் ஆச்சரியத்தோடு பார்த்தான்...’ என்று எழுதுகிறார் எழுத்துலகப் பிரபலம்.

ஒட்டுமொத்த உடம்பிலும் சூடு பரவ காமாக்கினி தகிக்க கட்டுக்கடங்காத இச்சையுடன் பார்க்காமல், ஆச்சரியமாகப் பார்ப்பதால் அவன் நல்ல பையன்தானே? 

34 வாரங்களாகத் தொடரும் கதையில், காதலர் இருவரும் கட்டுப்பாடின்றிப் பழகிக் காதலை வளர்த்துக்கொள்கிறார்கள். இருவரும் வேறு வேறு சாதி என்பதால்[அவன் வன்னியர். அவள் ரெட்டியார்] அவர்கள் கணவன் மனைவியாக இணைவதற்கான காலம் கனியவே இல்லை[குமுதம் 17.05.2017 இதழ் வரை]. 

காதலி[பானுமதி] பொறுமை இழக்கிறாள்; கார்த்திகேயன் காலம் கடத்துவதைக் கண்டிக்கிறாள்; அவன் பயப்படுவதாகக் குற்றம் சாட்டுகிறாள்.

“என் அண்ணன் டெல்லியில் இருக்கார். அவர் வந்தா எனக்காகப் பேசுவார்; எங்க அப்பாவைக் கன்வின்ஸ் பண்ணுவார். அதனால நான் அமைதியா இருக்கேன். எனக்குப் பதட்டமோ பயமோ இல்லை. ஏன்னா, நான் நூத்துக்கு நூறு என்னை நம்புறேன்; உன்னை நம்புறேன். உனக்குப் பதட்டமா இருந்தா சொல்லு. ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்” என்கிறான் நாயகன் கார்த்திகேயன்[கவனத்தில் கொள்ளவேண்டிய இடம் இது]

‘இவனின் இந்த உறுதிமொழி பானுமதியை மகிழ்ச்சிப்படுத்தும்; பதிவுத் திருமணத்திற்கு அவள் சம்மதிப்பாள்’ என்பதுதானே வாசகனின் எதிர்பார்ப்பாக இருக்கும்?

அந்த எதிர்பார்ப்பைப் பொய்யாக்குகிறார் பாலகுமாரன்.

கீழே தொடர்வது கதையில் இடம்பெறும் உரையாடல்களில் குறிப்பிடத்தக்க இடமாகும். படியுங்கள்.

பானுமதி: “அதைவிட[ரெஜிஸ்டர் மேரேஜைக் காட்டிலும்] இது பெட்டர்”

“எது?” -கார்த்திகேயன்.

“என்னைக் கெடுத்துடு.”

“லூஸா நீ. பைத்தியம் மாதிரி பேசுறே.”

“என்னைப் பிடிக்கலை இல்லை. என்னைவிட நாட்டுக்கட்டையா உனக்குத் தேவைப்படுது இல்லை.”

“அநியாயமா பேசாதே. வெறுப்பேத்தாதே.”

“உண்மையாகவே நீ நல்லவனா இருந்தா, உண்மையாகவே என் மேல பிரியமானவான இருந்தா என்னைக் கூட்டிட்டுப் போ. எங்காவது த்ரீ ஸ்டார் ஹோட்டலில் கம்ஃபர்ட்புளா கொஞ்ச நேரம் படுத்துட்டு வருவோம். என்னை இங்க அங்க தொட்டு ஏதாவது பண்ணிடு” என்றாள் பானுமதி.

.........................................................................................................[சுருக்கம் கருதிச் சில உரையாடல்களை நீக்கியிருக்கிறேன்]

“திரும்பத் திரும்ப இப்படிப் பேசாதே. என்னைப் போட்டுக் கடிக்காதே” என்றான் கார்த்திகேயன்.

“பயமா இருக்கு கார்த்தி.....”

“அடிச்சிக் கொன்னுடுவேன். விளையாடுறயா நீ...?”

“அடிக்கிறதுக்குப் பதிலா கெடுத்துடு.”

“நீ பேசுறது நல்லாயில்லை.”

“என்னால படிக்க முடியல. வயிறு குழையுது.....எங்கோ பரவிடிச்சி. எங்கேயோ பத்திகிச்சுன்னா அதை முடிச்சாகணும்.....

“எனக்குப் புரியுது. உனக்கு என்ன வேணும்?”

“என்னைக் கெடுத்துடு.”

“அதைத் தவிர வேறு சொல்லு.”

“அதைத்தான் சொல்லுவேன்.”

...........................................................

“பைத்தியம் பிடிச்சிருக்கடி உனக்கு.”

“என்ன வேண்ணா சொல்லு.....நான் உன்கூட எங்க வேணா வரத் தயாரா இருக்கேன். உங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறயா சரி. ரூமுக்குக் கூட்டுட்டிப் போறயா சரி. எங்கேயாவது ஹோட்டலுக்குக் கூட்டிட்டுப் போறயா சரி. என்னை விட்டுடாதே.....”

கதைக்கு ஒரு ‘முடிவு’ தரும் வகை அறியாமல் திணறும் எழுத்துச் சித்தர். மனம் போன போக்கில் எழுதி,  இன்னும் பல வாரங்களுக்கு இழுத்தடிக்க நினைக்கிறார்[காரணம் எதுவாகவோ இருந்துவிட்டுப் போகட்டும்]; வாசிப்பிலிருந்து விலக நினைக்கும் வாசகனைக் கவர்ச்சி காட்டிக் கட்டிப்போட முயல்கிறார். அதன் விளைவு.....

மேற்கண்ட,  கீழ்க்காண்பவை போன்ற கொச்சையான பானுமதியின் பேச்சுகள்.

“உண்மையாகவே நீ நல்லவனா இருந்தா, உண்மையாகவே என் மேல பிரியமானவான இருந்தா என்னைக் கூட்டிட்டுப் போ. எங்காவது த்ரீ ஸ்டார் ஹோட்டலில் கம்ஃபர்ட்புளா கொஞ்ச நேரம் படுத்துட்டு வருவோம். என்னை இங்க அங்க தொட்டு ஏதாவது பண்ணிடு.” 

“என்னால படிக்க முடியல. வயிறு குழையுது.....எங்கோ பரவிடிச்சி, எங்கேயோ பத்திகிச்சுன்னா அதை முடிச்சாகணும்.....”

எழுத்துச் சித்தர் அவர்களே,

வாசகனைச் சொக்க வைத்திட இம்மாதிரியான கொச்சை வசனங்கள் போதா; அந்தக்கால ‘சரோஜாதேவி’யில் வருவது போல் பச்சை  பச்சை பச்சையாக எழுதவேண்டும்.

எழுதுங்கள்.

இம்மாதிரி நீங்கள் எழுதுவது, ‘எழுத்துச் சித்தர்’ பட்டத்தைத் தக்க வைத்துக்கொள்ள உதவக்கூடும்!
===============================================================================













சனி, 13 மே, 2017

அறிவுஜீவிப் பெண்களுக்கான சிறுகதை!!!

இது முன்னணி வார இதழில் வெளியானது.  பிரபல எழுத்தாளர்களுக்குச் சவால் விடும் மின்னல் வேக நடை. நெஞ்சைச் சுடும் கதை. தவறாமல் படித்திடுவீர்!

வன் அழுதுகொண்டிருந்தான்; விடிய விடிய அழுதுகொண்டிருந்தான்!

இரவு பதிரொரு மணி சுமாருக்கு, அவளும் அவனும் அந்த ஆற்றுப் பாலத்தில் போய்க்கொண்டிருந்த போது அவன் அடித்து வீழ்த்தப்பட்டு, அவள் நான்கைந்து ரவுடிகளால் ஆற்றுக்குள் கடத்தப்பட்டாளே அப்போதிருந்து அவன் அழுது கொண்டிருந்தான்.

“ஐயா, என் மல்லியைக் காலிப்பசங்க கடத்திட்டுப் போறாங்க.  உதவிக்கு வாங்கய்யா. தப்புத் தண்டா நடக்கிறதுக்குள்ளே அவளைக் காப்பாத்திக் குடுங்க சாமி.....மகராசரே.....”

ஆபத்துக்கு எப்படியும் நாலு பேர் உதவுவார்கள் என்ற நம்பிக்கையில் கூப்பாடு போட்டு, குலுங்கிக் குலுங்கி அழுதான் அவன்.....வேலுச்சாமி. வாகனங்களில் செல்வோரைக் கும்பிட்டு வழி மறித்தான். பாதசாரிகளின் பாதம் தொட்டுக் கெஞ்சினான்.

“உதவுகிறேன்” என்று ஒருவர்கூட முன்வரவில்லை.

பாலத்துக்கு அப்பால், பாதையோரக் கடைகள் அவன் கண்ணில் பட்டன. மூச்சுப் பிடித்து ஓடினான். முதலில் தேனீர்க்கடை சின்னத்தம்பி. அப்புறம், பெட்டிக்கடை பெருமாள். பிறகு, மிதிவண்டிக்கடை சாமிவேலு. இவர்கள் மட்டுமல்லாது, அங்கிருந்த அத்தனை பேர் காலிலும் விழுந்தான். மல்லியை மீட்டுத் தரும்படி அழுதான்; தொழுதான்; ஒரு பிச்சைக்காரன் போல் மன்றாடினான்.

கும்பல் கூடியது.....வேடிக்கை பார்க்க.

“பொண்ணுக்கு என்ன வயசு?”

“பதினேழு பதினெட்டு இருக்குமுங்க.”

“எந்த ஊரு?”

“கூத்தம்பூண்டி.”

“அவள் உனக்கு என்ன ஆவணும்?”

“தங்கச்சி.”

“உடன்பிறந்த தங்கச்சியா.....இல்லே.....?”

“அது வந்து.....”

“என்னப்பா வந்து போயி.....”

“சொந்தத் தங்கச்சி இல்லேங்கிறே.”

“ஆமாங்க.”

“அப்படிச் சொல்லு. கல்யாணம் ஆயிடிச்சா?”

“எனக்குங்களா?”

“ரெண்டு பேருக்கும்தான்.”

“இல்லீங்க.”

“அவளைக் கூட்டிட்டு எங்கே வந்தே?”

“சினிமா பார்க்க வந்தோம்.”

“என்ன படம்?”

“படம்.....அது வந்து......”

“என்னப்பா, எது கேட்டாலும் வந்து போயின்னு மென்னு முழுங்குறே. எங்கேயோ உதைக்குதே.”

ஆளாளுக்கு அவனை மடக்கிக் கொண்டிருக்க, இளகிய மனசுக்காரர் ஒருவர் அவனை நெருங்கினார்.

“தம்பி, அந்த இடத்துல அடிக்கடி ரவுடிப்பசங்க பொண்ணுகளைக் கடத்துறானுக. அவனுக உள்ளூர் அரசியல்வாதி ஒருத்தரோட அடியாளுங்க. உனக்கு உதவ இங்கே யாரும் முன்வரமாட்டாங்க. நேரே போலீசுக்குப் போ” என்றார்.

காவல் நிலையத்தைக் கண்டுபிடித்து, புகார் மனு எழுதிக் கொடுத்து, அவர்கள் ஆயத்தமாகிப் புறப்பட்டு வந்து மல்லியை மீட்டால் அவளிடம் என்ன மிச்சமிருக்கும்? அதற்குள் மந்தி கை மாலையாகச் சிதைந்து போவாளே.

அவன் அழுதான். நாலு பேர் துணையாக வந்தால் எண்ணி நாலு நிமிடத்தில் அவளை மீட்டுவிடலாம் என்று புலம்பினான். எவரும் வருவதாக இல்லை.

அவன் அழுதான். ‘ஐயோ தங்கச்சி” என்று தலை தலையாய் அடித்துக் கொண்டு அழுதான்; தரையில் விழுந்து புரண்டு புரண்டு அழுதான்.

வெளியூர்க்காரனான வேலுச்சாமி, அங்குள்ள உள்ளூர்க்காரர்களிடம் உதவி கேட்டுச் சோர்ந்து போனான்.

மனிதர்கள் உதவ முன்வராத நிலையில் கடவுளின் நினைப்பு வந்தது.

“கடவுளே.....” என்று கூவியவாறு மீண்டும் பாலத்தை நெருங்கி, பக்கப்பாதையில் சரிந்து, நீர் வற்றிக் கிடந்த அந்த ஆற்றுக்குள் இறங்கி மணலில் கால் பதித்து ஓடினான்; மணல் மேடுகளில் தடுக்கி விழுந்து உருண்டான். காலிகள் அடித்ததால் மண்டையிலிருந்து வடிந்து உறைந்து போயிருந்த குருதித் தாரைகளில் மணல் துகள்கள் ஒட்டிக்கொண்டு நறநறத்தன.

வெட்டி எடுக்கலாம் போன்ற மையிருட்டில் அவன் இலக்கின்றி ஓடினான்.

“தெய்வமே.....என் தங்கச்சியைக் காப்பாத்து.....” என்று அவன் எழுப்பிய கூக்குரல், பரந்த ஆற்றுப் பரப்பில் தடையேதுமின்றிக் காற்றில் கலந்து பரவி அடங்கிக் கொண்டிருந்தது.

அவன், தான் சார்ந்த மதத்தை மறந்து, தனக்குத் தெரிந்த அத்தனை கடவுள்களையும் பெயர் சொல்லி அழைத்துத் தன் உடன்பிறப்பைக் காப்பாற்றும்படி ஓடிக்கொண்டே பிரார்த்தித்தான்.

“மல்லி.....மல்லி.....” என்று என்று கூவிக் கொண்டே அவளைத் தேடினான்.

தோல்வி அவன் நெஞ்சில் அறைந்தது.

ஆற்றங்கரைப் புதர் மறைவிலோ மணல் மேடுகளின் சரிவிலோ வல்லூறுகளின் பிடியில் அந்தப் பெண் புறா படும் மரண வேதனையைக் கற்பனை செய்து செய்து அவனின் நாடி நரம்புகள் ஒடுங்கிப் போயின.

அவன் நிலைகுலைந்து போனான்; அதர்மம் கொக்கரிக்கும் அந்தகாரத்தில், ஓடியோடிப் பாலத்தடியில் தேடினான்; தூண்களில் மோதிச் சோர்ந்தான்.

வெறி பிடித்தாற்போல எங்கெல்லாமோ ஓடினான்; குத்துக்கல் ஒன்றில் கால் இடறிச் சரிந்து விழுந்தான்; எழுந்து மீண்டும் ஓடப் பார்த்தான். முடியவில்லை.

நேரம் அடித்துப் பிடித்து ஓடிக் கொண்டிருந்தது. 

அவன் பெருமளவில் தன் சக்தியை இழந்திருந்தான்; தவழக்கூட முடியவில்லை; அங்குலம் அங்குலமாக ஊர்ந்து செல்லத்தான் முடிந்தது.

உரத்த குரலில் கடவுளை உதவிக்கு அழைக்க முடியவில்லை.

“கடவுளே.....கடவுளே.....” என்று அடங்கிய குரலில் முணுமுணுக்க மட்டுமே முடிந்தது.

ஆவேசம் தணியாத நிலையில், ஒரு புழுப்போல ஊர்ந்து கொண்டிருந்தான்.

யங்கித் தயங்கி இருள் விடை பெற்றுக் கொண்டிருந்தது.

எல்லாம் வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருந்தன.

வறண்ட ஆற்றின் ஓரிடத்தில், பரந்து விரிந்த மணல் மெத்தையில் மல்லி பிணமாகக் கிடந்தாள்.

அவள் உடலெங்கும் நகக் கீரல்கள்; பற்பதிவுகள்; உறைந்த ரத்தத் துளிகள். மாசு படுத்தப்பட்டுக் கொடூரமாகச் சிதைக்கப்பட்ட நிலையில் அந்த அழகு தேவதை அலங்கோலமாகக் கிடந்தாள்.

அவளுக்கு அழகு சேர்த்த ஆடைகள் வெறும் கந்தல் துணிகளாகி, கொஞ்சமாய் அவள் மானம் காத்தன.

வேலுச்சாமி?

சற்றுத் தள்ளி, மணலை முத்தமிட்டுக் குப்புறக் கிடந்தான்.

வானில் காகங்களும் கழுகுகளும் வட்டமிட்டு வேடிக்கை பார்த்தன.

மனிதர்களுக்குக் கேட்கவா வேண்டும்? மந்தை மந்தையாய் வந்து குழுமி ஆசை தீர வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

கடவுள்?
***********************************************************************************************************************