Wednesday, May 31, 2017

கள்ள உறவும் ஒரு கைம்பெண்ணின் கையறுநிலையும்![உண்மைக் கதை]

சேலம் சென்றுவிட்டு நாமக்கல் திரும்பிக்கொண்டிருந்தபோது, நான் பயணித்த பேருந்தில்  ‘புதுச்சத்திரம்’ நிறுத்தத்தில் அந்தப் பெண் ஏறினாள்.

விதவை.

உலர்ந்து கறுத்த சருமம். ஒல்லிக்குச்சி உடம்பு.  வாரப்படாமல் அள்ளி முடித்த, ஆங்காங்கே நரை ஓடிய குட்டை முடி. எதையோ இழந்து எப்போதும் தேடிக்கொண்டிருப்பது போன்ற சோர்ந்த குழி விழுந்த கண்கள். வயதுக்கு மீறிய முதுமை.
அவள் ஓட்டுநருக்குப் பின்னிருக்கையில் இடம் பிடித்தாள். அவளை ஆறு மாதம் முன்பு, நாமக்கல்லில் வைத்து வக்கீல் அசுவத்தாமன் வீட்டில் பார்த்தது நினைவுக்கு வந்தது.

அவள் என் நினைவோட்டத்தில் அடிக்கடி இடம் பிடிப்பவள்; என்னால் மறக்க முடியாதவள். “வக்கீலய்யா, கேசு தோத்துப் போனா நான் உசுரோட இருக்க மாட்டேன்” என்று சொல்லிவிட்டுப் போனவளை எப்படி மறக்கமுடியும்?

அன்று நான் கேட்காமலே இந்த வெம்பிப்போன விதவையின் வழக்கு விவரத்தை அசுவத்தாமன் சொன்னார். அவர் என்  பால்ய நண்பர்.

இவ பேரு செல்லம்மா. வாரிசு இல்ல.  புருஷன் செத்துக் கொஞ்சம் வருசம் ஆச்சு. அவன் எதுவும் சம்பாதிக்கல. அம்மா வழியில் வந்த நாலு ஏக்கர் ‘மேட்டுக்காடு’ மட்டும்தான் இவ சொத்து...மானாவாரி. வருணபகவான் கருணை காட்டினா நிலக்கடலை விளையும். மழை குறைஞ்சா சோளம் பயிரிடலாம். மாட்டுக்குத் தீவனம் ஆகும். ஒட்டுமொத்த வருமானத்தைக் கணக்கிட்டா வரவு எட்டணா செலவு பத்தணாதான். பயிர் நடவு, களையெடுப்பு, அறுவடை என்று கூலி செய்து பழக்கப்பட்ட செல்லம்மா, நிலத்தை வித்துப் பணத்தை வங்கியில் போடத் தீர்மானிச்சா.

பெரியசாமி  விவசாயி; இவளுடைய ஊர்க்காரர்;   தூரத்துச் சொந்தம்; மாமன் முறை. நிராதரவான நிலையிலிருந்த  செல்லம்மா, நில விற்பனைக்கு அவன் உதவியை நாடினா. 

நாட்கள் கடந்தனவே தவிர நிலம் விலை போகல. ஒரு கட்டத்தில், இரண்டு லட்சத்துக்குத் தானே கிரயம் செய்துக்கிறதாச் சொன்னான் பெரியசாமி. பத்தாயிரம் முன்பணம் கொடுத்தான். கிரயத்திற்குப் பிறகு மிச்சப் பணத்தை அவள் பெயரில் வங்கியில் போடுறதா உறுதியளிச்சான்.

முதலில் தயங்கிய செல்லம்மா அப்புறம் ஒத்துக்கிட்டா. வேறு வழியில்லை என்பது மட்டுமல்ல, இனி எட்டாக்கனின்னு இவ நினைச்ச உடலுறவு சுகம் அவன் மூலம் கிடைச்சது முக்கியக் காரணம்.

முழுத்தொகையும் பெற்றுக்கொண்டதாகப் பொய் சொல்ல வைத்து, முறைப்படி அவளிடம் கைநாட்டு வாங்கிக் கிரயத்தை முடிச்சான் பெரியசாமி. ஆனா, வாக்களிச்சபடி மிச்சப்பணத்தை வங்கியில் அவள் பெயருக்குப் போடல..

தவணை சொன்னான்; தட்டிக் கழிச்சான்; தரவேண்டிய பணத்துக்கு, ‘புரோநோட்’ எழுதித் தராம “பணம் என்னிடமே இருக்கட்டும். மாசாமாசம் வட்டி தந்துடுறேன்” என்றான். ஒரு சில மாதங்கள் மட்டுமே தந்தான்.

கொஞ்சம் கொஞ்சமா இருவருக்குமிடையேயான  ‘பிரியம்’ குறைஞ்சுது; உடலுறவிலும் சலிப்பு ஏற்பட்டுச்சி; கசப்பு வளர்ந்துச்சி. பஞ்சாயத்துக் கூட்டி முறையிட்டா செல்லம்மா. பலனில்லை. என்னைச் சந்தித்தாள். வழக்குத் தொடுத்து ஏழெட்டு வருசம் ஆச்சு........” என்று சொல்லி நிறுத்தினார் அசுவத்தாமன்.

“கேசு ஜெயிக்குமா?” என்றேன் நான்.

“எழுத்துபூர்வமான டாக்குமெண்ட்ஸ் இல்லேன்னாலும் பெரியசாமி இவளை எப்படியெல்லாம் ஏமாத்தினான்கிறதை நீதிமன்றத்தில் சொல்ல வலுவான சாட்சிகள் இருக்கு. கேசு ஜெயிக்கும்னு நான் நம்புறேன்” என்றார் நண்பர். அதன் பிறகு அசுவத்தாமனை நான் சந்திக்கவே இல்லை. இருப்பினும் செல்லம்மாவை அவ்வப்போது நினைத்துக்கொள்வது உண்டு. எதிர்பாராத வகையில் அவளைச் சந்திக்கும் வாய்ப்பு இப்போது கிடத்திருக்கிறது. எனக்கு முன்னதாக அவள் இறங்கிவிடாமலிருந்தால் வழக்கு பற்றி விசாரித்துவிடுவது என்று தீர்மானித்தேன்.

ஆனால், சற்றும் எதிர்பாராத வகையில், முன்னிருக்கையில் இருந்த இரண்டு கிராமவாசிகளின் உரையாடலைக் கேட்க நேர்ந்தபோது அதற்கு அவசியம் வராதோ என்றும் தோன்றியது.

“ஏம்பா இந்தச் செல்லம்மா நெலத்துக் கேசு என்னப்பா ஆச்சு?” -கேட்டவர் ஜன்னலோர இருக்கைக்காரர்.

"கேசு ஜெயிச்சுட்டுது. ஆனா.....” என்று சஸ்பென்ஸ் கொடுத்து நிறுத்தினார் உடனிருந்தவர்.

“என்னா ஆனா ஆவன்னா, நடந்ததைச் சொல்லுப்பா.”

“கேசு ஜெயிச்சதும்  கோர்ட் அமீனாவோட நெலத்தைச் சுவாதீனம் பண்ணப் போனா செல்லம்மா. நெலத்துல கால் வைக்கவிடாம தடுத்தான் பெரியசாமி. அமீனா, போலீஸ் பாதுகாப்போட வர்றதாச் சொல்லிட்டுப் போய்ட்டார். இவள் போகல. பெரியசாமியோட வாக்குவாதம் பண்ணினா; அசிங்க அசிங்கமா அவனைத் திட்டினா. இவளைக் கழுத்தைப் பிடிச்சித் தள்ளினான் பெரியசாமி. இவ முரண்டு பிடிக்கவே, வரப்பிலிருந்த ஒரு கல்லை எடுத்து மண்டை அடியாப் போட்டுத் தள்ளிட்டான்.....”

“அடடா...அப்புறம்?”

”தகவல் கிடைச்சி நாங்க நாலு பேர் சேர்ந்து இவளை ஆஸ்பத்திரியில் சேர்த்தோம். உயிர் பிழைச்சுட்டா. ஆனா.....”

“மறுபடியும் ஆனா ஆவன்னாவா? சொல்லி முடிப்பா.”

“மண்டையில் அடிபட்டதில் புத்தி பேதலிச்சிப் போச்சு. அங்க பாரு. செல்லம்மாகிட்ட கண்டக்டரு டிக்கட் கேட்குறார். என்ன நடக்குதுன்னு கவனி” என்றார் ஜன்னல் சீட்டுக்காரர்.

நானும் கவனிக்கலானேன்.

“ஏம்மா, எங்க போவணும்?” -நடத்துனர்.

“எங்க வக்கீல் வூட்டுக்கு ஒரு டிக்கட்டு குடு.”

“யாரும்மா உங்க வக்கீலு.”

“என்ன கண்டேட்டுரு தெரியாத மாதிரி கேக்கற. ஒரு டிக்கட் குடுடா.”

அவளை ஊன்றிக் கவனித்த நடத்துனர் ஏதோ புரிந்ததுபோல் தலையசைத்தார்; அவளின் புத்திமாறாட்டத்தை அவர் அறிந்திருக்க வேண்டும். “இந்தப் பஸ் போகாது. எறங்கிக்கோ. உங்க வக்கீல் வூட்டுக்குப் போற பஸ் பின்னாடி வந்திட்டிருக்கு. அதுல ஏறிப் போ” என்று இணக்கமாகப் பேசி அவளை இறக்கிவிட்டார்.

பேருந்து வேகமெடுத்தது. பின்னால் திரும்பிப் பார்த்தேன். தொலைவில் வந்துகொண்டிருந்த ஒரு நான்கு சக்கர வாகனத்தை நிறுத்துவதற்காக ஒரு கை நீட்டித் தன்னை ஆயத்தம் செய்துகொண்டிருந்தாள் செல்லம்மா.

என் நெஞ்சில் இனம்புரியாத வலி பரவியது.
===============================================================================
இந்தக் கதையை ஒரு முன்னணி வார இதழுக்கு அனுப்பியுள்ளேன். வெளியாகுமா தெரியவில்லை. எனக்கும் பொறுமை இல்லை. இங்கே உங்கள் வாசிப்புக்கு!

No comments :

Post a Comment

எழுதுகையில், கருத்துப் பிழைகளும் மொழிப் பிழைகளும் நேர்தல் இயற்கை. பிழை காணின், அன்புகொண்டு திருத்துங்கள். இயலாதெனின், பொறுத்தருளுங்கள்.