புதன், 17 மே, 2017

ஆணும் பெண்ணும் ஒன்னு! இதனை அறியாதார் மண்டையில் களிமண்ணு!!

‘ஓவியா’ என்பவர் பெண்ணியச் செயல்பாட்டாளர்; எழுத்தாளர்; சொற்பொழிவாளர். பெண் வளர்ப்பு குறித்து அதிரடியாய், ‘தி இந்து’[14.05.2017] வில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதை வாசிக்கும் வாய்ப்பிழந்தவர்களுக்காகவே இந்தப் பதிவு!
‘உடையும் நகையும் வன்முறை ஆயுதங்கள்’[ஆணும் பெண்ணும் ஒன்னு] என்று தலைப்பிட்டுக் கட்டுரையைத் தொடங்குகிற ஓவியா, ‘கடைகளில் பொம்பளைப் புள்ளைகளுக்காகக் காட்சிக்கு வைத்திருக்கும் விதம் விதமான வண்ண வண்ண உடைகளைப் பார்த்துப் பிரமிக்கிறோமே, அந்த உடைகள்தான் சமூகம் பெண்களின் மீது ஏவும் முதல் வன்முறை ஆயுதம்’ என்று நம் செவிட்டில் அறைந்து சொல்கிறார்.

‘குழந்தைப் பருவத்திலிருந்து ஏன் வேறுபட்ட உடைகள் தரப்படுகின்றன? அந்தக் குழந்தைகள் இந்த வேறுபாட்டை அறிவார்களா? அவர்களை வேறுபடுத்தி நாம்தான் இரு உலகங்களாகப் பிரிக்கிறோம்’ என்று குறிப்பிடும் கட்டுரை ஆசிரியர்.....

‘பெண்களைக் காட்சிப் பொருளாக்குவது என்பது அவர்களின் குழந்தைப் பருவத்திலேயே தொடங்கிவிடுகிறது. பெண் என்பவள் பிறர் பார்த்து ரசிக்கப்படுபவளாக இருக்க வேண்டும் என்ற சிந்தனை அவளுடைய அம்மா மற்றும் குடும்பப் பெண்களிடமிருந்தே தொடங்குகிறது. ஆண் குழந்தைகளுக்குக் குறிப்பிட்ட மாதங்களோடு நின்றுபோகும் பவுடர் டப்பாவும் கண் மையும் பெண் குழந்தைகளுக்கு மட்டும் தொடர்வது ஏன்?’ என்று அவர் முன்வைக்கும் கேள்வி பெண் குழந்தை பெற்ற அத்தனை பெற்றோரையும் விடை தெரியாமல் விழி பிதுங்க வைக்கிறது.

‘தன்னைக் காட்சிப் பொருளாக்கிக் கொள்ளும் இயல்பைக் குழந்தையிலிருந்து பெண்ணின் மீது திணித்துவிட்டு, அவர்கள் மீது பாலியல் வன்முறை நிகழ்த்தப்படும் நேரங்களில் அவளின் உடையைக் காரணம் காட்டுவது எத்தகைய முரண்பாடு? எவ்வளவு பெரிய வன்முறை?’ என்று அவர் எழுப்பும் கேள்விகள் பெற்றோரைத் தலை குனிய வைக்கின்றன.

‘பெண்ணுக்கும் ஆணுக்கும் அவர்களின் பால் வேறுபாடு தெரியாத வகையில்  ஒரே மாதிரியான  உடைகள் வேண்டும்’ என்ற பெரியாரின் அரிய கருத்தை மேற்கோள் காட்டுவதோடு, எளிய உடையான கைலியைத் தான் உடுத்தியதோடு, தன் மனைவியையும் உடுக்கச் செய்த அவரின் மேன்மைக் குணத்தை ஓவியா நினைவுகூர்வது நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.

‘குழந்தைகளுக்கு ஐந்து வயதுக்குள் காது குத்துகிறார்கள். சிறு வயதிலேயே ஆணுக்கு அதைத் தூர்த்துவிடுகிற பெற்றோர் பெண் குழந்தைகளுக்கு அவ்வாறு செய்வதில்லை. அதன் விளைவு,  காதணி என்பது பெண்ணுக்கு வாழ்நாள் சொந்தமாக ஆகிறது. 

விதம் விதமாய், கண்ணைக் கவரும் வண்ணங்களில் பெண்களுக்கு ஆடை உடுத்துவிடுவதும், சரம் சரமாய் நகைகள் அணிவிப்பதும் அவர்கள் மீது ஏற்றப்படும் அடிமைச் சின்னங்களாகும்’ என்றெல்லாம் மக்கள் செய்த, செய்துகொண்டிருக்கும் தவறுகளைப் பட்டியலிடும் ஆசிரியர், முத்தாய்ப்பாக, ‘ஆண்களின் சமுதாயச் செல்வாக்கைப் பறைசாற்றும் அலங்கார ஊர்திகளாக வாழ்வது அவமானம் என்பதைப் பெண்களுக்கு உணர்த்தாமல் பெண் விடுதலையும் மானுட விடுதலையும் சாத்தியமில்லை’ என்று அடித்துச் சொல்கிறார்.

ஓவியா போன்ற சீரிய சிந்தனையாளர்களின் தரமான கட்டுரைகளை மக்கள் படித்தால் மட்டும் போதாது; பாடம் படிக்கவும் வேண்டும்.

செய்வார்களா?
===============================================================================
குறிப்பு:
‘உடையும் நகையும் வன்முறை ஆயுதங்கள்’ என்பது ஓவியா அவர்கள் கொடுத்த தலைப்பு. ‘ஆணும் பெண்ணும் ஒன்னு’ என்பதும் அவர்கள் இட்டிருந்த தலைப்புதான்[துணைத் தலைப்பு?]. 

‘ஆணும் பெண்ணும் ஒன்னு’ வுடன் ‘அறியாதார் மண்டையில் களிமண்ணு’ என்பதை இணைத்துப் பதிவின் தலைப்பாக்கியவன் நான்! ஓவியா என்னை மன்னிப்பாராக.




13 கருத்துகள்:

  1. சிந்திக்க வைத்த கேள்விகள்தான் நண்பரே...

    மக்கள் மாற்றுச்சிந்தனைக்கு வரவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வெளியான சில வினாடிகளில் கருத்துரையா!

      வியக்க வைக்கிறீர்கள் நண்பரே.

      நன்றி.

      நீக்கு
  2. ஓவியாவின் ஆண்-பெண் சமத்துவம் மற்றும் உரிமைகள் கருதிய நோக்கங்கள், எண்ணங்கள், போராட்டங்கள் ஆகியவைகளுடன் நான் ஒத்த கருத்துடையவனாக இருந்தாலும், இந்த பதிவில் மேல கூறியிருக்கும் விளிம்பு நிலை தீவிரவாத போக்கு எண்ணங்களை நான் எதிர்க்கிறேன்.

    பெண் என்பவர் சுயமாக சிந்தித்து செயல்பட தகுதி உடையவர் என்பதை மறுப்பதை போன்றது இது.

    பெண்களுக்கு அவர்களின் அழகு ஓர் அற்புத ஆயுதம். ஆக்கபூர்வமான ஆயுதம்.

    பெண்கள் சிந்தித்து செயல்படும் முறை மாறுபட்டது. பிர்ச்சினைகளை அனுகும் முறை வேறுபட்டது.

    வாழ்க்கையின் நடப்புகளை புரிந்து உள்வாங்கும் முறையும் வேறானது.

    இவைகள் அனைத்தும் இயற்கையி நியதி.

    பெண்ணை பெண்ணாகவும், ஆணை ஆணாகவும் மதித்து வாழ கற்றுக் கொள்வதே சிறந்த சமுதாயத்திற்கு நல்வழி.

    ஆணும் - பெண்ணும் ஒருவரை மற்றவரை சார்ந்தவர் என்பதுதான் நியதி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பெண் என்பவர் சுயமாக சிந்தித்துச் செயல்படத் தகுதி உடையவர் என்பதை மறுப்பதை போன்றது இது// என்கிறீர்கள்.

      பெண்களின் ஆடை, அலங்காரங்கள் பற்றித்தானே ஓவியா கருத்துச் சொல்லியிருக்கிறார். ‘பெண் என்பவர் சுயமாக சிந்தித்து செயல்பட தகுதி உடையவர் என்பதை மறுப்பதை போன்றது இது’ என்று நீங்கள் குறிப்பிடுவது எனக்குப் புரியவில்லை மாசிலா.

      ‘பெண்களுக்கு அவர்களின் அழகு ஓர் அற்புத ஆயுதம். ஆக்கபூர்வமான ஆயுதம்’ என்கிறீர்கள். ஆபத்தும் அதிகம் இல்லையா?

      உங்கள் பார்வை ஓவியாவினுடையதிலிருந்து சற்றே மாறுபட்டதெனினும் மேலும் மேலும் சிந்திக்கத் தூண்டுவதாக அமைந்துள்ளது.

      கருத்துப் பகிர்வுக்கு நன்றி மாசிலா.



      நீக்கு
  3. இப்படி யோசிக்கவே பல பெண்களுக்குத் தெரியாதே !வெட்டிக் கௌரவத்தை விட்டுட்டு எத்தனைப் பேரால் வரமுடியும் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படி யோசிக்கவே பல பெண்களுக்குத் தெரியாதே//

      இப்படியே வளர்க்கப்பட்டுவிட்டார்கள். இதைத்தான் கண்டிக்கிறார் ஓவியா.

      நன்றி பகவான்ஜி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. பெண்களுக்குத் துணிவு வரணும். ஆண்கள் ஒத்துழைக்கணும்.
      நன்றி ராஜி.

      நீக்கு
  5. எவ்வளவு சரியாக சொல்லி உள்ளார்... மக்கள் மாற வேண்டும்...

    பதிலளிநீக்கு
  6. பிள்ளைக்குச் சட்டை அழகாயிருக்கு
    என்று தொடங்கி
    பெண்களைக் காட்சிப் பொருளாகக் காட்டியதே
    பெண்கள் தானே!

    அருமையான கேள்விகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் சீரிய கருத்துரைக்கு நன்றி ஜீவலிங்கம்.

      நீக்கு
  7. பெண்கள் விஷயத்தில் தமிழ் பெற்றோர்கள் மிகவும் பெரிய தவறுகள் பல செய்கிறார்கள். முக்கியமாக பெண்ணுக்கும் ஆணுக்கும் இயல்பாக நடைபெறும் பருவமாற்றத்தை கூட பெண்களுக்கு மட்டும் என் மகள் பெரியவளாகிவிட்டாள், அதற்கு அவளுக்கு புனித விழா என்று பலருக்கு அறிவித்தல் கொடுத்து யார் ஆடம்பரமாக நடத்தி காட்டுவது என்று போட்டி போட்டு கொண்டு அந்த பெண்ணை ஒரு அலங்கார பொம்மையாக வைத்து பெண்களை மிகவும் இழிவுபடுத்தி பெற்றோர்கள் செயல்படுகிறார்கள்.இது தமிழர்களின் பழைய காலத்து பண்பாடு என்று வேறு பெருமையும் கொள்கிறார்கள்.

    ஒரு பெண்ணை பாலியல் வன்முறை குற்றம் செய்துவிட்டு குற்றவாளி, மற்றும் குற்றவாளிக்கு ஆதராவானர்கள் பெண்ணின் உடையைக் காரணம் சொல்வது ஆணாதிக்க காட்டுமிராண்டிதனம்.

    பதிலளிநீக்கு