தேடல்!

நம் சம்மதம் இல்லாமலே நம்மைப் பிறப்பித்த கருணைக் கடவுள், நம் சம்மதம் இல்லாமலே சாகடிக்கவும் செய்கிறார். இது அநியாயம்!

May 30, 2017

அமரர் ஜெயலலிதாவும் அந்தக்கால மேட்டூர் அணையும் நம்மவூர்ப் பாதாளச் சாக்கடைகளும்!

மேட்டூர் அணையில் தூர்வாரும் நிகழ்ச்சியை முதலமைச்சர் தொடங்கிவைத்தது குறித்த செய்தியைத்  தமிழ் நாளிதழ்கள் பலவும் வெளியிட்டுள்ளன.

மற்ற நாளிதழ்களில் இடம்பெறாத ஒரு தகவல் தினத்தந்தியிலும் தினமலரிலும் இடம்பெற்றுள்ளது.
தினமலர்[29.05.2017]: ‘...முன்னதாக, ஜெயலலிதாவின் உருவப்படத்துக்குச் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன....’

தினத்தந்தி[29.05.2017]: ‘...தூர்வாரப்படும் இடத்துக்கு அருகில் ‘ஹோமம்’ வளர்த்துச் சிறப்புப் பூஜை செய்யப்பட்டது...’

இரண்டு செய்திகளையும் ஒருங்கிணைப்பதன் மூலம், ‘தூர்வாரப்படும் இடத்துக்கு அருகில், ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு முன்னால், ஹோமம் வளர்த்துச் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன’ என்னும் முழுமையானதொரு தகவலை நம்மால் பெற முடிகிறது.

இத்தகவலை அடிப்படையாகக் கொண்டு, தமிழ்நாட்டின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு நான் எழுதும் மடல். 

#தமிழக முதல்வர் அவர்களே,

மேட்டூர் அணையில் ‘தூர்வாரும்’ பணியை நீங்கள் தொடங்கி வைத்துள்ளீர்கள். பாராட்டுக்குரிய பணி இது.

இது தொடர்பான விழா தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டது.

தனிப்பட்ட முறையில், புதுமனை புகுவிழாவிலோ வாழ்க்கையில் சனி புகாமல் தடுக்கும் விழாவிலோ ‘ஹோமம்’ என்ன மலையுயர அக்கினிக் குண்டமே வளர்த்து, விடிய விடிய  வேத மந்திரங்கள் ஓதிப் பூஜைகள் நடத்தலாம். அதைத் தடுக்கவோ தட்டிக்கேட்கவோ எவருக்கும் உரிமை இல்லை.

ஆனால், மதச்சார்பற்ற அரசு நடத்தும் விழாவில், ஹோமம் வளர்த்துப் பூஜைகள் செய்வதென்பது குறிப்பிட்ட ஒரு மதம் சார்ந்த சடங்கு ஆகும். இது தவறான ஒரு முன்னுதாரணமும்கூட.  இதைத் தாங்களும் அறிவீர்கள்.

குறிப்பிட்டதொரு மதத்தின் கடவுளை நினைந்து பூஜைகள் நடத்துவதே தவறு என்னும்போது, காலஞ்சென்றவரும் முன்னாள் முதலமைச்சரும் ஒரு சராசரிப் பெண்ணுமான[தனிப்பட்ட முறையில் நீங்களும் உங்களைச் சார்ந்தவர்களும் அவரைக் கடவுளாகப் போற்றுவதையோ, கடவுள்களின் கடவுளாகத் துதிபாடுவதையோ எவரும் தடுக்கவோ தட்டிக்கேட்கவோ இயலாது; கூடாது] ஜெயலலிதாவின் உருவப்படத்தை முன்னிலைப்படுத்திப் பூஜைகள் செய்தது பெரும் தவறு ஆகும்.

இம்மாதிரியான தவறுகள் இனியும் நேர்தல் கூடாது என்பதே என் போன்றவர்களின் விருப்பமும் வேண்டுகோளும் ஆகும்.

அணை கட்டப்பட்டு 83 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இந்தத் தூர்வாரும் பணி நடைபெறுகிறது.

இதே வேளையில்,  தமிழ்நாட்டிலுள்ள பாதாளச் சாக்கடைகளைத் தூர்வாரும்[தூய்மைப்படுத்தல்] பணி தினம் தினம் பல்வேறு நகரங்களிலும் நடைபெறுவது தாங்கள் அறியாததல்ல.

அணையைத் தூர்வாரும் பணியில் ஆபத்துகள் மிக மிகக் குறைவு. அனைத்து அசிங்கங்களும் நோய்களும் சங்கமம் ஆவதால் சாக்கடைகளைத் தூர்வாரும் பணியில் ஏழைத் தொழிலாளர்கள் பலர் செத்திருக்கிறார்கள்; செத்துச் செத்துப் பிழைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இவர்களின் உடல்நலத்தோடு உயிரையும் காப்பதற்காக அவ்வப்போது ஹோமம் வளர்த்து பூஜைகள் செய்ய வேண்டும் என்று எப்போதாவது எண்ணியிருக்கிறீர்களா நீங்கள்?

அப்புறம் எதற்கு அணையைத் தூர்வாருவதற்கு மட்டும் ஜெயலலிதா, கடவுள், ஹோமம், பூஜைகள் எல்லாம்?!

சிந்திப்பீர்களா முதல்வர் அவர்களே?
===============================================================================6 comments :

 1. இது அறிவீனம் என்பது கிடக்கட்டும் இந்த முட்டாள்த்தனமான செயலுக்கு செய்த செலவு அரசு பணம் அதாவது மக்கள் பணம்...

  ஒருவேளை மக்குகள் கேட்கமாடடார்கள் என்று நினைத்து விட்டார்களோ...

  ReplyDelete
  Replies
  1. மக்குகள் உள்ளவரை அவர்களின் காட்டில் மழைதான்!

   நன்றி கில்லர்ஜி.

   Delete
 2. நல்லாதான் சொல்லி இருக்கீங்க. ஆனா சம்பந்தப்பட்டவங்களுக்கு புரியனுமே!

  ReplyDelete
  Replies
  1. புரியும். நாம் எழுதும் பதிவுகளையெல்லாம் அவர்கள் படிப்பார்களா என்ன?!

   Delete
 3. பாதாள சாக்கடை அள்ளுறவங்களுக்காக வேண்டிக்க வேணாம். அவங்களுக்கு நியாயமா கொடுக்க வேண்டிய பாதுகாப்பு உபகரணங்களை கொடுத்தா போதும்

  ReplyDelete
  Replies
  1. நான் சொல்லத் தவறியதை நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள்.

   நன்றிம்மா.

   Delete