Thursday, June 22, 2017

‘பதஞ்சலியும் யோகாவும்!’.....சில ‘பரபர’ தகவல்கள்!

‘மனதில் எந்தவொரு பற்றுக்கும்/நினைவுக்கும் இடம்தராமல் அதனை வெறுமையாக வைத்துக்கொள்ளப் பயிலுவதே ‘யோகா’வின் அடிப்படை நோக்கம்’ என்கிறார்கள்.

‘பதஞ்சலி யோக சூத்திரம்’ என்பது யோகக் கலை பற்றிய நூல். இதை எழுதியவர் பதஞ்சலி முனிவர்.
பதஞ்சலி முனிவர் கி.மு. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்பது பொதுவான ஊகம். கி மு இரண்டாம் நூற்றாண்டில் என்று சொல்பவர்களும் உண்டு. யோக சூத்திரங்கள் 1]சமாதி, 2 சாதனை, 3 விபூதி, 4 கைவல்யம் என்று நான்கு பாதங்களிலாக 195 சூத்திரங்கள் கொண்டது’ என்கிறது ‘விக்கிப்பீடியா

#இந்தச் சூத்திரத்தில் மூன்று சொற்கள் உள்ளன. மூன்று தன்னிலைகள் என இதை வகுக்கலாம். திருஷ்டு என்றால் பார்ப்பவன், அவதானிப்பவன், உணர்பவன். மனதை உணரும் தன்னிலை என்று இதைச் சொல்லலாம்[புரிகிறது]. இரண்டாவது சொல் ஸ்வரூபம். தன்னுடைய உண்மையான அகநிலை. அல்லது தூய தன்னிலை. இங்கே இன்னும் அது ஒரு உருவகம்தான். மூன்றாவது அவஸ்தை. அந்த தூய நிலையில் உறைதல் என்ற நிலை. தான் என தன்னை உணர்பவன் அந்த உணர்தல் மூலம் உருவாகும் அலைகள் அனைத்தையும் அடக்கி இல்லாமலாக்கிக் கொண்டால் மட்டுமே தூய தன்னிலையாக தன்னை உணர்ந்து அந்நிலையில் அமைய முடியும் என்று இச்சூத்திரத்தை விளக்கலாம்[முடிவற்ற அறிதல்: பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம்2 http://www.jeyamohan.in/771#.WUvkMGiGPIU ]

-இத்துடன் நிற்காமல் மேலும் விளக்கிக்கொண்டே போகிறார் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன். ‘தாங்காதுடா சாமி’ என்று தலைமுடியைப் பிய்த்துக்கொண்டு ஓடி வந்துவிட்டேன்.

#யோகா என்பது ஒன்றிணைப்பதை குறிக்கும் ஓரு விசாலமான வார்த்தை. ஓன்றிணைக்க உதவும் எதுவும் யோகா என்று அழைக்கப்படும். வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் இந்த எளிமையான சுவாசத்தில் இருந்து, அமர்தல், நடத்தல், உண்ணுதல் மற்றும் மனிதன் செய்யும் எந்த செயலையும் யோகாவாய் மாற்ற முடியும். நீங்கள் இப்போது உண்கிறீர்கள், அப்போது, நாம் அல்லாத ஓன்றை நம்முடைய ஓரு பகுதியாக மாற்றுகிறோம் என்ற விழிப்புணர்வு இருக்குமானால் பத்து நிமிடங்களுக்கு முன் நாம் அல்லாத ஒன்றை, நம்மோடு ஓன்றிணைக்கிறோம் என்பது உங்கள் அனுபவமாக இருக்குமானால், அப்போது, அதனை நீங்கள் “உண்ணும் யோகா” என்றழைக்கலாம்.’ - இது பிரபல ஆன்மிகவாதி ஜக்கி வாசுதேவ் தரும் விளக்கம்.

‘நாம் அல்லாத ஒன்றை நம்முடையதாக மாற்றுகிறோம்’ என்கிறார்.
நாம் எங்கே மாற்றுகிறோம்? அதுவாகத்தானே மாறுகிறது!

‘நாம் அல்லாத ஒன்றை நம்மோடு ஒன்றிணைக்கிறோம் என்பது உங்கள் அனுபவமாக இருக்குமானால் அதனை நீங்கள் உண்ணும் யோகா என்று அழைக்கலாம்’ என்றும் சொல்கிறார் ஜக்கி. [‘ஈஷா’ http://isha.sadhguru.org/blog/ta/patanjali-naveena-yogavin-thanthai/

உண்ணுகிறோம். அது சத்தாக மாறுகிறது. அவ்வளவுதான். இதற்குப் பேரு உண்ணும் யோகாவாம்? நன்றாகவே காதில் பூச்சுற்றுகிறார் உலகமகா யோகி.

இவர் தொடர்ந்து தரும் விளக்கங்களும் இந்த லட்சணத்தில்தான் இருக்கின்றன.

யோகா என்ற வார்த்தை, பண்டைய காலங்களில் குறிப்பிட்ட ஒரு புரிதலோடு உபயோகப்படுத்தப்பட்டது. ஆனால் இன்று அது தளர்வான, அற்பமான பொருளில் உபயோகப்படுத்தப்படுகிறது. மேற்கு நாடுகளில் இன்று “தண்ணீர் யோகா, நாய் யோகா, பூனை யோகா” என்று பலதும் இருக்கின்றன. இது தவறான புரிதல். மேம்போக்கான யோகா மட்டுமே, மேற்கு நாடுகளுக்கு சென்றிருக்கிறது. யோகாவின் ஆத்மா அல்ல. இது மிகத் தீவிரமான பிரச்சினை. யோகாவை ஒரு பயிற்சி என எண்ணுவது, இறந்த குழந்தையைப் பெறுவதைப் போன்றது. அதில் உயிர் இருக்காது.

‘குறிப்பிட்ட ஒரு புரிதலோடு...’ -அதென்ன குறிப்பிட்ட புரிதல்?[விளக்கம் தரப்படவில்லை]

‘யோகாவின் ஆத்மா’[என்கிறார்] - என்னய்யா இது, புதுக் கதை! உடம்புக்குள்ள ‘ஆத்மா’ இருக்கிறதா கதையடிச்சிட்டிருக்கீங்களே, போதாதா?

மேற்கண்ட இரு பிரபலங்களும் இவர்களைப் போன்ற பிற பிரபலங்களும் தரும் விளக்கங்களைச் சுற்றிவளைக்காமல் சுருக்கிச் சொன்னால்.....

பதஞ்சலி யோகா என்பது, ‘மனதில் எந்தவொரு பற்றுக்கும் இடம் தராமல் அதனை வெறுமையாக வைத்துக்கொள்ளப் பயிலுவதே’[அப்படி வைத்துக்கொள்வதால் நன்மைகள் விளைகின்றனவாம். அது குறித்த ஆய்வு இங்கு தேவையில்லை]. 

எந்தவொரு பற்றுக்கும்/எண்ணங்களுக்கும்  இடம் தராமல் மனதை வெறுமையாக வைத்துக்கொள்வது என்பது ஆழ்ந்த உறக்கத்திலும்கூட இயலாத காரியம்; செத்துப் பிணமான பின்னரே இது சாத்தியம்.

மேலும், திருமூலர் காலத்தவரான பதஞ்சலியின் வரலாறாகக் குறிப்பிடப்படும் தகவல்களில் பலவும் கற்பனையில் உதித்தவை.

‘அத்ரி மகரிஷி’ என்றொரு முனிவர். அவரின் மனைவி அனுசூயை.

மும்மூர்த்திகளும் தனக்குப் பிள்ளைகளாகப் பிறக்க வேண்டும் என்று இந்த முனி ஆசைப்பட்டதன் விளைவாகப் பிறந்த மூன்று பேரில் இந்தப் பதஞ்சலியும் ஒருவராம். இவர் மனித முகமும் பாம்பு உடலும் வாய்க்கப்பெற்ற சித்தர்...இப்படிப் போகிறது கதை[மேலே தலைப்பில்[Header] உள்ளவர்தான் பதஞ்சலி. ஜக்கி வாசுதேவின் ‘ஈஷா’ தள உபயம்]. கதைதானே...இருக்கட்டும்.

இந்த இந்திய தேசத்தின் பிரதமர்,  ஜக்கி வாசுதேவ். யோக[கா] குரு எனப்படும் பாபா ராம்தேவ் போன்றவர்களால்,  இந்த யோகா[21.06.2017 யோகா தினம். அனைத்து நாளிதழ்களிலும் செய்திகள்] உலக அளவில் பிரபலம் ஆகியுள்ளதே தவிர இதனால் விளையும் பயன்கள் உறுதி செய்யப்பட்டனவா என்பது தெளிவாக அறியப்படவில்லை.

மூச்சுப் பயிற்சியில் நிச்சயம் பலன் உண்டு. உடம்பை வளைத்தும் இறுக்கியும் முறுக்கியும் செய்யப்படும் உடற்பயிற்சிகளால் நன்மைகள் மட்டுமே விளைகின்றனவா? தீமைகளே இல்லையா?

ஆய்வுகளின் மூலம் யோகா என்னும் உடற்பயிற்சியால் விளையும் நன்மைகள் உறுதி செய்யப்பட்ட பிறகே அது பிரபலப்படுத்தப்படல் வேண்டும். ஆனால்.....

யோகாவை மையப்படுத்தி ஏதேதோ நடக்கிறது; நடந்துகொண்டிருக்கிறது.

நம் மக்கள் சிந்திக்கத் தெரிந்தவர்கள். இது குறித்தும் தீவிரமாகச் சிந்திப்பார்கள்தானே?
===============================================================================


13 comments :

 1. இந்த யோகாவைக் குறித்தூ வெசயகாந்தூ நன்கு அறிந்தவர்.

  ReplyDelete
  Replies
  1. வெசயகாந்தைப் பேட்டி எடுத்து ஒரு பதிவு போட்டுடலாம்!

   நன்றி கில்லர்ஜி.

   Delete
 2. உலக யோகா தினத்துக்கான கின்னஸ் முயற்சில மோடி ஐயா கலந்துக்கிட்ட விழாவுல விரித்திருந்த விரிப்பை நிறைய பேரு சுட்டுக்கிட்டு போய்ட்டாங்களாம். அதுமாதிரியே இலவசமா தந்த பிஸ்கட், தண்ணி வாங்க தள்ளுமுள்ளு நடந்துச்சாம்.... சொல்லிக்கிட்டாங்க..

  ReplyDelete
  Replies
  1. யோகா தின விழாவில் சுட்டுகிட்டுப் போறதும், இலவசத்துக்கு முட்டி மோதி அடிச்சிக்கிறதும்கூட ஒரு கின்னஸ் சாதனைதான்.

   நன்றிம்மா.

   Delete
 3. பதஞ்சலி சொன்னது ஒண்ணு , குருவுக்கு
  சேவை செய்யும் நடிகைகள் செய்வதோ பாத அஞ்சலி :)

  ReplyDelete
  Replies
  1. போதை தரும் பாத அஞ்சலி!!!

   நன்றி பகவான்ஜி.

   Delete
 4. என்னாது யோகாவில் இவ்வளவும் இருக்கா?:).. இருப்பினும் பூனை யோகா என ஒன்றும் இருக்கு எனச் சொல்லி.. பூஸ்களை அவமதிக்க குற்றத்துக்கால.. அறிவுப்பசி ஜி அவர்களை உடனடியாக, சொந்தச் செலவில்[இதை தெளிவா சொல்லிடோணும், இல்லையெனில் என்னையே ரிக்கெட் போடச் சொல்லிடுறாங்க கர்ர்:)].. பிரித்தானியாக் காண்ட் கோர்டுக்கு வரும்படி..

  மேன்மை தங்கிய, பெருமதிப்புக்குரிய, பேரறிவான, அன்பான, பண்பான, அயகான நீதிபதி அவர்கள்[இது நாந்தேன்ன்ன்:)] ஆணை இடுகிறார்ர்ர்ர்ர்ர்ர்:).

  ReplyDelete
  Replies
  1. மேன்மை தங்கிய, பெருமதிப்புக்குரிய, பேரறிவான, அன்பான, பண்பான, அயகான நீதிபதி அவர்களே, பிரித்தானியாக் காண்ட் கோர்ட்டில் ஆஜர் ஆக நான் தயார். ஆனால், இப்போது கையில் சிங்கிள் பைசா இல்லை.

   பூனை யோகாவின் அருமை பெருமைகளை ஏற்கனவே அறிவேன். அதை மறந்தது என் குற்றம்.

   இன்றிலிருந்து பூனை யோகா பயிற்சிக்கூடம் நடத்திக் கோடிகோடியாய்[டாலர்] சம்பாதித்த பிறகு பிரித்தானியா காண்ட் கோர்ட்டில் ஆஜர் ஆவேன். தேதி குறிப்பிடாமல் கால அவகாசம் வழங்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

   அயகு, அன்பு, பண்பு முதலான ஏராள சிறப்புகள் வாய்ந்த அந்த நீதிபதி ‘அதிரா’தான் என்பதை அறிந்து மனம் பூரித்துக்கிடக்கிறேன்.

   Delete
 5. அதென்ன அறிவுப்பசி ஜி.. மேலே போட்டிருக்கும் படம்.. பார்க்கவே பபபபபபயம்மா இருக்கூஊஊஊஊ:).

  ReplyDelete
  Replies
  1. ஜக்கி வாசுதேவ் தளத்திலிருந்து அவர் அனுமதி இல்லாம சுட்ட படம்! என் மேல வழக்குப் போட்டுடுவாரோன்னு எனக்கும் பயமாத்தான் இருக்கூஊஊஊஊ!!

   நன்றி அதிரா.

   Delete
 6. இந்த விளையாட்டிற்கு நான் வரலே ஜி...

  ReplyDelete
  Replies
  1. என் தளத்திற்கு வந்தீங்களே, அது போதும்.

   நன்றி தனபாலன்.

   Delete
 7. //நாம் எங்கே மாற்றுகிறோம்? அதுவாகத்தானே மாறுகிறது!//

  //யோகாவை மையப்படுத்தி ஏதேதோ நடக்கிறது; நடந்துகொண்டிருக்கிறது//

  தங்களின் AWARENESS பிடித்திருக்கிறது. :)

  எனினும் ஆன்மா,ஆத்மா,பரமாத்மா
  சம்பந்தமான சில எண்ணங்களை
  சின்னாட்களில் பதிவிட எண்ணம்

  ReplyDelete

எழுதுகையில், கருத்துப் பிழைகளும் மொழிப் பிழைகளும் நேர்தல் இயற்கை. பிழை காணின், அன்புகொண்டு திருத்துங்கள். இயலாதெனின், பொறுத்தருளுங்கள்.