தேடல்!

நடுவணரசில் இந்தி & இந்துமத வெறியர்களின் ஆதிக்கம் நீடிக்கும்வரை இந்தியும், இறந்த மொழி சமஸ்கிருதமும் போற்றப்படுவதும் நீடிக்கும்!

Jun 29, 2017

“அவன் அயோக்கியன்! அவர்கள் அயோக்கியர்கள்!!”

திடீர் விபத்துகள், அவ்வப்போது நிகழும் இயற்கைச் சீற்றங்கள், தீராத நோய்களின் தாக்குதல்கள், எதிர்பாராத மரணங்கள், எதிரிகளால் விளையும் ஆபத்துகள் போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகளுக்கு ‘விதி’யே காரணம் என்று நம் மூதாதையர் பலரும் நம்பினார்கள்; இன்று நம்புவோர் எண்ணிக்கையும் பெருமளவில் உள்ளது.

இந்த நம்பிக்கை சரியானதா? 
மரணம் பல்வேறு வடிவங்களில் நம்மை அரவணைக்கிறது.

ஒன்று:
சக மனிதர்களாலோ [கொலை, தற்கொலைக்குத் தூண்டுதல் என்றிப்படி] ஏனைய பிற உயிரினங்களாலோ[யானை மிதித்து, நாய்கள் கடித்து .....] இறப்பு நிகழலாம். இதற்கு எவரும் விதிவிலக்கானவர் அல்லர். சூழல் காரணமாக எவருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம்.

இரண்டு:
கண்ணுக்குத் தெரியாத நோய்க் கிருமிகள் காரணமாகலாம். இன்ன நேரத்தில் இன்னாரைத் தாக்குவது என்று பட்டியல் தயாரித்து அவை செயல்படுவதில்லை.

மூன்று:
புயல், சுனாமி, நிலநடுக்கம் போன்ற இயற்கைச் சீற்றங்களால் மரணம் நிகழ்வதும் தவிர்க்க முடியாதது. இவற்றிற்கு மனிதரில் ‘நல்லவன் கெட்டவன்’, ‘பக்தன் நாத்திகன்’, ‘ஏழை பணக்காரன்’ போன்ற வேறுபாடுகள் பற்றியோ, அவரவர் தலைவிதி பற்றியோ எதுவும் தெரியாது.

நான்கு:
இயற்கையின் முரண்பட்ட நிகழ்வுகளால் உருவாகும் பஞ்சம், பட்டினி போன்றவையும் காரணமாகின்றன.

ஐந்து:
மனிதன் தன் ஆறறிவால் கண்டுபிடித்த போர் ஆயுதங்கள், வெடிபொருட்கள், வாழ்க்கை வசதிகளைப் பெருக்குவதற்குப் பயன்படும் கருவிகள் போன்றவையும் சற்றும் எதிர்பாராத வகையில் மனிதன் செத்தொழியக் காரணமாக இருக்கின்றன. 

ஆறு:
உடம்பின் ஒட்டுமொத்த அணுக்களின் அழிவால்  ஏற்படும் மரணம் எல்லோருக்கும் எக்காலத்தும் பொதுவான ஒன்று.  விதிவிலக்கானவன் எவனுமில்லை.

அனைத்துப் பொருள்களுக்குள்ளேயும் உயிரினங்களுக்குள்ளேயும் ஆற்றல் பொதிந்து கிடப்பதால் அவை இயங்குகின்றன. மனிதனுக்குள்ளும் இயங்குவதற்கான ஆற்றலோடு சிந்திப்பதற்கான   பகுத்தறிவும்  இருக்கிறது. 

ஆற்றல் மற்றும் அறிவுடன் மேற்குறிப்பிட்ட இயற்கைச் சீற்றங்கள், முரண்பட்ட நிகழ்வுகளின் கொடிய விளைவுகள், தான் கண்டுபிடித்த கருவிகளால் ஏற்படும் பாதிப்புகள், அணுக்களின் அழிவுகளால் ஏற்படும் மரணம் போன்றவற்றை எதிர்த்துப் போராடுகிறான் மனிதன். போராட்டங்களுக்கிடையே தன்னைத் தாக்கும் இன்பதுன்பங்களை ஏற்று வாழ்கிறான். இது...இந்த வாழ்க்கை.....

மனிதகுலத்துக்கு இயற்கையாக வாய்த்தது.


இயல்பாக அமைந்த இத்தகைய வாழ்வில், தன்னைத் தேடிவரும் இன்பங்களை மனிதன் மகிழ்வோடு ஏற்பான்; துன்பங்களை ஏற்க மனம் மறுக்கும். 

அவற்றை ஏற்று வாழ்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதால், அதற்குரிய மனப்பக்குவத்தை அவன் வளர்த்துக்கொள்ளுதல் வேண்டும்.

‘இது ஏன் நிகழ்கிறது? எப்போதிருந்து நிகழ்கிறது? எவ்வாறு நிகழ்த்தப்படுகிறது?’ என்னும் கேள்விகளுக்கெல்லாம் இந்நாள்வரை எவரும் விடை சொன்னதில்லை.   இனியும் விடை தேடுவதில் தவறில்லை.

விடை கிடைக்கிறதோ இல்லையோ, தனக்கு வாய்த்திருக்கும் அற்ப வாழ்க்கையை இயன்றவரை அமைதியாக ஏற்று வாழ்ந்திட முயல்வதே மனிதப் பிறவி எடுக்கும் அத்தனை பேருடைய கடமை ஆகும்.

இயல்புநிலை இதுவாக இருக்க.....

“இல்லை இல்லை. ‘விதிப்படிதான் எல்லாம் நடக்கிறது. அந்த விதியை வகுத்தவன் கடவுள். அவனை வழிபடுவதன் மூலம் விதியை வெல்லலாம். சுவர்க்கம் புகலாம்; இறைவனின் திருவடியை அடையலாம்”[அடைந்து யுகம் யுகமாய்க் குறட்டை விட்டுத் தூங்கலாம்] என்றெல்லாம் பொய்யுரைத்து, மனப்பக்குவத்தை வளர்த்திடும் மனித முயற்சிக்குத் தடையாய் நிற்பவர்களை அயோக்கியர்கள் என்று சொன்னால் அது தவறாகுமா? 

இவர்கள் சொல்லும் விதியை[தீமை பயப்பவை] வகுத்தவன் கடவுள் என்றால், அவனை ‘அயோக்கியன்’ என்று குறிப்பிடுவது குற்றம் ஆகுமா?

சிந்தியுங்களேன்.
=====================================================================
விதி தொடர்பான பழைய இடுகைகள்:

1.விதியாம் விதி!.....‘மசுரு’ விதி!!

 http://kadavulinkadavul.blogspot.com/2015/10/blog-post_25.html
2.பொல்லாத விதியும் ஒரு ‘கவர்ச்சி நடிகை’யின் உள்ளாடையும்!!! [எச்சரிக்கை! நீ..ண்..ட பதிவு]
http://kadavulinkadavul.blogspot.com/2015/06/blog-post_20.html