தேடல்!

நடுவணரசில் இந்தி & இந்துமத வெறியர்களின் ஆதிக்கம் நீடிக்கும்வரை இந்தியும், இறந்த மொழி சமஸ்கிருதமும் போற்றப்படுவதும் நீடிக்கும்!

Jul 3, 2017

ஜோதிடம் பொய்...பொய்...பொய்யே!!!

‘ஜோதிடம் அறிவியல் சார்ந்தது அல்ல;  அப்படிச் சொல்வது காலங்காலமாக மதவாதிகள் செய்துவரும் ஏமாற்று வேலை’ என்கிறது அறிவியல்.
ஜோதிடர்களோ,  “சூரியனைப் போலவே மற்ற கிரகங்களும் பூமியின் மீதும் அங்கு வாழும் உயிரினங்கள் மீதும் பலவகையான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன” என்கிறார்கள்.

‘ஜோதிடம் மெய்’ என்பதற்கான வேறு ஆதாரங்களை முன்வைக்காமல், இதை மட்டுமே சொல்லிக்கொண்டு காலம்காலமாய்ப் பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கிறார்கள் அவர்கள்.

அவர்கள் சொல்வதில் கொஞ்சமேனும் உண்மை இருக்கிறதா?

“இல்லை” என்று அறுதியிட்டுச் சொல்கிறது அறிவியல்.

எந்தவொரு  கண்டுபிடிப்பையும் அறிவியல் ஏற்கவேண்டுமாயின், அந்த ஒன்றை ஐம்புலன்கள்[ஒன்றோ பலவோ] மூலம் அறியும் வகையில், முறையாக உரிய சோதனைகள் மூலம் நிரூபிக்க வேண்டும்.

‘இந்த நாளில் அறுவைச் சிகிச்சை செய்தால் இந்த நபர் பிழைக்க மாட்டார்’ என்று ஜோதிடர் சொல்வதாக வைத்துக்கொள்வோம். அதையும் மீறி அறுவை செய்து நபர் உயிரிழந்தால், கிரகங்களின் தாக்கத்தால்தான் அவர் உயிரிழந்தார் என்று ஜோதிடர் சொல்வதை விஞ்ஞானம் ஏற்காது.

அந்த நபர் உயிரிழந்ததற்கு, மருத்துவ ரீதியானதும் உடலியல் ரீதியானதும் ஆன காரணங்கள் எவை என்றே அது தேடும். பொத்தாம் பொதுவாய்க் ‘கிரகங்களின் தாக்கம்’ என்று சொல்வதையெல்லாம் அது ஒதுக்கிவிடும்.

பிற கோள்களின் தாக்கம் குறித்து எந்தவொரு ஆதாரமும் காட்டாத ஜோதிடக்கலை ஆதரவாளர்கள், சந்திரனின் தாக்கத்தால் மனிதர்களுக்கு நேரும் இன்பதுன்பங்கள் குறித்துச் சில உதாரணங்களை முன்வைக்கிறார்கள்.

‘பிற உயிரினங்களில் கருவுறுதல் வளர்பிறை அல்லது முழுநிலவுக் காலத்தில் மட்டுமே நடைபெறுகிறது. பெரும்பாலான பெண்கள் வளர்பிறை காலத்தில்தான் கருவுறுகிறார்கள். பகல் வேளையைவிட இரவில்தான் குழந்தைகள் பிறப்பது அதிகமாக இருக்கிறது. முழுநிலவின் தாக்கத்தால் உடலில் ஏற்படும் மாற்றங்களும் உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்களுமே நோயாக உருமாறுகிறது’ என்றெல்லாம் ‘விஞ்ஞானி ஜாண் அபிரஹாம்’[இவர் விஞ்ஞானியாக விஞ்ஞானிகளால் அறியப்பட்டவரா என்பது தெரியவில்லை] என்பவர், ‘ஜோதிடம் மெய்யே’ என்னும் தம் நூலில் சொல்லியிருக்கிறார். உரிய முறையில் ஆதாரங்கள் தரப்படவில்லை.

அறிவியல் என்ன சொல்கிறது?

#பூமியின் மீது ஒரு கோளின் ஈர்ப்பு சக்தியைக் கண்டறிவதற்கு பூமியிலிருந்து அக்கோளின் தூரமும், அதன் அடர்த்தியும் (Mass) தெரிந்தால் போதும். அடர்த்தி அதிகமானால் ஈர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும், ஆனால், தூரம் கூடக் கூட ஈர்ப்பு சக்தி அதற்கு இரட்டை விகிதத்தில் குறையும். அறியப்பட்ட வானியல் அளவுகளை வைத்துத் தயாரிக்கப்பட்ட ஒரு அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் பூமியின் மீதான நிலவின் ஈர்ப்பு சக்தியை 'ஒன்று' என அடிப்படை அளவாக எடுத்துக்கொண்டு, கோள்களின் ஈர்ப்பு சக்தி அதனுடன் ஒப்பிடப்பட்டுள்ளது. கணிப்புக்கு கோள்களின் சராசரி தூரங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

கோள் /அடர்த்தி /தூரம் (மில்லியன் கி.மீ)/ ஈர்ப்புசக்தி
புதன்/ 33 /92 /0.00008வெள்ளி /490/ 42 /0.006
செவ்வாய் /64 /80 /0.0002
வியாழன் /200,000/ 630 /0.01
சனி / 57,000 /1280/ 0.0007
யுரேனஸ் /8,700/ 2720/ 0.00002நெப்டியூன் /10,000/ 4354 /0.00001
நிலவு / 7. 4 /0.384 /1.0

பூமியின் மீது நிலவின் ஈர்ப்பு சக்தியின் அளவு ‘ஒன்று' என்றால் அனைத்துக் கோள்களின் ஈர்ப்பு சக்தியும் சேர்ந்து அதில் 0.017 அளவு தான் உள்ளது எனக் காண்கிறோம். நிலவின் ஈர்ப்புசக்திதான் மிக அதிக அளவில் உலகைப் பாதிப்பது. நிலவின் ஈர்ப்பு சக்தியின் பாதிப்பை பூமியில் வழக்கமாக நிகழும் கடல் ஏற்றம் (high tide) கடல் இறக்கம் (Low tide) மூலம் அறியலாம். இதைத் தவிர நிலவினால் பாதிப்பு என்பது ஏதும் இல்லை. கோள்கள் அனைத்தும் ஈர்ப்புசக்தி உள்ளவை. ஆனால் பூமிக்கும் அவற்றுக்கும் இடையேயுள்ள தூரங்கள் மிகவும் அதிகம். கோளின் ஈர்ப்பு சக்தி பல கோடி கிலோமீட்டர் கடந்து பூமியை எட்டும்போது முற்றிலும் திறனற்று நீர்த்து விடுவது இயற்கை. மிக அருகிலிருக்கும் நிலவின் அதிக அளவு ஈர்ப்பு சக்தியே நம்மை ஏதும் செய்யமுடியாதபோது பல கோடி கி.மீ தொலலைவிலுள்ள கோள்களிலிருந்து பூமியை அடையும் நீர்த்துப்போன ஈர்ப்பு சக்தியால் பூமிக்கோ, நமது வாழ்வுக்கோ எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்பது நாமறியும் அறிவியல் உண்மை# -எஸ்.ஆனந்த், -தமிழினி / மே 2009[COIMBATORE ASTRONOMY CLUB]

கீழ்வருவன ஏற்கனவே நாம் அறிந்த தகவல்கள்.

‘சோதிடத்தில் கோள்கள் எவ்வாறு சொல்லப்படுள்ளன என்பதைச் சிறிது பார்க்கலாம். சோதிடம் உருவாக்கப்பட்ட பண்டைக்காலத்தில் கதிரவனும், விண்மீன்களும், கோள்களும் நம் உலகை மையமாகக் கொண்டு இயங்கிக்கொண்டிருப்பதாக நம்பப்பட்டது. பல நூற்றாண்டுகளுக்கு முன் அறியப்பட வான் சார்ந்த விவரங்களும், அப்போதிருந்த நம்பிக்கைகளுமே சோதிடத்தின் அடிப்படை. அப் பண்டைக்கால அடிப்படைகளைக் கொண்டே சோதிடம் இன்றும் இயங்கிவருகிறது. பூமியை வலம் வந்து கொண்டிருப்பதாகச் சோதிடத்தில் சொல்லப்படும் 'நவக்கிரகங்களில்'  செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய ஐந்து மட்டுமே கோள்கள். இவை சோதிடத்தில் சொல்லலப்படுவது போல பூமியைச் சுற்றி வருபவை அல்ல. பூமியிலிருந்து பார்க்கையில் அவ்வாறு தோன்றினாலும் உண்மையில் அவை கதிரவனைச் சுற்றி வருபவை என்பதை நாம் இன்று அறிவோம். ‘நவகிரகங்களில்' மீதி நான்கில் [‘கிரகங்கள்' எனச் சொல்லப்படுபவை] கதிரவன்(ஞாயிறு)  கோள் அல்ல.  நிலவு(சந்திரன்)  பூமியின் உபகோள். ராகு, கேது  நிழல் கிரகங்கள்[Shadow Planets]. 

ஆக, கோள்களின் ஈர்ப்பு சக்தியினால் பூமியில் ஏற்படும் விளைவுகள் ஒன்றுமில்லை என்பதே அறிவியல் உண்மை. ஆனால் அதிகம் படித்தவர்கள் கூட சில சமயங்களில் இதை ஏறுக்கொள்ளுவதில்லை. சோதிட சாத்திரத்தில் கூறப்பட்டிருக்கும் கோள்கள் பற்றிய விவரங்கள் உண்மை என வாதிட ஆரம்பித்து விடுகிறார்கள்.

படிக்காதவர்கள் இருக்கட்டும். படித்தவர்கள் திருந்துவது எப்போது?!
=====================================================================================