அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

சனி, 8 ஜூலை, 2017

“வதந்தீ...பரப்புங்கள்!” -‘மாநில, மத்திய’ அரசுகளுக்கு வேண்டுகோள்!!

‘மாங்கல்யத்தில் சிவப்பு நிறப் பவளம் இருந்தால் கணவரின் உயிருக்கு ஆபத்து’ -இப்படியொரு செய்தி கர்னாடகாவில் காட்டுத்தீ போல் பரவிவருகிறதாம்! விளைவு?

அதிர்ச்சிக்குள்ளான மணமான பெண்கள் தங்களின் மாங்கல்யத்தில் உள்ள சிவப்பு நிறப் பவள மணிகளை அகற்றிவருகின்றனர்[தி இந்து 08.07.2017] என்பது இன்றைய சூடான செய்தி.
இச்செய்தியால்  கர்னாடக அரசும் அதிர்ச்சி அடைந்ததாம். அவசரகதியில், ‘ஏதோ ஒரு சுயநலக்கும்பல் திட்டமிட்டு இந்த மூடநம்பிக்கையைப் பெண்கள் மத்தியில் பரப்பிவருகிறது. இந்த வதந்தியைப் பெண்கள் எவரும் நம்ப வேண்டாம். வதந்தி பரப்பும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று ஓர் எச்சரிக்கையையும் வெளியிட்டுள்ளது.

இந்தவொரு எச்சரிக்கை அறிக்கையை அரசு வெளியிட்டது தவறு என்பது எம் கருத்து.

கர்னாடக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டாலும் வெளியிடாவிட்டாலும் பெண்கள் தத்தம் மாங்கல்யத்திலுள்ள சிவப்பு நிறப் பவள மணிகளை ஓரிரு நாட்களில் அகற்றிவிடுவர் என்பது 100% உறுதி. காரணம்.....

இவ்வாறான, வதந்தியாக[விரைவில் அண்டை மாநிலங்களிலும் பரவிட வாய்ப்புள்ளது] உலாவரும் மூடநம்பிக்கைகளின் மீது எப்போதுமே பெண்களுக்கு[மக்களுக்கு] அசைக்க முடியாது நம்பிக்கை உண்டு.

எனவே,

உடனடியாக ஆற்ற வேண்டிய கடமை ஒன்று கர்னாடக அரசுக்கு மட்டுமல்லாமல் மற்ற மாநில அரசுகளுக்கும் மத்திய அரசுக்கும் உள்ளது.

*****இம்மாதிரியான வதந்திகளுக்குத் தடை விதிப்பதற்குப் பதிலாக, இதுபோன்ற சில வதந்திகளை அரசாங்கங்களே அவ்வப்போது கிளப்பிவிட்டு, அரசு எந்திரங்கள் மூலமாகவும் ஜோதிடர்கள் மூலமாகவும் மக்கள் மத்தியில் காட்டுத்தீ போல் பரப்பிடவேண்டும். உதாரணத்துக்குச் சில.....

‘பாரததேசத்துத் திருமணமான பெண்கள் புனிதமான மாங்கல்யத்தைத் தவிர வேறு பொன்னாலான அணிகலன்களை அணியக்கூடாது. அவ்வாறு செய்தால் அவர்தம் கணவன்மார்களின் உயிருக்கு ஆபத்து நேரிடும்’ என்பது ஒன்று[இதன்மூலம் பெண்களின் தங்கநகை மோகம் முற்றிலுமாய் அழிந்தொழியும்].

‘மணமான மங்கையர்கள் தத்தம் கணவன்மார்களையே தெய்வம் என்று மதித்து வழிபட வேண்டும். கணவன்களும் தத்தம் மனைவியரைத் தவிர வேறு சாமிகளை ஏறெடுத்தும் பார்த்தல் குற்றமாகும். மீறினால், அவர்தம் துணையின் உயிருக்குப் பங்கம் நேர்வது நிச்சயம்’ -இது பிறிதொரு வதந்தி[இதன் மூலமாகக் கடவுளின் பெயரால் பரப்பப்படும் மூடநம்பிக்கைகளுக்குச் சமாதி கட்டலாம்].

சமுதாயச் சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு அவ்வப்போது இம்மாதிரி வதந்திகளைப் பரப்புவதை மாநில மத்திய அரசுகள் தத்தம் கடமை எனபதை உணர்தல் அவசியம்.

எத்தனை எத்தனை பெரியார்கள் வந்து பிறந்தாலும் நம் மக்களின் மனங்களில் வெகு ஆழத்தில் வேரோடிவிட்ட மூடநம்பிக்கைகளை அகற்ற முடியாது என்பதால் மேற்குறிப்பிடப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றுவதைத்தவிர வேறு வழியில்லை என்பதை மத்திய மாநில அரசுகள் புரிந்துகொள்ளுதல் வேண்டும்.

ஒரு பரிந்துரை: வதந்திகளைப் பரப்புவதற்கென்றே ஒரு தனித் துறையை[ரகசியமானது] ஆரம்பிக்கலாம். அதற்கான உறுப்பினர்களை நியமிப்பதில் பிரபல வி.வி.வி.ஐ.பி. ஜோதிடர்களுக்கு முன்னுரிமை வழங்கலாம்.
============================================================================================



8 கருத்துகள்:

  1. // ஜோதிடர்களுக்கு முன்னுரிமை // ஹா... ஹா...

    அவர்களே அனைத்தையும் "முடித்து" விடுவார்கள்...

    பதிலளிநீக்கு
  2. தங்க நகை மோகத்தை ஒழிக்கும் உங்கள் யோசனை நன்று நண்பரே

    இதே புரளி வேறுவிதமாக வரும் ஆடி 24-க்குப்பிறகு இரண்டாவது கணவன்தான் நிலைப்பான் என்று கிளப்பி விட்டால் ஆண்கள் எவனாவது தாலி கட்ட முன் வருவானா ?

    ஹூம் காலக்கெரமாம் கந்தசாமி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வதந்தி எதையும் சாதிக்கும்!!

      நன்றி நண்பர் கில்லர்ஜி.

      நீக்கு
  3. வருடப்பிறப்பு, பொங்கல் சமயங்களில் வருசம் பொறந்த நேரம் சரியில்ல, பொங்கல் பன்னி மேல வந்திருக்கு அதனால, வீட்டிலிருக்கும் ஆம்பிளைகளுக்கு ஆகாதுன்னு வீட்டு வாசல்ல எத்தனை ஆம்பிளைங்க இருக்காங்களோ அத்தனை விளக்கேத்தனும்ன்னு சொல்லி புரளி கிளப்புவாங்க. நான் இதுலாம் செய்யமாட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நான் இதுலாம் செய்யமாட்டேன்//
      மகிழ்ச்சிம்மா. நன்றி.

      நீக்கு
  4. நிருபர்கள் மூலமும் ,ரகசிய போலீஸ் மூலமும் வதந்தியைப் பரப்பிக் கொண்டுதானே இருக்கின்றது :)

    பதிலளிநீக்கு