புதன், 4 அக்டோபர், 2017

சாமி என்னடா சமயம் என்னடா சாகப் பிறந்த மானிடனே?![பழசு!]

நான் எழுதியவற்றுள் எனக்கு மிகவும் பிடித்த பதிவுகளுள் இதுவும் ஒன்று. உங்களுக்குப் பிடிக்காமல் போகலாம். ஆயினும்,  படிக்கத்தக்கதே!
னைத்து உலகங்களையும் உயிர்களையும் படைத்தவர் கடவுள்[என்கிறார்கள்].

நம்மைப் படைத்தவரும் அவரே.

நாம் வேண்டிக்கொண்டதால் கடவுள் நம்மை மனிதராகத் தோற்றுவிக்கவில்லை. அதாவது, நம் சம்மதம் இல்லாமலே இவ்வுலகில் பிறந்து  இன்பதுன்பங்களை அனுபவிக்கச் சபித்திருக்கிறார் என்று நான்  சொன்னால் அதை உங்களால் எளிதில் மறுக்க முடியாது.

அவர் படைத்துவிட்டார்.

வேறு வழியின்றி நாம் வாழ்கிறோம்.

வயது முதிர்ந்த நிலையிலோ அதற்கு முன்னதாகவோ நாம் செத்தொழிவது  100% உறுதி.

இது தெரிந்திருந்தும் நம்மில் எவரும் செத்து மடியத் தயாராயில்லை.

ஆசை...‘இன்னும் வாழ வேண்டும்’ என்னும் பேராசைதான் காரணம். ஆசைப்பட வைத்தவரும் அந்தப் பேரருளாளன்தான்!

இந்த ஆசை காரணமாக, சாவை நினைத்து அஞ்சுகிறோம்; மனம் கலங்குகிறோம்; மரணமில்லாப் பெருவாழ்வை எண்ணி நாளும் ஏங்குகிறோம். ஆனாலும், சாவு நம்மை விட்டு வைப்பதில்லை; ஓட ஓட ஓட விரட்டி ஒரு நாள் ‘காவு’ கொள்கிறது.

இந்தச் சாவுக்கான காரணக் கர்த்தா யார்?

நம்மில் மிகப் பெரும்பாலோர் நம்புகிற...நாள்தோறும் போற்றித் துதி பாடுகிற கடவுள்தானே?

நம் சம்மதம் இல்லாமலே நம்மைப் பிறப்பித்த கருணை வடிவான கடவுள், நம் சம்மதம் இல்லாமலே சாகடிக்கவும் செய்கிறார்.

இவர் மட்டும் ஆதியும் அந்தமும் இல்லாதவர்; என்றும் இருப்பவர். எந்தவொரு கெடுதியும் இவரை அணுகாது; அணுகவும் முடியாது, அணு முதல் அண்டம்வரை அனைத்தையும் ஆள்பவர் இவரே என்பதால்.

ஆனால், மானுடப் பதர்களான நமக்கும் பிற உயிர்களுக்கும் மட்டும் அற்ப ஆயுள். அதிலும் அடுக்கடுக்கான துன்பங்களின் தாக்குதல். இனி என்ன ஆவோம் என்று தொடர்ந்து சிந்திக்கவே இடம் தராத கொடூரச் சாவு.

இப்படிப்பட்ட பரிதாபத்திற்குரிய ஜீவன்களாகக் கடவுள் ஏன் நம்மைப் படைக்க வேண்டும்?

படைப்புத் தொழிலைக் கைவிட்டு, வெறும் சூன்யத்தில் கலந்து மோனத் தவத்தில் ஆழ்ந்து கிடக்கலாமே? உயிர்களற்ற வெறும் பிண்டமான அண்டத்தைக் கண்டு ரசித்துக் காலம் கழிக்கலாமே? அதை விடுத்து.....

உயிர்களைப் பரிதவிக்கச் செய்யும் பாவச் செயலை ஏன் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார்?

தனக்கொரு நீதி; தன்னால் படைக்கப்படும் உயிர்களுக்கு ஒரு நீதி என்றிருக்கும் இந்த நபரையா மக்கள் இத்தனை காலமும் வழிபட்டார்கள்? இனியும் வழிபடப் போகிறார்கள்?!

தங்களின் வருகைக்கு நன்றி.
0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000




















18 கருத்துகள்:

  1. உண்மைதான் நண்பரே கூட்டிக்கழித்து பார்த்தால் இது தேவை இல்லையோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேவை இல்லை என்பதே இப்போதைய நம் கருத்து. இது தவறானது என்று நிரூபிக்கப்பட்டால் மகிழ்ச்சியே.

      நன்றி நண்பரே.

      நீக்கு
  2. கடவுள் இருந்தால் இப்படி ஒரு பைத்தியக்காரத் தனமான விளையாட்டை விளையாடிக் கொண்டிருப்பாரா :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாம் வல்லவர் என்பதால் எப்படியும் விளையாடுவார். அந்த விளையாட்டைத்தான் நம்மவர்கள் ரசிக்கிறார்களே!!

      நன்றி பகவான்ஜி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. கப்சா என்று நாம் சொல்வதால் பக்திமான்கள் மனம் புண்படக்கூடும். ஆயினும், அவர்களைப் புண்படுத்துவது நம் நோக்கமல்லவே.

      நன்றி ராஜி.

      நீக்கு
  4. ////நான் எழுதியவற்றுள் எனக்கு மிகவும் பிடித்த பதிவுகளுள் இதுவும் ஒன்று./// எனக்கும் தான்:)..

    பதிலளிநீக்கு
  5. அறிவுப்பசி ஜி உங்கள் இந்தக் போஸ்ட்டும் கேள்வியும் நியாயமானதுதான் ஆனால் ஒரு வரியில் பதில் சொல்லிட முடியாது..

    காரணம் இல்லாமல் காரியம் இல்லை... அதுபோல நம் படைப்புக்கும் ஏதோ ஒரு காரணம் இருக்கிறது.. அதனால்தான் நாம் படைக்கப்படுகிறோம்... அப்படிப் பார்த்தால் எல்லோரையும் ஒரே விதமாகப் படைக்கிறாரா அதுவும் இல்லையே... பலர் பல குறைபாடுகளோடு.. பலர் பணத்தோடு.. பலர் பரம ஏழ்மையோடு... இப்படி எல்லாம்தானே பிறக்கிறார்கள்... அப்போ நாம் நன்றாகப் படைக்கப்பட்டதை எண்ணியாவது நன்றி சொல்லிக் கும்பிடுவோம்..

    அதேபோல நல்லது நடக்கட்டும் இனிமேலும் எனவும் வணங்குகிறோம்ம்.. மொத்தத்தில் ஒருவித பயத்தினாலேயே கடவுளை வணங்குகிறோம்:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆனால் ஒரு வரியில் பதில் சொல்லிட முடியாது..//

      உண்மைதான்.

      இது நீண்ட நெடுங்காலமாக நடந்துகொண்டிருக்கும் விவாதம். முற்றுப்பெறாததும்கூட. ஆனாலும், ஆழ்ந்து சிந்திக்கத் தூண்டுவதால் கால வரம்பின்றித் தொடர வேண்டிய ஒன்று.

      நான் என் கருத்துகளை முன்வைக்கிறேன். அவ்வளவுதான். நான் சொல்வதே ஏற்கத்தக்கது என்று பிடிவாதம் பிடிப்பதில்லை.

      விரிவானதும் தெளிவானதுமான கருத்துரைக்கு நன்றி அதிரா.

      நீக்கு
  6. பதில்கள்
    1. 4ஆம் ஓட்டை நானே போட்டுக்கொண்டுவிட்டேன். ஹி...ஹி...ஹி!

      நீக்கு
  7. தனக்கொரு நீதி; தன்னால் படைக்கப்படும் உயிர்களுக்கு ஒரு நீதி என்றிருக்கும் இந்த நபரையா மக்கள் இத்தனை காலமும் வழிபட்டார்கள்? இனியும் வழிபடப் போகிறார்கள்?!

    உண்மை
    இவரைத்தான் மெத்தப் படித்த மேதாவிகளும் வணங்கிக்கொண்டிருக்கிறார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // மேதாவிகளும் வணங்கிக்கொண்டிருக்கிறார்கள்//

      பரப்புரையும் செய்கிறார்கள்.

      நன்றி ஜெயக்குமார்.

      நீக்கு
  8. இது அவரவர் மனதைப் பொறுத்தது த ம 5

    பதிலளிநீக்கு
  9. நம்பிக்கையைப் பொறுத்தே இதுபோன்றவை அணுகப்படுகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றிங்க.

      நீக்கு