ஞாயிறு, 5 நவம்பர், 2017

ஒட்டுமொத்த மூடத்தனத்தின் உறைவிடமா குமுதம்!

‘குமுதம்’ தடை செய்யப்படவேண்டிய ஒரு வார இதழ். காரணம், ‘கடவுளின் குரல்’ என்னும் தலைப்பில், அது தொடர்ந்து வெளியிட்டுவரும் ‘கப்சா’ கதைகள். .0001% கூட நடைமுறை சாத்தியம் இல்லாத அந்தக் கதைகள், ‘மகா பெரியவா’வின் பெருமை பேசுவன அல்ல; சிறுமைப்படுத்துவன; மக்களின்  பக்தி உணர்வைப் பெருக்குபவை அல்ல; அவர்களின் பகுத்தறியும் திறனைச் சிதைத்துச் சீரழிப்பவை.

இது குறித்து ஏற்கனவே வெளியான இரு பதிவுகள்:

1. [http://kadavulinkadavul.blogspot.com/2017/03/1.html ‘உலக மகாகாகாகாகாகாகாகா நம்பர் 1 நகைச்சுவைக் கதை!!!!!!!!!!’

2.http://kadavulinkadavul.blogspot.com/2017/08/blog-post_18.html
மகா பெரியவா’[பரமாச்சாரியார்] உயிருடன் இருந்திருந்தால்.....!

இப்பதிவு புதியது; 01.11.2017 குமுதம் ‘லைஃப்’இல் இடம்பெற்ற கதை[குமுதம் உண்மை நிகழ்வு என்கிறது] பற்றியது.

ரு குட்டிக் குரங்கு.

தினமும் ‘மகா பெரியவா’ ‘பிட்சாவந்தனம்[?]’ செய்யும்போது தவறாம மடத்துக்கு வந்துடுமாம். “கொஞ்சம் அன்னத்தை எடுத்துண்டுவந்து போடு”ன்னு மகா பெரியவா சொல்லுவாராம். சீடரும் அன்னத்தைக் கொண்டுவந்து போட, அதை மிச்சம் வைக்காம சாப்பிட்டுட்டு ஓடிடுமாம் குட்டிக் குரங்கு.

இதுலே என்ன ஆச்சரியம்னா, பெரியவா சொல்லாம வேறு யார் எதைக் கொடுத்தாலும் அது சாப்பிடாதாம். உதாரணத்துக்கு, சீடர் ஒருவர் ஒரு வாழைப்பழத்தை நீட்ட குரங்கு அதைச் சீந்தவே இல்லையாம்!

பரமாச்சாரியார், ‘கோவிந்தா’ன்னு தான்  செல்லமாக அழைத்த அந்தக் குட்டியின் வரவைத் தினசரி எதிர்பார்ப்பாராம். அதுவும் தவறாம வந்து அன்னம் சாப்பிட்டுட்டுப் போகுமாம்.

அன்னிக்குப் பார்த்து அது மடத்துக்கு வரலையாம். காரணம் என்னன்னா, பக்கத்துத் தெருவில் உள்ள ஒரு வீட்டுக்குள் அது நுழைஞ்சுடுத்தாம். அந்த நேரம்பார்த்து வீட்டுக்காரர் வீட்டைப் பூட்டிட்டு, பெரியவாளைத் தரிசனம் பண்ணி, தான் வாங்கவிருந்த வீட்டின் பத்திரத்தை அவரின் திருவடிகளில் சமர்ப்பிச்சி ஆசீர்வாதம் வாங்கிண்டு போக மடத்துக்கு வந்துட்டாராம்.

மடத்துக்கு வந்த  அவருக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

அது என்னடான்னா, மொதல் நாள் ராத்திரியே, ஒரு நோட்புக் நடுவுல வெச்சிப் பைக்குள்ள பத்திரப்படுத்தின பத்திரம் காணாம போயிடிச்சாம். நோட்புக் மட்டும் இருந்திச்சாம்.

அவர் தவியாத் தவிச்சிண்டிருந்தப்போ அவரை அழைச்ச பெரியவா, “பத்திரம் உன்னோட அகத்துல பத்திரமா இருக்கு. பதட்டப்படாம போய்த் தேடு. நீ தேடுற பத்திரம் கிடைக்கும். நான் தேடுற குரங்கும் அங்கேதான் இருக்கு” என்றாராம்.

அவர் போயி வீட்டைத் திறந்து பார்த்தாராம். அங்கே குட்டிக்குரங்கு இருந்திச்சாம். அது கையில் பத்திரம்! மறுபடியும் அதிர்ச்சிக்குள்ளான அவர், சத்தம் போட்டுண்டு குரங்கை நெருங்க, அது அவருக்கு டிமிக்கி கொடுத்துட்டு மடத்துக்கு ஓடித்தாம்.

‘குட்டிக்குரங்கு அந்த வீட்டுக்கு ஏன் போச்சு? வீட்டுக்காரர் வீட்டைப் பூட்டும்போது ஏன் தப்பிச்சி வெளியே வரல? அவர் பூட்டிட்டுப் போன பிறகுதானே தான் வீட்டுக்குள் அகப்பட்டுக்கொண்டது தெரிந்திருக்கும்? அப்புறம் எப்படி பையிலிருந்த பத்திரத்தை எடுத்தது? 

வீடு பூட்டப்படும் என்பது தெரிந்தே வெளியேறாமல், மகா பெரியவரின் மந்திர சக்தியால் பத்திரத்தை எடுத்துக்கொண்டதா? மீண்டும் வீட்டுக்காரரின் வருகையை எதிர்பார்த்திருந்து, அவர் வந்து வீட்டைத் திறந்ததும் ‘மகா பெரியவா’வைக் காணப் பத்திரத்துடன் ஓட்டம் பிடித்ததா?’

இப்படி ஏராளமான கேள்விகள் கேட்க நினைப்பீர்கள். வேண்டாம். எல்லாம் மகா பெரியவா நடத்துற திருவிளையாடல்னு நினைச்சிக்கோங்க. மனசை அலட்டிக்காம மிச்சக் கதையையும் கேளுங்க.

பத்திரத்தோட வெளியே ஓடின குரங்குக் குட்டி நேரே காஞ்சி மடத்துக்குப் போச்சாம். அதைப் பார்த்ததும், “கோவிந்தா வந்துட்டியா?”ன்னு கேட்டு அதுக்கு வழக்கம்போல சாதம் வைக்கச் சொன்னாராம் மகா பெரியவா. குட்டியும் தன்கையிலிருந்த பத்திரத்தைப் பத்திரமா அங்கே இருந்த மேடையில் வச்சுட்டுச் சாதம் சாப்பிட்டுட்டுப் போயிடிச்சாம். பரமாச்சாரியாரின் அனுக்கிரஹத்தால் ஐந்தறிவு ஜீவியான குரங்கு ஆறறிவு ஜீவியாய் மாறிடிச்சு பார்த்தேளா!?

பின்னர், மடத்துக்குப் பதறியடிச்சி ஓடிவந்த பத்திரக்காரரிடம் ஆசீர்வாதம் பண்ணிப் பத்திரத்தைக் கொடுத்த ஆச்சார்யா, “பத்திரத்தைப் பத்திரமா வச்சிக்கோ”ன்னு ஜோக்கும் அடிச்சாராம். அவருடைய ஹாஸ்யத்தை ரசிச்சி அங்கேயிருந்தவா அத்தனை பேரும் சிரிச்சாளாம்[நீங்களும் சிரிக்கலாம்].

குமுதம் வார இதழ், தொடர்ந்து நடைமுறை சாத்தியமே இல்லாத இம்மாதிரிக் கதைகளை வெளியிட்டு வருவதன் உள்நோக்கம்.....

பரமாச்சாரியார் என்பவர், முக்காலமும் உணர்ந்த மகா ஞானி; தாமாகவே பிறரின் குறையறிந்து நிவர்த்தி செய்கிற கர்ம யோகி என்றெல்லாம் பரப்புரை செய்வதுதான்.

 குமுதம் குழுவினருக்கு எம் வேண்டுகோள்.....

“எழுதுங்கள். உங்களின் ‘மகா பெரியவா’ புகழ் பேசுவதற்காக எத்தனை கற்பனைக் கதைகள் வேண்டுமானாலும் எழுதுங்கள். அந்தக் கற்பனைகள் பகுத்தறிவுக்கு உகந்தனவாய், நம்பும்படியானவையாய் இருக்கட்டும்; நகைப்புக்குரியனவாய் இருத்தல் வேண்டாம்.”
=====================================================================================