வியாழன், 28 டிசம்பர், 2017

'சூப்பர் ஸ்டார்' ரஜினியிடம் ஒரு கேள்வி!

'ரசிகர்களை ரஜினிகாந்த் சந்தித்தபோது, ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டிருந்த ரசிகர் ஒருவர் ரஜினிகாந்தைப் பல தடவை சுற்றிவந்து கும்பிட்டு, "நீங்கள் அரசியலுக்கு வரவேண்டும்" என்று கேட்டுக்கொண்டார். அங்கு கூடியிருந்த ஏராள ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்' என்பது இன்றைய நாளிதழ்ச்[தினத்தந்தி, 28.12.2017] செய்தி.
'ரஜினி ஒருகட்சி தொடங்க வேண்டும். தேர்தலில் வென்று தமிழ்நாட்டின் முதல்வர் ஆக வேண்டும்' என்பது அவருடைய ரசிகர்களின் நீண்ட கால ஆசை.

"தலைவா வா!... தலைமை ஏற்க நீ வா!!" என்று மனம் சலிக்காமல் தொடர்ந்து கோரிக்கை வைத்துக்கொண்டே இருந்தார்கள்; இருக்கிறார்கள்.

ரஜினியோ, "போர் தொடங்கட்டும்", "ஆண்டவன் கட்டளையிடட்டும்", "காலம் கனிய வேண்டும்; வியூகம் வகுக்க வேண்டும்" என்றெல்லாம் ஏதேதோ சொல்லிக் காலம் கடத்தினார். 

பொறுமை இழந்த ரசிகர்கள், "சூப்பர் ஸ்டார் வாழ்க! தன்னேரில்லாத தலைவன் வாழ்க!!" என்றெல்லாம் அவ்வப்போது முழக்கமிட்டு, ரஜினியின் மனதில் பதவி ஆசையைத் தூண்டிவிட முயன்றார்கள். முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

நேற்று[28.12.2017] தம் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் நிகழ்வை ரஜினி தொடங்கி வைத்தபோது, பெரும் எண்ணிக்கையிலான ரசிகர்கள் திரண்டு, "சூப்பர் ஸ்டார் வாழ்க! தமிழ்நாட்டின் வருங்கால முதல்வர் வாழ்க!!" என்று முழக்கமிட்டு, ரஜினி இனியும் சாக்குப்போக்குச் சொல்லாமல் ஓர் அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்னும் தங்களின் ஆழ்மன விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

இந்த நிகழ்வின் உச்சமாக, பதிவின் தொடக்கத்தில் குறிப்பிட்டவாறு, ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டிருந்த ரசிகர் ஒருவர் ரஜினிகாந்தைப் பல தடவை சுற்றிவந்து கும்பிட்டு, "நீங்கள் அரசியலுக்கு வரவேண்டும்" என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். அங்கு கூடியிருந்த ஏராள ரசிகர்களும் கைதட்டி ஆரவாரம் செய்திருக்கிறார்கள்.

இருமுடி சுமந்து சென்று சபரிமலை ஐயப்ப சுவாமியை வழிபடவிருந்த ஒரு ஐயப்ப பக்தர்[கடவுள்களை மட்டுமே வணங்கி வழிபடவேண்டியவர்] ரஜினி என்னும் மனிதரைப் பலமுறை வலம்வந்து வணங்கி வழிபட்டிருக்கிறார்.

ரஜினி நாத்திகரல்ல; சிறந்த கடவுள் பக்தர். இச்செயலை அவர் கண்டித்திருக்க வேண்டும். செய்தாரில்லை[ஐயப்ப பக்தர்களும் கண்டித்ததாகத் தெரியவில்லை]. ஏன்?!
=====================================================================================