திங்கள், 22 ஜனவரி, 2018

தமிழ்நாட்டின் உடனடித் தேவை இன்னொரு ஜெயலலிதா!!!

அன்று காஞ்சி சங்கராச்சாரியைக் கைது செய்தார் ஜெயலலிதா. கொலைக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு வழக்கு நடந்தது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவின் வேறு எந்த மாநிலமாயினும் இம்மாதிரி அதிரடி நடவடிக்கையைக் கற்பனை செய்வதுகூட இயலாத காரியம்.

பிரதமர்களும் அமைச்சர்களும் தொழிலதிபர்களும் காலில் விழுந்து ஆசி பெறுமளவுக்கு அஸ்தத்தில் மிக உயர்ந்த மடாதிபதியானவர் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது சாதாரண விசயமல்ல. இப்படியொரு அசாதாரணமான செயலைச் செய்து காட்டியவர் செல்வி ஜெயலலிதா மட்டுமே.

முன்பெல்லாம், ஆளும் கட்சிக்காரன் ஆட்டம் போடுவான். எதிர்க்கட்சிக்காரன் அடக்கி வாசிப்பான். ஜெயலலிதா ஆட்சியிலோ ஆளுங்கட்சிக்காரன், எதிர்க்கட்சிக்காரன் என்று எல்லோருமே அடங்கிக் கிடந்தார்கள்.

மத்தியில் தன்னுடைய இனத்தைச் சார்ந்த ஜாதிக்காரர்கள் ஆண்டபோதும்கூட, தான் சொன்னதைக் கேட்கவில்லை என்பதால் அந்த அரசையே கலைத்தவர் ஜெயலலிதா.

மத்திய ஆட்சியில் பங்கு பெறுவதற்காக அலைந்ததில்லை; தன் சொல் கேளாதவர் எவராயினும் அவரை வீழ்த்தத் தயங்கியதில்லை அவர்.

சரியோ தவறோ, இத்தகைய பிடிவாத குணமும் துணிவும் தன்னம்பிக்கையும் ஜெயலலிதாவுக்கு வாய்த்திருந்தன.

நீட், ஜி.எஸ்.டி போன்றவற்றை நடைமுறைப்படுத்தியதன் மூலம் மாநிலங்களின் உரிமைகளைப் பறித்திருக்கிறது நடுவணரசு. இந்துத்துவா திணிப்பு, இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு போன்ற அடாவடியான காரியங்களிலும் அது ஈடுபட்டு வருகிறது.

தமிழ்நாட்டை ஆளும் அ.தி.மு.க. அரசுக்கோ இவற்றையெல்லாம் தட்டிக் கேட்பதற்கும் தடுத்து நிறுத்துவதற்குமான தைரியம் இல்லை.

இந்தவொரு அவலநிலையில்தான், தமிழ்நாட்டை ஆள இன்னொரு ஜெயலலிதா  தேவை என்கிறோம்.

100% சாத்தியமே இல்லை என்றாலும், இப்படி ஆசைப்பட்டு ஆசைப்பட்டு மனதில் நிரம்பி வழியும் ஆற்றாமையைத் தணித்துக்கொள்வதில் தவறேதும் இல்லையே?!