புதன், 10 ஜனவரி, 2018

மருட்டும் பிரபஞ்சமும் மிரட்டும் விஞ்ஞானிகளும்!

முதல் உலக அழிவு இனிவரும் ´150ஆவது கோடி ஆண்டில்´ நிகழும் என்கிறார் இங்கிலாந்திலுள்ள ´ஈஸ்ட் ஆங்க்லியா´ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த சுற்றுச் சூழல் இயல் விஞ்ஞானியான ´ஆண்ட்ரூ ரஷ்பி´ என்பவர். சூரியனின் அதி பயங்கர வெப்பத்தால் பூமி பொரிந்து, வெடித்துச் சிதறிச் சின்னாபின்னம் ஆகிவிடுமாம். வேறு சில வானியல் விஞ்ஞானிகளும் இதையே சொல்கிறார்கள்.

´750ஆவது கோடி ஆண்டில், சூரியன் தன் ஒட்டுமொத்த ஹைட்ரஜன் எரிவாயுவை எரித்து முடித்து, ஹீலியத்தைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கும். அதன்விளைவாக, சூரியன் ஒரு பலூன் போல் பெரிதாகிச் சிவப்புப் பூதமாக மாறிவிடும். அதன் விளைவு.....

செவ்வாயும் வேறு சில கோள்களும் அப்பளம் போல் பொரியும். சுருங்கச் சொன்னால், அடுத்த 800 கோடி ஆண்டில் சூரிய மண்டலமே உயிர் வாழ்வுக்கு அருகதை அற்றதாக ஆகக்கூடும்.´

இப்படிச் சொல்பவர் ´கார்நெல்´ பல்கலைக் கழகத்தின் வானியல் விஞ்ஞானி ´கால்டே நெக்கர்´ என்பவர்.

10ஆயிரம் கோடி ஆண்டுகளில், புதிய நட்சத்திரங்கள் தோன்றுவதற்கான ஒட்டுமொத்த மூலப் பொருளும் தீர்ந்துபோகும். ஒரு கட்டத்தில், அத்தனை பழைய நட்சத்திரங்களும் அழிந்துபோக, விண்வெளியில் நட்சத்திரங்களே இல்லாத நிலை உருவாகுமாம்.

பிரபஞ்சத்தின் கடைசி நட்சத்திரமான ´சிவப்புக் குள்ளர்´[Red dwarf] வகை நட்சத்திரங்கள் அழிந்த பிறகு பிரபஞ்சம் இருண்டுவிடும் என்கிறார்கள்..

இயற்பியல் கருதுகோள்களின்படி, இன்றிலிருந்து ஒரு டெசில்லியன்[One Decillion = 10இன் 33 மடங்கு ஆண்டுகள்] முதல் ஒரு விஜிண்டில்லியன் ஆண்டுகளில்[One Vigintillion = 10இன் 66 மடங்கு ஆண்டுகள்] அணுக்களில் உள்ள புரோட்டான்கள் அழிந்துவிடும். அப்போது பிரபஞ்ச வெளியில் கருந்துளை மட்டுமே எஞ்சியிருக்கும்.

அடுத்து, பத்து டியோட்ரைஜின்டில்லியன் ஆண்டுகளில்[One Duotrigintillion = 10இன் 100 மடங்கு ஆண்டுகள்] கருந்துளை/கருந்துளைகளும் ஆவியாகிவிடும். ஆற்றல் என்ற ஒன்று இராது. இது அனைத்து உயிர்களின் முடிவு காலமாக இருக்கலாம்.

இவ்வகையிலான, அச்சுறுத்தல்களுக்கிடையே மனித குலத்துக்கு ஆறுதல் தரும் வகையிலான அறிவிப்புகளையும் செய்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்..

/பூமியும் சூரிய மண்டலத்திலுள்ள பிறவும் அழிந்தொழிந்தாலும்கூட, ´இண்டர்ஸ்டெல்லார் ஆர்க்´[interstellar ark] எனப்படும் ராட்சத விண்வெளிக் கப்பல்கள் உருவாக்கப்பட்டு, அவற்றில் பல்லாயிரவர்  பயணித்து[ஏராளமானோர் மடிந்துபோக] எஞ்சியவர்கள் வெகு வெகு தொலைவில் உள்ள நட்சத்திரங்களில் குடியேறிப் பல்கிப் பெருகுவர்.

பிரபஞ்சம் இருண்டுபோகும் நிலையிலும்கூட, மனித குலம் முற்றிலுமாய் அழிந்துவிடாது/.

பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தின் ஆய்வாளர் ´பால் ஸ்டெய்ன் ஹார்ட்´ மற்றும் கொலம்பியா பல்கலைக் கழகத்தின் ´அன்னா இஞ்ஜாஸ்´ ஆகியோர் இணைந்து ஓர் ஆய்வு மாதிரியை உருவாக்கியுள்ளனர். அதன்படி [கருதுகோளின்படி], /ஒரு முடிவில்லா தோற்றச் சுழற்சியில் பிரபஞ்சம் மீண்டும் மீண்டும் தோன்றிக்கொண்டே இருக்கும். மனித இனமும் தோனறி வாழ்ந்துகொண்டே இருக்கும்/.

ஒரு காலக்கட்டத்தில், மனிதர்களுக்குப் ´பூத உடல்´ என்ற ஒன்றே இராது என்னும் பகீர்த் தகவலையும் வெளியிட்டிருக்கிறார்கள் அறிவியல் அறிஞர்கள்.
´பூத உடலுடன் வாழ்வது என்பது புரிகிறது. அது இல்லாமல் மானுடர்கள் ஒருவரை ஒருவர் கண்டு உரையாடி மகிழ்வது எப்படி? தொட்டு உரசி உடலுறவு இன்பம் துய்ப்பது எப்படி? இனப்பெருக்கம் செய்வது எப்படி?´ என்பன போன்ற கேள்விகள்தான் நம்மை மயங்க வைக்கின்றன; மருளச் செய்கின்றன!
=====================================================================================
நன்றி: 08.01.2018 தினத்தந்தி நாளிதழ்['கம்ப்யூட்டர் ஜாலம்' பகுதி].