சனி, 6 ஜனவரி, 2018

'ஆன்மிக அரசியல்'...என்னய்யா இது புதுப் புருடா?!?!

'ஆன்மிகம்' என்றால் என்ன?

'ஆன்மா' என்னும் சொல்லிலிருந்து 'ஆன்மிகம்' பிறந்திருக்கலாம். 

ஆன்மா குறித்துச் சிந்திப்பதும் கருத்துப் பகிர்வு செய்வதும் ஆன்மிகம் எனலாம். கூடவே, ஆன்மாவைப் படைத்தவர் என்று சொல்லப்படும் கடவுள்[ஆன்மா அழிவில்லாதது என்பதால் அதைக் கடவுள் படைக்கவில்லை என்ற கருத்தும் உண்டு] குறித்துச் சிந்திப்பதும் கருத்துரை வழங்குவதும்கூட ஆன்மிகம்தான்.

ஆன்மிகமும் மதக் கோட்பாடுகளும் மிக நெருங்கிய தொடர்புடையவை.

'ஆன்மிகம் அல்லது ஆன்மவியல் (spirituality) என்பது ஆன்மாவுடன் தொடர்புடைய விடயங்களைக் குறிக்கும்......இது, மத நம்பிக்கை, ஆழ்நிலை உண்மை என்பவற்றுக்கு நெருக்கமான ஒரு கருத்துரு ஆகும்'  https://ta.wikipedia.org/s/eht என்று விக்கிப்பீடியா தரும் விளக்கத்தை நினைவு கூர்க.

இனி, "நான் மதவாதியல்ல; ஆன்மிகவாதி" என்றும், "உண்மையான, நேர்மையான, நாணயமான, சாதிமதச் சார்பற்ற அரசியலே ஆன்மிக அரசியல்" ன்றும்  நடிகர் ரஜினிகாந்த் கூறியிருப்பது பற்றி ஆராயலாம்.

ஆன்மிகவாதி என்பவர் மதப்பற்று உள்ளவராக இருத்தல் கட்டாயம் அல்ல. "எனக்கு மதங்களின்மீது பற்று இல்லை. ஆனால், கடவுளை நம்புகிறேன்" என்று சொல்பவர்கள் உளர். ரஜினிகாந்த்தும் அத்தகையவராக இருக்கலாம். 'கடவுள் பற்று மட்டுமே கொண்ட ஆன்மிகவாதி நான்' என்னும்   பொருளில் தன்னைப் பற்றி அவர் சொல்லியிருந்தால் அதில் தவறேதும் இல்லை.

அடுத்ததாக, "உண்மையான, நேர்மையான, நாணயமான, சாதிமதச் சார்பற்ற அரசியலே ஆன்மிக அரசியல்ன்ற அவரின் கூற்றிலுள்ள  'ஆன்மிக அரசியல்' என்பதுதான் பெரும் விவாதத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

"நீங்கள் நடத்தவிருக்கும் அரசியல் எத்தகையது?" என்னும் ஊடக நிருபர்களின் கேள்விக்கு அவர், "என் அரசியல் உண்மையானதும் நேர்மையானதும் நாணயனமானதுமாக இருக்கும்" என்று சொல்லியிருந்தால் போதுமானது. அதாவது, அவர் நடத்தவிருக்கும் அரசியல் 'மனிதாபிமானம்' மிக்கதாக இருக்கும் என்று எண்ணும்படியாக அமைந்திருக்கும்.

"நான் தனிப்பட்ட முறையில் ஓர் ஆன்மிகவாதி. ஆன்மிகவாதியாகவே ஆட்சியைக் கைப்பற்றுவேன்; நல்லாட்சி தருவேன்" என்றுகூடச் சொல்லியிருக்கலாம். ஆனால், அவரோ.....

தான் நடத்தவிருப்பதாக நம்பும் அரசியலுக்கு, 'ஆன்மிக அரசியல்' என்று பெயர் சூட்டுகிறார்.

"உண்மையானதும், நேர்மையானதும், நாணயமானதும், சமயச் சார்பற்றதும் ஆன ஆன்மிக அரசியல்' என்று விளக்கமும் தருகிறார்.

சமய[மதம்]ச் சார்புள்ள ஆட்சியில் மதச் சார்புள்ளவர்கள் நடத்தும் வெறிக்கூத்துகளை மனதில் கொண்டு 'சமயச் சார்பற்ற அரசியல்' என்று சொன்ன ரஜினி, 'ஆன்மிகச் சார்பற்ற' என்றும் சொல்லியிருக்கலாம். மாறாக, தன்னுடையது 'ஆன்மிக அரசியல்' என்கிறார்.

ஆன்மிகவாதிகள் செய்யும் அரசியலில் ஆன்மிக வெறிக்கூத்துகள் நடவா என்பதற்கு என்ன உத்தரவாதம்? ஆன்மிகத்தில் பற்றில்லாதவர்கள்  நடத்தும் அரசியலில் உண்மையும் நேர்மையும் நாணயமும் இடம்பெறாவா?

ரஜினியின் அரசியல் நுழைவுக்கான உள்நோக்கம் எதுவாகவோ இருக்கலாம். அதை மறைத்து, "மக்களை மகிழ்ச்சியாக வாழவைக்கவே அரசியலில் நுழைகிறேன்" என்று அவர் சொல்லியிருப்பின் அதுவும் ஏற்புடையதே. பதிலாக.....

நிருபர்கள் தொடுக்கும் வினாக்களுக்கு மனம்போன போக்கில் பதில் சொல்லிக் கேட்போரைக் குழப்பத்தில் ஆழ்த்தாமல், அவர் ஆழ்ந்து சிந்தித்து விடை பகர்தல் வேண்டும் என்பதே என் விருப்பம் ஆகும். 

உலக அளவில் பெரும் புகழுக்குரியவராக வாழும் ரஜினிகாந்த், தம் இறுதிக் காலம்வரை குன்றாப் புகழுடன் வாழ்ந்திட வேண்டும் என்பதுகூட என் விருப்பம்தான்.

நன்றி.