வியாழன், 1 பிப்ரவரி, 2018

திராவிடக் கட்சிகளின் 'பெயர் மாற்றம்' எப்போது?

தென்னிந்தியாவைத் தழுவி, 'திராவிட' என்னும் சொல்லோடு தொடங்கப்பட்ட திராவிடக் கட்சிகள் தமிழ்நாட்டில் இருப்பது போல ஆந்திராவிலோ, கர்னாடகாவிலோ, கேரளத்திலோ உண்டா?

அந்தந்த மாநிலங்களில் உள்ள தமிழர்கள் வைத்திருக்கக்கூடிய கிளைகளைச் சொல்லவில்லை; உண்மையிலேயே தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட தெலுங்கர்களோ, கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்ட கன்னடர்களோ, மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட மலையாளிகளோ 'திராவிட' என்னும் சொல்லோடு தொடங்கும் கட்சிகளை நடத்துகிறார்களா?

உதாரணத்துக்கு ஒரு கட்சியேனும் உண்டா?

''இல்லை'' என்பதுதானே பதிலாக உள்ளது.

நான்கு மாநிலத்தவரையும் இணைக்கின்ற  'திராவிடம்' என்னும் கருத்தாக்கத்தை அவர்கள் ஏற்கவில்லை என்பதைத்தானே இது காட்டுகிறது? அப்புறம் ஏன் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் மட்டும் இதை இன்னமும் உயர்த்திப் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள்? 

'திராவிடர் கழகம்' என்பதைத் 'தமிழர் கழகம்' என்றும்,

'திராவிட முன்னேற்றக் கழகம்' என்பதைத் 'தமிழர் முன்னேற்றக் கழகம்' என்றும்,

'அனைத்திந்திய திராவிட முன்னேற்றக் கழகம்' என்பதை 'அனைத்திந்தியத் தமிழர் முன்னேற்றக் கழகம்' என்றும்,

'மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்'  என்பதை 'மறுமலர்ச்சித் தமிழர் முன்னேற்றக் கழகம்' என்றும்,

'தேசிய முற்போக்கு திராவிட கழகம்' என்பதைத் 'தேசிய முற்போக்குத் தமிழர் கழகம்' என்றும் மாற்றியிருத்தல் வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் ஏன் மாற்றவில்லை?

கேள்வி மிகப் பழையது; பலமுறை கேட்கப்பட்டது. வே.குமரவேல் என்னும் ஆராய்ச்சியாளரும் இதே கேள்வியை 2012இல் தாம் எழுதிய, 'எங்கே அந்தச் சொர்க்கம்?'[விற்பனை உரிமை: முல்லைப் பதிப்பகம், சென்னை] என்னும் நூலின் வழியாகக் கேட்டிருக்கிறார்.

நாமும் இதே கேள்வியைத்தான் இப்போது முன்வைக்கிறோம்.

திராவிடக் கட்சிகள் தத்தம் கட்சியின் பெயரை மாற்றம் செய்வது எப்போது?