வெள்ளி, 23 பிப்ரவரி, 2018

அவதாரங்களிடம் கேளுங்கள்!!!

சிந்திக்கக் கற்றுக்கொண்ட நிலையில், ''உலகங்களைக் கடவுள் படைத்தார்” என்று ஆத்திகர்கள் சொன்ன போது, ''கடவுளைப் படைத்தது யார்?” என்று நாத்திகர்கள் கேட்டார்கள். அன்று முதல் இன்றுவரை விவாதம் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
இன்றெல்லாம், ''மனிதனுக்கு ஆறறிவு உள்ளது. சிந்திக்கப் பயன்படும் இந்த அறிவு[ஆறாம் அறிவு] தானாக வாய்த்ததல்ல; அதைத் தருவதற்கு அதற்கும் மேலான அறிவுள்ள ஒருவர் தேவை. அவரே கடவுள்'' என்கிறார்கள் ஆன்மிகவாதிகள்.

அவர்களிடம் நாம் முன்வைக்கும் கேள்வி.....

''மேலான அறிவுள்ளவர் கடவுள் என்றால், அந்த அறிவு அவருக்கு எப்படி வாய்த்தது? தானாகக் வாய்த்திருக்க முடியாது. அவருக்கும் மேலான பேரறிவு வாய்க்கப்பெற்ற ஒருவர், அதாவது, கடவுளின் கடவுள் அதைத் தந்திருக்க வேண்டும். கடவுளின் கடவுளுக்குப் பேரறிவைத் தந்தவர் கடவுளின் கடவுளின் கடவுளா?

இவ்வகையில் எழுப்பப்படும் கேள்விகளும் தொடரும் விவாதங்களும் முற்றுப்பெறுவது ஒருபோதும் சாத்தியமில்லை எனலாம்.

எனினும், ஆத்திகர் நாத்திகர் எனும் இருதரப்பாரும் மனம் ஒத்து ஏற்கத்தக்க ஓர் உண்மை உண்டு. அது.....

'மனிதனுக்கு ஆறாவது அறிவு வாய்த்தது எப்படி என்பது யாருக்கும் தெரியாது’ [‘இப்போதைக்கு’ என்று வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளுங்கள்.]

இதை ஏற்றுக்கொள்ள மனமின்றி, ‘எல்லாம் அவனே. அவனின்றி அணுவும் அசையாது. மனிதன் உட்பட அனைத்தையும் படைத்துக் காத்து அழிக்கின்ற வல்லமை படைத்தவன் அவனே” என்று கடவுளைக் காப்பாற்ற அவர்கள் இடைவிடாது மேற்கொண்ட முயற்சியின் விளைவு........

“கடவுள் இல்லை” என்ற பகுத்தறிவாளர்களின்[நாத்திகர்களின்] எதிர் முழக்கம்!
                                                                                                                                             
நம்மில் சிந்திக்கத் தெரியாதவர்கள் அதிகம். கடவுளைக் கற்பித்து, நம்ப வைத்ததோடு, தங்களையும் கடவுளின் 'மறுபிரதி’ என்று நம்பவைத்தார்கள் சில புத்திசாலிகள்!

அவர்களைக் கடவுளின் ‘அவதாரங்கள்’ என்று போற்றி வழிபட்டார்கள் மக்கள்.

அவதாரங்களை.....

சுவர்க்கத்திலிருந்து கடவுளே தோளில் சுமந்து வந்து இந்த மண்ணில் இறக்கிவிட்டுப் போனாரா என்பது நம் கேள்வி.

அவர்கள் நம்மைப் போன்றவர்கள் அல்லவா? கடவுளையே தங்களின் சுவாசக் காற்றாக்கி மூச்சு விடுகிறார்களா? அவர்கள் நம்மைப் போல் மூக்கால் சுவாசிப்பதில்லையா? காதுகளால் கேட்பதில்லையா? வாயால் உண்பதில்லையா?

அவர்கள் தின்பதெல்லாம் மலமாக வெளியேறும்தானே? அந்த மலமும்கூட கமகமவென்று சந்தணமாய் மணக்குமா? அவர்களின் சிறுநீரில் அசுத்தங்கள் கலக்காமல், அருந்தினால் சுவை நீராகப் பரவசம் ஊட்டுமா? கடவுளே அவர்களின் மலமாகவும் சிறுநீராகவும் வெளிப்படுகிறாரா?!

அவர்கள் தொட்டால் தீராத நோய்கூடத் தீரும் என்கிறார்கள்! அவர்களுக்கு நோயே வருவதில்லையா? வந்தால் கடவுளே நேரில் வந்து மருத்துவம் பார்க்கிறாரா?

அவர்கள் பார்வை பட்டால் செய்த பாவமெல்லாம் விலகுமாம். அவர்கள் செய்த பாவங்களெல்லாம் கடவுள் அருளால் புண்ணியங்களாக மாறிவிடுமா?

மனிதனாகப் பிறந்து குற்றங்கள் செய்யாதவர் யார்? அவர்கள் சின்னஞ்சிறு தவறு கூடச் செய்ததில்லையா?

அவர்கள், கல்லைக் காட்டிக் கடவுள் என்றார்கள். காலங்காலமாய் முட்டாள் மனிதர்கள் கல்லைக் கடவுளாக வழிபட்டு வருகிறார்கள்.  ''கடவுள் கல்லில் இல்லை; கழுதையில்தான் இருக்கிறார்'' என்று அவர்கள் சொன்னால்,  கழுதையை மட்டுமே இவர்கள் வழிபடவும் தயார்.

சுய சிந்தனை வேண்டாமா?

கல்லைக் கடவுள் என்று அவர்கள் சொன்னால், “யார் அந்தக் கடவுள்? அவரை ஏன் கல்லுக்குள் திணிக்கிறாய்? கல் கல்லாகவே இருக்கட்டும்” என்று சொல்ல வேண்டாமா?

“இல்லை இல்லை. அது அப்படித்தான்” என்று திரும்பத் திரும்பச் சொல்லி மூளைச் சலவை செய்ய அவர்கள் முயன்றால்............

“கல் ஒரு பொருள். அது பற்றி விஞ்ஞானிகள் நிறைய ஆய்வுகள் செய்திருக்கிறார்கள்; செய்கிறார்கள். செய்ய வேண்டியவை ஏராளம் உள்ளன. நீ எதற்குக் கடவுளை உள்ளே நுழைத்து அறிவாராய்ச்சிக்கு ஊறு விளைவிக்கிறாய்? கடவுளின் பெயரால் மூடநம்பிக்கைகளைப் பெருக்குகிறாய்?'' என்றெல்லாம் கேட்கவேண்டும்.

இனியேனும் நம்  மக்கள் கேட்பார்களா?