ஞாயிறு, 11 மார்ச், 2018

கடவுளை நிரூபிக்க 'ஜக்கி வாசுதேவ்' சொன்ன கதை!

''கடவுள் இருக்கிறாரா?'' என்று வழக்கமாகக் கேட்கப்படும்  கேள்விக்குக் கீழ்க்காணும் ஒரு கதையைச் சொல்லி விளக்கம் தருகிறார் ஈஷா சத்குரு[?] ஜக்கி வாசுதேவ். 

கொஞ்சமேனும் புரிகிறதா பாருங்கள்
#விவேகானந்தரின் வாழ்வில் மிகவும் சுவாரஸ்யமான இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. அமெரிக்காவிற்கு 1900 களில் சென்று வந்த முதல் யோகி அவர்தான். விவேகானந்தர் புத்திசாலி, தர்க்க அறிவு சார்ந்து செயல்படுபவர். 

ராமகிருஷ்ணரிடம் வந்து சேர்ந்த காலத்தில் தீயாய் இருந்தார் இளைஞர் விவேகானந்தர். ஆனால் அவருடைய குருவோ படிப்பறிவில்லாதவர், ஞானி. அவர் பண்டிதரும் கிடையாது. இராமகிருஷ்ணரிடம் விவேகானந்தர், “நீங்கள் கடவுள் பற்றி பேசுகிறீர்கள், கடவுள் இருப்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது?” என்றார். அதற்கு இராமகிருஷ்ணர், “நானே ஆதாரம்”[அவரே கடவுளா?!] என்றார். 

விவேகானந்தர் ஏமாற்றம் அடைந்தார்.

மூன்று நாட்கள் கழித்து மீண்டும் இராமகிருஷ்ணரைச் சந்திக்கச் சென்ற விவேகானந்தர், “எனக்கு நீங்கள் கடவுளைக் காண்பிக்க முடியுமா?” எனக் கேட்க, “உனக்கு கடவுளைக் காணும் துணிவிருக்கிறதா?[கடவுளைக் காண்பதற்குத் துணிவு தேவையா?]” எனக் கேட்டார். “ஆம், இருக்கிறது” என பதிலளித்தார் விவேகானந்தர். அவரின் தீவிரத்தைப் பார்த்த இராமகிருஷ்ணர், [சட்டென]விவேகானந்தரின் மார்பில் கால் பதித்தார். அதன்பின், விவேகானந்தர் 12 மணி நேரத்திற்குக் கண்களைத் திறக்கவே இல்லை. அவர் தன் கண்களைத் திறந்தபோது புது மனிதராக இருந்தார்#

சத்குரு இந்தக் கதையின் மூலம், ''கடவுள் இருக்கிறாரா?'' என்னும் கேள்விக்கு நேரடியான பதிலைத் தராமல், ''இராமகிருஷ்ணர் விவேகானந்தரின் மார்பில் கால் பதித்தார்'' என்று கூறியிருக்கிறார்.

இராமகிருஷ்ணரின் காலால் மிதிக்கப்பட்டால், மிதிக்கப்பட்டவர் கடவுளை உணர்வார் என்கிறாரா வாசுதேவ்? ''ஆம்'' எனின், அப்படி உணர்ந்தவர்கள் எத்தனை பேர் என்பதை அவர் கணக்கிட்டுச் சொல்வாரா? அதற்கென வரலாறு உண்டா? பட்டியல் உண்டா?

12 மணி நேரம் மயங்கிக் கிடந்த விவேகானந்தர் புதிய மனிதர் ஆனாராம். புதிய மனிதர் என்றால் எப்படி? சத்குரு விளக்கம் தரவில்லை.

''கடவுளைக் காட்டுவீரா?'' என்று கேட்டால், ''முடியும்'' அல்லது ''முடியாது'' என்று பதில் சொல்ல வேண்டும். முடியும் என்பது பதிலானால், கடவுளைக் காட்ட வேண்டும். இதுதான் ஞானிக்கு அழகு. 

எட்டி உதைத்தார் பரமஹம்சர். அதன் விளைவாகப் புதிய மனிதரானார் விவேகானந்தர் என்று கதையடித்து மக்களின் பகுத்தறிவை முடக்குவதுதான் அறிவுபூர்வமான பதிலா?

ஏன் இவரும் இவரைப் போன்றவர்களும் இவ்வாறெல்லாம் மக்களை ஏமாற்றித் திரிகிறார்கள்?!

சத்குருவின் தத்துவ உரையில் கீழ்வருவதும் ஒரு பகுதியாகும்.

''எனவே உங்களுக்கு இந்தக் கேள்வியின் ஆழம் தெரிந்திருந்தால் இதற்கு வேறுவிதத்தில் நான் பதில் அளித்திருப்பேன். நீங்கள் ஆர்வமாகக் கேட்டதால் நான் உங்களுக்கு கடவுள் கதை வேண்டுமானால் சொல்லலாம். கடவுள் பற்றி நீங்கள் கேள்விப்பட்டவை, உங்களுக்கு கடவுள் பற்றிய அறிவை ஊட்டி இருக்கிறதே தவிர, கடவுளை நீங்கள் உணரவில்லை. இதனை உணர தீவிரம் தேவை'' 

இங்கே என்ன சொல்லியிருக்கிறார் சத்குரு? ஒரு கருமாந்தரமும் புரியவில்லையே!

இவர், அல்லது இவர் போன்ற குருக்கள் அல்லது மகான்கள் 'கடவுளின் இருப்பை' உறுதி செய்கிற வகையில், உருப்படியாய் ஏதாவது சொல்லியிருக்கிறார்களா?

கேள்வி கேளுங்கள்; சிந்தியுங்கள்.

[கடவுள் இருப்பதற்கு என்ன ஆதாரம்…? http://isha.sadhguru.org/blog/ta/kadavul-iruppatharku-enna-atharam/] என்னும் பதிவை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டது இந்தப் பதிவு].
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++