சனி, 7 ஏப்ரல், 2018

ஆதியோகியும் ஜக்கியின் அதிபுத்திசாலித்தனமும்!!

'இந்தியச் சுற்றுலாத்துறை, கோவை ஈஷா யோக மையத்திலிருக்கும் 112 அடி ஆதியோகி சிலையை இன்கிரிடிபிள் இந்தியா[Incredible India (styled as Incredıble!ndıa) is the name of an international tourism campaign by the Government of India to promote tourism in India since 2002 to an audience of global appeal..Wikipedia] சுற்றுலாத் தலமாக அறிவித்துள்ளது' என்பது செய்தி[தினமலர், 04.04.2018].

செய்தியறிந்து மகிழ்கிறோம்.

ஈஷாயோக மைய நிறுவனர் சத்குருவால்['சத் (Sat) (சமக்கிருதம்सत्) எனும் சமசுகிருத மொழிச் சொல்லிற்கு உண்மையான, மாறாத, முக்காலங்களில் என்றும் நிலைத்து இருக்கும் பரம்பொருளைக் குறிக்கிறது' என்கிறது விக்கிப்பீடியா. இவரென்ன பரம்பொருளுக்கே குருவா?] வடிவமைக்கப்பட்டு, பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள இச்சிலை, 2017ஆம் ஆண்டு மகா சிவராத்திரி நாளில் புண்ணிய பாரதத்தின் பிரதான் மந்திரி நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டதாம். மிக்க மகிழ்ச்சி.

இச்சிலை, 'உலகின் மிகப் பெரிய மார்பளவுச் சிலை' என்று கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் மே 2017இல் இடம்பெற்றதாம். மிகவும் மகிழ்கிறோம்.

ஆதியோகியின் மகிமை பொருந்திய திருமுகத்திற்கு முன்னால் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வெகு சாதாரணமாக அமர்ந்து தியானம் செய்ய முடியுமாம். மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.

இத்துடன் செய்தி முற்றுப்பெற்றிருந்தால் தேவலாம். இதற்கு மேலும், ஜக்கி உதிர்த்த சில தத்துவங்களைத் தொகுத்தளித்திருக்கிறது தினமலர்.

''எந்தவொரு மதமும் தோன்றுவதற்கு முன்னால், தோராயமாக 15000ஆண்டுகளுக்கு முன்பு, யோக அறிவியலைத் தன் ஏழு சீடர்களான சப்தரிஷிகளுக்குப் பரிமாறினார் முதல் யோகியான ஆதியோகி'' என்கிறார் வாசுதேவ்.
பரம்பொருளின் குருவான அருள்மிகு ஜக்கி அவர்கள் இதற்கான வரலாற்று ஆதாரங்களைத் தரவில்லை; இவ்வாறான கற்பனைக் கதைகளை மக்கள் மத்தியில் பரப்புவதன் மூலம் பக்தி நெறி வளர்க்கிறாரா, தன்னை வளர்த்துக்கொள்கிறாரா?

நெற்றிக்கண் போன்ற திலகத்துடனும், ஜடாமுடியுடனும் காட்சியளிக்கிற இந்தச் சிலை சிவபெருமானுக்கான உருவத்தை  மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டது.  இந்தச் சிவபெருமான்தான் 15000ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஆதியோகி என்கிறார் வாசுதேவ்.

பதினையாயிரம் என்ன, பத்து லட்சம் யுகங்கள், பத்துக் கோடி யுகயுகாந்தரங்கள் என்றுகூட அடித்துவிட்டிருக்கலாம். யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். பிரதான் மந்திரியின் ஆத்ம நண்பரல்லவா?

மேலும், தத்துவம் என்னும் பெயரில் ஏதேதோ சொல்லி மண்டை காய வைக்கிறார் ஜக்கி.

''உலகின் அடுத்த தலைமுறையினர் நம்பிக்கைகளைப் பின்பற்றுபவர்களாக இல்லாமல் தேடுதல் உடையவர்களாக இருப்பார்கள்'' என்கிறார் 

நம்பிக்கைகள் என்று எவற்றைச் சொல்லுகிறார்?

கடவுள், மதம் போன்றவற்றின் மீதான நம்பிக்கைகளா?  பாவம், புண்ணியம் தொடர்பான நம்பிக்கைகளா? மூடநம்பிக்கைகளா? 

''வரும் வருடங்களில் தத்துவம், சித்தாந்தம் மற்றும் நம்பிக்கை முறைகள்[நம்பிக்கையில் முறைகளா? புரியலையே!] அனைத்தும் காரண அறிவு[இதுக்கென்ன விளக்கம்? காரணங்களைத் தேடும் அறிவா?] மற்றும் அறிவியல்பூர்வமான சோதனைகளுக்கு முன் தாக்குப்பிடிக்க முடியாமல் தன்னால் உடைந்துபோகும்'' என்பது சத்குருவின் நவயுக தத்துவம்.

அறிவியல் வளர்ச்சி பெறும்போது, தத்துவம், சித்தாந்தம் எல்லாம் உடைந்து போகும், அதாவது அழிந்துப்போகும் என்கிறார். அப்புறம் எதற்கு இவர் இன்னும் தத்துவம் சித்தாந்தம் எல்லாம் பேசித் திரிகிறார்? பிரமாண்ட ஆதி யோகியை வைத்து மக்களைப் பித்தர்கள் ஆக்கிக்கொண்டிருக்கிறார்?

இந்த மனிதருக்குத் தத்துவமும் தெரியாது; சித்தாந்தமும் புரியாது.

மனம்போன போக்கில் கொஞ்சம் வித்தியாசமாக எழுத வைத்ததோடு ஆடம்பர ஆடைகளுடுத்த படங்களையும் போட்டு, சத்குரு ஆக்கி இவரைப் பிரபலப்படுத்தியது ஆனந்தவிகடன் வார இதழ். 

பயன் விளைகிறதோ இல்லையோ, தியானப் பயிற்சி, கூட்டு வழிபாடு, ஆட்டம்பாட்டம் என்று கவர்ச்சிகரமான பல செயல்திட்டங்களின் மூலம் மக்களை ஈர்த்துத் தம்வசப்படுத்திய ஜக்கி வாசுதேவ், ஊடகங்களின் ஆதரவுடன் புகழைத் தக்கவைத்ததோடு ஆன்மிகத்துறையில் உச்சநிலையை எய்திவிட்டார்.

ஜக்கி ஆங்கில அறிவு படைத்தவர் மட்டுமல்ல, மக்களின் மனங்களைப் படிப்பதில் அதிபுத்திசாலியும்கூட!
=============================================================================