ஞாயிறு, 8 ஏப்ரல், 2018

தமிழ்நாட்டு அமைச்சர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள்!

''அமைச்சர்களே, உங்களின் சுகபோக வாழ்க்கை முக்கியமா, தமிழனின் தன்மானமா? எது? எது? எது? இன்றே, இக்கணமே முடிவு செய்யுங்கள்.''
'சொடக்கு'ப் போடும் நேரத்தில், ஒருவரின் பேச்சை அல்லது எழுத்தை மொழியாக்கம் செய்வதற்கான கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்ட இன்றைய அறிவியல் யுகத்தில், பிடிவாதமாக, மாநில மொழிகளை ஆட்சிமொழிகளாக ஆக்க மறுத்து, இந்தியே 'இந்தி'யாவின் தேசிய மொழி என்று சொல்லி அதைத் திணித்துக்கொண்டிருக்கும் மத்திய அரசு, சமற்கிருதத்தைத் திணித்தது; 'நீட்'டைத் திணித்தது. 

காவிரிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சினையில் உச்சநீதிமன்ற ஆணையை அலட்சியம் செய்து நமக்குத் துரோகம் இழைத்தது.

அண்மைக் காலங்களில், கவர்னருக்கான அதிகாரம் என்ற பெயரில் பல்கலைக் கழகங்களுக்கான துணைவேந்தர்களைத் திணித்திருக்கிறது.

தமிழன், ஜாதிமத வேறுபாடுகளைக் களைந்து, தன் முழு பலத்தையும் திரட்டி நடுவணரசை எதிர்த்துப் போராட வேண்டிய தருணம் இது. 

அமைச்சர்களே, நீங்களும் தமிழர்கள்தான். ஆனாலும், ஆட்சியாளர்களாகிய நீங்கள் போராடுவதுபோல் நடிப்பீர்களே தவிர உண்மையில் போராட மாட்டீர்கள். காரணம்.....

உங்களின் உலகறிந்த 'பலவீனம்'. அதைப் புரிந்துகொண்டுதான், உங்களைத் தங்களுக்கான 'சேவகர்கள்' ஆக்கித் தமிழ்நாட்டை ஆண்டுகொண்டிருக்கிறார்கள் 'அவர்கள்'; திணிப்புகளைச் செய்துகொண்டிருக்கிறார்கள். எனவே.....

நெஞ்சு நிறைந்த தமிழ் உணர்வுடன் வேண்டுகிறோம், ஆட்சிக் கட்டிலிலிருந்து இறங்குங்கள்; ஒதுங்கி நில்லுங்கள். நீண்ட நெடும் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்திட நம் மக்கள் தயாராக இருக்கிறார்கள்.

''போராடட்டுமே. அந்தப் போராட்டத்துக்கு நாங்கள் தடையாகவா இருக்கிறோம்?'' என்று கேட்கிறீர்களா?

ஆம். நீங்கள் ஆட்சியிலிருப்பது மிகப் பெரும் தடைதான்.

போராடும் தமிழ் இன உணர்வாளர்களைக் காவல்துறையினரைக் கொண்டு தாக்கி, அவர்களின் உத்வேகத்தைக் குறைக்கிறீர்கள்; ஜாமீனில்கூட வெளிவர இயலாத பிரிவுகளில் வழக்குப் போட்டு உள்ளே தள்ளுகிறீர்கள்.

நாங்கள் பதவி விலகி, கவர்னர் ஆட்சி வந்தால் இதெல்லாம் நடக்காதா என்றெல்லாம் கேள்விகள் கேட்டுக் காலதாமதம் செய்யாதீர்கள். கவர்னர் ஆட்சியின் அடக்குமுறைகளையெல்லாம் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். உங்களின் பரம எதிரிகள் ஆட்சியைக் கைப்பற்றுவார்களே என்றும் கவலைப்படாதீர்கள். இனி தமிழகத்தை யார் ஆளவேண்டும் என்பதையும் அவர்கள் கவனத்தில் கொள்வார்கள்.

மீண்டும்  வேண்டுகிறோம்.....

ஒதுங்கி நில்லுங்கள். தன்மானமுள்ள தமிழர்கள் போராடட்டும்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------









.