அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வெள்ளி, 18 மே, 2018

அன்று 'சாதி நீக்கம்' செய்யப்பட்ட பெரியார்!

1909இல் தம் குடும்பத்தில் நடந்த வெகு சுவாரசியமானதொரு நிகழ்வு பற்றிப் பெரியார் சொன்னது. படியுங்கள்; பகிருங்கள்.
#என் தங்கைக்கு ஒரு பெண் இருந்தது. ஒன்பது வயதிலேயே அதற்குத் திருமணம் செய்துவிட்டார்கள்.

எங்கள் ஜாதியில், கல்யாணம் ஆகி முப்பதாவது நாளில் ஒரு சடங்கு செய்வார்கள்; பலகாரம் பச்சடியெல்லாம் செய்து எல்லோரும் வயிறு முட்டச் சாப்பிடுவார்கள்.

அந்த நாள் பார்த்து ஒரு விபரீதம் நடந்துவிட்டது. மாப்பிள்ளைக்குத் திடீர் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. ஏழுட்டு தடவை போனது. என்ன செய்தும் காப்பாற்ற முடியவில்லை. பிள்ளையாண்டான் போய்ச் சேர்ந்துவிட்டான். அப்போது அவனுக்கு வயது பன்னிரண்டுதான்.

கொஞ்சம் வருசங்களுக்குப் பிறகு, அந்தப் பெண் பெரிய மனுஷி ஆகிவிட்டாள். அவளுக்கு இரண்டாம் திருமணம் செய்வதென்று முடிவெடுத்தேன்; யாருக்கும் தெரியாமல் மாப்பிள்ளை பார்த்தேன்.

சிதம்பரத்தில் ஒரு நாயுடு இன்ஸ்பெக்டர் இருந்தார்; மிகவும் வேண்டியவர். என் மைத்துனர், ஒரு நம்பிக்கையுள்ள அம்மை, மாப்பிள்ளைப் பையன், தங்கை மகள் என்று நால்வரை மட்டும் சிதம்பரம் ஆருத்ரா தரிசனம் பார்க்கப்போவதாகப் பிறரிடம் பொய் சொல்லி இன்ஸ்பெக்டரிடம் அனுப்பிவைத்தேன்.

அவர், பல பெரிய மனிதர்களின் ஆதரவோடு திருமணத்தைச் சிறப்பாகச் செய்து முடித்தார்.

இரண்டு நாட்களில் விசயம் வெளியே தெரிந்தது. என் அப்பா, அவமானம் நேர்ந்துவிட்டதே என்று அழாத குறையாகத் தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டார். எங்கள் அம்மாவோ தூக்கில் தொங்க முயற்சி பண்ண, காப்பாற்றிவிட்டோம்.

என் ஜாதிக்காரர்கள் பலரும் கூடி, எங்களின் மூன்று குடும்பத்தாரை ஜாதி நீக்கம் செய்துவிட்டார்கள். நான் கவலைப்படவில்லை.

பிறகு, சேர்மன் தேர்தல் வந்தது. போட்டியிட்டு ஜெயித்தேன்.

மற்ற சமூகத்தார் பலரும் என்னைப் பார்த்துச் சீர் செய்தார்கள். அப்புறம்தான் அந்த எதிர்பாராத சம்பவமும் நடந்தது.

''யார் யாரோ சீர் கொண்டுபோய்ப் பார்க்கிறார்கள். நம்ம ஜாதிக்காரன் சேர்மனா வந்திருக்கான். நாம் சும்மா இருப்பதா?'' என்று என் ஜாதிக்காரர்களில் ஒருவர் சொல்ல, மற்றவர்களும் ஆமோதிக்க, மேளம் வைத்துக்கொண்டு ஏழெட்டு ரூபாயில் வேட்டியும் எடுத்துக்கொண்டு என்னை வந்து பார்த்தார்கள்.

முன்கூட்டியே அவர்கள் வருவதாகத் தகவல் வந்ததால், ஒரு அண்டா நிறையக் காபி வைத்துக்கொண்டு காத்திருந்த நாகம்மையார், டம்ளர்களில் காப்பி ஊற்றிக் கொடுக்க, முதலில் தயங்கிய ஜாதிக்காரர்கள் அப்புறம் குடிக்க ஆரம்பித்தார்கள். ஒரு அண்டா காப்பியும் காலியானது.....#
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இவ்வுரை, 31.03.1959இல், குற்றாலத்தில் பெரியார் ஆற்றிய சொற்பொழிவில் இடம்பெற்றது.

நண்பர், முனைவர் அ.ஆறுமுகம்[திருமழபாடி] அவர்களுக்கு நன்றி.


4 கருத்துகள்:

  1. சம்பவம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரியாரின் ஒட்டுமொத்த வாழ்க்கையே சுவாரஸ்யமானதுதானே!

      நன்றி கில்லர்ஜி

      நீக்கு
  2. நினைத்ததை நடத்தி முடிப்பவர். அவர் தான் பெரியார்....

    பதிலளிநீக்கு