தேடல்!


May 27, 2011

பக்தர்களுக்குப் பத்து கேள்விகள்

27-05-2011


                                          பக்தர்களுக்குப் பத்து கேள்விகள்


1]கடவுள் இருப்பதாகப் பிறர் சொல்லி நம்புகிற நீங்கள், அவர் தோன்றியது ஏன்? 
எப்படி? எப்போது என்றெல்லாம் நீங்களாகவே கேள்விகள் கேட்டு, உங்கள் சுய அறிவால் விடை தேட முயன்றது உண்டா?


2] நீங்கள் நம்புகிற கடவுளின் படைப்பில், ’உயிர்களுக்கு நன்மைகள் அதிகமா, தீமைகள் அதிகமா?’ என்பது பற்றிச் சிந்தித்துப் பட்டியலிட்டுப் பார்த்ததுண்டா?


3] ’நாம் பாவம் செய்தோம். கடவுளால் தண்டிக்கப் படுகிறோம்’ என்று 
உணருகிற அறிவு வாய்த்த பிறகு,  குற்றம் புரிந்தவர் அல்லது பாவம் செய்தவர் தண்டிக்கப் பட்டால் பரவாயில்லை. அறிவு வளர்ச்சி பெறாத நிலையில், ஏதும் அறியாத ஒரு குழந்தை அல்லது குழந்தை மனம் கொண்டவர்கள், அவர்கள் செய்த குற்றத்திற்காக [கடந்த பிறவிகளில்] கடவுளால் தண்டிக்கப் படுவது [உதாரணம்: துடிதுடித்து அலறிக் கதறி, அழுது, விவரிப்புக்கு அப்பாற்பட்ட வேதனைக்குள்ளாகிட, கயவர்களால் சிறுமி ஒருத்தி கற்பழித்துக் கொல்லப்படுதல்] என்ன நியாயம்?


இத்தகைய சிறுமைச் செயல்கள் புரிவது ஏன் என்று உங்கள் கடவுளிடம் நீங்கள்
கேட்டதுண்டா?


4]மனிதர்களிலேயே சிலரைக் கடவுளின் அவதாரம் என்கிறீர்கள். அவர்களின்
சிறு நீர் இனிக்குமா? அவர்கள் வெளியேற்றும் மலம் மணக்குமா? அழுக்குத் தேய்த்துக் குளிக்காவிட்டால் அவர்களின் திருமேனி சந்தணம் போல் கமகமக்குமா? அவர்கள் செத்தாலும் உடம்பு அழுகி நாறி, புழுக்கள் தின்றது போக மிச்சம் மீதி மண்ணோடு மண் ஆகிறது. எரித்தால் சாம்பல் ஆகிறது.

உண்மை இதுவாக இருக்க, அவர்கள் கடவுளின் அவதாரம் ஆனது எவ்வாறு?


5] கடவுள் உங்கள் முன்பு, உங்களுக்கு அறிவிக்காமல் தோன்றப் போவதாக வைத்துக் கொள்ளுங்கள். அவர், தான் விரும்பிய ஒரு மனிதனின் உருவிலோ விலங்கின் உருவிலோ உங்கள் முன்பு காட்சியளித்து, ”நான்தான் கடவுள்” என்று சொன்னால் அவரை நம்புவீர்களா?  எந்த உருவில் வந்தால், எப்படியான குரலில் பேசினால் உங்களை நம்ப வைக்க முடியும்?

6] கடவுளுக்குக் கோயில் கட்டுகிறீர்கள்; விழாக்கள் எடுக்கிறீர்கள். விதம் விதமாய்த் துதி பாடுகிறீர்கள். கடவுளும் மனிதனைப் போல புகழ்ச்சிக்கு மயங்குகிற சாதாரண ஆள்தானா?

 “அவரைப் புகழ்வது எங்கள் மனதைச் சுத்தப்படுத்த” என்று நீங்கள் சமாளிக்கிறீர்களா?

நாம் கேட்கிறோம். பிற உயிர்களின் துன்பம் கண்டு கலங்கினால் மட்டுமே மனம் தூய்மை பெறும் என்பதே உண்மை.அவ்வாறிருக்கையில், கடவுளைப் புகழ்வதால் மனம் தூய்மை அடையும் என்கிறீர்களே, இது அடுக்குமா? நம் மனதைத் திருத்தும் முயற்சியில் நாம் முழு ஈடுபாடு காட்டாமல், கடவுளை வேண்டி, அவர் உத்தரவு போட்டால்தான் நாம் திருந்துவோமா?! யார் காதில் பூ சுற்றுகிறீர்கள்?

7] உங்கள் துதி கடவுளை மகிழ்விக்கிறது; உங்கள் வேண்டுகோள் அவரைச் சென்று சேர்கிறது என்பதை நீங்கள் எப்படி நம்புகிறீர்கள்? உங்களை நம்ப வைத்தவரின் உள்நோக்கம் என்ன என்று ஆராய்ந்ததுண்டா?

8] கடவுளுக்கு நீங்கள் செலுத்தும் காணிக்கைகள், படையல்கள் எல்லாம் சில மனிதர்கள் [பலர் ஏமாற்றுக்காரர்கள்] வசம் சேர்கின்றன என்பது அப்பட்டமாகத் தெரிந்தும் தொடர்ந்து ஏமாறுகிறீர்களே, கடவுளின் பெயரால் ஏமாற்றப் படுவதைப் பெருமையாகக் கருதுகிறீர்களா?

9] கடவுள் இந்த மண்ணுலகில் உங்களைத் தோன்றச் செய்ததற்காக அவருக்கு
நன்றி சொல்கிறீர்கள். அதே கடவுள்தான் உங்களுக்குக் கணக்கற்ற துன்பங்களையும் வாரி வழங்கியிருக்கிறார். [இதெல்லாம் தீய சக்தியின் வேலை என்று கதை விடாதீர்கள். தீய சக்தியைக் கடவுள் ஏன் அழிக்கவில்லை என்ற கேள்விக்கு இன்னும் பதில் இல்லை] அதே கடவுள்தான் உங்களை மரணமடையச் செய்கிறார். அந்த மரணம் பற்றிய நினைப்புதான் உங்களைச் செத்துச் செத்துப் பிழைக்க வைக்கிறது என்பதை அறியாதவரா நீங்கள்?. அறிந்தும் அவருக்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே? இது அடிமுட்டாள்தனம் என்பதை எப்போது புரிந்து கொள்ளப் போகிறீர்கள்?


10] உங்களிடம் கேள்விகள் கேட்டுச் சிந்திக்கத் தூண்டிய எம்மை மனதாரப் பாராட்டுவீர்களா? இல்லை.............


“அடே நாத்திகா, நீ நரகத்துக்குத்தான் போவாய்” என்று சாபம் கொடுப்பீர்களா? 


********************************************************************************