Jun 6, 2011

தலை விதியும் தடுமாறும் மனித அறிவும்


                               தலை விதியும் தடுமாறும் மனித அறிவும்      


கடவுளை நம்பியதால் மனித குலத்துக்கு உண்டான தீமைகளில் 
மூடநம்பிக்கையும் ஒன்று.


மனிதனின் அறிவு வளர்ச்சிக்குத் தடையாக இருந்த பல மூட நம்பிக்கைகளில்
தலையாயது ‘விதி’யை நம்புவது.

விதிக்கப்பட்டது விதி.

ஒட்டு மொத்த பிரபஞ்சத்தின் உள்ளடக்கமான அத்தனை கோள்களும்
உயிர்களும் பிறவும் இப்படித்தான் இயங்க வேண்டும்; அவற்றின் இயக்கங்களால் இன்னின்ன மாறுதல்கள் நிகழ வேண்டும் என கட்டளையிடப்பட்டது.....நிர்ண யிக்கப் பட்டது.....கட்டுப்படுத்தப் பட்டதற்குப் பெயர்தான் விதியா?

விதித்தது யார்?

வேறு யார்?.....கடவுள்தானே?

விதி!

இது ஏன்? எதற்கு?

கடவுள் என்ன நோக்கத்தில்.....எந்த ஆசையில்[?] இந்தப் பிரபஞ்சத்தைப்
[அடிக்கடி இந்தச் சொல் வருகிறதே என சலிப்புற வேண்டாம். வேறு வழியில்லை] படைத்தாரோ அந்த நோக்கம் ......அந்த ஆசை நிறைவேறுவதற்காக ‘விதி’யை உருவாக்கினாரா?

பிரபஞ்சம் விரிவது; சுருங்குவது; கோள்கள் சுழல்வது; உயிர்கள் தோன்றி வாழ்ந்து; அழிவது என ’வெளி’யில் இடம் பெறும் அத்தனை நிகழ்வுகளுக்கும்
இந்த விதியே காரணம் என்கிறார்கள்.

கோள்கள் ஒன்றோடொன்று மோதிக் கொள்வது; உடைந்து சிதறுவது; எரி மலைகள் வெடிப்பது; நிலம் நடுங்குவது; கடல் பொங்குவது........என எல்லாமே
விதிப்படிதான் என்றாகிறது.


ஒட்டு மொத்த பிரபஞ்சத்துக்கும் ஒரே விதியா?இல்லை.........................
கோள்களுக்குத் தனி. பிற உயிர்களுக்குத்தனி. மனிதர்களுக்குத் தனி.  வெட்ட வெளியில் அலையும் ஆவிகளுக்குத் தனி. பேய்களுக்குத் தனி..............................
என்றிப்படி, ஒவ்வொன்றுக்கும் தனித்தனி விதியா?

ஒவ்வொன்றுக்குள்ளேயும் உட்பிரிவு விதிகள் உண்டுதானே?

பஞ்ச பூதங்களில் நிலம், நீர், காற்று, நெருப்பு, வெளி என ஒவ்வொன்றுக்கும்
தனித் தனி விதி இருக்கும்தானே?

காற்று என்று கொண்டால்,தென்றல்,வாடை ,சூறாவளி என்று பல வகை உண்டே, ஒவ்வொன்றுக்கும் ஒரு விதியா?

ஒவ்வொன்றும் எத்திசையில், எவ்வளவு வேகத்தில் வீசவேண்டும் என்பதற்குக் கூட விதிகள் இருந்தாக வேண்டும்.

இந்த மண்ணில் மட்டும் எத்தனை கோடி கோடி உயிர்கள்!

அத்தனைக்கும் வேறு வேறு விதிகள் இருந்தாக வேண்டும்.

நாம் நிற்பது; நடப்பது; கை அசைப்பது; கால் நீட்டுவது;  மூச்சு விடுவது; வளைவது; நெளிவது; கண் இமை திறப்பது; மூடுவது; தலைமுடி உதிர்வது...............இப்படி ,அனைத்து இயக்கங்களுமே விதிப்படிதானா?

கடவுளைக் கற்பித்தவர்கள்...விதியை நம்புகிறவர்கள் நம்முடைய இந்தக் கேள்விகளுக்குப் பதில் தருவார்களா?

 வாழ்வில் இடம்பெறும் அத்தனை நல்லது கெட்டதற்கும் இந்த விதியே காரணம் என்கிறார்கள்.

எத்தனை நில நடுக்கங்கள்! எத்தனை எரிமலைக் குமுறல்கள்! எத்தனை எத்தனை சுனாமிகள்! இவற்றால் ஏற்பட்ட உயிர்ப்பலிகளுக்குக் கணக்குண்டா?
அனுபவித்த துன்பங்களுக்கு வரம்புண்டா?


கடவுள் அன்பு வடிவானவர்; பேரருளாளன்; நற்குணங்களின் உறைவிடம். அவரா இப்படியொரு பொல்லாத விதியை உருவாக்கினார்?

யாரிடம் முறையிடுவது?

அறிவு கெட்ட மனிதர்கள் அவரிடமே முறையிடுகிறார்கள்!

இயற்கையின் சீற்றங்களால் பேரழிவுகள் நிகழும்போதெல்லாம் உலகம் முழுதும் திரள் திரளாகக் கூடி நின்று ‘கூட்டுப் பிரார்த்தனை செய்கிறார்கள்!

இவர்களின் பிரார்த்தனைக்குச் செவி சாய்த்து, கடவுள் ஒரு முறையாவது கண் திறந்திருக்கிறாரா? கருணை மழை பொழிந்திருக்கிறாரா?

தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.

**********************************************************************************
                                           இன்னும் கேட்போம்
**********************************************************************************