Dec 7, 2011

கேள்விகள் [சிறுகதை]

முனைவர் பரமசிவம் படைத்து வழங்கும்.....

                                       உணர்தல். [சிறுகதை]

லட்சோப லட்ச மக்களால் ‘கடவுள் அவதாரம் ‘ என்று போற்றப்படும் அந்த ‘மகான்’ அலங்கரிக்கப் பட்ட’அரியணை’யில் அமர்ந்திருந்தார்.

அவரைச் சுற்றி ‘அரண்’ அமைத்தது போல அவரின் சீடர்கள்.

மகானிடம் ‘அருளாசி’ பெறக் காத்திருந்த மக்கள் வெள்ளம், அரங்கில் நிரம்பி வழிந்தது.

மகான் இன்னும் திருவாய் மலர்ந்தருளவில்லை; அவர் யாருடைய வரவையோ எதிர்பார்த்துக் காத்திருப்பது போல் தெரிந்தது.

மக்கள் வெள்ளத்தை ஊடுருவிக் கொண்டு ஒரு ‘மனிதன்’ அவர் எதிரே வந்து நின்றான். பல நாள் காத்திருந்து, சிறப்பு அனுமதி பெற்று அவரைச் சந்திக்க வந்திருந்தான். ‘இவன் படித்தவன்’ என்று சொல்லத் தக்க தோற்றம் கொண்டவன். ஒரு முறை மகானின் முன்னே நெடுஞ்சாண்கிடையாக விழுந்து எழுந்தான்.

“மகானே, எனக்குள் சில சந்தேகங்கள். விளக்கம் பெறலேன்னா பைத்தியம் பிடிச்சுடும் போல இருக்கு” என்றான்.

வதனத்தில் மெல்லிய புன்னகை படர, ”சொல்” என்பது போல லேசாகத் தலையசைத்தார் மகான்.

“தங்களைப் போன்ற மகான்கள் கடவுள் இருப்பதாகச் சொல்கிறார்கள். மக்களும் நம்புகிறார்கள். ஏனோ என்னால் நம்ப முடியவில்லை. அந்தக் கடவுளை ஒரே ஒரு முறை காட்ட முடியுமா?” என்றான் பணிவான குரலில்.

“கடவுளைப் பார்க்க முடியாது; ஐம்புலன்களால் அறியவும் முடியாது. உணர மட்டுமே முடியும். அதற்கு மனம் பக்குவப்பட வேண்டும்”

“ஒவ்வொரு உடம்புக்குள்ளேயும் ஆன்மான்னு ஒன்னு நுழைஞ்சிட்டு, உடம்பு அழியும் போது வெளியேறுவதா சொல்றாங்களே, அந்த ஆன்மாவையாவது பார்க்க முடியுமா?”

“முடியாது; உணரத்தான் முடியும்”

“கடவுள் ஒவ்வொரு அணுவிலும் ஊடுருவியிருப்பதாகத் தங்களைப் போன்ற ஞானிகள் சொல்றாங்க. என்னுடைய உடம்பிலும் கடவுள் இருப்பார்தானே? அவரைத் தெரிந்து கொள்வதற்கான வழிவகைகளை விளக்கிச் சொல்லுங்கள் மகானே.”

“வழி வகைகள் என்று ஏதும் இல்லை. அவரைச் சோதிப்பது பாவ காரியம். கடவுள் உன்னுள் இருப்பதை உணரத்தான் முடியும்.”

“நன்றி மகானே” என்று அவரைத் தலை தாழ்த்தி வணங்கிவிட்டுக் கேட்டான் அந்த மானுடன், “தங்களைக் கடவுளின் அவதாரம் என்கிறார்கள். அதற்குண்டான ஆதாரத்தைத் தாங்கள் கூறி அருள வேண்டும்.”

மகானின் முகத்தில் சிறிதே சினம் தோன்றி மறைந்தது.

“ எம்மிடம் ஆதாரம் கேட்பது அபவாதம். நாம் அவதாரம் என்பதை உணர மட்டுமே முடியும். உணர முயற்சி செய். ஒரு நாள் அது சாத்தியப்படும்”

”பாவம் புண்ணியம், சொர்க்கம் நரகம், மறு பிறப்பு என்று இப்படி ஏதேதோ சொல்றாங்க. என்னால் நம்ப முடியல. நம்பிக்கை பிறக்க நான் என்ன செய்யணும்? தாங்கள்தான் வழி காட்டணும்.”

சில கணங்கள் மவுனத்தில் ஆழ்ந்த மகான் சொன்னார்: “முதலில் கடவுள் இருப்பதை உணர முயற்சி செய். கடவுள் இருப்பதை உணர்ந்தால்... நம்பினால், இவற்றையும் உணர முடியும்; நம்ப முடியும்”

“ஆகட்டும்” என்பது போல் தலையசைத்த மனிதன், “கடைசியாக ஒரு கேள்வி ஐயனே. கடவுளை உணரத்தான் முடியும் என்று சொல்கிறீர்கள். தங்களால் பிறருக்கு உணர்த்தவே முடியாதா?”

“முடியாது”.

“தாங்கள் உணர்ந்திருக்கிறீர்களா?”

“உணர்ந்திருக்கிறேன்.”

“தாங்கள் உணர்ந்ததைப் பிறர் உணரும்படியாக விளக்கிச் சொல்வது சாத்தியமே இல்லைதானே?”

“சாத்தியமில்லை.”

“தாங்கள் உணர்ந்ததாகச் சொல்லும் கடவுளைப் பிறருக்கு எவ்வகையிலும் உணர்த்த முடியாத போது, கடவுளை நம்பும்படி மக்களை வற்புறுத்துவது எந்த வகையில் நியாயம் ஐயனே?”

மகானின் வதனம் சிவந்தது. உதடுகள் துடித்தன. ”நம்பினால் உனக்கு நற்கதி உண்டு. நம்பாவிட்டால் நரகத்தில் கிடந்து உழல்வாய். போய் வா” என்ரார்.

“போகிறேன். மீண்டும் தங்களிடம் வரமாட்டேன்.என்னை மதித்து என்னோடு உரையாடியதற்கு நன்றி மகானே” என்று சொல்லி விடை பெற்றான் அந்த மனிதன்.

========================================================================