தேடல்!


Feb 26, 2012

கடவுள் கண்ணுச்சாமி
                கடவுள் கண்ணுச்சாமி [சிறுகதை]

கண்ணுச்சாமி ரொம்பவும் இளகிய மனசுக்காரன்.

காலை நேரத்தில், வழக்கம்போல வேலைக்குப் போய்க் கொண்டிருந்தபோது, அவனுக்கு முன்னால் போய்க் கொண்டிருந்த எழுபது வயது மதிக்கத் தக்க ஒரு முதியவர் மயங்கி விழுந்ததைப் பார்த்தான்.

யாரும் உதவ முன்வராத நிலையில், ஆட்டோ பிடித்து அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தான்.

நீண்ட நேரக் காத்திருப்புக்குப் பிறகு, சிகிச்சை தரப்பட்ட அவரைப் பார்க்க அவன் அனுமதிக்கப் பட்டான்.

முதியவருக்குச் சுயநினைவு திரும்பியிருந்தது.

அவரை நெருங்கி, “நல்லா இருக்கியா பெரியவரே?” என்று குரலில் கனிவு பொங்கக் கேட்டான் கண்ணுச்சாமி.

அவனை உற்றுப் பார்த்த அவர், “நல்லா இருக்கேன்பா. நீ.....நீதான் என்னை இங்கே கொண்டுவந்து சேர்த்தியா?” என்றார்.

“ஆமா. நடைபாதையில் மயங்கி விழுந்துட்டே. உன்கிட்டே செல்ஃபோன் இல்ல. ஒரு அடையாள அட்டைகூட இல்ல. உன் குடும்பத்தார்க்குத் தகவல் தர முடியல. உனக்கு மயக்கம் தெளியட்டும்னு காத்திருந்தேன்” என்றான்.

“நீ கடவுள் மாதிரி வந்து என்னைக் காப்பாத்தினே. நீ நல்லா இருக்கணும்ப்பா”. குரல் தழுதழுக்கச் சொன்னார் முதியவர்.

“பெரியவரே, நான் கடவுள் மாதிரியெல்லாம் வரல. சாதாரண மனுசனாத்தான் வந்தேன். நான் ஒரு கட்டட மேஸ்திரிகிட்ட சித்தாளா வேலை செய்யுறவன்.
உனக்கு உதவி பண்ணினதில் இன்னிக்கி வேலை கெட்டுது. இருந்த அம்பது ரூபாயை ஆட்டோவுக்குக் கொடுத்துட்டேன். வெறும் கையோட வீட்டுக்குப் போனா, ராத்திரிக்கு அடுப்பு எரியாது. உனக்கு உதவுறதுக்காக என்னை அனுப்பி வெச்ச கடவுள் என் குடும்பத்துக்கு ஒரு வேளைச் சோத்துக்கு வழி
பண்ணுவாரா என்ன?” என்று கேட்டுச் சிரித்தான் கண்ணுச்சாமி.

"எனக்கு ஒரே புள்ள. ஒன்னுக்கும் உபயோகம் இல்லாத இந்தக் கிழவனை வீட்டோட இருக்க வெச்சி ஒரு வேளைச் சோறு போடுறான். நெனப்பு வந்தா அஞ்சோ பத்தோ தருவான்.” என்று சொல்லிவிட்டு, சட்டைப் பையைத் துழாவிய முதியவர் கொஞ்சம் சில்லரையை எடுத்துக் காட்டினார்.

அதில் ஒரு ரூபாயை மட்டும் எடுத்துக் கொண்ட கண்ணுச்சாமி, “காயின் ஃபோனில் உன் மகனுக்குத் தகவல் தந்துட்டுப் போறேன். நம்பர் சொல்லு” என்றான்.

#################################################################################