தேடல்!


Jun 14, 2012

தாழ்த்தப்பட்ட கடவுள்.

இது ‘குமுதம்’ இதழில் வெளியானது.

                             தாழ்த்தப்பட்ட கடவுள்! [ சிறுகதை]

“மேஸ்திரி, நாளைக்கு என் குடும்பத்தோட எங்க குல தெய்வம் கோயிலுக்குப் போறேன். வேலைக்கு வர முடியாது. என்றான் சித்தாள் பழனி.

“நாளைக்கு நிறைய ஆள் வேணும். ஞாயிற்றுக் கிழமை போப்பா” என்றார் மேஸ்திரி.

“இல்ல மேஸ்திரி. ஆறு மாசம் முந்தியே சாமியை நேர்ந்துட்டேன். அதுக்கான நேர்த்திக் கடனை உடனே நிறைவேத்தியாகணும். நாளைக்கு நல்ல நாள்”.

“அப்படியென்ன பெரிய நேர்த்திக் கடன்!? உண்டியலில் கத்தை கத்தையா பணம் போடப் போறியா? இல்ல, ஆயிரம் ஏழைகளுக்கு அன்னதானம் செய்யப் போறியா?”. மேஸ்திரியின் குரலில் ஏகத்துக்குக் கிண்டல்.

“அதுக்கெல்லாம் எங்கமாதிரி அன்னாடுங்காச்சிகளுக்கு ஏதுங்க வசதி?”

“வேறென்ன, உன் குடும்பத்தில் உள்ள அத்தனை பேரும் மொட்டை போடப் போறீங்களா? இதுக்குச் செலவு கம்மிதான்”- மீண்டும் கிண்டல்.

“எங்க குல தெய்வம் சாமியும் எங்கள மாதிரியே பரம ஏழை மேஸ்திரி. வசதியுள்ள யாரும் இதைச் சீந்துறதில்ல. கோயிலுக்கு வருமானமும் இல்ல. கோயிலைச் சுத்தி எருக்கஞ் செடியும் முள்ளுச் செடியும் முளைச்சிப் புதர் மண்டிக் கிடக்குது. அதையெல்லாம் புடுங்கிப் போட்டுச் சுத்தம் பண்ணனும்” என்றான் பழனி.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இது என் படைப்பாக, 28-05-2008 ‘குமுதம்’ வார இதழில் வெளியானது.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++