தேடல்!


Aug 11, 2012

கவியரசு கண்ணதாசன் சாகவில்லை!!!

       கவியரசு கண்ணதாசன் சாகவில்லை!!!

கடவுள் நம்பிக்கை மற்றும் அது சார்ந்த மூட நம்பிக்கைகள் பற்றிய ஆய்வுரைகள் மட்டுமே இடம் பெறுகிற என் பதிவுகளில், பெயர் குறிப்பிட்டு, ஒரு மதத்தையோ மதவாதியையோ தனி மனிதரையோ விமர்சனம் செய்ததில்லை.

இன்று மட்டும் விதிவிலக்காக ஒரு பதிவு.

இது இம்மண்ணில் வாழ்ந்து மறைந்த கவிஞர் கண்ணதாசன் பற்றியது.

‘அர்த்தமுள்ள இந்துமதம்’ அவர் படைத்த, பல்லாயிரக் கணக்கில் விற்பனையான ஒரு நூல். ’தினத்தந்தி’  நாளிதழ் அதைத் தொடராக வெளியிட்டு வருகிறது [சனிதோறும்].

இன்று வெளியான ’நாத்திகவாதம்’ என்னும் தலைப்பிலான பகுதியை மீண்டும் படிக்க நேர்ந்தது.

அதன் விளைவாக என் மனதில் முகிழ்த்த சில எண்ணங்களை உங்களுடன்  பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமே இப்பதிவை எழுதக் காரணம்.

‘கடவுள் இல்லை என்று மறுப்பவன் காலகாலங்களுக்கு உயிரோடு இருப்பானானால், ‘இல்லை’ [கடவுள் இல்லை] என்ற எண்ணத்தையே நான் இன்றும் கொண்டிருப்பேன்’ என்று கட்டுரையின் தொடக்க நிலையிலேயே குறிப்பிட்டிருக்கிறார் கவிஞர்.

அவரின் இந்தக் கூற்றுக்கு விளக்கம் தேவையில்லை.

‘அனைவரும் [நாத்திகர்கள்] பெறவேண்டிய தண்டனையைப் பெற்றுப் போய்ச் சேர்ந்துவிட்டார்கள்’ என்கிறார்.

என்ன தண்டனை பெற்றார்கள் என்பதை அவர் விளக்கவில்லை. போகட்டும்.

நாத்திக வாதம் பேசியவர்கள் போய்விட்டார்கள். ஆத்திகர்கள்?

’கடவுள் உண்டு’ என்று சொன்ன ஆத்திகர்கள் எவரும் ‘போகவில்லை’ என்றுதானே இதற்குப் பொருள்?

அந்த உத்தமர்கள் எல்லாம் இந்த உலகில் எங்கெல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாது. இன்னும் சாகாமல் நம்மில் ஒருவராய் மறைந்து வாழ்ந்து கொண்டிருக்கிற கவிஞர், நம்முன் தோன்றி, அந்தப் புண்ணியவான்களையெல்லாம் கண்ணாரக் காணச் செய்து நம் எல்லோரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துவாரா?

எப்போது?

‘மேற்கத்திய நாடுகளில்,கிறித்துவத்திற்கு எதிராக நாத்திகர்கள் தோன்றினார்கள். அவர்களை எதிர்த்துக் கிறித்துவ மதம் போர் புரிந்தது. இஸ்லாத்தை எதிர்த்து நாத்திகம் தோன்றவே முடியாதபடி அது பயங்கர ஆயுதத்தோடு நிற்கிறது [இஸ்லாமியர்கள் இதை ஏற்கிறார்களா?] என்கிறார்.

மேலும் சொல்கிறார்: ‘இந்து மதத்தில் நாத்திகம் தோன்றுவது சுலபம். காரணம், அது சாத்விக மதம்’.

பல்லவர் காலத்தில், ஆயிரக் கணக்கில் சமண மதத்தவரை கழுவில் ஏற்றிக் கொன்றது இந்துமதம்தானே என்ற உண்மையை, எங்கோ வாழ்ந்து கொண்டிருக்கிற கவிஞரைக் கண்டு பிடித்து யாரேனும் எடுத்துச் சொல்வார்களா? [இந்தப் புண்ணிய தேசத்தில், அண்மைக்காலத்தில் இடம்பெற்ற அசம்பாவிதங்களை இப்போது நினைவுகூர வேண்டாம். இந்து மதத்திற்கு எதிரான பதிவு இது என்று தயவு செய்து நினைக்க வேண்டாம்]

நாத்திகத்தின் முக்கிய நோக்கமே கடவுள் மறுப்புதான் என்ற உண்மையையும் அவர்கள் அவரிடம் கூறுவார்களா? 

ஏற்கனவே நாத்திகர்கள் எல்லாம் போய்ச் சேர்ந்துவிட்டார்கள் என்று சொல்கிற கவிஞர், நாத்திகத்தில் போற்றத் தக்க புத்தகம் இல்லை என்றும் சாதிக்கிறார்..

’போற்றத்தக்க’ புத்தகம்தான் இல்லை என்கிறாரா, இல்லை, நாத்திகம் பற்றிப் ‘புத்தகமே இல்லை’ என்கிறாரா? அவரைக் காணக் கொடுத்து வைப்பவர்கள் கேட்டுச் சொல்வார்களா?

இங்கர்சால் போன்றவர்கள் நாத்திக வாதத்தில் உறுதியாக இல்லையாம்.
அது என்ன உறுதியாக இருப்பது? அவர் நாத்திகர் என்பதிலும் கவிஞருக்குச் சந்தேகமா?

கடவுளை உறுதியாக மறுப்பவர்கள் என்று, பெர்னார்டு ஷா, சிக்மண்ட் ஃபிராய்டு, ரஸ்ஸல், நேரு, பெரியார், கோவூர் என்று நிறைய அறிஞர்களைச் சொல்கிறார்களே, அவர்களில் சிலரையாவது இந்த உத்தம சீலருக்குத் தெரியுமா?

நாத்திகனாக இருந்தவரை என்னால் அதிகம் பாட முடியவில்லை என்கிறார்!

ஓ.........கவிஞரே, கவிதை எழுதுவதற்கும் ஆத்திக நாத்திகம் பேசுவதற்கும் என்னய்யா சம்பந்தம்?

ஆத்திகன் மனசு மலர் போல மென்மையானது; கலையுணர்வு மிக்கது. நாத்திகன் மனது கருங்கல் பாறை போன்றது; உணர்ச்சியற்றது என்கிறீரா? நீர்தான் இன்னும் உயிர் வாழ்கிறீரே, நேரில் வந்து சொல்லுமய்யா.

கவிஞர் இன்னும் என்னவெல்லாம் திருவாய் மலர்கிறார் பாருங்கள்..............

‘நாத்திகன் பண்பாடு அறியாதவன்; பவித்திரமில்லாதவன்; யாருடைய பெண்டாட்டியையும் கை வைத்துவிடுவான்’.

‘எதுவும் தாரம்தான் என்று கருதுகிறவன் நாத்திகன்’

இதற்கு மேலும் இந்த ஆள் போதையில் [புகழ் போதை என்று வைத்துக் கொள்ளுங்கள்] கிறுக்கியிருப்பதையெல்லாம் எடுத்துக் காட்டி விமர்சனம் செய்ய என் மனம் இடம் தரவில்லை.

நீங்களே ஒரு முறை படித்துவிடுங்கள்.

படித்து முடித்ததும்.....................

அவரைப் போற்றுவதோ, அவருக்காகப் பரிதாபப் படுவதோ உங்கள் மனப் பக்குவத்தைப் பொறுத்தது.

குறிப்பு: அவசரகதியில், சற்றே உணர்ச்சி வசப்பட்டு எழுதிய பதிவு இது. நிறைவான வடிவமைப்பு இல்லை. குறையோ குற்றங்களோ இருப்பின் பொறுத்துக் கொள்ளுங்கள்.

பொறுமையுடன் படித்ததற்கு நன்றி.

*********************************************************************************