Aug 18, 2012

குயவனும் கடவுளும்

இது சிறுகதையல்ல..........இது சிறுகதை அல்ல..........இது சிறுகதை அல்ல.......

         குயவனும் கடவுளும் [சிந்தனைப் பதிவு]

கடவுள் உண்டென்று சொல்லும் ஆன்மிக அறிஞர்கள் [ வஞ்சப் புகழ்ச்சியல்ல] வழக்கமாக முன்வைக்கும் ஓர் எடுத்துக்காட்டு, ’ஒரு மண்பானை தானாகத் தோன்றாது. அதைப் படைக்க ஒரு குயவன் தேவை. அது போல, உலகங்களையும் உயிர்களையும் பிறவற்றையும் படைக்கக் கடவுள் தேவை’ என்பதாகும்.

ஒரு குயவன், கண்களை மூடித் திறந்தோ, விரித்த உள்ளங்கையை மேலே உயர்த்தியோ[அபயக்கரம் போல] பானையைப் படைத்ததில்லை; களிமண், நீர் போன்ற மூலப் பொருள்களை சேர்த்து, தண்டச் சக்கரம், தட்டுப் பலகை [பானையைத் தட்டிச் சீர்படுத்தும் கருவி] போன்ற துணைக் கருவிகளைக் கொண்டுதான் படைத்தார்; படைக்கிறார். அது போல, கடவுள் தனக்குரிய மூலப் பொருள்களையும் துணைக் கருவிகளையும் எங்கிருந்து அல்லது எவரிடமிருந்து பெற்றார் என்று எம்மைப் போன்றவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு,  உரிய விளக்கம் தரப்படாத நிலையில்................

அவற்றைக் கடவுள் தனக்குள்ளிருந்தே  எடுத்துக் கொண்டிருக்கலாம். அது உண்மை என்றால், உலகில் உள்ள அத்தனை பொருள்களும் கடவுள் தன்மை வாய்ந்தவையே. அது அவ்வாறாயின், கடவுளின் கூறான நம் உடம்பு, ஒரு துன்பம் வரும்போது  கிடந்து துடிக்கிறதே, அது ஏன் என்று  ஐயம் எழுப்பினோம்.

இதற்கான விளக்கத்தையும், கடவுள் இருப்பதை உறுதிப்படுத்த முயலும் அறிஞர்களிடமிருந்து பெற இயலவில்லை.

இந்நிலையில் மீண்டும் ஒரு வினாவை, அவர்கள் முன் வைக்கிறோம். [பிரபஞ்சம், கடவுள் என்று சொல்லிச் சொல்லி வினாக்கள் தொடுப்பதே இந்த ஆளுக்கு வேலையாகப் போய்விட்டது என்று எரிச்சலடையாதீர். ‘சரக்கு’ தீர்ந்துவிட்டதால், கடவுள் தொடர்பான ‘தொடர் பதிவு’களுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க இருக்கிறோம். ‘இதை எப்போதோ செய்திருக்கலாம்’ என்று ஏடாகூடமாக எவரும் பின்னூட்டம் போட்டுவிடாதீர்!!]


குயவன் தனக்குத் தேவையான  துணைக் கருவிகளை அவரே உருவாக்கிக் கொள்ளவில்லை. அவற்றைப் படைத்தளித்தவர்கள் குயவனைப் போன்ற பிற மனிதர்களே.

ஆக, குயவர் பானையைப் படைக்கத் தொடங்குவதற்கு முன்னரே, துணைக் கருவிகளை உருவாக்கும் படைப்புத் தொழில் ஆரம்பம் ஆகிவிட்டது என்பது உண்மை.

இதைப் போலவே, கடவுள் படைப்புத் தொழிலைத் தொடங்குவதற்கு முன்னதாகவே, துணைக் கருவிகளைப் படைக்கும் தொழில் நடைபெற்றிருக்க வேண்டும் {தரப்பட்ட எடுத்துக்காட்டை [குயவனின் பானை படைக்கும் தொழில்] அடிப்படையாகக் கொண்டுதான் இந்த விளக்கங்களைத் தருகிறோம்}

அந்தத் தொழிலைச் செய்தவர்கள் யார்?

கடவுளுக்கு இணையாக, படைக்கும் ஆற்றல் பெற்ற அவர்கள் யார்?

அவர்களும் கடவுள்கள்தானே?

அக் கடவுளர்கள் எத்தனை பேர்?  படைக்கப்படாமல் என்றென்றும் இருந்து கொண்டிருப்பவர்கள் என்பதால் அவர்களையும் போற்றிப் புகழ்ந்து வழிபடலாமா?

நம் கண் முன்னே நடக்கும் சில நிகழ்ச்சிகளை உதாரணம் காட்டி, புலன்களாலோ ஆறாவது அறிவாலோ அறியப்படாத, கடவுள் என்று சொல்லப்படுபவரை நிரூபிக்க முயல்வது எத்தனை தவறு என்பது இப்போது அனைவருக்கும் புரிந்திருக்கும்.

அறியப்பட்ட ஒன்றை ஒப்புமை காட்டி அறியப்படாத ஒன்றை விளக்கும் போது, அந்த ஒப்புமை முழுமையானதாக [’முழுமையாகஎன்று நாம் குறிப்பிடுவது, மூலப் பொருட்கள், துணைக்கருவிகள், துணை நின்றவர்கள், படைப்புத் தொழிலைச் செய்தவர் என்று ஒரு படைப்புக்குக் காரணமான அனைத்தையும்...அனைவரையும் உள்ளடக்கியது] இருத்தல் அவசியம்.

போகிற போக்கில், “பானையைப் படைக்க ஒரு குயவன் தேவை. அது போல், உலகத்தைப் படைக்கக் கடவுள் தேவை” என்று சொல்லிச் செல்வது ஏற்கத்தக்க விவாத முறையல்ல.

ஏற்புடைய பதில் தருவதைத் தவிர்த்து..............................

“உன்னுடைய அறிவைக் கொண்டு, கடவுள் இல்லை என்பதை நிரூபித்துக் காட்டேன்” என்று எவராயினும் சவால் விடக்கூடும்

எம்மைப் பொருத்தவரை, ”கடவுள் இல்லை” என்று சொல்வதைத் தவிர்த்து, கடவுளானவர் அடிப்படை ஆதாரங்களுடன் நிரூபிக்கப் படவில்லை என்றுதான் அழுத்தம் திருத்தமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

”கடவுளை விமர்சனம் செய்வதற்கு, அவரினும் மேலான அறிவு படைத்தவர்க்கே தகுதி உண்டு” என்று வாதம் புரிபவர்கள் இருக்கிறார்கள்.

அவர்களுக்கு நாம் தரும் பதில்........................

“முதலில் கடவுள் இருக்கிறார் என்பதை நிரூபியுங்கள். அதன்பிறகு, ஒரு போதும் அவர் குறித்து நாங்கள் வாய் திறக்க மாட்டோம்” என்பதுதான்.

தன்னளவில் ஒருவர் கடவுளை நம்பினால் அதைக் குற்றம் சாட்ட எமக்கோ பிறருக்கோ உரிமையில்லை. அதே அவர், பொது மக்கள் மனங்களில் தன் நம்பிக்கையைத் திணிக்க முயலும்போது, அதில் குறுக்கிட எல்லோருக்கும் உரிமை உண்டு.

கடவுளின் ‘இருப்பை' நிலைநாட்ட முயலும் ஆன்மிக அறிஞர்களுக்கு நாம் நினைவுபடுத்துவது......................................

துணைக் கருவிகளை வழங்கிய கடவுளர் எத்தனை பேர்?

நேரிடையான பதில் தேவை.

”நீ நாத்திகன். கடவுள் இல்லை என்று சொல்லித் திரிகிறாய். அப்படிச் சொல்லி என்ன சாதிச்சே? உன் குடும்பத்தில் உள்ளவர்கள் கோவிலுக்குப் போவதில்லையா? ஊருக்கும் உலகத்துக்கும் நீ என்ன செஞ்சி கிழிச்சே?” என்பதான கேள்விகளை முன் வைப்பது விவாதத்தின் போக்கைத் திசை திருப்பும் முயற்சியாகும்

மீண்டும் சொல்கிறோம்.

ஒரே ஒரு கேள்வியைத்தான்  முன் வைத்திருக்கிறோம்.

அறிஞர்களிடமிருந்து எதிர்பார்ப்பது அதற்கான பதிலை மட்டுமே.

இது சவால் அல்ல; வேண்டுகோள் மட்டுமே.

*******************************************************************************

அடுத்த பதிவுப் பொருள் [ நாள் குறிப்பிட இயலவில்லை]...............

//அண்டவெளியில் பெரும் அற்புதங்களை நிகழ்த்துகிற, மனித அறிவைக் காட்டிலும் மேம்பட்ட பேரறிவு வாய்க்கப் பெற்ற அந்த ‘ஏதோ.....’ நீங்கள் நம்புகிற கடவுள் அல்ல//

*******************************************************************************