தேடல்!


Jan 20, 2015

பெருமாள் முருகனுக்கு ஒரு மனம் திறந்த மடல்!

அன்புள்ள பெருமாள் முருகன்,

மாதொருபாகன் சர்ச்சை தொடர்பாக ஓர் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட சூட்டோடு, “அவனை விட்டுவிடுங்கள்” என்று உருக்கமாக ஓர் அறிக்கை வெளியிட்டீர்களே நினைவிருக்கிறதா? உங்கள் வேண்டுகோளை ஏற்று, போராட்டக்காரர்கள் அமைதி காக்கிறார்கள். ஆனால், உங்களை ஆதரிப்பதாகச் சொல்லி, அரசியல்வாதிகளும் சில பிரபல எழுத்தாளர்களும் அறிக்கை மேல் அறிக்கை  விடுகிறார்கள்.

‘தமிழ்நாடு அரசைக் கண்டித்து, டெல்லியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்’ -இது இன்றைய செய்தி.

சமரசக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவினை ரத்து செய்யக் கோரி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவர் தமிழ்ச்செல்வன், உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்.

இவை பற்றிய உங்கள் விருப்பமின்மையை ஊடகங்கள் மூலம் நீங்கள் அறியச் செய்ததாகத் தெரியவில்லை. இக்காரணத்தால், இவர்களின் செயல்பாடுகளை நீங்கள் விரும்புகிறீர்கள் என்றாகிறது.

இந்தவொரு சூழலே இப்பதிவு எழுதக் காரணமாக அமைந்தது

உங்களின் கற்பனைத் திறனுக்கு ஏற்ப மாதொருபாகனில் நீங்கள் காட்சிப்படுத்திய நிகழ்வுகளால் மனம் நோகடிக்கப்பட்ட மக்கள், குறிப்பாகக் கவுண்டச் சாதிக்காரர்கள் நிறைய.

சுய சாதியைப் பற்றி அதிகம் அக்கறை காட்டாதவர்களைக்கூட, ஜாதி மீது அனுதாபம் கொள்ள வைத்திருக்கிறது உங்களின் மிகையான கற்பனைக் கதை.

நீங்கள் திருச்செங்கோட்டை ஒட்டியுள்ள கூட்டப்பள்ளி கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். தி. கோட்டிலிருந்து பத்து மைல் தொலைவிலுள்ள ஒரு குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் நான்.

உங்களைப் போலவே எனக்கும் தி.கோடு டவுனின் சந்துபொந்தெல்லாம் பரிச்சயம்தான்.

நான் சிறுவனாக இருந்தபோதிருந்தே எங்கள் ஒட்டுமொத்த குடும்பமும் தேர்த்திருவிழாவுக்கு[குறிப்பாக நாலாம் திருவிழா] வந்து போவது வழக்கம்.

பழைய நிகழ்வுகளை ஆதாரமாகக் கொண்டு கதை புனைந்ததாக நீங்கள் சொல்லிக்கொண்டாலும் கதையைப் படிக்கும் மேற்கண்ட ஜாதிக்காரர்கள் இவற்றை அண்மைக்காலச் சம்பவங்கள் என்றே நம்புகிறார்கள்.

அந்த நம்பிக்கையின் விளைவாக, அவர்களின் உள்மனதில் வேண்டத்தகாத சில சந்தேகங்கள் முளைக்கும் என்பது நீங்கள் அறியாததல்ல.

நீங்கள் குறிப்பிடும் அந்தச் ‘சாமி குழந்தை’ அவர்களை எப்படியெல்லாமோ யோசிக்க வைக்கும்; விதம் விதமான கற்பனைகளில் மிதக்கச் செய்யும். அவர்களின்  மூதாதையர் பிறப்பு பற்றியே சந்தேகம் கொள்ள வைக்கும்.

நீங்கள் கவுண்டர் ஜாதியையைச் சேர்ந்தவராக இருந்தாலும் உங்களுக்கு இந்தப் பாதிப்புகள் நேர்ந்திருக்காது. ஏனென்றால், இது முழுக்க முழுக்கக் கற்பனையானது என்பது உங்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். மற்றவர்களுக்குத் தெரியாது. அது மட்டுமன்றி, கலப்பு மணம் புரிந்த நீங்கள்[பாராட்டுகள்] ஜாதிப்பற்றே இல்லாதவர் என்பதும் நம்பத்தக்க ஒன்றுதான்.

மிகப் பல ஆண்டுகளாக, இந்தக் கோவிலுக்கு வந்து போன கவுண்டர் ஜாதிக் குடும்பங்களில் எத்தனை எத்தனை ‘சாமி குழந்தைகள்’ இருப்பார்களோ என்று வரலாற்று ரீதியாகப் புள்ளி விவரம்  சேகரிக்கும் பிற ஜாதிக்காரர்கள் முன்னிலையில் கவுண்டனைக் கூனிக் குறுகி நடக்க வைக்கிற தவற்றை நீங்கள் செய்திருக்கிறீர்கள். [எவ்வளவு பெரிய மனிதரும் இதற்கு விதிவிலக்கல்ல. காந்தியே ‘இமாலயத் தவறு’ செய்துவிட்டதாக வருத்தப்பட்டிருக்கிறார்].

என் வாலிப வயதில், ’சந்தை’ மூலம் பிரபலம் ஆன அந்தக் கோயிலைப் பற்றி இப்படியொரு வதந்தி[மலட்டுப் பெண்கள் கண்டவனோடு கூடிக் கர்ப்பம் தரிப்பது] உலவியதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். அது எந்தக் கோயில் என்பது உங்களுக்குத் தெரியும். வெளிப்படையாகச் சொன்னால், இன்னொரு பெரிய பிரச்சினைக்கு அது வழி வகுத்துவிடும்.

உங்கள் கதையில் குறிப்பிடுவதுபோல், மாட்டு வண்டி கட்டிக்கொண்டு எங்கள் கிராமமே திரண்டு போகும். பலதடவை அந்தக் கோயிலுக்குச் சென்றுள்ள என் பார்வையில் குழந்தைக்காக ஆம்பிளை தேடித் திரியும் மலடிகள் தென்பட்டதே இல்லை. தி.கோடு கோயிலிலும் அம்மாதிரிப் பொம்மணாட்டிகளை நான் சந்தித்ததே இல்லை. தொழில் ரீதியாக அலையும் ‘இரவு ராணி’களை மட்டுமே பார்த்திருக்கிறேன்.

அனைத்துச் சாதியாருக்கும் பொதுவாகக் கிளப்பப்பட்ட ஒரு வதந்தியைக் கவுண்டர் ஜாதிக்குரியதாக இட்டுக்கட்டிவிட்டீர்கள். இதை உங்கள் மனசாட்சி அறியும்.

கவுண்டச் சாதியின் பழக்க வழக்கங்களைக் களமாக வைத்தே கதை எழுதிப் பிரபலம் ஆனவர் நீங்கள். கதைதானே என்று எழுதப்போய், உங்களை அறியாமல் அவர்களை இழிவுபடுத்தி விட்டீர்கள்.

இது நம் ஜாதி. இதைப் பற்றி எதையும் எழுதலாம் என்று நினைத்திருப்பீர்கள் போல. பிற ஜாதிக்காரர்கள் செய்யத் தயங்கும் காரியத்தை நீங்கள் துணிந்து செய்துவிட்டீர்கள். அதோடுகூட, கவனப் பிசகாக, இன்னொரு  பெரும் தவற்றையும் செய்துவிட்டீர்கள்.

“இந்த ஊரில் இன்னிக்கி எல்லாரும் தேவடியாதான். நம்மை எவனும் தேடி வரமாட்டான்” என்று விலைமகளிர் சொல்வதாக எழுதியதைத்தான் சொல்கிறேன். இதன் மூலம் அனைத்து ஜாதிக்காரர்களின் எதிர்ப்பையும் சம்பாதித்துக் கொண்டீர்கள்.

முருகன்,

இந்தத் தவறுகளால் விளையவிருந்த தொல்லைகளிலிருந்து  விடுபடுவதற்கு,  நீங்கள் மன்னிப்புக் கேட்டது ஏற்றதொரு நல்ல  வழிதான். இதனால் உண்டான மனக் காயத்துக்குக் காலமே உரிய மருந்தாகும். குறிப்பிட்ட இடைவெளிக்குப் பிறகு, மனம் தேறி எழுத்துப் பயணத்தை உங்களால் தொடர முடியும். மேலும் மேலும் புகழ் ஈட்ட முடியும். இப்படியொரு நம்பிக்கையை நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

அதற்கு மாறாக, எழுத்தாளனின் உரிமை பறிக்கப்படுவதாகச் சொல்லிக்கொண்டு உங்களைக் கொம்பு சீவிவிடும் ஆரவாரக் கும்பலின் பின்னால் நீங்கள் சென்றால்......

அது உங்களுக்கு நன்மையாக அமையலாம்;  தீமையாகவும் முடியலாம். 

மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.                       அன்புடன்,
                                                                                                            ‘பசி’பரமசிவம்.

=============================================================================================

பெருமாள் முருகன் மட்டுமல்லாமல், அவருக்கு ஆதரவுக்கரம் நீட்டுவோரும் அறிந்துகொள்வதற் காகவே இந்தப் பதிவு.

அந்தப் பிரபலங்கள்’ இதைப் படிப்பார்களா என்பது சந்தேகமே. ஏதோ ஒருவகை விருப்பம் காரணமாக இதை வெளியிடுகிறேன்.

============================================================================================