Jan 31, 2015

‘குஷ்பு’ சொன்ன காதல் கதை! [விறு ...விறு... கிளு...கிளு நடையில்!!]

19 ஆண்டுகளுக்கு முன்பு, பிரபல நடிகையும் இன்றைய அரசியல்வாதியுமான குஷ்பு சொல்ல, குமுதம் ஆசிரியர் ‘ப்ரியா கல்யாணராமன்’ 26.10. 1995 மாலைமதியில் எழுதிய தொடர் இது. படு சுவாரசியம்! வாசிக்கத் தவறாதீர்!!


                                                           அனாமிகா

‘நான் சாகப் போகிறேன். என்னுடைய மரணத்திற்கு யாரும் காரணம் அல்ல. உயிருடன் வாழ்ந்து என்ன செய்யப் போகிறேன். நான் நினைத்தது எதுவுமே நடக்கவில்லை. என் எதிர்பார்ப்புகள் கியாஸ் பலூன் போல உயரே பறந்துவிட்டன. இருபது வயதுவரை இந்தப் பெண் வாழ்ந்தால் போதுமென்று இறைவன் நினைத்துவிட்டான் போலிருக்கிறது..........’ இதயத் துடிப்பை எகிற வைக்கும் இப்படியான ஒரு கடித வாசகத்துடன் தொடங்குகிறது கதை.

கடிதத்தை எழுதிக்கொண்டிருந்தவள் பருவக் குமரியான பானு.

சொகுசுக் கட்டிலில் குப்புறப் படுத்தபடி தற்கொலைக் கடிதம் எழுதிக்கொண்டிருந்தாள் அவள். ஆனால், அவள் முகம் முழுக்க சந்தோசமே பரவியிருந்தது. சூழலுக்கேற்ற வருத்தம் கொஞ்சமும் இல்லை.

கடிதம் எழுதுவதை நிறுத்திவிட்டுப் பக்கத்திலிருந்த பாட்டிலையே உற்றுப் பார்த்தாள். அது தூக்க மாத்திரை கொண்ட பாட்டில். இந்த நேரத்திலும் அதன் அழகை ரசித்தாள் பானு.

பாவாடை தாவணியில் இருந்த பானு வெகு அழகாக இருந்தாள். அசப்பில் பானுப்பிரியா போன்ற தோற்றம். மிகப் பெரிய அழகிய கண்கள்.
தன்னை ஒருமுறை பார்த்துக்கொண்டாள். "இன்னும் கொஞ்ச நேரத்தில் என் வாழ்க்கையை முடித்துக்கொள்ளப் போகிறேன். எல்லாம் முடிந்தது. என் கனவுகள் ஆசைகள் அனைத்தும் கலைந்து போயின" என்று முணுமுணுத்தாள்.

மேலும் எழுதத் தொடங்கிய போது பேனா எழுத மறுத்தது. எரிச்சலாய் உதறிப் பார்த்தாள். மை தீர்ந்துவிட்டிருந்தது.

“எனக்கு முன்பே பேனா ரீஃபில் உயிரை விட்டுவிட்டது. என் மரணத்தைக் கண்டு ரசிக்கும் பேறு இதற்கு இல்லை போலும்” என்று சொல்லி விரக்தியாய்ச் சிரித்தாள்.

இந்தப் பேனா அவளுக்கு ராம்கி அன்பளிப்பாகக் கொடுத்தது. ஓர் இனிய மாலைப் பொழுதில், இதே படுக்கை அறையில்தான் கொடுத்தான். கொடுத்துவிட்டு, உதடு குவித்து, “பதிலுக்கு ஒன்னு கொடு பானு” என்று அடம்பிடித்தான்.

“அன்பளிப்புன்னு கொடுத்துட்டு பதிலுக்கு ஒன்னு கேட்குறே. நீயென்ன காதலனா, வியாபாரியா?” என்றாள் பானு.

“காதல் வியாபாரி” என்று கண்ணடித்தான் அவன்.

“அவுட்...அவுட்...வெளியே போ.” போலியாய் விரட்டினாள் அவள்.

“என்னிக்கோ ஒரு நாள் வரப்போகிறவன்தானே?”

“அப்போ பார்த்துக்கலாம்” என்றாள் பானு.

“நான் என்ன இப்பவே பார்க்கணும்னா சொன்னேன்.” குறுகுறுத்த பார்வையுடன் ராம்கி ஒவ்வொரு வார்த்தையாய் நிறுத்தி நிறுத்திச் சொல்ல பானுவுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது.

தலையணையை அவன் மேல் வீசினாள். ‘KISS ME' என்று அதில் எம்ராய்டரி செய்யப்பட்டிருந்தது.

“கிஸ்தானே, தர்றேன்” என்று அவளை நெருங்கினான் ராம்கி.

மான் மாதிரி, கட்டிலைச் சுற்றிச் சுற்றி ஓடினாள் பானு.

விடாமல் துரத்தினான் ராம்கி.

“பிடி...பிடி...பிடிடா கண்ணா. தம்மெல்லாம் அடிக்காதேன்னு சொன்னேனே, கேட்டியா? ஓட முடியல பாரு. உன்னால ஒரு பொம்பளையைப் பிடிக்க முடியல. என்னடா ஆம்பிளை நீ?” கட்டில் மேல் ஏறிக் கிண்டல் டான்ஸ் ஆடினாள் பானு.

ராம்கியின் ஆம்பிளை மனம் விழித்துக்கொண்டது.

“விடமாட்டேண்டி. கிஸ் கொடுக்காம, உன்கிட்ட கிஸ் வாங்காம விடமாட்டேன்” என்று சொல்லிச் சிரித்துக்கொண்டே அவளை விரட்டினான்.

அவனுக்கு ஆட்டம் காட்டிவிட்டுப் பானு சுழன்று சுழன்று ஓடினாள்.

துரத்துவது போல, அவளைச் சுவரோரமாய் ஒதுக்கி மடக்கிவிடத் திட்டம் போட்டான் ராம்கி.

எண்ணத்தைச் செயல் படுத்தினான்.

தனக்கொரு வலை விரிக்கப்பட்டது புரியாமல் சுவரோரம் நகர்ந்தாள் பானு.

“மாட்டிக்கினியா? கீசுடறேன் பாரு” என்று வெற்றி மிதப்பில் ராம்கி சென்னை பாஷை பேசினான். மிதமிஞ்சிய காதலுடன் அவள் மேல் பாய முற்பட்டபோது கட்டில் காலில் அவன் கால்கள் இடறின. மடக்கென்று சப்தம் கேட்டது. தொபீரெனப் பல்லி போல் கீழே விழுந்தான்.

அவன் மண்டையிலிருந்து ‘குபு குபு’வென ரத்தம் வழிந்தது.

பதறிப்போனாள் பானு.

டாக்டருக்கு ஃபோன் பண்ணினாள்.

மருத்துவர்கள் எவ்வளவோ முயன்றும் ராம்கியைக் காப்பாற்ற முடியவில்லை. அவன் இறந்து போனான்.

நிழல் மறந்து நிஜத்துக்கு வந்தாள், கடிதம் எழுதிக்கொண்டிருந்த பானு.

அவளின் அழகிய விழிகளில் கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது. “நான் மடச்சி. ராம்கிக்கு ஒரு முத்தம் கொடுத்திருக்கலாம்” என்று துக்கம் பொங்க முணுமுணுத்தாள்.

“இந்தாடா முத்தம். இந்த முத்தம் உன்கிட்ட வர்றதுக்குள்ள நானும்  வந்துடுவேன்”  என்று சொல்லிக்கொண்டே ஓர் அழுத்தமான முத்தத்தை மேல் நோக்கிப் பறக்கவிட்டாள்............

=============================================================================================

இத்துடன் கதைக்குத் ‘தொடரும்.....’ போட்டுவிட்டார்கள்.

நான் சேமித்து வைத்திருக்கும் பழைய இதழ்க் குவியலில் அடுத்த இதழைத் தேடினேன்... தேடிக் கொண்டே இருக்கிறேன். அது கிடைத்தால்[???] மீதிக் கதையை எழுதுவேன். காத்திருங்கள்.

=============================================================================================