Jan 7, 2015

குமுதத்தில்[12.01.2015] வைரமுத்துவின் ‘பூனை வளர்த்த’ ஒரு கிழவியின் கதை!

ஒரு கதையைப் படிக்க வைப்பதில் அதன் தலைப்புக்கு முக்கிய பங்குண்டு என்பார்கள். கவிஞரின் ‘மனிதர்களால் ஆனது வாழ்வு’ என்ற, எளிதில் புரியாததொரு தத்துவத்தை உள்ளடக்கிய தலைப்பு கதையைப் படிக்கவிடாமல் நம்மை விரட்டியடிக்கிறது!

கதைத் தலைப்பு:         மனிதர்களால் ஆனது வாழ்வு

‘மரியா’ என்னும் பெயர் கொண்ட ஆஸ்திரேலிய நாட்டுக் கிழவிதான் இந்தச் சிறுகதையின் நாயகி.

‘ஏதோ அற்ப காரணத்துக்காக இவளைத் துரத்திவிடுகிறான் முதல் கணவன். பத்தொன்பது வயது மகளோடு தனித்து விடப்பட்டவள், நாற்பது வயதில் இன்னொருவனை மணக்கிறாள். அவன், இவளின் மகளோடு சிட்னிக்கு ஓடிப்போனது இவளின் இதயத் தசையைக் கிழித்துப் போட்டது; மனிதர்களை வெறுக்கச் செய்தது’ என்கிறார் வைரமுத்து.

அனாதரவான நிலையில், பிரிஸ்பன் நகருக்குச் சற்றுத் தொலைவில் இருந்த, மூத்த குடிமக்கள் வாழ்ந்த ‘ஏரிவனம்’ என்னும் குடியிருப்புக்கு இடம் பெயர்கிறாள் மரியா.

தனிமையைப் போக்க ஒரு பூனை வளர்க்கிறாள்; அதை மிகவும் நேசிக்கிறாள்.

‘என்னுடையது பெர்ஷியன் ஜாதிப் பூனை. உடம்பெங்கும் பொன்னை இழைத்த ரோமம். என்னுடைய பால்ய காலத் தொடையைவிட அது மென்மையானது. நிறையவே செலவழிக்கிறேன். என் படுக்கையில் என் கணவர்களைவிட அதிகம் படுத்தது இந்தப் பூனைதான்” என்று சொல்லிச் சுருங்கிய தோல்களில் வெட்கம் தேக்குவாள் மரியா’..... அவள் நேசிப்பின் ஆழத்தை இப்படிப் புரிய வைக்கிறார் வைரமுத்து.

பூனையுடன் இவள் வாழ்ந்த வாழ்க்கை மகிழ்ச்சியானதாகவே அமைகிறது.

‘அழகிய வீடு மரியாவுடையது. அவள் வீடும் அவளும் ஒப்பனை கலைந்ததில்லை; தேவாலய மணியோசை போன்றவள்; பேச்சில் உற்சாகம் குறைய மாட்டாள். அவள் தோல் சுருங்கியதுண்டு; மகிழ்ச்சி சுருங்கியதில்லை’ என்கிறார் கவிஞர்.

இப்படியாக, 13 ஆண்டுகள் கழிந்த நிலையில் அவளின் செல்லப் பூனை செத்துப் போகிறது.


உண்மை நிகழ்வை[பூனை இறந்தது] மூடி மறைத்து, கிழவிக்கு மிகவும் வேண்டப்பட்ட யாரோ மரணமடைந்தது போல, கதையைத் தொடங்குகிறார் கவிஞர். சில நிமிட வாசிப்பிற்குப் பிறகு உண்மை வெளிப்படுகிறது[இது, தரமான கதைக் கருவோ, செறிவான உள்ளடக்கமோ இல்லாத கதைகளில் கதையில் விறுவிறுப்பைக் கூட்டுவதற்காகக் கதாசிரியர்கள் கையாளுகிற ஒரு தந்திர உத்தி]

“அய்யோ...கிழவி தாங்க மாட்டாளே!”, “மூதாட்டிக்கிருந்த ஒரே துணையும் போய்விட்டதா?” என்று ஏரிவனவாசிகள் அனுதாபப்படுகிறார்கள். பெரும் எண்ணிக்கையில் கிழவியின் வீடு தேடி வருவதாகக் குறிப்பிடுகிறார் கவிப்பேரரசு.

இந்த நிகழ்ச்சி நடைமுறை சாத்தியமானதா?

ஒரு பூனையின் சாவுக்கு ஆஸ்திரேலிய மக்கள் இத்தனை மரியாதை செலுத்துகிறார்களா? [இங்குள்ள கிராமங்களில், மாடுகள் இறந்து போனால் இழவு காணச் செல்வது வழக்கத்தில் இருந்தது. இப்போது இல்லை என்றே சொல்லலாம்]].

‘பூனையின் சடலம் ஒரு தொட்டிலில் கிடந்தது. அதன் மீது ஒரு செர்ரி வெல்வெட் போர்த்தப்பட்டிருந்தது. அந்தத் தொட்டில், ஒரு கண்ணாடிப் பேழையிட்டுக் காற்றுப் புகாவண்ணம் கட்டமைக்கப்பட்டிருந்தது. மரியா பிறந்தபோது அவளை அவள் தாய் இட்ட தொட்டிலாம் அது...... பின்னர் தொட்டிலோடு அது அடக்கம் செய்யப்படுகிறது.’

இதெல்லாம் சரி. செல்லப் பிராணிகள் மீது பாசத்தைப் பொழிவதும், அவை இறந்தால் ஒரு குடும்ப உறுப்பினரை இழந்தது போல் துக்கம் அனுசரிப்பதும் எங்கோ சில குடும்பங்களில் நடப்பதுதான்.

இதற்கும் மேலாக, ஊரே திரண்டு வந்து அனுதாபம் தெரிவிப்பது; ஈமச் சடங்கில் கலந்துகொள்வது என்பதாகச் சித்திரிப்பது எவ்வகையிலும் ஏற்கத்தக்கதல்ல.

கவிஞர் தொடர்ந்து எழுதுவதைக் கவனியுங்கள்.

‘சற்று நேரத்தில், பூக்களும் பூங்கொத்துகளுமாய் அந்த அறை நிறைந்தது.

சிலர் அவள்[மரியா] தலைமீது கை வைத்தார்கள். சிலர் அவள் கரம் பற்றி அழுத்தினார்கள்.........

........புல்வெளியில் நிற்பதற்கு இடமில்லை; அத்துணை கூட்டம்.’

இப்படிக் கற்பனையாக, மிகைப்படுத்தப்பட்ட சம்பவங்களை இணைத்துக் கதை பின்ன வேண்டிய அவசியம் ஏன் நேர்ந்தது?

கதாசிரியர் வைரமுத்து எண்ணிப் பார்க்கத் தவறிவிட்டார்.

கதை இத்துடன் முடியவில்லை. நீளுகிறது.

‘குளிர்காலத் தொடக்கம்.........

.....சில நாட்களாகவே மரியாவின் வீடு திறக்கப்படவே இல்லை. அவள் தனிமை விரும்பி என்பதால், அண்டை அயலார் அவளின் நிலை அறிய முயலவில்லை’ என்கிறார் கதாசிரியர்.

பழுதடைந்த அவளின் வீட்டுக் கதவைப் பழுது பார்க்க, பதிவு செய்யப்பட்ட  தச்சன் மரியாவின் வீடு தேடி வருகிறார், உள்ளேயிருந்து துர்நாற்றம் வருவதை உணர்ந்து வீதிக்கு ஓடி வருகிறார்.

போலீஸ் வந்து மரியாவின் சவத்தை எடுத்துச் செல்கிறது.

ஏரிவனம் எங்கும் தெரிந்துபோயிற்று மரியாவின் மரணம். யாரும் வரவில்லை; மருத்துவமனைக்குச் செல்ல நாதியில்லை. எங்கே சென்று அஞ்சலி செலுத்துவது? எவரிடம் துக்கம் கேட்பது?.......

..........பூனையின் மரணம் கொண்டாடப் படுகிறது; மனிதரின் மரணம் அனாதையாகிறது’ என்று தத்துவார்த்தமாகக் கதையை முடிக்கிறார் வைரமுத்து.

கிழவியின் வீட்டுக்குள்ளிருந்து துர்நாற்றம் வருவதை அறிந்து  மூச்சிறைக்க ஓடி வந்த தச்சர், அப்பகுதி மக்களிடம் சொன்னதாகவும், மக்கள் மரியா வீட்டின் முன்பு திரண்டதாகவும் நிகழ்ச்சியை அமைப்பதுதானே எதார்த்தம்? 

மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர், ஊர் மக்கள் சவத்தைப் பெற்று, நல்லடக்கம் செய்து, விரும்பினால் பிரார்த்தனை செய்வதற்கான வாய்ப்பும் உள்ளதுதானே?

இவ்வாறு, இயல்பான நிகழ்வுகளைப் பற்றிச் சிந்திக்காமல், போலீஸ்காரர்கள் ஆம்புலன்ஸோடு மரியாவின் வீட்டை முற்றுகையிட்டு, சவத்தை மருத்துவப் பரிசோதனைக்கு எடுத்துச் செல்வதாகச் சொல்லியிருக்கிறார் கவிஞர்; ‘பூனையின் மரணம் கொண்டாடப்படுகிறது; மனிதரின் மரணம் அனாதையாகிறது’ என்று முடிக்கிறார், 

வைரமுத்து, மிகச் சிறந்த படைப்பாளர் என்பதில் மாறுபட்ட கருத்துக்கு இடமில்லை. என்ன காரணத்தாலோ இந்தச் சிறுகதையை மனம் ஒன்றாமல் படைத்திருக்கிறார்.

இவரின் அடுத்த சிறுகதை ஒரு முழுமையான படைப்பாக  அமைய எமது வாழ்த்துகள்.

==========================================================================================