Feb 1, 2015

மாதவிக்குட்டி[எ]கமலாதாஸ்[எ] சுராயா[எ] கமலா என்கிற மலையாள எழுத்தாளரை உங்களுக்குத் தெரியுமா?

இந்தப் பதிவை நாளைதான் வெளியிடுவதாக இருந்தேன். “இன்று இருப்பார் நாளை இல்லை” என்ற நிலையாமைத் தத்துவம் நினைவில் உறைத்ததால் இன்றே உங்கள் வாசிப்புக்கு!



‘கமலா தாஸ்
(மலையாளம்: കമല ദാസ്) என்ற இயற்பெயரைக் கொண்ட கமலா சுராயா அல்லது மாதவிக்குட்டி, (மார்ச் 31, 1934 - மே 31, 2009) இந்திய எழுத்தாளர். இவர் ஆங்கிலம், மற்றும் மலையாளத்திலும் ஏராளமான சிறுகதைகள் மற்றும் கவிதைகளை எழுதியவர். கேரளாவில் இவரது சிறுகதைகள் மற்றும் தன் வரலாறு (என் கதா) ஆகியவை புகழ் பெற்றவை.

ஆங்கிலக் கவிதைக்காக சாகித்திய அகாதமி விருதினை 1981இல் பெற்றார். 'மாதவிக்குட்டி' என்ற பெயரில் மலையாளச் சிறுகதைகளையும் எழுதி வந்தவர்.’ ---விக்கிப்பீடியா.

செக்ஸ், காதல், நம்பிக்கைத் துரோகம் போன்றவை குறித்துத் துணிச்சலாகப் புத்தகங்கள் எழுதியதால் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கியவர் இவர். மனதில் பட்டதை ஒளிவு மறைவில்லாமல் போட்டு உடைத்தவர். இவரின் சில கருத்துகள் கீழே..........

#‘மதம்னு சொல்றது மதகுருமார் ஜீவிக்க ஏற்படுத்தப்பட்ட வழி. தெய்வத்தை நெருங்கிப் பழகினதுக்கு அப்புறம் மதம் எதுக்கு? ரோட்டரி கிளப், லயன்ஸ் கிளப்னு எல்லாம் சொல்றாங்களே. மதமும் அதுபோலத்தான். எல்லாருமாக் கூடி மதத்தோட பேரில் தெய்வத்தைச் சிறுத்துப்போக வைக்கறாங்க.’
#‘என்னால சகிக்கவே முடியாத ஒரு விஷயம் இங்கே இருக்கு. அது என்னன்னா, ஹிப்போக்ரசி. பொய் சொல்லியும், துதிபாடியும், புன்சிரிப்பை வெளிப்படுத்தியும் மக்கள் ஒருத்தரை ஒருத்தர் இங்கே ஏமாத்திகிட்டு இருக்காங்க.’

#‘பொதுவாக விஞ்ஞானிகளுக்குக் குழந்தை பிறக்காது. அப்படியே பிறந்தாலும் அந்தக் குழந்தைகளோட உடம்பில் ஏகப்பட்ட குறைபாடுகள் இருக்கும்.’

#‘காதலிக்கிற பெண்ணின், மேல் உதடு வியர்த்திருக்கும். அவள் தன் தலை முடியை வெறுமனே விரல்களால் வருடிக்கொண்டிருப்பாள். அவளோட ஜாக்கெட்டின் கையிடுக்கு நனைஞ்சு போயிருக்கும். அவள் ரொம்பவும் தளர்ந்து போய்க் கொட்டாவிகூட விடுவா.....’

#‘திருமணம்னு ஒன்னு ஆயிட்டா, பெரும்பாலான பெண்கள் கணவன்கிற வட்டத்துக்குள்ளேயே தங்களை நிறுத்திக்குவாங்க. கணவன் என்ன சொல்றானோ அதன்படிதான் அவங்க நடப்பாங்க.’

#‘கணவன்மேல கொஞ்சமும் பிரியம் இல்லாம படுத்துக் குழந்தை பெத்துக்கிற பெண்கள் நிறையவே இருக்காங்க. பணம் தர்ற பாதுகாப்புதான் அதுக்குக் காரணம்.’

தன்னைப் பற்றி இப்படிச் சொல்கிறார் கமலாதாஸ்:

‘நான் கொஞ்ச நாள் நானாகவே இருந்தேன். அப்போ கொஞ்சம் போல காதல் எல்லாம் வந்தது. கொஞ்ச நாள் விதவையா வாழறேன்.

அப்படி இருக்கறபோது, நேசம் தரேன்னு ஒருத்தன் சொன்னான். நானும் ஒரு பெண்ணில்லையா ? அவனெ நம்பினேன்.
பெண்ணுக்கு எப்பவும் ஒரு பாதுகாப்பாளன் வேணும். அவன் என்னை மதம் மாறச் சொன்னான். நானும் மாறினேன். காதலுக்காக எதையும் துறக்க நாம் தயார் ஆச்சே. ஆனா, அவன் ஒரு கோழையாக இருந்தான். என்னோட துணிச்சல் அவனுக்கு இல்லாமப் போனது. என் மாதிரி ஒரு துணிச்சலான பெண் ஒரு கோழையைக் காதலிக்க முடியுமோ ? நான் புலி. அவன் செம்மறியாடு. அவன் கோழை அப்படின்னு தெரிஞ்ச அப்புறம் காதலாவது ஒண்ணாவது. நான் அவனைக் (கல்யாண பந்தத்திலிருந்து ) விடுதலையாக்கி விட்டேன். எனக்கும் விடுதலைதான். காதல் எல்லாம் கரைஞ்சு போச்சு. இப்போ இந்த வேஷம் (தலையில் முக்காடாக வந்து, முகம் மறைக்காத பர்தா) தான் பாக்கி. இது மோசமில்லைன்னு தோணுது. என் முடியெல்லாம் நரைச்சுப் போனது வெளியிலே தெரியாதில் லையா?’

இவருடைய ‘தாபம்’[மொழியாக்கம்: சுரா; ‘இனிய உதயம்’ 2003, மார்ச்2-10]  என்னும் நாவலில், இரு கதைமாந்தருக்கு இடையே யான உரையாடலின் ஒரு பகுதி...........

“உஷா’, நீ எனக்கு உதவினா, என்கூட எப்பவும் இருக்கிறதா இருந்தா, நான் காலப் போக்குல தாராவை மறந்துடுவேன்.”

“இல்ல ஹரி. உங்க மனசில் எப்பவும் தாரா இருந்துட்டுதான் இருப்பா. உங்க மனசை விட்டுத் தாராவோட உருவம் மறையவே மறையாது. அவகூட நீங்க படுக்கல. அதனாலதான் அவளைப் பற்றிய நினைவுகள் இந்த அளவுக்குப் பலமா மனசுல இருந்திட்டிருக்கு. அமெரிக்காவிலோ ஸ்வீடனிலோ நாம இருக்கிறதா இருந்தா நான் என்ன சொல்வேன் தெரியுமா? எவ்வளவு சீக்கிரமா அவகூடப் படுக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் படுங்கன்னு சொல்லியிருப்பேன். ஆசை முழுசா அடங்குறதுக்கு வேற வழியே இல்லை. காமம்ன்றது ரொம்பப் பழமையானது. அது உண்டாக்குற பிரச்சினைக்குப் பழமையான ஒரே ஒரு பரிகாரம்தான் இருக்கு. அது என்ன தெரியுமா? அவளை எங்கேயாவது கடத்திட்டுப் போயி அவகூடப் படுக்கிறதுதான்.”

“நான் அவளைப் பலாத்காரம் பண்ணினா அவள் என்னை வெறுக்க ஆரம்பிச்சிட மாட்டாளா?”

“பலாத்காரம் செய்த மனிதனையே விரும்பத் தொடங்கிய பல பெண்களை நான் பார்த்திருக்கேன். சொல்லப் போனா பலாத்காரம்கிறது முகஸ்துதி செய்யுற மாதிரி.”

“உஷா, உன்னோட வார்த்தைகளை என்னால் முழுசா ஏத்துக்க முடியாது. தன்னைக் கற்பழிச்சவனைத் தாரா ஒருபோதும் மன்னிக்க மாட்டா. அவ ரொம்பவும் குடும்பத்தனமான பொண்ணு. கோயிலுக்குப் போய்ட்டு, நெத்தியில் சந்தனம் வச்சிகிட்டுத் திரும்பி வர்றப்போ எப்படி இருப்பா தெரியுமா? தெய்வீகக்களைன்னு சொல்வாங்களே, அவ முகத்திலயும் உடம்புலயும் அது இருப்பதைப் பார்க்கலாம்.”

“தெய்வீகக்களை! எந்த அளவுக்குப் பொய்யான வார்த்தை அது தெரியுமா? இப்படிச் சொல்லிச் சொல்லியே ஆண்கள் பெண்களை ஏமாத்திட்டு வர்றாங்க.”

இவ்வாறாகப் பல புரட்சிகரமான, புதுமையான கருத்துகளை வெளியிட்ட மாதவிக்குட்டி என்கிற கமலாதாஸ் என்கிற சுராயா என்கிற கமலா 2009இல் காலமானார். அது மலையாள எழுத்துலகுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இலக்கிய உலகுக்கே பெரும் இழப்பாக அமைந்தது.

***************************************************************************************************************************************************