தேடல்!


Mar 24, 2015

சில சொட்டு விந்துவில் பல கோடி ஆன்மாக்களா?![பழைய பதிவு]

“உடல் அழிந்த பிறகு மிஞ்சுவது ஆன்மா என்கிறார்கள் ஆன்மிகவாதிகள்.

அது வெறும் நம்பிக்கை சார்ந்தது. ஆன்மாவின் ‘இருப்பு’ இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்கிறார்கள் பகுத்தறிவாளர்கள்.

இது பற்றிய விவாதம் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில்,  அறிவியல் அறிஞர் ஒருவர் அதை நிரூபித்திருப்பதாகச் சொல்லி மகிழ்கிறார் ஒரு பதிவர் [tamil and vedas.wordpress.com]. அவர் சொல்கிறார்..........

###பிரிட்டிஷ் இயற்பியல் நிபுணரான ரோஜர் பென்ரோஸுடன் இணைந்து க்வாண்டம் பிரக்ஞை’ என்ற புதிய கொள்கையை Dr. Stuart Hameroff [of University of Arizona] என்பவர் அறிவியல் உலகின் முன் வைத்துள்ளார்.
மூளை செல்களுக்குள் ‘மைக்ரோட்யூபூல்’ என்ற அமைப்பு உள்ளது. இந்த மைக்ரோட்யூபூலில் ஆன்மா உறைந்திருக்கிறது. செத்துப் பிழைத்தவர்களின் அனுபவங்களை ஆராய்ந்து பார்க்கையில் உயிர் உடலை விட்டு நீங்கும் போது பிரக்ஞையானது [‘நான்’என்னும் உணர்வு/ ஆன்மா]இந்த மைக்ரோட்யூபூலிலிருந்து நீங்கி பிரபஞ்ச பிரக்ஞையுடன் இணைகிறது. உயிர் மீண்டும் உடலுடன் இணைகையில் இந்தப் பிரக்ஞை மைக்ரோட்யூபிலில் [ஏதேனும் ஒரு உடம்பில்]வந்து இணைகிறது. எனவே, உடம்பில் ஆன்மா இருப்பது உண்மை. இதை நிரூபிக்க முடியும். மூளையை ஒரு பயாலஜிகல் கம்ப்யூட்டராக அதாவது உயிரியல் கணினியாகக் கொண்டு ஆன்மாவை நிரூபித்து விட முடியும் என்கிறார் ஹாமராஃப்.

ஒரு பில்லியன் என்பது நூறு கோடியைக் குறிக்கும் எண். இப்படி நூறு பில்லியன் நியூரான்கள் ஒவ்வொரு மனித மூளையிலும் இருக்கின்றன. இந்த நியூரான்கள் அனைத்துத் தகவலையும் ஏந்திச் செல்லும் திறன் படைத்தவை. இவற்றுள் இருக்கும் மைக்ரோட்யூபூல் தான் பிரக்ஞைக்கும் ஆன்மாவுக்கும் இருப்பிடம் என்கிறார் ஹாமராஃப்.

இந்த ஆன்மா உடலைவிட்டு நீங்கினாலும் பிரபஞ்ச பிரக்ஞையுடன் இணைந்து விடுவதாl அதற்கு மரணம் இல்லை என்று அவர் கூறுகிறார்......இத்தகவல், சனாதன தர்மத்தைப் பின்பற்றுவோரை வியப்புடன் கூடிய சந்தோஷத்தில் திளைக்க வழி வகுத்து விட்டது! வேதாந்தத்தைப் போதிக்கும் பாரதமோ தன் ஆழ்ந்த ஆன்மீகக் கொள்கையில் இன்று தலை நிமிர்ந்து கம்பீரமாக நிற்கிறது,! ###
விஞ்ஞானி, ‘பிரபஞ்ச பிரக்ஞை” என்கிறாரே, அது என்ன என்று விளக்கியிருக்க வேண்டும்; அப்படி ஒன்று இருப்பது ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டதா என்றும் சொல்லியிருக்க வேண்டும். இவற்றில் எதையுமே அவர் செய்யவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

செத்தவர்கள் பிழைப்பது சாத்தியமே இல்லாத நிலையில், ‘செத்துப் பிழைத்தவர்களின் அனுபவங்கள்’ என்று சொல்வது தவறாகும்.

ஒரு விஞ்ஞானி சொல்கிறார் என்பதற்காக அறிவியல் உலகம் அதை ஏற்றுக்கொண்டுவிடாது.

‘மைக்ரோட்யூபிலில் ஆன்மா இடம் கொண்டிருக்கிறதா என்பதை நிரூபித்துவிட முடியும்’ என்றுதான் இந்த விஞ்ஞானி சொல்கிறார். ‘நிரூபித்துவிட்டதாக’ச்  சொல்லவில்லை.  அவரை மேற்கோள் காட்டி, ஆன்மா நிரூபிக்கப்பட்டதாகப் பதிவர் சொல்வது ஏற்கத்தக்கது அல்ல. ஆன்மாவின் ‘இருப்பு’ இந்நாள்வரை நிரூபிக்கப்படவில்லை என்பதே நாம் அறியலாகும் உண்மை நிலை.

ஆன்மா என்றால் என்ன?

‘ஆன்மா [ஆத்மா] எப்போதும் பிறப்பதுமில்லை; இறப்பதுமில்லை; ஒரு சமயம் இருந்து மறுசமயம் இல்லை என்பதுமில்லை. இது  பிறப்பற்றது; என்றுமுள்ளது; நிலையானது; பழமையானது. சரீரம் கொல்லப்படும்பொழுதும் இது கொல்லப்படுவதில்லை. இந்த ஆத்மாவை ஆயுதங்கள் வெட்டுவதில்லை (நைநம் சிந்தந்தி சஸ்த்ராணி); நெருப்பு எரிப்பதில்லை (நைநம் தஹதி பாவக:); தண்ணீர் நனைப்பதில்லை (ந சைநன்ம் க்லேதயந்த்யாபோ); காற்று உலர்த்துவதும் இல்லை’ என்கிறது கீதை (ந சோஷயதி மாருத:) (2ம் அத்தியாயம் 21ம் ஸ்லோகம்).

அகந்தை முதலிய எல்லாம் ஒழிந்தபின் எந்தச் சொரூபம் ஆன்மாவாக மிஞ்சுமோ அது பிரம்மம்[கடவுள்]’ என்கிறது தத் த்வம் அஸி என்னும் உபநிடத மகா வாக்கியம். 

கீதையும் உபநிடதமும் முன்வைத்துள்ள கருத்துகளின்படி, ஆன்மா, அழிவில்லாதது; என்றும் இருப்பது. எனவே, அதுவும் கடவுளின் ஓர் அம்சமே என்றாகிறது.

இதைக் கருத்தில் கொண்டு நாம் எழுப்பும் முதல் கேள்வி..........

“கடவுளின் அம்சமான இந்த ஆன்மா, எதன்பொருட்டு மானுட தேகங்களில் சென்று புகுகிறது? ஏன் அகந்தையைச் சுமக்கிறது? கணக்கற்ற பிறவிகள் எடுப்பதும் பாவபுண்ணியங்களைச் சுமப்பதும் ஏன்?” என்பதுதான்.

ஆன்மா உண்டு என்று பன்னெடுங்காலமாப் பிரச்சாரம் செய்தவர் எவரும் இவ்வாறெல்லாம் சிந்தித்ததாகத் தெரியவில்லை.

ஆன்மாவின் செயல்பாடு என்ன?

‘ ஐம்புலன்களை கட்டுப்படுத்தி வைத்துக் கொண்டு இருக்கின்றது.’

  • "ஐம்புலன் ஒடுக்கம் அறிதலின்" - சிவஞானபோதம் 3
ஐம்புலன்களையும் கட்டுப்படுத்துவது ஆன்மா என்பது உண்மையானால் ‘மூளை’ என்ற ஒன்று அவசியம் அற்றதாகிறது. மூளைதான் அறிவின் உறைவிடம் என்று விஞ்ஞானம் சொல்வது தவறு என்றாகிறது.

மூளையிலுள்ள செல்கள் புதுப்பிக்கப்படுகையில் நாம் உறக்கத்திற்கு உள்ளாகிறோம். நெருப்பில் எரிந்து போகாத நீரில் நனையாத ஆன்மா எப்போதும் ‘விழிப்பு’ நிலையில்தான் இருக்க வேண்டும். நாம் உறங்கும்போது என்ன ஆகிறது? அதுவும் தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறதா? கடவுளைப் போல எப்போதும் இருந்துகொண்டிருக்கிற ஒன்று தன்னைப் புதுப்பித்துக்கொள்வது அவசியமற்றது.

நம் உடலில் மயக்க மருந்து செலுத்தப்படும் போது நினைவிழக்கிறோம். அப்போது ஆன்மாவும் செயலற்றுப் போகிறதே, அது எப்படி?!

இது போன்ற சந்தேகங்களுக்கு ஆன்மாவை நம்புவோர் போதிய விளக்கம் தராத நிலையில் அது ஐம்புன்களையும் கட்டுப்படுத்துவதாகச் சொல்வதை அங்கீகரிப்பது இயலாத ஒன்றாகும்.

ஆன்மா உடம்புக்குள் நுழைவது எப்படி?

விஞ்ஞானத்தின் உதவியால், ஆணிடமிருந்து வெளிப்படும் விந்துவில் உள்ள பல கோடி உயிரணுக்களில் [ஒரு மி.லிட்டர் விந்துவில் 12 கோடிவரை உயிரணுக்கள் இருக்குமாம்] ஒன்று பெண்ணின் கருப்பையிலுள்ள சினை முட்டையுடன் இணைந்து வளர்வதன் மூலம் குழந்தை உருவாகிறது என்பது நாம் அறிந்ததே.

குழந்தை பிறந்து, வளர்ச்சி பெற்று வாழ்ந்து மடிகிறது.

அந்த உடம்புக்குள்தான் ஆன்மா புகுந்து உடம்பு அழியும்வரை அதை ஆண்டு, அது அழியும்போது வெளியேறுவதாகச் சொல்கிறார்கள்.

அந்த ஆன்மா, உடம்புக்குள் புகுவது எவ்வாறு?

காது, மூக்கு, வாய், மலத்துவாரம், மர்ம உறுப்பு ஆகிய முக்கிய துவாரங்கள் வழியாகவா, இல்லை, வேர்வைத் துவாரங்கள் மூலமாகவா?

ஒவ்வொரு துவாரத்திலும்  கணக்கற்றவை நுழைய முடியும். ஒன்றுக்குத்தான் அனுமதி என்பது கடவுள் வகுத்த விதியா? ஒன்றுக்கும் மேற்பட்டவை போட்டியிட்டு, வென்ற ஒன்று உட்புகுகிறதா?

உடம்புக்குள் புகுகிற அந்த ஒன்று, துவாரம் இல்லாத சினை முட்டையைத் துளைத்தது எவ்வாறு?

கருப்பையில் இருக்கும் சினை முட்டையை அடைவதற்கான வழி, பெண்ணுறுப்புப் புழைதான்.

எனவே, ஆண், தன் விந்துவைப் பெண்ணுறுப்பில் தெளிக்கும்போதே, அதன் ஒவ்வொரு துளியிலும் கோடானுகோடி ஆன்மாக்கள் கோடிக் கணக்கான உயிரணுக்களுடன் பயணித்தல் வேண்டும். உயிரணுக்களுக்கான ஓட்டப்  போட்டியில் வென்று, சினை முட்டையைத் துளைத்து உட்புகும் ஒற்றை உயிரணுவுடன் ஒட்டிக் கொண்டு வீரியமுள்ள ஓர் ஆன்மா மட்டும் சினை முட்டைக்குள் நுழைதல் வேண்டும்; மூளை உருவாகக் காரணமான செல்களில் அது நிரந்தரமாகத் தங்கிவிட வேண்டும். 

இவ்வாறுதான் ஓர் ஆன்மா சினை முட்டைக்குள் நுழைகிறதா?

மேலும்...........

ஒவ்வொரு ஆன்மாவுக்கும், தனக்குரிய உடம்பைத் தேர்ந்தெடுப்பதில் சுதந்திரம் உண்டா?

புகுந்த உடம்பின் மீது வெறுப்பு ஏற்பட்டால், அதிலிருந்து எப்போது வேண்டுமானாலும் ஆன்மா வெளியேறலாமே! ஏன் அவ்வாறு செய்வதில்லை? கடவுள் கட்டுப்படுத்துகிறாரா? நிபந்தனைகள் விதித்திருக்கிறாரா?

இன்றுவரை இவ்வினாக்களுக்கு விடை ஏதும் இல்லை.

ஆன்மாதான் ஐம்புலன்களையும் கட்டுப்படுத்துகிறது என்றால், மூளை இல்லாமலே மனித உடம்பு இயங்க வேண்டும்; சிந்திக்கவும் வேண்டும். இவையெல்லாம் சாத்தியமா என்றால் நகைப்புதான் மிஞ்சுகிறது.

'உடலின் இயக்கத்துக்கு மூளைதான் காரணம்; ஆன்மாவின் பணி, இந்த மண்ணில் மனிதன் பெறும் அனுபவங்களையும் செய்யும் பாவ புண்ணியங்களையும் மரணத்துக்குப் பின்னர் சுமந்து செல்வது மட்டுமே' என்றால், அடுத்த பிறவியில், இப்போது பெற்ற அனுபவங்கள் நினைவுக்கு வருதல் வேண்டும். அதுவும் சாத்தியப்பட்டதாகத் தெரியவில்லை.

‘ஆன்மா இருப்பதும், பிறவிதோறும் வேறு வேறு உடல்களில் புகுந்து புகுந்து இருந்து இருந்து வெளியேறுவதும் உண்மையாயின், ஒரு பிறவியில் மருத்துவராக இருந்து அனுபவம் பெற்ற ஓர் ஆன்மா அடுத்த பிறவியில் மருத்துவக் கல்லூரியில் கற்காமலே அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும்’ என்று பதிவர் ‘வவ்வால்’ அவர்கள், பதிவர் ‘சார்வாகன்’  அவர்களின் ஒரு பதிவுக்கான பின்னூட்டமாகப் பதிவு செய்த கருத்து இங்கு நினைவுகூரத்தக்கது.

இப்படி, விளக்கம் தரவேண்டிய ஐயப்பாடுகள் எவ்வளவோ உள்ளன [பதிவின் நீட்சிக்கு அஞ்சி இத்துடன் முடிக்கப்படுகிறது]. இவை பற்றி எள்ளளவும் அக்கறை காட்டாமல் யாரோ சிலர் அனுமானம் செய்து சொல்லிவிட்டுப் போனவற்றை நம்புவதும் பிறரை நம்பத் தூண்டுவதும் ஏற்கத்தக்க செயல்களல்ல; அல்லவே அல்ல.

*****************************************************************************************************************************************************

பதிவர் சார்வாகன், ‘ஆன்மா என்றால் என்ன!? பரிணாமப் பார்வை!’ என்னும் பதிவில் [http://aatralarasu.blogspot.com/2013/07/1.html] வெளிப்படுத்தியுள்ள கருத்துகளும், அதற்கான, alien, வருண், பார்த்தி, நந்தவனத்தான், கர்மயோகி, நம்பள்கி, புரட்சிமணி, கோவிகண்ணன் போன்றோரின் பின்னூட்டங்களும் ஆன்மா பற்றி மேலும் அறிவதற்கு ஏதுவாக அமைந்துள்ளன என்பதை நன்றியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

*****************************************************************************************************************************************************