தேடல்!


Apr 17, 2015

ஜெயகாந்தனின் ‘அக்கினிப் பிரவேசம்’ ஒரு புரட்சிப் படைப்பா? -ஓர் அதிரடி விமர்சனம்!

ஜெயகாந்தனுக்குப் பெரும் புகழ் ஈட்டித் தந்த சிறுகதைகளில் அக்கினிப் பிரவேசமும் ஒன்று. தரத்தில் ‘சராசரி’க்கும் கீழே இடம்பெறும் இது,  1966ஆம் ஆண்டில் ஆனந்தவிகடனில் வெளியானபோது கடுமையான விமர்சனங்களுக்கு  உள்ளானதாகச் சொல்வார்கள். 

#ஜெயகாந்தனின் அக்கினிப் பிரவேசம் கதைக் கருவும், அதன் முடிவும் தமிழகமெங்கும் பலத்த சர்ச்சைக்குரியதாக அமைந்தன. இக்கதை, 1966இல் ஆனந்தவிகடனில் வெளியானது. இக்கதையின் கரு புரட்சிகரமானது என்று மக்கள் மத்தியில் எண்ணம் நிலவியிருந்தது. ஆனால், அக்கரு யதார்த்தமான உண்மையைப் பேசுவது என்கிறார் ஜெயகாந்தன்-www.tamilvu.org/.../p1011662.htm

ஜெயகாந்தன் சொல்வது போல் இந்தக் கதை எதார்த்தமான ஒன்றா? இதன் கருவும் முடிவும் சர்ச்சைக்குரியனவா? புரட்சிகரமானவையா? என்பனவாகிய கேள்விகளுக்கு விடை தேடும் முயற்சியின் பயனே இப்பதிவு.
ரு கல்லூரி மாணவிதான் இந்தச் சிறுகதையின் நாயகி. பதினாறைக் கடந்து வயது பதினேழில் நடை பயில்பவள் அவள். கல்லூரி முடிந்து, பேருந்துக்குக் காத்துக்கொண்டிருக்கிற அவளைச் ‘சிறுமி’ என்று அறிமுகப்படுத்துகிறார் எழுத்தாளர் ஜெயகாந்தன்.

.....‘கும்பலை[மாணவிகள்] ஏற்றிக்கொண்டு அந்த பஸ் நகர்ந்த பிறகு பிளாட்பாரத்தில் இரண்டு மாணவிகள் மட்டுமே நிற்கின்றனர். அதில்[அவர்களில்] ஒருத்தியைச் ‘சிறுமி’ என்கிறார்.

இவர் பார்வையில், குறைந்தபட்சம் பதினேழு வயதான ஓர் இளம்பெண் சிறுமியாகக் காட்சி தருவது விந்தைதான்.

‘சிறுமியைப் பார்த்தால், கல்லூரியில் படிப்பவளாகவே தோன்றவில்லை...’என்று தொடங்கி  ஏழ்மையில் வாழ்ந்து  வளர்ந்த அவளின் தோற்றத்தை மனதில் பதியும் வகையில் வர்ணித்திருக்கிறார் ஜெயகாந்தன்.

தனக்குரிய பேருந்து வராததால், தனிமையில் தவித்துக் கிடந்த அவளிடம் முன்பின் அறிமுகமே இல்லாத ஓர் இளைஞன், “பிளீஸ் கெட் இன். ஐ கேன் டிராப் யூ அட் யுவர் பிளேஸ்” என்று சொல்கிறான். முதலில்  மறுத்த அவள், “ஓ! இட் ஈஸ் ஆல்ரைட்...கெட் இன்” என்று அவன் அவசரப்படுத்தியபோது காரில் அமர்ந்துவிடுகிறாளாம்; அவள் கை மேல் அவனது கை அவசரமாக விழுந்து பதனமாக அழுத்தியபோது, ‘அவன்தான் என்னமாய் அழகொழுகச் சிரிக்கிறான்!’ என்று ரசிக்கிறாளாம். ரசித்தவள் ஜெயகாந்தனால் ‘சிறுமி’ என்று சான்றிதழ் வழங்கப்பட்ட அந்தப் பதினேழு வயதுக் குமரி!

வழக்கமாகக் கல்லூரிக்கு வந்து செல்கிற ஒருத்திக்குத் தன் வீடு செல்ல இரவில் எத்தனை மணிவரை பேருந்து வசதி உண்டு என்பது தெரியாதா? பேருந்துகளே ரத்து செய்யப்பட்டிருந்தாலும் மாற்று ஏற்பாடுகளை அவள் அறிந்திருக்க மாட்டாளா? எவனோ ஒரு வழிப்போக்கனை நம்பிச் சென்று ஏமாறுகிறாளாம். கயிறு திரிப்பவர் பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன்தான்!

கார் திசை மாறி எங்கோ செல்கிறது. ‘இதென்ன, கார் இந்தத் தெருவில் போகிறது?’ என்று தனக்குள் நினைக்கிறாள் அந்தப் பெண்; ஆனாலும் அவனிடம் காரணம் கேட்கவில்லை;  அவனைப் பார்த்துப் புன்னகை வேறு செய்கிறாளாம்!

நகரத்தின் சந்தடியே அடங்கிப்போன ஏதோ ஒரு டிரங்க் ரோட்டில் கார் போய்க்கொண்டிருக்கிறது. அப்போதும் அவள் வாய் திறக்கவில்லை. அவள் ஏதும் அறியாத ‘சிறுமி’ அல்லவா? ‘சின்னக் குழந்தை மாதிரி’ வீட்டுக்குப் போக வேண்டும் என்று நச்சரிக்கவும் பயமாக இருந்ததாம். ஆமாம்... தான் வழிதவறிக் கடத்திச் செல்லப்படுவதைச் சுட்டிக்காட்டுவதற்குக்கூட அவள் பயப்பட்டாள் என்கிறார் எழுத்தாளர்.

எப்படிப் போகிறது கதை...எப்படியெல்லாம் நம் காதில் பூச்சுற்றுகிறார் கதாசிரியர் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

சாக்லெட்டை அவள் கையில் தராமல், அவள் முகத்தருகே ஏந்தி, அவள் உதட்டின் மீது பொருத்தி லேசாக நெருடுகிறான் அவன். அப்போதும்கூட அவள் வாய் திறந்து தன் எதிர்ப்பை வெளிப்படுத்தவில்லை! அந்த அளவுக்கு அவன் அழகிலும் அவனின் ஆசையைத் தூண்டும் அந்தரங்க விளையாட்டுகளிலும் தன்னைப் பறிகொடுத்துக் கிளுகிளுத்துக் கிடக்கிறாள் அவள்.  அவளைத்தான் ‘சிறுமி’ என்று நமக்கு அறிமுகப்படுத்தினார் ஜெ.

“ரொம்ப நல்லா இருக்குல்லே?” இந்தச் சூழ்நிலையைப் பற்றி, இந்த அனுபவத்தைக் குறித்து அவளது உணர்ச்சிகளை அறிய விழைந்து அவன் கேட்கிறான்.

“நல்லா இருக்கு...ஆனா, பயமா இருக்கு” என்று சொல்லுகிறாள் முன்பின் தெரியாத ஓர் அழகனின் தொடுதலில் சிலிர்த்துப் போன அந்தச் சிறுமி!

புணர்ச்சி இன்பம் துய்த்து முடித்து வீடு திரும்பிய நிலையில், “மழை கொட்டுக் கொட்டுன்னு கொட்டிச்சி. பஸ்ஸே வரல. அதனாலதான் [அவன்]காரில் ஏறினேன். அப்புறம் எங்கேயோ காடு மாதிரி ஒரு இடம்... மனுஷாலே இல்ல...ஒரே இருட்டு. மழையா இருந்தாலும் எறங்கி ஓடி வந்துடலாம்னு பார்த்தா, எனக்கோ வழி தெரியாது. நான் என்ன பண்ணுவேன்...அப்புறம் வந்து...வந்து...ஐயோ! அம்மா அவன் என்னெ...” என்று சொல்லி, புத்தகங்கள் நாலாபுறமும் சிதறி விழ, கூடத்து மூலையில் அவள் சுருண்டு விழுகிறாள்’ என்று விவரித்தவாறு, கதையை அதன் உச்சநிலைக்குக் கொண்டுசெல்கிறார் கதாசிரியர்.

“அடிப்பாவி! என் தலையில் நெருப்பைக் கொட்டிட்டியே...” என்று பதறுகிறாள் தாயார்க்காரி.

இது போன்ற சூழலில், இப்படியாகப் பதறுவது எல்லா சராசரித் தாய்மாருக்கும் உள்ள குணம்தான்.

‘அப்படியே ஒரு முறம் நெருப்பை அள்ளி இவள் தலையில் கொட்டினால் என்ன?’ என்று நினைக்கிறாள் அவள். இதுவும் எதார்த்தம்தான்.

“கடவுளே, நீதான் அந்தப் பாவிக்குத் கூலி கொடுக்கணும்” என்று மகளைக் கெடுத்த இளைஞனுக்குச் சாபம் இடுகிறாள்.

உணர்ச்சிப் போராட்டங்களுக்குப் பிறகு,

‘[மனதில் பொங்கிய]கருணையால் நடந்தவற்றைச் சகித்துக்கொண்டு, ‘நானே இவளை ஒதுக்கினால், இவள் வேறு எங்கே தஞ்சம் புகுவாள்?’ என்று எண்ணி மகளைக் கோபிப்பதோ தண்டிப்பதோ பரிகாரம் ஆகாது’ என்ற முடிவுக்கு வருகிறாள். இதுவும் நடப்பியல் சார்ந்த நிகழ்வுதான்.

இந்நிகழ்வுக்குப் பிறகு ஏறத்தாழ கதை சொல்லி முடிக்கப்பட்டுவிட்ட நிலையில். எஞ்சியிருப்பது கதையின் ‘முடிவு’ மட்டுமே.

“யார்கிட்டேயும் இதைப் பத்திப் பேசாதே. இந்த விஷயத்தில் மட்டும் வேண்டியவங்க நெருக்கமானவங்கன்னு கிடையாது. யார்கிட்டயும் சொல்லலேன்னு என் கையிலே அடிச்சி, சத்தியம் பண்ணு” என்கிறாள் அம்மாக்காரி.

“யாரிடமும் சொல்லாதே” என்று முடித்திருந்தாலே போதுமானது. சத்தியம் செய்யச் சொல்லுவது மிகையானது. பிறரிடம் பகிர்ந்து மகிழத்தக்க நிகழ்வல்ல இது என்பது ஒரு கல்லூரி மாணவிக்குத் தெரியாமலிருக்க வாய்ப்பே இல்லை.

‘சத்தியம் செய்தல்’ஐக்கூட அலட்சியப்படுத்தலாம்; இதை ஒரு சராசரிக் கதை என்றும் ஏற்கலாம். கதையின் ‘முடிவு’ப் பகுதியில் கீழ்க்காணும் நிகழ்வைச் சேர்க்காமல் இருந்திருந்தால்.

குடம் குடமாய் மகளின் தலையில் நீரைக் கொட்டி, தலை துவட்டி,  “நீ சுத்தமாயிட்டேடி...உன் மேலே கொட்டினேனே, அது ஜலமில்லேடி...நெருப்புன்னு நினைச்சுக்கோ. ......ஒனக்கு அகலிகை கதை தெரியுமோ? ராமரோட பாதத் தூளி பட்டு அவ புனிதமாட்டான்னு சொல்லுவா. ...நீயும் புனிதம் ஆயிட்டே”  என்று அம்மாக்காரி சொல்கிறாள். 

ஒரு பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த குமரிப் பெண்ணான அவள் மனம் விரும்பிச் செய்த தவற்றுக்கு, சூழ்நிலையே காரணம் என்று சப்பைக்கட்டுக் கட்டியதோடு, அகலிகையுடன் ஒப்பிட்டு அவளைப் புனிதப்படுத்தியிருக்கிறார் ஜெயகாந்தன்.

இவ்வகையில், இது எதார்த்தமானதொரு படைப்பல்ல.

தவறிழைத்த மகளிடம், “இதைப் பிறரிடம் சொல்லிவிடாதே” என்றுதான் அத்தனை தாய்மார்களுமே சொல்லுவார்கள். இந்த மாமியும் அதைத்தான் செய்கிறாள். கூடுதலாகப் புராணக் கதையையும் மேற்கோள் காட்டுகிறாள். இதில், புதுமை என்றோ, புரட்சி என்றோ சொல்ல என்ன இருக்கிறது.

மகளைக் குளிர்ந்த  நீரால் குளிப்பாட்டி, “குழந்தே, நீ அக்கினியில் குளிச்சிட்டே[சீதாப்பிராட்டி மாதிரி] தூய்மை அடைஞ்சுட்டே; புனிதம் அடைஞ்சுட்டே” என்று சொல்வதிலும் புரட்சியில்லை; புதுமையும் இல்லை. இம்மாதிரிச் சூழலில் புராணக் கதை சொல்லியா ஒரு தாய் தன் மகளைத் தேற்றுவாள்?!

தரத்தில் சராசரிக்கும் கீழே இடம்பெறவேண்டிய இக்கதை, தமிழின் சிறந்த சிறுகதைகளின் வரிசையில் முன்னிலை பெற்றது ஓர் அதிசயம் என்று சொன்னால் அதில் தவறேதும் இல்லை எனலாம்.

*****************************************************************************************************************************************************
22.04.2015 விகடனில் ஜெயகாந்தனின் இக்கதை மீள் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.
*****************************************************************************************************************************************************