தேடல்!


May 5, 2015

ஒரு மருமகளும் மாமியார்க் கிழவியும் எலியும்![கலக்கல் கதை]

[தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை மறைக்க நினைத்து, எனக்குத் தெரிந்த அரைகுறைத் தொழிநுட்பத்தைக் கையாண்டதன் விளைவு, ‘ஒரு மருமகளும்....’[கலக்கல் கதையல்ல; குழப்பக் கதை] மீண்டும் தமிழ்மணத்தில் இணைக்கப்பட்டுவிட்டது. தவறு நேர்ந்தமைக்கு வருந்துகிறேன்]

தன் மருமகளுடனான சண்டையில் வழக்கம்போல் தோல்வியைத் தழுவிய நிலையில், “எனக்குச் சாவு எப்ப வருமோ?” என்று விரக்தியுடன் ‘பெருமாயி’ கிழவி தொணதொணத்தபோது, “சாவு நம் வீடு தேடி வந்து கதவைத் தட்டாது. நாமதான் சாவைத் தேடிக்கணும்” என்று சொல்லி மருமகள் முறைத்துவிட்டுப் போனது கிழவியை வெகுவாக நோகடித்துவிட்டது.
“என்னைச் செத்துத் தொலைன்னு சொல்லிட்டாளே” என்று நாள் முழுக்கப் புலம்பித் தீர்த்தாள் கிழவி.  

“ஏதோ ஒரு கோபத்தில் சொல்லிட்டா போல. அப்புறமா அவ வருத்தப்பட்டிருப்பா” என்று ஒரு வழியாய் மனம் தேறி உறங்குவதற்குப் பாய் விரித்தபோது மருமகள் உச்ச தொனியில் தன் புருஷன்காரனிடம் சொல்வது கேட்டது. “எலித் தொல்லை தாங்க முடியல. மறக்காம நாளைக்கு ‘எலி மருந்து’ வாங்கிட்டு வாங்க.”

இப்போது கிழவி மனதில் வேறொரு சந்தேகம் முளைவிட்டது. “வூட்ல எலி நடமாட்டமே இல்லியே. எலி மருந்து மனுசரைக் கொல்லுற விஷமாச்சே. அதை எதுக்கு  வாங்கியாரச் சொன்னா?”

எத்தனை யோசித்தும் விடை கிடைக்கவில்லை. ஜாமக்கோழி கூவும் நேரத்தில், “நான் முக்காக் குருடி. எலி வர்றதும் போறதும் எனக்கு எப்படித் தெரியும்? அவ பார்த்திருப்பா’ என்று சமாதானமாகி உறங்கிப் போனாள்.

அடுத்த இரண்டு நாட்களில், மீண்டும் ஒரு சந்தேகம் கிழவியின் மனதைக் குடையலாயிற்று. “என் மவன் பொண்டாட்டி சொல்லைத் தட்டாதவனாச்சே. எலி மருந்து வாங்கியாந்திருப்பானா?”

மருமகள் இல்லாத நேரத்தில் மகனிடம் கேட்க நினைத்தாள் கிழவி. அவன் வெளியூர் போயிருந்ததால் அது சாத்தியப்படவில்லை.

அன்று மாலை அவன் வீடு திரும்பினான். அவன் வந்ததும் வராததுமாக, மருமகள் உரத்த குரலில் சொல்வது கேட்டது. “வெச்ச மருந்து அப்படியே இருக்குது. அது சாகல.”

அதிர்ச்சிகுள்ளானாள் கிழவி. “சாகலைன்னு சொல்றாளே, எலியைச் சொல்றாளா, என்னைச் சொல்றாளா?” இப்படியான புதியதொரு சந்தேகம் கிழவியை ஆட்டிப்படைக்கலாயிற்று. எதிர்ப்படுவோரிடமெல்லாம் நடந்ததைச் சொல்லிக் கேள்வி கேட்கிறாள் . 

யாரும் பதில் சொல்வதில்லை; சிரித்து மழுப்பிவிட்டுப் போகிறார்கள்.

பாவம் பெருமாயி கிழவி!
0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000