மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் மனித நேயத்தை ஊட்டி வளர்த்தால்...சாதி, மதம், கடவுள் ஆகியவற்றின் தேவை முற்றிலும் ஒழியும்.

Wednesday, February 3, 2016

மாறாத சில கேள்விகளும் வாழ்நாளில் தீராத துயரங்களும் [மெய்யியல் பதிவு]

சிறந்த சிந்தனையாளர்களின் பின்னூட்டங்களுடன்...15.08.2012இல் எழுதப்பட்டதன் மீள் பதிவு இது.

இதன் நோக்கம், மிகக் கடுமையான காரசாரமான விவாதங்களுக்கு வித்திடுவதல்ல, மிக ஆழமாகவும் அழுத்தமாகவும் சிந்திக்கத் தூண்டுவது மட்டுமே .
வ்வப்போது, வயிற்றுப்பாட்டையும் வாழ்க்கைப் பிரச்சினைகளையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு, அகன்று அடர்ந்து விரிந்து பரந்து கிடக்கும்  பிரமாண்ட அண்டவெளியையும், அங்கே வகை வகையான வடிவங்களில் சுற்றித் திரியும் வித விதமான கோள்களையும் நட்சத்திரக் கூட்டங்களையும், அவ்வப்போது அவை நிகழ்த்தும்  மாயாஜாலங்களையும் கண்டு கண்டு, கற்பனையை வளரவிட்டு மகிழாதவர் எவருமிலர் எனலாம்.

அனைத்தையும் ரசித்து இன்புறுவதோடு நில்லாமல்........................

இவை அனைத்திற்கும் மூலமாக இருப்பது எது, அல்லது எவை, அல்லது எவர், அல்லது எவரெல்லாம்? இவை படைக்கப்பட்டதன் நோக்கம், அல்லது படைக்கப்படாமலே ’என்றென்றும் இருந்துகொண்டே இருப்பதற்கு’ உண்டான அடிப்படை, அல்லது என்றேனும் ஒரு நாள் இவை அனைத்தும் இல்லாமல் போவதற்கான வாய்ப்பு குறித்தெல்லாம் நாம் எல்லோருமே சிந்தித்திருக்கிறோம்; நம் முன்னோர்கள்  சிந்தித்து அறிவித்த முடிவுகளை மனதில் கொண்டு நாம் தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

அனைவரும் ஏற்கத்தக்க ‘முடிவு’ மட்டும் எட்டப்படவில்லை.

இந்நிலையில்................................................................

விண்வெளியில் மறைந்திருக்கும் அல்லது புதைந்து கிடக்கும் ஒரு ‘புதிர்’ அல்லது ‘மர்மம்’ குறித்து ஆழ்ந்து சிந்திப்பதற்கு,  உங்கள் அனைவரையும்  தூண்ட வேண்டும் என்னும் பேரார்வம் காரணமாக, உங்கள் முன்னால் சில கேள்விகளைச் சமர்ப்பிக்கிறேன்.

கேள்வி ஒன்று:

விஞ்ஞான ரீதியாக, பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே இருக்கிறது என்பார்கள். கணிப்புக்கு அப்பாற்பட்டு, காலங்காலமாக, எந்தவொரு அளவுகோலுக்கும் கட்டுப்படாமல்,  எல்லை கடந்த நிலையில் அகன்று விரிந்து பரந்து கிடக்கிற பிரபஞ்சத்தில், ’அது விரிவடைந்துகொண்டே போகிற ஒரு நிலை’ உருவாக வாய்ப்பே இல்லை என்று சொன்னால், அது ஒரு நாள் மெய்ப்பிக்கப்படுகிற ’உண்மை’யாகவும் இருக்கலாம்.

இதே போல, இருக்கிற ஒரு பிரபஞ்சமே எல்லை காண இயலாத பெரும் புதிராக இருக்கையில், ’பிரபஞ்சங்கள் பல’ உள்ளன என்று சொல்வதும் ஏற்கத்தக்க ’உண்மை’ அல்ல என்றே சொல்லத் தோன்றுகிறது.

இந்த அடிப்படைகளை எல்லாம் சொல்லி, உங்களை நான் தயார் செய்வதன் நோக்கமே அண்ட வெளியில் மறைந்து கிடக்கும் புதிரைக் கண்டறியத்தான்; மர்ம முடிச்சை அவிழ்ப்பதற்காகத்தான்.

இனியும் உங்கள் பொறுமையைச் சோதிப்பது அழகல்ல.

வாருங்கள் அந்த மர்ம முடிச்சைத் தேடுவோம்.

முதலில், அதற்கான சூழ்நிலை அமைவது அவசியம்.

தனி அறையில், தனிமையில் கதவை அடைத்துப் படுத்துவிடுங்கள்.

உங்கள் சிந்தனையை அண்டவெளிப் பரப்பில் உலவ விடுங்கள். [இச்செயல் சிறுபிள்ளைத்தனமானது என்று எண்ண வேண்டாம்]

நாம் அறிந்த சூரியன் , அதைச் சுற்றிவரும் கோள்கள், நட்சத்திரக் கூட்டங்கள் என அனைத்தையும் அகற்றுங்கள் [கற்பனையில்தான். கற்பனைகள் உண்மைகளைக் கண்டறியக் காரணமாவது உண்டுதானே?].

எண்ணற்ற சூரியக் குடும்பங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். அவற்றையும் இல்லாமல் செய்யுங்கள்.

பிரபஞ்ச வெளியின் ஒரு புறத்தில், பல கோடி மைல் பரப்பளவில் பெரும் பாறைத் திட்டுகள் இருக்கலாம். அவற்றையும் மறைந்து போகச் செய்யுங்கள்.

இன்னொரு பெரும் பரப்பு நெருப்புக் கோளமாகவும், மற்றொரு பிரமாண்ட வெளிப் பரப்பு வெள்ளக் காடாகவும் இருக்கக்கூடும். மேலும் ஓர் அண்டவெளிப் பரப்பில், மனதை மயக்கும் மாயாஜாலங்கள் நிகழ்ந்து கொண்டிருத்தலும் சாத்தியம். இப்படி இன்னும் நம்மால் அறியப் படாத எதுவெல்லாமோ எங்கெல்லாமோ இருக்கவே செய்யலாம். எந்த ஒன்றையும் மிச்சம் வைக்காமல் நீங்கள் அகற்றிவிட்டதாகக் கற்பனை செய்யுங்கள். அணுக்களையும் விட்டுவைக்காதீர்கள்.

உங்கள் செயல்பாட்டால், விண்வெளியில், காற்று வெளிச்சம் உட்பட பஞ்சபூதங்களால் [பூதம்?... ’மூலக்கூறு’ என்று வைத்துக் கொள்வோம்] ஆன எதுவுமே இல்லை என்றாகிறது.

இப்போது, உங்களின் ஒருமுகப்படுத்தப்பட்ட சிந்தனையை அண்டவெளியில் உலவ விடுங்கள்.

வெளியில் இப்போது எஞ்சியிருப்பது எது? எது? எது?

இருள்?

அதுவும் அகற்றப்படுகிறது.

இனி, இனம் புரியாத ’ஏதோ’ ஒருவித வண்ணம் அல்லது ’ஏதோ ஒன்று’ மிஞ்சியிருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். சலிக்காதீர்கள் அதையும் அகற்றுங்கள்.

சிந்தனையாளர்களே, ஆழ்ந்த சிந்தனையின் வசப்பட்ட உங்களிடம் நான் முன்வைக்கும் முதல் கேள்வி இதுதான்..........................................

எல்லையற்றுப் பரந்து விரிந்து கிடக்கும் இந்தப் பிரபஞ்ச வெளி, அதாவது, விண்வெளி இப்போது எப்படி இருக்கும்?

ஒளி, ஒலி என்று எதுவும் இல்லாத, பருப்பொருள் நுண்பொருள், அணுக்கள் என்று எப்பொருளும் இல்லாத ’வெளி’ எப்படியிருக்கும்?

இப்படி எதுவுமே இல்லாமல் ‘வெளி’ என்று ஒன்று இருப்பது சாத்தியமா? [’வெளி’ என்னும் மூலக்கூறே இல்லை என்று ஆகிறதே? பஞ்ச பூதங்களில் ஒன்று அடிபடுகிறது அல்லவா?]

சாத்தியமே என்றால், மனித அறிவால் அதை உணர்ந்து அறிந்து, பிறர் அறிய விளக்கிச் சொல்வது இயலக்கூடிய ஒன்றா?

”ஆம்” என்றால், எப்போது?

”தெரியாது” என்றால், இந்தப் ’புதிர்’ பற்றிச் சிந்திக்கிற மனிதனால், அந்தப் புதிரை விடுவிக்க இயலாத நிலை நீடிப்பது ஏன்? ஏன்? ஏன்?

“இல்லை” என்றால், மனித அறிவுக்கு எட்டாத ஒரு ’மர்மத்தை’ அண்ட வெளியில் மறைத்து வைத்துக் கொண்டு வேடிக்கை காட்டுவது எது? அல்லது எவை? அல்லது எவர்? அல்லது எவரெல்லாம்?

இரண்டு:

பாமரன் முதன் பகுத்தறிவாளன் [ஆத்திகரோ நாத்திகரோ] வரை, “ஏன்?” என்று கேள்விகள் எழுப்பி, விடை தேடி அலையாதவர் எவருமிலர். அவரவர் வாழும் சூழலைப் பொருத்து, அமையும் வசதிகளைப் பொருத்து எழும் கேள்விகளின் எண்ணிக்கை கூடலாம்; குறையலாம்.

இன்ப நினைவுகளில் திளைக்கும் தருணங்களைவிடவும், துன்பங்களில் சிக்கிச் சீரழிந்து மூச்சுத் திணறும் போது நாம் எழுப்பும் கேள்விகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகும்.

விடைகளை எளிதில் கண்டுவிடுவதற்கான கேள்விகள் மிக மிகக் குறைவு. எத்தனை தேடியும் விடைகளே கிடைக்காத கேள்விகளின் எண்ணிக்கையோ மிக மிக அதிகம்.

முக்கியத்துவம் இல்லாத கேள்விகளுக்கு விடை தெரியாமல் போவதால் நாம்  பாதிக்கப் படுவதில்லை; இழப்பேதுமில்லை. ஆனால், மிகச் சில கேள்விகள் ஆயினும், விடை தெரிந்தே ஆக வேண்டிய அவற்றிற்கு விடைகளைக் கண்டறிய இயலாத போது நாம் நிலைகுலைந்து போகிறோம்.

கணிப்புக்கும் கணக்கீடுகளுக்கும் கட்டுப்படாத நீ.....நீ......நீ........ண்ட, நெடு ஆயுள் கொண்ட இந்தப் பிரபஞ்சத்தில் உள்ளடங்கியிருக்கும் இந்த உலகத்தில் வாழும் வாய்ப்பு நமக்கு இப்போதுதான்  கிடைத்திருக்கிறது.  பிரபஞ்சத்தின் தொடக்க நாள் எதுவாகவோ இருந்துவிட்டுப் போகட்டும், அந்த நாள் முதல் இந்த நாள் வரை, நாம் என்னவாக இருந்தோம்? எங்கே இருந்தோம்? நாம் எங்கேயும் என்னவாகவும் இருந்திடவில்லையா?

விடை கிடைக்காத கேள்விகளில் இதுவும் ஒன்று என்பது  நமக்குத் தெரியும். இந்த இயலாமைக்காக நாம் கவலைப் படுவதும் இல்லை. ஆனால்....................

மரணத்திற்குப் பிறகு என்னவாகப் போகிறோம் என்பன போன்ற கேள்விகளுக்கு விடை கிடைக்காத நிலை வரும்போது, அதை எண்ணி மனம் வருந்துகிறது; கிடந்து தவிக்கிறது.

ஆன்மாவோ, உயிரோ, வேறு எதுவோ, ஏதோ ஒன்று நம் உடம்பில் இடம் கொண்டிருப்பது உண்மை என நம்பினால், நாம் செத்துத் தொலைத்த பிறகு, அதன் கதி என்ன? எங்கெல்லாம் அலைந்து திரியும்? எதில் எதிலெல்லாம் அடைக்கலம் புகுந்து அல்லல்படும்? இந்த நிலை எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும்? என்று பலவாறு சிந்தித்துக் குழம்பி, தெளிவு பெற வழியின்றி மனம் பாடாய்ப்படுவது உண்மை.

’உடம்பில் ஆன்மா, ஆவி, உயிர் என்று எதுவும் ஒட்டிக் கொண்டிருக்கவில்லை. மண்டைக்குள் திணிக்கப் பட்டிருக்கும் ‘மூளை’யே எல்லாம்’ என்னும் முடிவுக்கு நம்மை ஆட்படுத்திக் கொண்டால்..................................

உடம்போடு சேர்த்து இந்த மூளையும் அழிந்த பிறகு [மரணத்திற்குப் பின்] நாம் முற்றிலும் இல்லாமல் போகிறோம். ஆனால், இடைவிடாத மாற்றங்களைச் சந்தித்தாலும், பிரபஞ்சமும் பொருள்களும் இயக்கங்களும் இருந்து கொண்டே இருக்குமே. நாம் மட்டும் இனி எப்போதுமே திரும்பி வரப் போவதில்லை என எண்ணும் போது நம் நெஞ்சு வேதனையில் சிக்குண்டு தவியாய்த் தவிப்பது நிஜம்தானே?

சிந்திக்க வைக்கும் ஆறாவது அறிவு நமக்குத் தரப்படாமல், மற்ற உயிரினங்களைப் போல, வாழ்ந்து முடித்தோ முடிக்காமலோ செத்தொழியும்படிப் படைக்கப்பட்டிருக்கலாமே?

அவ்வாறின்றி, அல்லலுற்றுத் தவிக்கும் நிலைக்கு நம்மை ஆளாக்கிய அதுவை அல்லது அவைகளை அல்லது அவரை அல்லது அவர்களை நான் மனம் போனபடியெல்லாம் ஏசுகிறேன்; நினைத்த போதெல்லாம் திட்டித் தீர்க்கிறேன்.

சிந்தனையாளர்களே,

உங்களுடைய எதிர்வினை என்ன?

மூன்று:

மேற்கண்டன போல, நமக்கு விடை தெரியாத கேள்விகள் எத்தனை எத்தனையோ உள்ளன.

தெரியாவிட்டால் போகிறது என்ற அலட்சியப் போக்குடன் நம்மால் அமைதியுடன் காலம் கடத்த முடிகிறதா?

இல்லைதானே?

“ஏன்? ஏன்? ஏன்?” என்று அடுக்கடுக்கான கேள்விகளைத் தொடுக்கும் திறனுடன்  படைக்கப் பட்டிடுக்கிறோம் நாம். ஆனால், எத்தனை சிந்தித்தாலும் சில உயிர்நாடிக் கேள்விகளுக்கு நம்மால் விடை காணவே முடியாது என்ற ’புரிதல்’ நமக்கு இருக்கிறது. 

கேள்விகள் எழுப்புவதற்கான ’அறிவு’ இருந்தும், ’விடை காணும் திறன்’ இல்லாத ஓர் அவல நிலைக்கு நம்மை ஆளாக்கிய அந்த அதுவை அல்லது அவைகளை அல்லது அவரை அல்லது அவர்களை நான்  நிந்தித்துக்கொண்டே இருக்கிறேன்; மனத்தளவில் அவ்வப்போது கடின வார்த்தைகளால் சாடிக்கொண்டே இருக்கிறேன்.

சிந்தனையாளர்களே,

நீங்களும் என் போன்றவர்தானா?

*****************************************************************************************************************************************************

பின்னூட்டங்கள் கீழே..........


33 comments :

பழனி.கந்தசாமி said...
நான் பெரிய சிந்தனையாளன் இல்லை. ஆனால் இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றியும் இதன் எல்லைகளைப் பற்றியும் கொஞ்சம் சிந்தித்திருக்கிறேன்.

பிரபஞ்சத்தின் எல்லை கற்பனைக் கெட்டாதது என்று என் அறிவு சொல்கிறது. இதை யார் தோற்றுவித்தார்கள் என்ற கேள்வியை விட, யாரால் இந்தப் பிரபஞ்சம் இயக்கப் படுகின்றது என்ற கேள்வி நடைமுறைக்குத் தேவைப்படுகின்றது.

இவைகள் எல்லாம் விடை தெரியாத கேள்விகள். அவரவர்கள் தங்கள் மனதிற்குத் தோன்றின மாதிரி கற்பனைகளை அள்ளி விடலாம். ஆனால் எதுவும் உண்மையை நெருங்காது.

ஆயுள் முழுக்க விவாதிக்கக் கூடிய சிந்தனையைத் தூண்டி விட்டிருக்கிறீர்கள். பார்ப்போம். விவாதம் எப்படி போகிறதென்று?
நித்ய அஜால் குஜாலானந்தா said...
பூதம்? இதன் அர்த்தம் பேய் பூதம் இல்லை சார், ஆங்கிலத்தில் Element என்ற வார்த்தையை சமஸ்கிரதத்தில் பூதம் என்கிறார்கள். Panchamahabhuta, என்றால் நிலம்,நெருப்பு, நீர், காற்று, வெளி [space ] ஆகிய "five elements" களாகும்.
நித்ய அஜால் குஜாலானந்தா said...

**** இருள்?

அதுவும் அகற்றப்படுகிறது.

இனி, இனம் புரியாத ’ஏதோ’ ஒருவித வண்ணம் அல்லது ’ஏதோ ஒன்று’ மிஞ்சியிருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். **** எல்லாத்தையும் அகற்றிய பின்னர் வெறும் இருட்டு, அதையும் அகற்றினா வெளிச்சமா........??? வெளங்கலியே.....ம்ம்.......
நித்ய அஜால் குஜாலானந்தா said...


*******ஒளி, ஒலி என்று எதுவும் இல்லாத, பருப்பொருள் நுண்பொருள், அணுக்கள் என்று எப்பொருளும் இல்லாத ’வெளி’ எப்படியிருக்கும்? ******* இருட்டா இருக்கும் சார்.
நித்ய அஜால் குஜாலானந்தா said...
******இப்படி எதுவுமே இல்லாமல் ‘வெளி’ என்று ஒன்று இருப்பது சாத்தியமா? [’வெளி’ என்னும் மூலக்கூறே இல்லை என்று ஆகிறதே? பஞ்ச பூதங்களில் ஒன்று அடிபடுகிறது அல்லவா?] ***** 13 Billion வருடங்களுக்கு முன்னர் ஒரு புள்ளி இருந்தது, அது வெடித்து இந்த பிரபஞ்சம் வெளியானது. புள்ளியைச் சுற்றி என்ன இருந்தது என்ற கேள்வியே அர்த்தமற்றது, ஏனெனில் அந்த சமயம் நேரம், காலம், [space, time] என்று எதுவுமே இல்லை என்று விஞ்ஞானம் கூறுகிறது. அதே மாதிரி இந்த பிரபஞ்சமும் இவ்வளவு தான் விரிவடைய முடியும் என்று எந்த கட்டுப்படும் இல்லை என்றும் சொல்கிறார்கள்.
நித்ய அஜால் குஜாலானந்தா said...
நீங்க கேட்டிருக்கும் கேள்களுக்கு பதிலை கேட்டால் பலருக்குத் தெரியாது. அல்லது இஷ்டத்துக்கும் ஆளுக்கு ஒன்னு சொல்லுவாங்கள். அப்படியே சொன்னாலும் அதை எப்படி சரி பார்ப்பது? இவர்தான் பதில் சொல்லத் தகுதியானவர் என்று யாரைத் தீர்மானிப்பது? ஒத்தக் கருத்து வர சாத்தியமே இல்லை.
முனைவர் பரமசிவம் said...
வருகை புரிந்து, தேவையான கருத்துகளையும் வழங்கிய பழனி. கந்தசாமி அவர்களுக்கு என் நன்றி.
முனைவர் பரமசிவம் said...
நண்பர் நித்ய அஜால் குஜாலனந்தாவுக்கு என் நன்றிகள்.

மாறுபட்ட தங்களின் பெயரை மிகவும் ரசித்தேன்.

பூதம் என்ற சொல்லுக்குப் பேய், பூதம் என்பது பொருளல்ல; element என்று சரியான விளக்கம் தந்ததற்கு நன்றி நண்பரே.

நானும் பேய், பிசாசு என்று சொல்லவில்லையே? அடைப்பில், ‘மூலக்கூறு’என்று தமிழாக்கியிருக்கிறேனே, கவனிக்கவில்லையா?
முனைவர் பரமசிவம் said...
குஜாலானந்தாவுக்கு,
இருள் அகற்றப்படுவது புரியவில்லை என்கிறீர்கள்.

முடியுமா முடியாதா என்பது வேறு.

அப்படிக் கற்பனை செய்யச் சொல்கிறேன்.அவ்வளவுதான்.

இருள் நீக்கப்பட்டால்,அங்கே ஒளி பரவுமோ பரவாதோ, அதையும் நீக்கி, இருளும் ஒளியும் அற்ற ஒரு நிலையைக் [அது சாத்தியப்படுமா என்பது பற்றி மிகச் சாதாரணமான மனிதன் எனக்கு எப்படித் தெரியும்?] கற்பனை செய்யச் சொல்கிறேன்.

என்னைப் போன்றவர்களும், இயற்கை, படைப்பு பற்றியெல்லாம் சிந்திப்பதில் தவறில்லை என்பதை உணர்த்தவே இந்தப் பதிவு.
Anonymous said...
தூங்கி எழுந்தவுடன் கண்ட கனவிற்குள் போக முடியுமா? மரணத்தைப் பற்றி எதற்கு கவலை? பார்ப்பது உண்மை என்று புலன்கள் சொல்லுகிறது.
மனிதர்களின் பார்வையில் உலகம் வேறு. பிற உயிரினங்களின் பார்வையில் உலகம் வேறு. எது உண்மையான உலகம்? பிறந்தவுடன் இறப்பை நோக்கி பயணம். இந்தப் பயணம் சிரமமில்லாமல் அமைய வேண்டும் என்ற அடிப்படையில் தொடங்கியது நிறுவப்பட்ட மதங்கள். மதங்களுடன் அரசியல் பிரிக்க முடியாமல் போனதால், வந்தது வினை!
முனைவர் பரமசிவம் said...
//’எதுவும் இல்லாத நிலை’........ இருட்டா இருக்கும்//

என் பதிவை மேலோட்டமாகப் படித்தீர்களா?

’எதுவுமற்ற நிலை’என்று நான் சொல்வது இருட்டையும் சேர்த்துதான்.

நான் சொல்வது அறிவியலுக்கு ஏற்புடையதோ இல்லையோ, நான் சொல்லியிருப்பதைத் தாங்கள் முழுமையாகப் புரிந்து கொண்டால், நான் நன்றியுடையவன்ன இருப்பேன்.
முனைவர் பரமசிவம் said...
’நன்றியுடையவனாக’ என்று திருத்திக் கொள்ளுங்கள்.
முனைவர் பரமசிவம் said...
’நன்றியுடையவனாக’ என்று திருத்திக் கொள்ளுங்கள்.
முனைவர் பரமசிவம் said...
குஜாலனந்தா,
புள்ளியிலிருந்து பெரு வெடிப்பு நிகழ்ந்தது என்று விஞ்ஞானம் சொவதை நானும் அறிவேன்.

அவர்கள் சுட்டுகிற அந்தப் பெருவெடிப்பெல்லாம், பிரபஞ்சத்தின் பிரமாண்டத்தைக் கருத்தில் கொண்டால் வெகு அற்பம்.

பெரு வெடிப்பு, சிறு வெடிப்பு பற்றியெல்லாம் பேசுவது என் பதிவின் மையக் கருத்தல்ல.

மீண்டும் வேண்டுகிறேன், தயவு செய்து என் என் பதிவில் நான் வலியுறுத்தும் அடிப்படை கருத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.

எதுவுமற்ற ஒரு நிலை சாத்தியமா?சாத்தியம் என்றால், அதைப் பிறர் அறிய விளக்க முடியுமா என்பதே என் கேள்வி.

பிரபஞ்சம் விரிவடைவதாக நான் குறிப்பிடவில்லை; அதற்கு வாய்ப்பில்லை என்று கருதுவதாகத்தான் சொல்லியிருக்கிறேன்.

சிந்திக்கத் தூண்டும் வகையில் நிறையக் கருத்துகள் சொன்னீர்கள். மிக்க நன்றி நண்பரே.
முனைவர் பரமசிவம் said...
//மரணத்தைப் பற்றி எதற்குக் கவலை?//

நன்றி anonymous.

நான் கவலைப்படுவது உண்மைதான். பிறரும் கவலைப்படக்கூடும் என்ற நம்பிக்கையில்தான் கருத்துகள் சொன்னேன்.

தாங்கள் தந்த விளக்கத்தையும் என் மனம் ஏற்கிறது.

மீண்டும் நன்றி நண்பரே.
நித்ய அஜால் குஜாலானந்தா said...
*******உடம்போடு சேர்த்து இந்த மூளையும் அழிந்த பிறகு [மரணத்திற்குப் பின்] நாம் முற்றிலும் இல்லாமல் போகிறோம். ஆனால், இடைவிடாத மாற்றங்களைச் சந்தித்தாலும், பிரபஞ்சமும் பொருள்களும் இயக்கங்களும் இருந்து கொண்டே இருக்குமே. நாம் மட்டும் இனி எப்போதுமே திரும்பி வரப் போவதில்லை என எண்ணும் போது நம் நெஞ்சு வேதனையில் சிக்குண்டு தவியாய்த் தவிப்பது நிஜம்தானே?**********

தங்கள் பதிலுக்கு நன்றி சார். நீங்கள் மேலே சொல்லியுள்ள நிலை தங்களுக்கு எப்போதிலிருந்து இருக்கு சார்? இந்த நிலை எனக்கு பதினாறு வயதிலிருந்து இருக்கிறது. சில சமயம் தனிமையில் இருக்கும் போது நமக்கும் மரணம் சம்பவிக்கும், ஒரு நாள் மரணப் படுக்கையில் இருப்போம், உயிர் பிரியும் நேரம் வரும்............. அவ்வளவுதான் ஓ....... ஐயோ என்னைக் காப்பாத்துங்க என்று காத்த ஆரம்பித்து விடுவேன். [இது யாருக்கும் இதுவரை தெரியாது]. அப்புறம், வெளியில் போய் நண்பர்கள் யாரையாவது பார்த்த பின்னர் நார்மல் நிலைக்கு வந்து விடுவேன். "நாம் மட்டும் இனி எப்போதுமே திரும்பி வரப் போவதில்லை" என்று நீங்கள் சொல்லியுள்ள வார்த்தை, அதை எப்படி போட்டீர்களோ தெரியாது, இது ஏன் தலையில் அந்த மாதிரி சமயங்களில் எல்லாம் ஓடிய அதே வார்த்தைகள். ஆனால், என் நண்பர்கள் பலரிடம் இதைச் சொல்லி என்னால் புரிய வைக்க முடியவில்லை, அவர்கள் வேறு எதையோ சொல்கிறார்கள். ஆனாலும், இரண்டு பேர் மிகச் சரியாக அவர்களுக்கும் அதே நிலை பலமுறை ஏற்ப்பட்டிருக்கிறது என்று சொல்லியுள்ளார்கள். எங்கேயிருந்து வருகிறோம், எங்கே போகிறோம், செத்த பின்னர் என்ன ஆவோம், போன்ற கேள்விகளுக்கு இன்றிய விஞ்ஞானத்தில் பதில் இல்லை சார். அவங்களைப் பொறுத்த வரை நம் உடல் ஒரு கெமிக்கல் பை, நூற்றி என்பது ரூபாய் மதிப்பு, இது நின்று போனால், பள்ளியில் மாணவர்கள் செய்யும் ஒரு வேதியியல் ஆய்வுகூட சோதனை நின்று போன மாதிரி. அதற்குள் இருக்கும் உணர்வு [Consciousness] என்றால் என்ன என்பதற்கான விளக்கம் அவர்களிடத்தில் இல்லை. இதை பொதுவாக மக்களிடம் கேட்டால், அவர்களும் அவர்கள் மனதிற்குப் பட்டதை ஆளுகொன்றைத்தான் சொல்வார்கள், ஒருமித்த கருத்தை நான் இதுவரை பார்க்க வில்லை.
முனைவர் பரமசிவம் said...
//மேலே சொல்லியுள்ள இந்த நிலை தங்களுக்கு எப்போதிருந்து இருக்கிறது?//

அன்புள்ள குஜாலானந்தா,

என் பள்ளிப்பருவத்திலிருந்தே இம்மாதிரி எண்ணங்கள் என்னை ஆட்டிப் படைத்துக் கொண்டுதான் இருக்கின்றன.

இந்நிலை அனைவருக்கும் பொதுவானதுதானே என நினைத்து என்னை நானே ஆற்றுப்படுத்திக் கொள்கிறேன்.

மனம் பலவீனப்பட்டுவிடாமலும்,சிந்திக்கும் திறன் குறைந்துவிடாமலும் விழிப்புடன் இருந்துவருகிறேன்.

இது போன்ற எத்தனையோ புதிர்கள் மனித உள்ளங்களைக் கலங்கடித்துக் கொண்டுதான் உள்ளன.

வறுமையில் வாடி, வயிற்றுப் பசியைப் போக்குவதற்கே அல்லாடிக் கொண்டிருப்பவர்களை இம்மாதிரி எண்ணங்கள் தாக்கிப் பலவீனப் படுத்துவதில்லை.

சொகுசு வாழ்க்கையை விரும்பிப் பணம் தேடி அலைபவர்களையும், ஆதிக்க மனப்பான்மையுடன் கூட்டம் சேர்த்து திரிபவர்களையும்கூட, இவை பாதிப்பதில்லை.

மேற்கண்டவற்றின் மீது நாட்டம் கொள்ளாமல், எதையும் ஆராய்ந்து அறிவதில் மிக்க ஈடுபாடு உள்ள நம்மைப் போன்றவர்கள்தான், ‘புரிந்தும் புரியாத’ அவல நிலையில் சிக்கித் தவிக்கிறார்கள்.

எனினும், ‘நடப்பது நடந்துதானே தீரும்’ என்ற ‘புரிதலுடன்’ நமக்கு வாய்த்த இந்த வாழ்க்கையை நமக்கும் பிறருக்கும் பயன் தருவதாக வாழ்ந்து முடிப்பதே அறிவுடைமை என்பது என் திடமான நம்பிக்கை.

தங்கள் உணர்வுகளை ஒளிவு மறைவில்லாமல் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி நண்பரே.

வயதில் மூத்தவன் என்ற வகையில் தங்களின் எதிர்காலம் சிறக்க என் மனப்பூர்வமான வாழ்த்துகள்.

நன்றி.
Anonymous said...
வாழ்க்கை ஒரு ரயில் பயணம். யார் எங்கே எப்போ
இறங்கப் போகிறோம் என்று தெரியாது பெரும்பாலானவ்ர்களுக்கு. இது இயற்கை எடுத்த ஒரு நல்ல தீர்வு. பயணம் கொண்டாட்டமாக அமைய முடிந்த வரை முயற்சி செய்வோம்.
Anonymous said...
//எனினும், ‘நடப்பது நடந்துதானே தீரும்’ என்ற ‘புரிதலுடன்’ நமக்கு வாய்த்த இந்த வாழ்க்கையை நமக்கும் பிறருக்கும் பயன் தருவதாக வாழ்ந்து முடிப்பதே அறிவுடைமை என்பது என் திடமான நம்பிக்கை.//
தீர்வையும் நீங்களே அழகாகச் சொல்லி விட்டீர்கள்!
Yesterday is gone. Tomorrow is not here.
Today is the Present(Gift). Let us open it and celebrate!
இக்பால் செல்வன் said...
பிரபஞ்சம் எவ்வளவு விரிவானது எனவோ, இன்னும் எத்தனை எத்தனை பிரபஞ்சங்கள் இருக்கின்றனவோ என எனக்குத் தெரியாது ... அறிவியல் விளக்கங்கள் பல ஏற்றுக் கொள்ளும் படியாக இருக்கின்றன..

நீங்கள் கூற விரும்பிய ஒன்று சூன்ய நிலை என்பதாகும். சூன்யம் என்றால் ஒன்றும் இல்லை என்று அர்த்தம் .. எந்தவித பஞ்சபூதங்களும் இல்லை. ஒளியும் இல்லை. இருளும் இல்லை. உயிரும் இல்லை, உயிரற்றதும் இல்லை. கடவுளும் இல்லை. ஒன்றுமே இல்லை. அப்படியான ஒரு நிலை இருக்க வாய்ப்பிருக்கு ... ஸ்டீபன் ஹாக்கிங்கிஸின் எழுத்துக்களைப் படித்தால் பிரபஞ்சம் அப்படியான ஒரு சூனியத்தில் இருந்தே உருவாகி இருக்கக் கூடும் எனக் கூறுகின்றார்... சூனிய நிலையில் நேரமும் இல்லை. விரிவும் இல்லை. ஒன்றும் இல்லை. அப்படி இல்லாத நிலையும் இருக்கக் கூடிய வாய்ப்பு இருக்கின்றது. அவற்றுக்கான பல விளக்கங்கள் வரும் காலங்களில் வரும் என்பதை கூற முடியும். 
இக்பால் செல்வன் said...
//அந்த நாள் முதல் இந்த நாள் வரை, நாம் என்னவாக இருந்தோம்? எங்கே இருந்தோம்?//

இதனை புத்தர் அழகாக விளக்குவார். ஒரு அகல் விளக்கு இன்னொரு அகல் விளக்கை பற்றி எறிய வைக்கின்றது. அதன் ஒளி ஒன்று தான். ஆனால் ஒரு அகல் விளக்கு இன்னொரு அகல் விளக்கு அல்லவே ... நமது உடல் எவற்றால் உருவாக்கப்பட்டு இருக்கின்றது என்பதை ஆராய்ந்தால் விடைக் கிடைக்கும். தாய் தந்தையிடம் இருந்து பெற்ற உயிரணுவும் - முட்டையுமே நமது பிறப்பு. அது இணைந்து கருவாகிய பின்னர் அன்னை உண்ட உணவு முதல் நாம் சாகும் வரை உண்ணும் உணவு தான் நாமாக மாறுகின்றோம் .. ஒவ்வொரு உயிரணுக்களுக்குள்ளும் உயிர் இருக்கின்றது .. ஆக நமது உடலுக்குள் ஒரு உயிர அல்ல பல கோடி உயிர்கள் இருக்கின்றன. அது இறந்தவுடன் அழிந்து விடுகின்றது.. அழியாமல் இருப்பது நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு கொடுத்த உயிரணுக்கள் மட்டுமே. ஏனையவை அழிந்துவிடுகின்றது ...
இக்பால் செல்வன் said...
//“ஏன்? ஏன்? ஏன்?” என்று அடுக்கடுக்கான கேள்விகளைத் தொடுக்கும் திறனுடன் படைக்கப் பட்டிடுக்கிறோம் நாம். ஆனால், எத்தனை சிந்தித்தாலும் சில உயிர்நாடிக் கேள்விகளுக்கு நம்மால் விடை காணவே முடியாது என்ற ’புரிதல்’ நமக்கு இருக்கிறது.

கேள்விகள் எழுப்புவதற்கான ’அறிவு’ இருந்தும், ’விடை காணும் திறன்’ இல்லாத ஓர் அவல நிலைக்கு நம்மை ஆளாக்கிய அந்த அதுவை அல்லது அவைகளை அல்லது அவரை அல்லது அவர்களை நான் நிந்தித்துக் கொண்டே இருக்கிறேன்; மனத்தளவில் அவ்வப்போது கடின வார்த்தைகளால் சாடிக் கொண்டே இருக்கிறேன்.//

நானும் தான் ஐயா !!! வாழ்க்கை துன்ப மயமானது என்ற புத்தனின் அடிப்படைக் கொள்கையை மட்டும் நினைத்துக் கொள்வதுண்டு ..
முனைவர் பரமசிவம் said...
//பயணம் கொண்டாட்டமாக அமைய முடிந்தவரை முயற்சி செய்வோம்//

//today is the present [gift]. let us open it and celebrate//

எத்தனை சிந்தித்தாலும், முடிவாக, வாழ்க்கைப் பயணத்தில் நாம் செய்து முடிக்க வேண்டியதை மனதில் பதியும் வகையில் சொல்லியிருக்கிறீர்கள் anonymous.

மன நிறைவுடன் நன்றி சொல்கிறேன் நண்பரே.
தருமி said...
ஆழ்ந்த இப்பதிவையும் பின்னூட்டங்களையும் காண ...
முனைவர் பரமசிவம் said...
நான் எடுத்தாளத் தவறிய ‘சூன்யம்’ [வெறுமை] என்னும் சொல்லைக் நினைவுறுத்தியதோடு, அதற்குரிய கூடுதல் விளக்கத்தையும் தந்து,பதிவுக்குச் சிறப்புச் சேர்த்த நண்பர் இக்பால் செல்வனுக்கு மிக்க நன்றி.

ஸ்டீபன் ஹாக்கிங்ஸின்[நான் தவறாக எழுதவில்லையே?]எழுத்துக்களைப் படித்ததில்லை.அவசியம் [google இன் உதவியுடன்] படிப்பேன்.

//அவற்றுக்கான [எதுவுமற்ற சூன்ய நிலை] பல விளக்கங்கள் வரும் காலங்களில் வரும் என்பதைக் கூற முடியும்//

அது சாத்தியமாக வேண்டும் சாத்தியப்பட்டால், மனித குலம் பெரிதும் பயனுறும்; மகிழும்.

முனைவர் பரமசிவம் said...
//அழியாமல் இருப்பது, பிள்ளைகளுக்குக் கொடுத்த உயிரணுக்கள் மட்டுமே//

ஏற்கத்தக்க அறிவியல்பூர்வமான ’உண்மை’

இதுபற்றி என்னுடைய ஒரு பதிவிலும் ‘ஏதோ’ எழுதியிருக்கிறேன்.

மீண்டும் நன்றி செல்வன்.
முனைவர் பரமசிவம் said...
செல்வன்,

’நானும்தான் ஐயா’ என்று தாங்கள் குறிப்பிடுவது எனக்கு மிகுந்த ஆறுதலைத் தருகிறது. பதிவில் ஏதும் தவறாக எழுதிவிடவில்லை என்ற நம்பிக்கையை ஊட்டுகிறது.

நன்றி...நன்றி.
முனைவர் பரமசிவம் said...
//ஆழ்ந்த இப்பதிவையும் பின்னூட்டங்களையும் காண....//

பாராட்டும் தருமி அவர்களுக்குப் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன்.மனம் நிறைந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்.
நிகழ்காலத்தில் சிவா said...
எதுவுமற்ற ஒரு நிலை சாத்தியமா?சாத்தியம் என்றால், அதைப் பிறர் அறிய விளக்க முடியுமா என்பதே என் கேள்வி.

பிரபஞ்சம் விரிவடைவதாக நான் குறிப்பிடவில்லை; அதற்கு வாய்ப்பில்லை என்று கருதுவதாகத்தான் சொல்லியிருக்கிறேன்.//

உங்களின் பிரபஞ்சம் குறித்தான கேள்விகளுக்கு விடை வேதாத்திரி மகரிஷி எழுதிய நூல்களில்தான் விடை இருக்கிறது.

எதுவுமற்ற நிலை சாத்தியம்தான். அதை வார்த்தைகளால் விளக்கமுடியாது. உங்களின் வலியை, மகிழ்ச்சியை நான் விவரித்தால் அல்லது நீங்களே விவரித்தால் எப்படியோ அப்படித்தான் :) மேலும் உங்களைப் பொருத்தவரை நீங்கள் பிறக்குமுன் எதுவும் இல்லாது இருந்தது. நீங்கள் இறந்தபின் எதுவும் இல்லாமல் போய்விடும். இதுதானே சாத்தியம்.

பிரபஞ்சம் குறித்து அறிவியல் சொல்வதைத் தாண்டி எது நாம் சொன்னாலும் அது சரி அல்லது தவ்று என வைத்துக்கொள்ளலாம்.

பிரபஞ்சம் விரிவடைந்துகொண்டேதான் இருக்கிறது. இது எப்படி உனக்குத்தெரியும் என்றால் சும்மா அனுமானம்தான் :) வளர்ச்சி என்பது இந்தபுவியில் இருக்கின்ற ஒவ்வொரு உயிரினத்திற்கும் இருக்கிறது. நாம் பிரபஞ்சத்தில் இருப்பதான் அதன் தன்மைகளைக்கொண்டு இருப்போம். ஆகவே ஒவ்வொன்றிலும் வளர்ச்சி என்பது பிரபஞ்சத்தின் இயல்பு.

உங்களின் கேள்விகள் சரியாக எழுப்பப்பட்டு இருந்தாலும் அவை கேள்வியாகவே வாசகர்களை இழுத்துச்செல்கிறது. அல்லது சிக்கலான வழிமுறையில் சிந்திக்கச் சொல்கிறது. இது என் கருத்து மட்டுமே. தவறாகவும் இருக்கலாம் !
முனைவர் பரமசிவம் said...
//உங்கள் கேள்விகள் சரியாக எழுதப்பட்டிருந்தாலும், அவை கேள்விளாகவே வாசகர்களை இழுத்துச் செல்கின்றன// என்கிறீர்கள்.

உண்மைதான் சிவா.

பிரபஞ்சம், படைப்பு பற்றியெல்லாம் எனக்குப் புரிந்த, பதிவுக்குத் தேவையான சில உண்மைகளை [?] எடுத்துச் சொல்லிவிட்டு, ’வெறுமை’ பற்றிய என் அறியாமையைப் பிறர் மூலம் போக்கிக் கொள்வதற்காகத்தான் கேள்விகளை எழுப்பினேன். [ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டு, ஏதேனும் ஒரு நாள் மிகச் சரியான விளக்கங்கள் பெறப்படலாம் என்ற நம்பிக்கையும் எனக்கு உண்டு].

இதில் தவறேதும் இல்லையே?

என் கேள்விகள் சிக்கலான முறையில் சிந்திக்கச் சொல்கிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

கேள்விகளுக்கேற்ற சரியான விடைகள் கிடைக்காத போது, ‘விடை தேடும் முறை’ சிக்கலானதாகத் தோன்றலாம். அது விடை தேடுபவரின் மனப் பக்குவத்தையும், அவர் தேர்ந்தெடுத்த சிந்திக்கும் வழிமுறைகளையும் பொருத்தது என்று நினைக்கிறேன்.

தெரிந்து, அல்லது வேண்டுமென்றே சிக்கலான முறைகளை நான் முன் வைப்பேனா?

நான் என் கருத்துகளைப் பலர் முன் வைப்பதன் நோக்கமே, ‘உண்மை’யை அறிவதற்குத்தான். பிரபலம் ஆவதற்கோ, புகழ் அடைவதற்கோ அல்ல என்று நான் சொன்னால், அதில் ஓரளவேனும் உண்மை இருப்பதாக நம்புவீர்களா சிவா?
முனைவர் பரமசிவம் said...
வருகை புரிந்து, கருத்துகள் வழங்கி, என் பதிவுக்குச் சிறப்புச் சேர்த்ததோடு என்னையும் பெருமைப்படுத்திய சிவா அவர்களுக்கு நன்றி சொல்ல மறந்துவிட்டேன்.

மிக்க நன்றி சிவா.
நிகழ்காலத்தில் சிவா said...
நான் என் கருத்துகளைப் பலர் முன் வைப்பதன் நோக்கமே, ‘உண்மை’யை அறிவதற்குத்தான். பிரபலம் ஆவதற்கோ, புகழ் அடைவதற்கோ அல்ல என்று நான் சொன்னால், அதில் ஓரளவேனும் உண்மை இருப்பதாக நம்புவீர்களா சிவா? //

ஓரளவிற்கெல்லாம் உண்மை இல்லை. 100 சதவீதம் உண்மை இருக்கிறது என மனதார நம்புகிறேன். ஆகவேதான் உரிமையோடு பின்னூட்டம் இட்டிருக்கிறேன்.

அதனால் இடுகையை ஒட்டி சில தூண்டுதல்களை ஏற்படுத்தும் வண்ணம் கருத்தும் தெரிவித்து இருக்கிறேன்.

தொடர்ந்து எழுதுங்க.. என் மனதில் பட்டதை அப்பப்போ சொல்றேன் :)

வாழ்த்துகள் கடவுள் அல்லது இயற்கை என பொதுவாகக் குறிப்பிடப்படுவது பற்றி தொடர்ந்து ஆர்வமாக எழுதுவது நீங்கள் ஒருவர்தான்.. அதற்காக பாராட்டுகிறேன்.
முனைவர் பரமசிவம் said...
’அன்பு’ சிவாவுக்கு என் நன்றி.

No comments :

Post a Comment