தேடல்!


May 4, 2016

‘அறிவிலிகள்!’...[எச்சரிக்கை! இப்பதிவு உங்கள் மனதைப் புண்படுத்தக்கூடும்!!]

னைத்து உலகங்களையும் கோடி கோடி கோடானுகோடியோ கோடி உயிர்களையும் படைத்தவர் கடவுள் என்கிறார்கள்.

எனவே, ஆறறிவு ஜீவன்களாகிய நம்மைப் படைத்தவரும் அவரே.
நாம் வேண்டிக்கொண்டதால் கடவுள் நம்மைத் தோற்றுவிக்கவில்லை. அதாவது, நம் சம்மதம் இல்லாமலே இவ்வுலகில் பிறந்து இன்பதுன்பங்களை அனுபவிக்கச் சபித்திருக்கிறார் என்று நான் சொன்னால் அதை உங்களால் மறுக்க முடியாது என்பது என் நம்பிக்கை.

அவர் படைத்துவிட்டார்.

வேறு வழியின்றி நாம் வாழ்கிறோம்[அடிமனதில் அழுத்தமாய்ப் பதிவு செய்யுங்கள்]வயது முதிர்ந்த நிலையிலோ அதற்கு முன்னதாகவோ நாம் செத்தொழிவது  100% உறுதி. மகான்களோ ஞானிகளோ இதற்கு விதிவிலக்கானவர் எவருமில்லை.

சாவு நம்மைத் தேடி வரும்வரை காத்திருக்கிறோம். இடைப்பட்ட காலத்தில் அதைத் தேடிப் போக நம்மில்[மனநிலை பாதிக்கப்பட்டோர் தவிர] எவரும் தயாராக இல்லை.

ஆசை...‘இன்னும் வாழ வேண்டும்’ என்னும் பேராசை காரணம். ஆசைப்பட வைத்தவரும் அந்தக் கடவுளே[அல்லவா?]!

இந்த ஆசை காரணமாக, சாவை நினைத்து அஞ்சுகிறோம்; மனம் கலங்குகிறோம்; மரணமில்லாப் பெருவாழ்வை எண்ணி நாளும் ஏங்குகிறோம். ஆனாலும், மரணம் நம்மை விட்டு வைப்பதில்லை; ஓட ஓட விரட்டி ஒரு நாள் ‘காவு’ கொள்ளத் தவறுவதே இல்லை.

இந்தச் சாவுக்கான காரணக் கர்த்தா யார்?

நம்மவர் நாள்தோறும் போற்றித் துதிபாடுகிற கடவுள்தானே?

நம் சம்மதம் இல்லாமலே நம்மைப் பிறப்பித்த கருணை வடிவான  கடவுள், நம் சம்மதம் இல்லாமலே சாகடிக்கவும் செய்கிறார். சாவதற்குள் அடுக்கடுக்கான துன்பங்களின் தாக்குதல்கள் வேறு.

இந்தக் கடவுளைத்தான் ஆதியும் அந்தமும் இல்லாதவர்; அணு முதல் அண்டம் வரை அனைத்தையும் ஆள்பவர்; அருள் வடிவானவர் என்று போற்றிப் புகழ்ந்து வழிபடுகிறது உலகம்.

என்னால் இந்தக் கடவுளைப் போற்றிப் புகழ முடியவில்லை; வழிபடவும் இயலவில்லை.

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் அறிவுடைமை என்கிறார்கள் சான்றோர்கள். அந்த அறிவுடைமை எனக்கில்லை. எனவே.....

நான் அறிவிலி. நீங்களும் என்போன்றவர்தானே?

======================================================================
இது புதுப்பிக்கப்பட்ட பதிவு