தேடல்!


Aug 22, 2016

உலகின் நம்பர் 1 தத்துவச் சிறுகதை!

தோலும் சதையுமாய் நடமாடிய காலத்திலும் சரி, பிரபஞ்சத்தின் ஓர் அணுப்புள்ளியான இப்பூமண்டலத்திலிருந்து விடுபட்டு, சூக்கும தேகத்துடன் வெளி மண்டலத்தில் பிரவேசித்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் சரி, பரம்பொருளைப் பற்றிய சிந்தனையிலிருந்து நான் கிஞ்சித்தும் விடுபடவே இல்லை.

பரம்பொருள் எனப்படும் அந்த ஆண்டவன், கோடானுகோடி அண்டங்களை உள்வாங்கிக்கொண்டு, வரையறைகளுக்குக் கட்டுப்படாமல் விரிந்து...மிக மிக மிக விரிந்து பரந்து கிடக்கும் இந்தப் பிரபஞ்ச வெளியில் எங்கே இருக்கிறான்?

அறியும் பேரார்வத்துடன் நான் பயணித்துக்கொண்டிருந்தேன். 

பருப்பொருளாகிய தேகத்தை நான் ஏற்கனவே இழந்துவிட்டிருந்ததால், இங்கே ‘நான்’ என்று நான் குறிப்பிடுவது நுண்பொருளான ஆன்மாவைத்தான்.

பஞ்ச பூதங்களின் சேர்க்கையில் உருவான கோள்களையும், நட்சத்திரங்களையும் இன்ன பிறவற்றையும் கடந்து வெற்று வெளியில் நான் பயணித்துக்கொண்டிருந்தேன். என்னுடன் ஏராள ஆன்மாக்கள்.

பிரபஞ்ச வெளியின் ஒரு திக்கில் கன்னங்கரிய இருள். மிகப் பெரும் பரப்பை அது ஆக்கிரமித்துக்கொண்டிருப்பது போல் தோன்றியது. அந்த வெளியில்தான் நரகம் இருப்பதாக ஆன்மாக்கள் நடுங்கும் குரலில் முணுமுணுத்தன.

இன்னொரு திக்கில் ஒளி வெள்ளம். அதை ஏறிட்டுப் பார்ப்பதே அசாத்தியமாகத் தோன்றியது. அங்கேதான் சொர்க்கம் இருப்பதாக ஆன்மாக்கள் சொல்லிக்கொண்டன.

செய்த பாவபுண்ணியங்களுக்கேற்ப, அனிச்சைச் செயலாய் ஆன்மாக்கள் பிரிக்கப்பட்டு ஏதாவது ஒரு வெளியில் செலுத்தப்பட்டன. எனக்குப் பிரகாச வெளி.

அவ்வெளியில் நுழையாமல் நான் தயங்கி நின்றேன்.

“ஏன் நிற்கிறாய்? தொடர்ந்து செல்” அசரீரியாய் ஒரு குரல் ஒலித்தது. அந்த வினாடிவரை நான் கேட்டறியாத முற்றிலும் மாறுபட்ட ஒலி அது. அது என்ன மொழி என்ற கேள்வி தேவையற்றுப்போனது.

“நான் கடவுளைச் சந்திக்க வேண்டும்” என்றேன்.

“அவரைச் சந்திக்க விரும்பினால் நீ சொர்க்கத்தை இழக்க நேரிடும்.”

“சம்மதம். ஒரே ஒரு முறை கடவுளைச் சந்திக்க முடியும் என்றால் நான் நரகம் புகவும் தயார்’ என்றேன் திடமான குரலில்.

என் பின்னால் அணிவகுத்து நின்ற ஆன்மாக்கள் என்னைப் பைத்தியமாக எண்ணிப் பரிதாபப்பட்டன.

“கடவுளைச் சந்தித்த பிறகு நீ மீண்டும் பூமண்டலத்தில் பிறந்து அல்லல்பட நேரிடும்.” என்றது அசரீரி.

மீண்டும் “சம்மதம்” சொன்னேன்.

“அதோ தெரிகிறதே இருளற்று ஒளியற்று நிறமற்று ஒரு பரந்த வெளி, அதைக் கடந்தால் ஞான வெளி தென்படும். அதையும் கடந்தால் சூன்ய வெளி. அதன் மையப் புள்ளியில் நீ கடவுளைச் சந்திப்பாய். செல்லலாம்.” -அசரீரி.

ஞான வெளியில் என் பயணம் தொடர்ந்தது. தூரம் எவ்வளவு; கால அளவு என்ன என்பவற்றையெல்லாம் என்னால் கணிக்க இயலவில்லை. ஆனாலும் பயணித்தேன்...பயணித்தேன்...பயணித்தேன்.

ஒரு கட்டத்தில், ஞான வெளியைக் கடந்து சூன்ய வெளியில் நுழைந்துவிட்டதை என்னால் உணர முடிந்தது. அது சாத்தியமானது எப்படி என்பதையும் என்னால் அறியவோ உணரவோ இயலவில்லை.

சூன்யத்தின் மையப் புள்ளியை நான் நெருங்கியிருக்க வேண்டும். “மானிட ஆன்மாவே நில்” என்ற குரல் என்னை ஆணியடித்தாற் போல் நிற்க வைத்தது.

“நான் கடவுள் பேசுகிறேன்.  என் தோற்றம்; அதற்கான காரணம்; அது நிகழ்ந்த காலம் போன்றவையெல்லாம் பிறர் அறியக்கூடாத ரகசியங்கள். அவை பற்றி ஆராயத் தலைப்பட்டால் மனித மூளை ஸ்தம்பித்துவிடும். எனவே, நீ வந்த நோக்கத்தைச் சொல்” என்றார் கடவுள்.

நான் சிலிர்த்தேன்; சொன்னேன்: “பூமண்டலத்திலிருந்து  வருகிறேன்...”

சொல்லி முடிப்பதற்குள் கடவுள் குறுக்கிட்டார். “அறிமுக ஆலாபனைகள் தேவையில்லை. விசயத்துக்கு வா.”

“நீங்கள் ஒருவர்தானே கடவுள்?” -நான் கேட்டேன்.

‘பக்’கென்று சிரித்தார் கடவுள்; சொன்னார்: “ஆமாம்.”

“பரம்பொருளே, தங்கள் படைப்பில் எத்தனையோ அதிசயங்கள்; பிரமிக்க வைக்கும் விசித்திரங்கள் உள்ளன. தங்களின்  கருணைக்குப் பாத்திரமானவை கணக்கில் அடங்காத உயிரினங்கள். அவற்றில் மனித இனமும் ஒன்று. இந்த மானுட ஜாதிக்கு ஆறறிவைத் தந்தீர்கள். அது உங்களைப் பற்றிச் சிந்திக்க வைத்தது. பெரும்பான்மை மனிதர்களுக்கு உங்களின் ‘இருப்பு’ குறித்து ஏதும் புரியவில்லை. ஆனால், மகான்கள் என்று சொல்லப்படும் சிலர் மட்டும் தங்களை உணர்ந்ததாக மட்டுமல்ல, பார்த்ததாகவும் சொல்லியிருக்கிறார்களே. அது சரியா எம்பெருமானே?” 

“அதெல்லாம் பிரமை. என்னை உணர்வதோ பார்ப்பதோ மானிட இனத்தவர்க்குச் சாத்தியமே இல்லை.”

”உண்மை இதுவாக இருக்க, உங்கள் பெயரில் ஆளாளுக்கு ஒரு மதத்தை உருவாக்கிக்கொண்டு, என் மதமே மெய்; உன்னுடையது பொய் என்று பரப்புரை செய்து, பெரும் பெரும் கலவரங்களைத் தூண்டி, கணக்கு வழக்கில்லாமல் அப்பாவி மக்களைக் கொன்று குவித்திருக்கிறார்கள். இனியேனும் இவ்வகை அவலங்கள் நிகழாதிருக்கத்  தாங்கள் அருள் புரிய வேண்டும்” -சொல்லி முடித்து, வெறுமையான சூன்ய வெளியில் தன்னந்தனியனாய்த் தலை வணங்கி நின்றேன் நான்.

கண நேர மவுனத்திற்குப் பின்னர் பேசலானார் கடவுள்: “மானிட ஆன்மாவே, நான் சொல்வதை உன்னிப்பாகக் கேள்.....

ஓர் ஏவுகணை. நானே உருவாக்கியது என்று வைத்துக்கொள். அதன் கனபரிமாணங்கள் உங்களின் கணித அளவைகளுக்குக் கட்டுப்படாதவை. அது எக்காலத்தும் பழுதடையாது; அழியாது. அதன் ஆயுள் என்னுடைய ஆயுள் போல.

அதை முடுக்கிவிட்டால் நேர்க்கோட்டில் செல்லும். எது குறுக்கிட்டாலும் அதைத் துளைத்துக்கொண்டு சென்றுகொண்டே இருக்கும்.

அது ஊடுருவும் வேகம், வாயு வேகமல்ல; ஒளியின் வேகமல்ல; மனிதர்களின் மனோ வேகமும் அல்ல; என்னுடைய மனோ வேகம்.

பிரபஞ்சத்தின் ஒரு புள்ளியிலிருந்து நான்...நானே முடுக்கிவிடுவதாக வைத்துக்கொள்.

அண்டவெளிகளிலுள்ள அனைத்தையும் அது ஊடுருவிப் பாய்கிறது...பாய்ந்துகொண்டே இருக்கிறது.

இப்படிப் பாய்ந்து செல்லும் ஏவுகணை என்றேனும் ஒரு நாள் இந்தப் பிரபஞ்சத்தின் எல்லையைத் தொடக்கூடுமா? பிரபஞ்சத்துக்கு எல்லை உண்டா? எல்லை என்று ஒன்று இருந்தால், அந்த எல்லைக்கப்புறம் இருப்பது என்ன? பிரபஞ்சம்தானே?

பிரபஞ்சம்...எல்லை...பிரபஞ்சம்...எல்லை...பிரபஞ்சம்...எல்லை...ஹே!...என்ன மாயம் இது என்று உனக்கு வியக்கத் தோன்றுகிறது அல்லவா?” -சொல்லி நிறுத்திய கடவுள், சற்றே இடைவெளிக்குப் பின்னர் தொடர்ந்தார்.

“ஏ மானுட ஆன்மாவே, நான் சொல்லியவற்றைத் தெற்றெனப் புரிந்துகொண்டாய்தானே? இனி நீ பூமண்டலம் செல்லுவாய். மீண்டும் மனிதனாகப் பிறப்பாய்.....

நீ என்னிடம் கேட்டறிந்தவற்றை உன் மனித குலத்திடம் சொல். மதவாதிகளிடம் அழுத்தம் திருத்தமாகச் சொல். பிரபஞ்ச வெளிக்கு எல்லையுண்டா என்று கேள்....எல்லோரிடமும் கேள். திகைத்துத் திருதிருவென்று விழித்து நிற்கும் அவர்களிடம், இந்தவொரு எளிய கேள்விக்கே விடை தெரியாத நீங்கள் கடவுள் பற்றிக் கதை கதையாய் அளக்கிறீர்கள். உன் கடவுள் என் கடவுள் என்று அடித்துக்கொண்டு சாகிறீர்கள். இது வடிகட்டின முட்டாள்தனம் அல்லவா என்று கேள்...கேள்...உன் ஆயுள் முழுக்கக் கேட்டுக்கொண்டே  இரு. மூடர்கள் திருந்துகிறார்களா பார்ப்போம்.”

சொல்லி முடித்து மோனத்தில் ஆழ்ந்தார் கடவுள்.

சூன்ய  வெளியிலிருந்து விடுபட்டுத் தெறித்து மண்ணுலகில் வந்து விழுந்தேன்.

“சூன்யம்...பிரபஞ்சம்...எல்லை...” என்று என் வாய் முணுமுணுத்துக்கொண்டிருந்தது.

“டேய், என்னடா இது? பில்லி சூன்யம்னு தூக்கத்தில் பிதற்றிகிட்டிருக்கே. எழுந்திரு. விடிஞ்சி வெகு நேரம் ஆச்சு” என்று என்னைப் பெற்றவள் தட்டி எழுப்ப, பதறியடித்துக்கொண்டு எழுந்தேன்.
===============================================================================
சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னர், ஆனந்த விகடனின் ‘பொன் விழா’ ஆண்டுப் போட்டியில் பங்கேற்று நிராகரிக்கப்பட்ட  சிறுகதை இது. 

‘உலகின் நம்பர் 1 தத்துவச் சிறுகதை’ன்னு தலைப்புத் தந்தது.....?

ஹி..ஹி..ஹி... நானேதான். 

கொஞ்சம் படித்ததும் உங்களுக்குப் புரிந்திருக்கும்   இது நான் கிறுக்கிய ‘தத்துப்பித்து'க் கதை என்று!

வருகைக்கும் வாசிப்புக்கும் மிக்க  நன்றி.