தேடல்!


Sep 8, 2016

வந்தது தெரியும்! போவதும் தெரியும்!!

இத்தலைப்பு, “...வந்தது தெரியும்...போவது எங்கே...” என்னும் கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகளை நினைவுபடுத்தியிருக்கும். அந்த நினைவுடன் இந்தப் பதிவையும் படியுங்கள்.
தந்தையின் உடம்பிலிருந்து,  பல்லாயிரம் கோடி அணுக்களுள் ஒன்றாக வெளிப்பட்டு, கருப்பாதையில் நீந்தி,  [இடையில் செத்து மடியாமல்] தாயின் கருப்பையில் சினை முட்டையுடன் இணையும்வரை ‘தன்னை அறிதல்’[‘நான்’ என்னும்  உணர்வு] அந்த ஒற்றை உயிரணு[மரபணு?]வுக்கு வாய்த்திடவில்லை.

அந்த ஒற்றை அணு, இரட்டையாகி, பலவாகி, பல்லாயிரம் கோடி அணுக்களாகப் பரிணாமம் பெற்றுக் குழந்தையாக உருவாகிக்கொண்டிருந்த காலக்கட்டத்திலும்கூட, தன்னை அறிதல் சாத்தியப்படவில்லை.

குழந்தை முழு வடிவம் பெற்று, பிறந்து, மண்ணில் தவழ்ந்து, சில ஆண்டுகள் கழிந்தபிறகே சிந்திக்க முடிகிறது; தன்னைத்தான் அறிய இயலுகிறது; ‘நான்’ என்னும் உணர்வைப் பெற முடிகிறது.

அதுவரை ஒற்றை அணுவுக்கோ, அணுத்தொகுப்புக்கோ  ‘அறிதல்’ உணர்வு முற்றிலுமாய் இல்லை என்பது அறியற்பாலது. 

ஒரு காலக்கட்டத்தில் ‘நான்’ என்னும் உணர்வைப் பெறும் மனிதன் சாகும்வரை ‘நான்’என்னும் உணர்வை இழக்காமலேயே வாழ்கிறான். சாவின்போது அந்த ‘நான்’ஐ முற்றிலுமாய் இழக்கிறான். 

எனவே, செத்த பிறகு, உடம்பும் இல்லை; ‘நான்’ என்ற உணர்வும் இல்லை. மனித வாழ்க்கைக்கு நிரந்தரமாய் ஒரு முற்றுப்புள்ளி விழுகிறது. எஞ்சியிருப்பது அல்லது மிஞ்சியிருப்பது ஏதுமில்லை என்றாகிறது.

செத்த பின்னர்  இல்லாமல் போவதை,  இப்போது மட்டுமல்ல, சிந்திக்கத் தெரிந்த காலம் முதல் எப்போதுமே மனித குலம் விரும்பியதில்லை. அதன் விளைவாக, அந்த ‘நான்’க்கு, ‘ஆன்மா/ஆத்மா’ என்று ஏதேதோ பெயரிட்டு, உடம்பு அழிந்த பிறகும் அது அழிவதில்லை; அடுத்தடுத்து பிறவிகள் எடுத்தோ, சொர்க்கம்/நரகம் சேர்ந்தோ, இறைவனுடன் இரண்டறக் கலந்தோ வாழ்ந்துகொண்டே இருக்கும் என்று ‘அனுமானம்’ செய்வதில் வல்லவர்கள் நம்பினார்கள்; அந்த நம்பிக்கையைப் பிற மனித மனங்களிலும் ஆழமாய்ப் பதியவைத்துவிட்டார்கள்.

நம்முடைய இந்த உடம்பு உருவாக முதற்காரணமாக இருந்த அந்த ஒற்றை அணு[தந்தையிடமிருந்து வெளிப்பட்டுத் தாயின் கருப்பையில் நுழைந்தது]வும் சரி, அதனின்றும் பல்கிப் பெருகி நாம் தோன்றி வாழ்ந்திடக் காரணமான கோடானுகோடி அணுக்களும் சரி அழியும் தன்மை வாய்ந்தனவே[அழியும் அணுக்கள் என்னவாகும்? பஞ்சபூதப் பேரணுக்களுடன் இரண்டறக் கலக்கும் அல்லது ‘வெளி’யில் கரைந்துபோகும் என்று கொள்ளலாமா?]

எனவே,
இறப்புக்குப் பின்னர் நாம் இல்லாமல் போகிறோம் என்பதே எதார்த்தம். 

“இல்லையில்லை. அந்த ஒற்றை அணுதான் ஆன்மா, அது அழியாத் தன்மை வாய்ந்தது” என்று நம் முன்னோர் நம்பியிருக்கவும்கூடும். ஆனால், அது ஏற்கத்தக்கதல்ல. காரணம்.....

அந்த ஒற்றை அணு, கருமுட்டையில்  நுழைவது சாத்தியம் இல்லாமல் போயிருந்தால், அதனோடு கருப்பாதையில் பயணித்த பிற கோடானுகோடி அணுக்கள் அழிந்தொழிந்தது போல அதுவும் அப்போதே அழிந்து மறைந்திருக்கும். அது, இயல்பாகவே அழியும் தன்மை கொண்டதுதான்.

ஆக, உடம்பு அழிந்த பிறகு நாம் இல்லாமல் போகிறோம் என்னும் கருத்து உறுதிப்படுகிறது. 

விதிவிலக்காக, அணு வேறு, ஆன்மா வேறு. அது ஒற்றை அணு மீது சவாரி செய்து கரு முட்டைக்குள் நுழைந்தது என்றோ, குழந்தை உருவாகிக்கொண்டிருந்த காலக்கட்டத்தில் ஏதோ நுழைவாயிலில் புகுந்து உடம்புடன் ஐக்கியமாகியது என்றோ, உடல் அழியும் போது ஏராள பாவபுண்ணியங்களைச் சுமந்து வெளியேறுகிறது என்றோ நம்புகிறவர்கள் இருக்கக்கூடும். அது அவர்களின் விருப்பம்...ஆசை[நம் ஆசையும் அதுதான்!]...பேராசை! அதில் குறுக்கிட வேறு எவருக்கும் உரிமை உண்டா என்ன?!
===============================================================================================
எண்ணங்களுக்கு எழுத்து வடிவம் தந்திருக்கிறேன். ஏதோ என்னால் ஆனது. பிழை காணின் எள்ளி நகைத்திட வேண்டாம்.

நன்றி.