தேடல்!


Jul 22, 2017

டாஸ்மாக் ‘சரக்கு’ம் ஒரு பருவக் குமரியும்! [ஒ.ப.கதை]

“அப்பா, மண்டிக்குத்தானே போறீங்க?” - சிலம்பி கேட்டாள்.

“அங்கதானே எனக்கு வேலை. நீ வேற ஏதோ சொல்ல வர்றே. சொல்லும்மா” என்றான் செல்லப்பன்.

“அப்பா...அது வந்துப்பா...” -எஞ்சிய சில வார்த்தைகள் தொண்டைக் குழியில் தேங்கி நின்றன.

“சொல்லு சிலம்பி.”

“மூட்டை சுமந்துட்டு வீடு திரும்பும்போது தவறாம டாஸ்மாக் போறீங்க. குடிச்சுட்டு வழில அலங்கோலமா விழுந்து கிடக்குறீங்க. என்னோட படிக்கிற தோழிங்க பார்த்துட்டுக் கமுக்கமா சிரிக்கிறாங்க. எனக்கு ரொம்ப அவமானமா இருக்குப்பா” என்றாள் சிலம்பி.

மகளை நெருங்கிய செல்லப்பன் கை உயர்த்தி, “உன் மேல சத்தியமா இனி....”

குறுக்கிட்டாள் சிலம்பி. “சத்தியம் பண்ணாதீங்கப்பா. சாமி மேல, தாய் மேலன்னு நீங்க பண்ணின சத்தியம் எதையும் நேத்துவரை காப்பாத்தினதில்ல. அதனால....”

“...............”

“அம்மா போடுற சண்டைக்குப் பயந்து, வீட்டுக்கு வாங்கி வராம வெளியிலேயே குடிச்சிட்டிருந்தீங்க. அந்த அம்மாவும் உங்ககிட்ட அடி உதை பட்டு உடம்பு நலிஞ்சி சீரழிஞ்சி செத்துப்போனாங்க. இனி இங்க உங்களைக் கண்டிக்க யாருமில்ல. அதனால.....”

“சொல்லுடா கண்ணு. தயங்காம சொல்லு.”

“இனி நீங்க நம்ம வீட்டிலேயே குடிக்கலாம். குடிச்சிட்டு வீட்டுக்குள்ள எங்க வேணுன்னாலும் விழுந்து கிடக்கலாம். என் தோழிங்களோ அக்கம்பக்கத்து ஜனங்களோ யாரும் பார்க்க மாட்டாங்க; சிரிச்சிக் கேலி பண்ணவும் மாட்டாங்க. நீங்க டாஸ்மாக் போனா அங்கேயே குடிப்பீங்க. அதனால, உங்களுக்குத் தேவையான சரக்கைக் காலேஜ் முடிஞ்சி வரும்போது டாஸ்மாக் போயி நானே வாங்கி வந்துடுறேன்” என்ற சிலம்பி, அலமாரியிலிருந்து ஒரு குவார்ட்டர் மது பாட்டிலை எடுத்துவந்து, “இதை நேத்திக்கே வாங்கிவந்துட்டேன். வேலை முடிஞ்சி வந்து குடிங்க” என்றாள்; பொங்கிவந்த அழுகையைக் கட்டுப்படுத்துவதற்காக,  சுவரில் தொங்கிய தன் தாயின் புகைப்படத்தில் பார்வையைப் பதித்தாள்.

பதற்றத்துடன் சிலம்பியின் கைகளைப் பற்றிக்கொண்ட செல்லப்பன், “ஐயோ என் செல்லமே, என்ன காரியம் செஞ்சே? கண்ட கண்ட காலிப் பசங்க குடிச்சிட்டுக் கும்மாளம் அடிக்கிற இடத்துக்கு உன்னைப் போகவிட்ட நான் மனுஷனே அல்ல. பெண்டாட்டியைத்தான் சாக விட்டுட்டேன். பெத்த மகளான உன்னையாவது நல்லா வாழவைப்பேன். இது சத்தியம் மகளே. உயிருள்ளவரை இனி குடிக்க மாட்டேன்” என்று சொல்லி, நீர் வடியும் கண்களுடன் வெளியேறி நடந்தான்.
===============================================================================