எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வெள்ளி, 5 செப்டம்பர், 2025

மூதாதையர் ஆவிகளும் காக்கைகளும் தெரு நாய்களும்!

நான் பகுத்தறிவாளன்[ஹி... ஹி... ஹி!!!]. என் எதிர் வீட்டுக்காரன் நேர் எதிர்மாறானவன்[என் மறைமுக எதிரியும்கூட]; மூடநம்பிக்கைகளின் புகலிடம் என்றே சொல்லலாம்.

அவனின் மூடப் பழக்கங்களில் ஒன்று தினமும் தன் வீட்டின் முன்புறக்  கைப்பிடிச் சுவரில் காக்கைகளுக்குச் சோறு வைப்பது.

காக்கைகள் அதைத் தின்னும்போது சிதறும் சோற்றுப் பருக்கைகள் என் வீட்டு வாசல்வரை சிதறுவது அன்றாட நிகழ்வு.

“ஏப்பா, நீ சோறு வெச்சித்தான் காக்கைகள் உயிர் வாழுதா? எப்போதாவதுன்னா பரவாயில்லை. தினமும் வைக்கிறே. அதுகள் வாசலை அசிங்கப்படுத்துறது உனக்குத் தெரியாதா?” என்று கேட்டேன்.

“காக்கைகள் என் மூதாதையரின் ஆன்மாவைச் சுமந்துட்டு வருது. அதுகளுக்கு வைக்கிற சோறு அவங்களின் பசியைத் தணிக்குது” என்றான்.

“இது மூடநம்பிக்கை அல்லவா?" -நான்.

“நம் முன்னோர்கள் செய்ததைத்தான் நானும் செய்யுறேன்.” -அவன்.

நான் பதில் பேசவில்லை.

அடுத்த சில நாட்களுக்குப் பிறகு.....

உண்டு மிச்சம் வைத்த உணவுகளை ஒரு பாக்குத் தட்டில் சேகரித்து என் வீட்டு வாசலில் வைப்பதை வழக்கம் ஆக்கினேன். நாய்கள் வந்து தின்றுவிட்டு அவன் வீட்டு வாசலில்[என் வீட்டு வாசலிலும்தான்> சகித்துக்கொண்டேன்] மலம் கழித்துச் செல்வதை வழக்கம் ஆக்கின.

தினமும் என்னை முறைத்துப் பார்ப்பதை வழக்கமாக்கிய எதிர் வீட்டுக்காரன் ஒரு நாள் பொங்கி எழுந்தான்.

“வர்ற நாயெல்லாம் என் வாசலை அசிங்கப்படுத்திட்டுப் போகுது. தெரு நாய்களுக்குத் தினமும் சோறு போடுறியே உனக்கு அறிவு இருக்கா?” என்றான்.

“எனக்கு அறிவெல்லாம் இல்ல. நம் மூதாதையர்களின் ஆவிகளைக் காக்கைகள் சுமந்து வர்ற மாதிரி தெரு நாய்களும் சுமந்துட்டு வருதுன்னு, ஆன்மிக ஞானி சத்துக்குரு ஜக்கி வாசுதேவனார் சொன்னதை நாலு நாள் முன்பு அவரைத் தரிசிக்கப்போனபோது கேட்டேன்; பழைய ஏட்டுச் சுவடி ஒன்றையும் ஆதாரமாகக் காட்டினார். அவருடைய அதி தீவிரப் பக்தன் நான்” என்றேன் கமுக்கமாக.

சற்று நேரம் என்னை முறைத்தானே தவிர வாய் திறந்து ஏதும் சொல்லவில்லை என் ம.மு.எதிரி.

அன்றிலிருந்து தெரு நாய்களுக்கு உணவளிப்பதை நிறுத்தினேன். அவனோ காக்கைகளுக்குச் சோறு வைப்பதை நிறுத்தவே இல்லை.

நம் மக்களில் பெரும்பாலோர் நல்லவர்கள்தான்; ஆனால், புத்திசாலிகள் அல்ல!