வெள்ளி, 1 ஜூலை, 2022

ஆண்களுடன் பணிபுரியும் அழகுப் பெண்களுக்குக் கொஞ்சம் அறிவுரைகள்!!!

"தலைப்பு, 'ஆண்களுடன் பணிபுரியும் பெண்களுக்கு.....' என்று இருந்தால் போதுமே, 'அழகு' என்கிற அடைமொழி எதற்கு?" என்கிறீர்களா?

அவலட்சண ஆண்கூட அழகுள்ள பெண்ணுக்குத்தான் வலை விரிக்கிறான். அது இல்லாத பெண்ணைக் குடு குடு கிழவன்கூடச் சீந்துவதில்லையே!? ஹி... ஹி... ஹி!!!

அறிவுரைகள்:

1.அலுவலகத்தில் உடன் பணியாற்றுகிற எவரும் உங்களின் உறவுக்காரர் அல்ல என்பதை ஒருபோதும் மறவாதீர். அவர் அயலவர் என்பதால் அவருடன் உங்களின் தனிப்பட்ட விவரங்களைப் பகிர்தல் கூடாது. குறிப்பாகத் தொலைபேசியில் உரையாடும்போது மிகுந்த எச்சரிக்கை தேவை.

2.நீங்கள் ஏதேனும் சாதனை நிகழ்த்திப் பாராட்டுதலுக்கு உள்ளாகும்போது, எவரும் உங்களைக் கை குலுக்கி வாழ்த்தவோ, கட்டியணைத்துப் பாராட்டவோ[வயதானவராக இருந்தாலும்கூட. வயது அதிகரிக்க அதிகரிக்கச் சபல புத்தியும் அதிகரிக்கும்] அனுமதிக்கக் கூடாது.

3.உங்களைச் செல்லப் பெயரில் அழைத்து ஒருவர் பேசுகிறார் என்றால், உங்களுடனான நெருக்கத்தை அதிகப்படுத்திக் கொஞ்சம் கொஞ்சமாக உங்களை வசப்படுத்த அவர் முயல்கிறார் என்று அர்த்தம். "இதெல்லாம் எனக்குப் பிடிக்காது" என்று ஆரம்பத்திலேயே அவரிடம் சொல்லிவிடுங்கள்.

4.குழுவாகப் படம் எடுத்துக்கொள்ளலாமே தவிர, எக்காரணத்தை முன்னிட்டும் தனிப்பட்ட நபருடன் புகைப்படம் எடுப்பதைத் தவிருங்கள்; படங்களைப் பகிர்தலும் தவிர்க்கப்பட வேண்டியதே.

5.ஆண் ஊழியருடன் இணைந்து தேனீர் பருகச் செல்வது கூடாது. இணைந்து பணியில் ஈடுபட நேர்ந்தால், அந்தத் தனிமையைப் பயன்படுத்தி, உங்களின் ஆடை அலங்காரத்தையோ அபிரித அழகையோ புகழ்ந்து உங்களின் மனதில் இடம் பிடிக்க முயல்வார் அவர். அம்மாதிரியான சூழலில் மிகுந்த எச்சரிக்கை தேவை.

6.சக ஊழியர் உங்களுடன் உரையாட நேர்ந்தால், அவர் உங்களின் முகம் பார்த்துப் பேசுகிறாரா, அல்லது, பார்வையை அந்தரங்கப் பிரதேசங்களில் அலைபாய விடுகிறாரா என்பதைக் கண்காணியுங்கள். அவர் அத்தகைய சபலப் புத்திக்காரர் என்றால் இயன்றவரை அவருடன் சுருக்கமாகப் பேசுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

7.அவரோடு கலந்துரையாடும்போது, இருவருக்கும் நடுவே, 'போதுமான இடைவெளி' உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

8.உரையாடலின்போது ஆபாசமான சேட்டைகள் செய்தாலோ, இரட்டை அர்த்தம் தொனிக்கும் வகையிலான வார்த்தைகளைப் பயன்படுத்தினாலோ அஞ்சாமல் அவற்றைத் தவிர்க்குமாறு சம்பந்தப்பட்டவரை எச்சரிக்கை செய்யத் தவறுதல் கூடாது.
======================================================================================
ஆதாரம்: 'அவள் விகடன்'