வெள்ளி, 10 மே, 2024

மோடி தோற்றால்.....

இந்த இந்தியத் திருநாட்டில் பக்திப் பித்தர்கள் மிக அதிகம்[99.99%?] என்பதை ஏற்கனவே அறிந்துகொண்டிருக்கும் நம் பிரதமர் மோடி, 2024 தேர்தலில் அவர்களின் வாக்குகளை அள்ளுவதற்காக, தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் எவ்வளவோ இருந்தும், மில்லியன் கணக்கில் ரூபாய் செலவு செய்து அயோத்தியில் பாலராமர் கோயிலைக் கட்டினார்.

பிராமண எதிர்ப்பாளர்களைக் கவர, பால ராமர் சிலையை அவரே பிரதிஷ்டை செய்தார்[இதற்கு முன்பு நிகழ்த்தப்படாத சாதனை இது].

‘இந்தியா’ கூட்டணிக் கட்சிக்காரர்கள் ராமர் கோயில் திறப்பு விழாவைப் புறக்கணித்ததைப் பரப்புரையின்போது மறவாமல் சாடினார். அதன் மூலம் ராம பக்தர்களின் வெறுப்புக்கு அவர்கள் ஆளாவார்கள் என்று நம்பினார்.

எவரும் எதிர்பாராத வகையில் ராமர் கோயிலுக்குச் சென்று, வேத மந்திரங்கள் முழங்க பால ராமனின் பாதங்களில் விழுந்து, தான் ராமனின் அதி தீவிரமான பக்தன் என்பதைக் காட்டிக்கொண்டார்.

தேர்தல் பரப்புரைக்கிடையே, செல்லும் ஊர்களிலுள்ள பிரபல சாமி கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்தார். இதன் மூலம், ராம பக்தர்கள் என்றில்லாமல் அனைத்துப் பக்தக் கோடிகளின் வாக்குகளும் தனக்கு[+கட்சி வேட்பாளர்கள்]ச் சிந்தாமல் சிதறாமல் கிடைக்கும் என்று நம்பினார்.

இ.கூட்டணியினர் மீதான உச்சக்கட்ட வெறுப்பில்.....

“இந்தியா கூட்டணிக்காரர்கள் ஆட்சியைக் கைப்பற்றினால், அயோத்தி ராமர் கோயிலைப் பூட்டிவிடுவார்கள்”[ஊடகச் செய்தி] என்று கடுமையாக மக்களை எச்சரித்திருக்கிறார்.

ஆக, மோடி தன் பரப்புரையின் மூலம், என்றென்றும் தான் ராமபிரானின் அடிமை என்பதை அடையாளப்படுத்திக்கொள்வதைப் பார்க்கும்போது, தன் வெற்றிக்கு முழுக்க முழுக்க ராமனையே அவர் நம்பியிருக்கிறார் என்பது தெள்ளத் தெளிவாகப் புரிகிறது.

இந்நிலையில், அவர் தேர்தலில் தோல்வியைத் தழுவுவாரேயானால்.....

மனநிலை பாதிக்கப்படுவார் என்பதில் சந்தேகமே இல்லை.

இந்த அவலம் நிகழக்கூடாது.

இவரைப் போல ஆகச் சிறந்த பக்திமான் உலக அளவில் எவரும் இல்லை என்பதால் இவர் வெற்றி பெற்றே ஆகவேண்டும்.

எனவே, ‘பாஜக’  வேட்பாளர்களை மிக அதிக அளவில் வெற்றி பெறச் செய்து, மீண்டும் மோடியை ஆட்சிக் கட்டிலில் அமர வைப்பது இந்நாட்டு மக்களின் கடமை ஆகும்.

வெல்க மோடி! வளர்க அவரின் ராமர் பக்தி!! 

                                   *   *   *   *   *

https://news7tamil.live/modis-claim-that-ram-temple-will-be-locked-once-congress-comes-to-power-is-a-blatant-lie-priyanka-gandhi-vadra.html#google_vignette