எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

சனி, 19 அக்டோபர், 2019

ஒரு ‘குடு குடு’ கிராமத்துக் கிழவியின் கதை

‘கிளுகிளு’ பருவக் குமரிகள் குறித்த காதல் கதை என்றால் எல்லோருக்கும் பிடிக்கும். இது சாவோடு ‘சடுகுடு’ விளையாடிக்கொண்டிருந்த ஒரு கிராமத்துக் கிழவியின் கதை. வாசிப்பது உங்கள் விருப்பம்! நீங்கள் வியத்தகு நினைவாற்றல் உள்ளவரெனின் தவிர்க்கலாம்!
சேலம்- கோவை நெடுஞ் சாலையில், சங்ககிரியை அடுத்த ஆறாவது கிலோ மீட்டரில், பல்லக்காபாளையம் செல்லும் ஊராட்சிப் பாதை கிளைவிடும் இடம். சாலையின் விளிம்பில், முகம் வைத்து நீண்டு கிடக்கும் பனை ஓலை வேய்ந்த அந்தத் தேனீர்க் கடை நல்லப்பனுடையது.

கடையை ஒட்டி, வரிசையில் குந்தியிருந்த ஐந்தாறு குடிசைகளுக்கும் சேர்த்துக் குடை பிடித்துக்கொண்டிருந்தது ஒரு பெரிய ஆலமரம்.

அதன் நிழலில், தன்னைப் போலவே காலாவதி ஆகிப்போன ஒரு கயிற்றுக் கட்டிலில் சிறு பிள்ளையைப் போல முடங்கிக் கிடந்தாள் அத்தாயி. கிழவிக்கு அன்று உடம்பு சுகமில்லை.

பல்லாங்குழி ஆடிக்கொண்டிருந்த ஆடு மேய்க்கும் சிறுமிகளில் ஒருத்தி, “ஆயா...ஒம் மருமூவ கூப்புடுது” என்றாள்.

சோறு உண்ணத்தான் மருமகள் அழைக்கிறாள் என நினைத்துவிட்ட அத்தாயி, “இப்போ சோறு வேண்டாம். ஒரு தம்ளாரு சுடு தண்ணி மாத்தரம் கொண்டாரச் சொல்லு” என்றாள்.

சில வினாடிகளில் மருமகள் வந்தாள். சூடான நீரோடு அல்ல; சுடச்சுட வார்த்தைகளோடு.

“நானும் பார்த்துட்டிருக்கேன். சாணி பொறுக்கப் போகாம காத்தாலேயிருந்து மரத்தடியிலேயே கிடத்தி வெச்சிருக்கியே, என்ன நோக்காடு வந்துது? ஊரு ஒலகத்தில் வயசானவங்க இல்ல? அவங்களுக்கெல்லாம் நோய் நொடி வர்றதில்ல? இதா ஆச்சி அதா ஆச்சி, உயிர் போகப் போகுதுங்கிற மாதிரி கட்டிலே கதின்னு படுத்துக் கிடக்கிறே. யார் யாருக்கோ சாவு வருது; இந்தச் சனியனுக்கு ஒரு சாவு வருதா?” என்று பொரிந்து தள்ளினாள்.

ரு சாணக் கூடையை அத்தாயி மீது வீசிவிட்டுப் போனாள்.

நெடுஞ்சாலையில் சாணம் பொறுக்கிக்கொண்டிருந்தாள் அத்தாயி.

கூடையிலிருந்து சிதறிய சாணத்தில் ஊன்றிய கால்கள் சறுக்கிவிட, இடம் பெயர்ந்து, சாலையின் நடுவே மல்லாந்து விழுந்தாள் கிழவி. 

கடூரமான ‘கிறீச்’ ஒலியோடு சாலையைத் தேய்த்து நின்றது ஒரு லாரி.

“ஏம்ப்பா நல்லப்பா, இன்னிக்கோ நாளைக்கோன்னு இருக்கிற  இந்தக் கிழவி, சாணி திரட்டி வந்து வறட்டி தட்டிப் போட்டுத்தான் உன் வீட்டு அடுப்பு எரியணுமா?” என்ற குரல் கேட்டுத் திடுக்கிட்டு நிமிர்ந்தான் டீ ஆற்றிக்கொண்டிருந்த நல்லப்பன்.

கடை எதிரே, லாரி ஓட்டுநரின் ஆதரவில் தன் தாய் நிற்பதைக் கண்டான்.

மவுனமாய்க் கிழவியை அழைத்துப் போய்க் கட்டிலில் கிடத்தினான்.

“காடு வா வாங்குது; வீடு போ போங்குது. இந்த வேலைக்கெல்லாம் போகச் சொல்லி உன்னை யார் அடிச்சது? நீ லாரியில் அடிபட்டுச் செத்துத் தொலைச்சிருந்தா, இப்போ கருமாதிச் செலவுக்குக்கூடக் கையில் காசில்ல. வேளா வேளைக்குக் கொட்டிகிட்டுச் சும்மா கிடந்து தொலையேன்.”

பேசி முடித்துவிட்டு நகர்ந்தான் நல்லப்பன்.

அதோ.....மருமகள் வந்துகொண்டிருக்கிறாள்!
======================================================================================== இது அடியேனின் படைப்பு! ‘தேனமுதம்’ என்னும் சிற்றிதழில் வெளியானது.

இன்னும் என்னங்கடா பகவான்?!

காப்பீட்டு நிறுவனத்தில் ஊழியராக வேலைபார்த்து, சிறிது காலம் தலைமறைவாகி, மீண்டும் வெளிப்பட்டுத் தன்னைத்தானே “நான் கல்கி[விஷ்ணு எடுக்கவிருந்த 10ஆவது அவதாரம் என்பார்கள்]யாக அவதரித்திருக்கிறேன்” என்று சொல்லிச் சொல்லிச் சொல்லி மிகப் பெரும்பாலான மக்களை மூளைச் சலவை செய்து, கோடி கோடியாய்ச் செல்வம் சேர்த்துள்ள விஜயகுமாரை ஊடகச் செய்திகளின் வாயிலாக நம்மில் மிகப் பெரும்பாலோர் அறிந்திருப்பர் என்பதே என் நம்பிக்கை.

இன்றைய நாளிதழ்களில்.....

#இன்று 3ஆவது நாளாக இவருடைய ஆசிரமத்தில் சோதனை நடத்தப்பட்டபோது, ஆசிரம நிர்வாகிகள் ஒரு மூட்டையை ஆசிரமத்தின் பின்புறமாக வீசியெறிந்ததைக் கண்ட வருமான வரித்துறையினர் ஓடிச் சென்று அந்த மூட்டையைக் கைப்பற்றிச் சோதனையிட்டபோது அதில் 45 லட்சம் ரொக்கப்பணம் இருந்தது தெரிய வந்தது.

ஏற்கனவே, 24 கோடி இந்திய ரூபாய்களும் 9 கோடி வெளிநாட்டுக் கரன்சிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அரசு மற்றும் தனியாருக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தொடர்பான பத்திரங்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்# என்றிப்படியான பரபரப்பூட்டும் செய்திகள் வெளியாகியுள்ளன. இவை போன்ற இன்னும் பல செய்திகள் வெளியாகிட நிறையவே வாய்ப்புள்ளது.

ஏற்கனவே நீங்கள் அறிந்திருப்பதற்கான வாய்ப்புள்ள இச்செய்திகளை நினைவுபடுத்தி உங்களின் நேரத்தை வீணடிப்பது என் நோக்கமல்ல.

ஒரே ஒரு கேள்வியை நம் இதாழாளர்கள் முன்வைப்பது என் விருப்பம் ஆகும். அது.....

“நானே கல்கி அவதாரம்” என்பது தொடங்கி இந்த ஆள் பரப்புரை செய்த அத்தனை பொய்களையும் இந்நாள்வரை தவறாமல் வெளியிட்டு மூடநம்பிக்கைகளில் சிக்குண்டு தவிக்கும் மிகப் பெரும்பாலான மக்களுக்குப் பெரும் தீங்கு விளைவித்தீர்கள்.

இந்த நபர் ஒரு மோசடிப் பேர்வழி என்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னரும், ‘பகவான் கல்கி’ என்றே குறிப்பிட்டுச் செய்தி வெளியிடுகிறீர்கள். இது நீங்களெல்லாம் தெரிந்து செய்யும் குற்றமா, அறியாமையில் செய்யும் தவறா என்பது புரியவில்லை.
[இது இன்றைய நாளிதழ் ஒன்றில் வெளியாகியுள்ளது]

உண்மை எதுவாயினும் இனியேனும் இந்தத் தவற்றைச் செய்யாதீர்கள்; இந்த ஆள் குறித்துச் செய்தி வெளியிட நேர்ந்தால், ‘தன்னைத்தானே கல்கி அவதாரம் என்று சொல்லிக்கொண்ட விஜயகுமார்’ என்று குறிப்பிடுங்கள்.

இது என் வேண்டுகோள்.
===========================================================================