எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வியாழன், 13 ஜூலை, 2017

‘சிறு’நீரின் ‘பெரும்’ பயன்கள்!!

‘ஆத்திரத்தை அடக்கலாம். மூத்திரத்தை அடக்க முடியாது[கூடாது]’ என்பார்கள். அதை அடக்கி ஆள்வதோ அடங்கிப்போவதோ அவரவர் விருப்பம். ஒன்றுக்கும் உதவாதது என்று நாம் நினைக்கிற அந்த ‘ஒன்னு’க்கின்  பயன்கள் குறித்துச்  சில சுவையான தகவல்கள்! 
*சிலவகைத் தோல் நோய்களுக்குச் சிறுநீர் தடவுவது பண்டைய இந்திய மருத்துவத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

*ஒரு காலத்தில், ரோமானியர்கள் துணைகளைச் சுத்தம் செய்வதற்கான பிளீச்சிங் பொருளாகப் பயன்படுத்தினார்கள்.

*போர்களின்போது காயங்கள் ஏற்பட்டு, போதிய ஆண்டிசெப்டிக் களிம்புகள் கிடைக்காதபோது வீரர்கள் காயங்களில் தடவிக்கொள்வார்கள். பாக்டீரியாவைக் கொல்லும் குணம் சிறுநீருக்கு உண்டு என்பதால் உலகெங்கிலும் இது நடைமுறையில் இருந்திருக்கிறது.

*சிறுநீரில் நிறைய ‘யூரியா’ உள்ளது.  யூரியாவில் ‘நைட்ரஜன்’ அதிக அளவில் இருக்கும். மரங்களுக்கோ செடிகளுக்கோ பாய்ச்சினால் அது நல்ல எருவாகி உரம் சேர்க்கிறது. ஆனாலும், சிறுநீர்ப் பாசனம் அதிகமானால் செடிகள் வாடிவிடக்கூடும்.

*[சிறுநீரின் மஞ்சள் நிறத்திற்கும் தங்கத்திற்கும் முடிச்சுப் போட்டு, சிறுநீரிலிருந்து தங்கத்தைப் பிரித்தெடுக்க விதம் விதமான முயற்சிகளைச் செய்து விஞ்ஞானிகள் தோற்றார்கள்].

மேற்கண்ட தகவல்களை நமக்குத் தந்து உதவிய நூல்: ‘கிட்னியைக் கவனி’, ‘சூரியன் பதிப்பகம், மயிலாப்பூர், சென்னை. முதல் பதிப்பு: டிசம்பர், 2014.


கீழ்க்காணும் தகவல்களை நமக்குத் தருபவர்: ‘சர்வரோக நிவாரணி’ நூலைத் தொகுத்த சுவாமி பூமானந்தா[[ http://tamilnatural.blogspot.in/2016/07/blog-post_248.html#.WWdIBLpuLIU ]

சிறுநீரை..........
*தினமும் 3 வேளை   அருந்தினால் ஆரோக்கியமாக வாழலாம்”

*லேசாகச் சூடு செய்து காதைக் கழுவினால் காதுவலி, இரைச்சல், செவிட்டுத் தன்மை நீங்கும்.  

*கண்களைக் [சிறுநீரினால்] கழுவினால் கண்வலி, கண்சிவத்தல், கண்வீக்கம் முதலியன அகன்று விடும்.

*அருந்துவதால் ஜலதோஷம், பீனிசம்[மூக்கடைப்பு, மூக்கில் புண், மூக்கில் சதை வளர்தல் போன்ற மூக்கு தொடர்புடைய அனைத்து வியாதிகளும்] ஆகிய நோய்களும்   குணமடையும். 

*உடம்பில் தேய்த்தால் அனைத்து விதமான தோல் வியாதிகள் குணமடையும். 

*‘சிறுநீரை அருந்தலாம் என்று சிலர் கூறுகிறார்கள் ஆனால், இது தவறு. சிறுநீரில் இருக்கும் அதிகப்படியான உப்பு, உடலில் நீர் வறட்சி உண்டாவதற்கான காரணியாக அமையும்’ என்று மிரட்டுபவர்களும்[‘தமிழ் மருத்துவர்’] உள்ளனர்http://www.tamildoctor.com/pissing-mater/

விரும்புவோர் பயன்படுத்துங்கள். நல்லது நடந்தால் என்னைப் பாராட்டுங்கள். எதிர்மறை விளைவு என்றால் சூரியன் பதிப்பகத்தாரையும் சுவாமி பூமானந்தாவையும்.....என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்!

முன்னாள் இந்தியப் பிரதமர் மொரார்ஜி தேசாய் அவர்கள்,  மிகு சிறுநீர்ப் பிரியர் என்பதை நினைவுபடுத்திப் பதிவை நிறைவு செய்கிறேன்.
===============================================================================

கடவுள் தேவைப்படுகிறார்.....சில நேரங்களில்!!!

கடவுள் இருக்கிறாரோ இல்லையோ, சில நேரங்களில்  சில/பல முட்டாள்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்ளக் ‘கடவுள் தேவைப்படுகிறார்’ என்பதென்னவோ உண்மை!
“டாக்டர் கூப்பிடுறாருங்க.” -செவிலி சொல்ல, உள்ளே போனான் மோகன். 

“உங்கப்பாவை அழைச்சிட்டுப் போகலாம்” என்றார் டாக்டர் மதன்.

“ஏன் டாக்டர், அப்பா பிழைக்க மாட்டாரா?” 

"ஹார்ட் ரொம்பவே டேமேஜ் ஆயிடிச்சி. இனி அவர் பிழைக்கிறது டாக்டர்கள் கையில் இல்ல. கடவுள் கருணை காட்டினா உண்டு” என்று சொல்லி விரித்த கையை மேலே உயர்த்திக் காட்டினார் மதன். வருத்தம் மீதூர, தொங்கிய தலையுடன் நகர்ந்தான் மோகன்.

“டாக்டர், நீங்க நாத்திகர்னு கேள்விப்பட்டிருக்கேன். அப்புறம் ஏன் அந்த ஆள்கிட்ட கடவுளை வேண்டிக்கச் சொன்னீங்க?” -கேட்டார் அவருக்கு எதிரே அமர்ந்திருந்த நோயாளி.

“அதுவா.....?” -சிரித்துவிட்டுத் தொடர்ந்தார் மதன்.

“சில நேரங்களில் நோயாளி செத்துடுவார்னு டாக்டர் சொன்னா, அவர் கணிப்பையும் மீறிப் பிழைச்சுடறது உண்டு. பிழைச்சுடுவார்னு சொல்லிச் செத்துடுறதும் உண்டு. இந்த மாதிரி நேரங்கள்ல நோயாளியைச் சார்ந்தவன் கும்பல் சேர்த்துட்டு வந்து, “டாக்டர் ஒழிக”ன்னு கோஷம் போடுறான். நஷ்ட ஈடு கேட்குறான். கொடுக்க மறுத்தா கண்ணுல பட்டதையெல்லாம் அடிச்சி நொறுக்குறான். அதனால, நோயாளி பிழைச்சுடுவாரா செத்துடுவாரான்னு தீர்மானமா ஒரு முடிவைச் சொல்லாம கடவுளைக் கைகாட்டி விட்டுடுறோம். இதுல, டாக்டர் ஆத்திகரா, நாத்திகரா என்ற கேள்விக்கே இடமில்லை.”

“மக்கள் மனசை ரொம்ப நல்லாப் படிச்சிருக்கீங்க” என்றார் நோயாளி..

“டாக்டர்கள் நோய்களைப் படிச்சா மட்டும் போதாது. மக்கள் மனசையும் படிச்சாத்தான் இன்னிக்கெல்லாம் தொழில் நடத்த முடியும். இது காலத்தின் கட்டாயம்” என்றார் மதன்.

‘பிழைக்கத் தெரிந்த டாக்டர்’ என்று மனதுக்குள் முணுமுணுத்தார் நோயாளி.
****************************************************************************************************************************************