எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

புதன், 18 டிசம்பர், 2024

“அமித்ஷாஜி, சொர்க்கத்தில் உங்களுக்கு ஓரிடம் உறுதி! உடனே புறப்படுங்க ஜீ!!”

//நேற்று மாநிலங்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “இந்தக் காலத்தில் அம்பேத்கர் என்று கோஷமிடுவது ஃபேஷனாகிவிட்டது. இத்தனை முறை அம்பேத்கர் பெயரைக் கூறியதற்கு மாறாக, பகவானின் பெயரைக் கூறியிருந்தால் அவர்களுக்கு சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்” என்று தெரிவித்தார்[புதிய தலைமுறை]//

இஸ்லாமியர்கள் ஒரு நாளில் ஐந்து தடவைகள்தான் ‘அல்லா’வின் பெயர் சொல்லி வழிபாடு நிகழ்த்துகிறார்கள். நம் ‘ஆன்மிகப் பேரொளி’ அமித்ஷாஜியோ ஒரு நாளில் ஒரு முறை அல்ல, ஒன்பது முறை பகவான் ராமச்சந்திர மூர்த்தியின் பெயர் சொல்லி மனம் நெகிழ்ந்து நெக்குருகுகிறார்[செவிவழிச் செய்தி].

பகவானை மக்கள் மறந்துவிடாமலிருக்க, தலைவர் மோடியுடன் இணைந்து நகர்ப்புறம் மட்டுமல்லாமல் பட்டிதொட்டியெல்லாம் தமக்கான சுகபோகங்களைத் துறந்து பரப்புரை செய்கிறார் அமித்ஷு.

இவரின் ஆன்மிகப் பணியைப் பெரிதும் மதித்துத் தனக்கு மிக அருகிலேயே சொர்க்கத்தில் இவருக்காக ஓரிடத்தைப் பகவான் முன்பதிவு[Reserve] செய்திருக்கிறார்.

பகவானால் அனுப்பப்பட்ட மோடிஜி வேறு பக்திமான் எவருக்கேனும்[அமித்ஜியைக் காட்டிலும் அவரால் அதிகம் நேசிக்கப்படுபவர்] அமித்ஷுவுக்கான இடத்தை
[பகவானுக்கு மிக ஆருகில்] ஒதுக்கும்படிப் பரிந்துரை செய்தால், அந்த இடம் அவரிடமிருந்து பறிபோகும். 

ஆகவே, “எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்குத் தாமதம் செய்யாமல் சொர்க்கம் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள்” என்று அருட்பெருஞ்செல்வர் அமித்ஷாஜியை வேண்டுகிறோம்!

                                     *   *   *   *   *

https://www.puthiyathalaimurai.com/india/tvk-leader-vijay-condemns-amit-shahs-comment-on-ambedkar?utm_source=newsshowcase&utm_medium=gnews&utm_campaign=CDAqEAgAKgcICjDSxJULMJOpqwMwz4K3Aw&utm_content=rundown


ஜக்கி[வாசுதேவன்] சாமானியர் அல்ல; சாதனையாளர்!!![நடுநிலை ஆய்வு]

ழுதுவதற்குக் கணிசமான அளவில் கருப்பொருள்கள் இருப்பில் இருக்கும் நிலையில், விருப்பமே இல்லாமல் இப்பதிவை நான் எழுதக் காரணம், குற்றங்கள் சாட்டப்பட்டவராய் வெளிநாட்டுக்கு ஓடிப்போய்த் திரும்பி வந்த நிலையில், தன்னைப் பரம யோக்கியராகவும், மக்கள் பணி செய்பவராகவும் நம்ப வைத்திட ஜக்கி யூடியூபில் அடுத்தடுத்துக் காணொலிகள் வெளியிட்டுவருவதுதான்.

மக்களின் மூடத்தனத்தை மூலதனமாக்கி, கோடிக்கணக்கில் சம்பாதித்து, விதம் விதமாய் பைக்குகள், கார்கள், ஏராள வசதிகளுடனான யோகா மையம், அவ்வப்போது கூத்து, கும்மாளம் என்று சொகுசாக வாழும் ஜக்கியின் வளர்ச்சிக்கு அவரிடம் உள்ள தனித் திறமைகள் பெரிதும் உதவிகரமாக உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை.

அவற்றிற்கான ஒரு பட்டியல்:

முன்னோடிகள்:
முதலீட்டுக்குப் போதிய பண வசதி இல்லாத நிலையில், வணிகம் செய்தோ, வேறு தொழில் செய்தோ பெரிய பணக்காரன் ஆக முடியாது என்பதைப் புரிந்துகொண்ட ஜக்கி, சாமியார் வேடம் தரித்து மிகக் குறைந்த அவகாசத்தில் கோடிகளைச் சேர்த்த  ஓஷோ, புட்டபர்த்தி சாய்பாபா, பாபா ராம்தேவ் போன்றவர்களைத் தன் முன்னோடிகளாக வரித்தது.

கை கொடுத்த கவர்ச்சி:
*கண்களையும், சிற்பங்களுக்கு உள்ளது போன்ற எடுப்பான மூக்கையும் நெற்றியையும் தவிர, முழு முகத்தையும் மறைக்கும் அழகானதும் அடர்த்தியானதுமான தாடி. 

*கொஞ்சம் நெய் தடவி உருவிவிட்டால் எத்தனை மணி நேரமானாலும் உருக்குலையாத திரட்சியான நீண்ட தடித்த மீசை.  

*வழுக்கையை மறைத்து வயதைக் குறைத்துக் காட்டும் தலைப்பாகை. 

*அந்தக் காலத்து ராஜாக்களை நினைவுபடுத்தும் நீண்ட அங்கி. 

*தோளில் துவண்டு மார்பில் தவழ்ந்து பாதம் தொட்டுப் புரளும் நீண்ட துப்பட்டா.

*மன்னர்களோ அனைத்தையும் துறந்ததாகச் சொல்லிக்கொள்ளும் சாமியார்களோ அணிந்திராத விதம் விதமான அழகு மணிகள் கோத்த மாலை.

மக்களின் மூடத்தனங்களை மூலதனம் ஆக்கல்:
மக்கள் அறிவியல் வளர்ச்சியால் நவநாகரிகர்களாக வாழுகிறார்களே தவிர, அவர்களின் மண்டையில் இருப்பது அந்தக் காலக் காட்டுமிராண்டி மூளையே என்பதைப் புரிந்துகொண்ட அதி புத்திசாலித்தனம்.

தொழில்:
மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ‘யோகா பயிற்சி’யை இளம் வயதிலேயே ஒரு பயிற்சியாளரிடம் கற்றுக்கொண்டு, அதையே தன் தொழிலுக்கு மூலதனம் ஆக்கியது.

இடத் தேர்வு:
வருமானம் ஈட்ட முடியாது என்பதால் ஏழை எளிய வறிய மக்கள் வாழும் ஊர்களைத் தவிர்த்து, தேவைக்கும் மேற்பட்ட வருமானமும் வசதியான வாழ்க்கையும் அமையப்பெற்ற மக்கள் வாழுகிற கோவையைத் தேர்வு செய்தது.

தொழில் ரகசியம்:
லிங்கபைரவி கோயில், சூரிய குண்டம், சந்திர குண்டம், ஆதியோகி சிலை எல்லாம் உருவாக்கி அங்கெல்லாம் சென்று கண்மூடித் தியானம் செய்தால் துன்பங்கள் அகலும் என்று மக்களை நம்ப வைத்தது[யூடியூப் காணொலி ஒன்றில், அம்மையார் ஒருவர் ‘ஜக்கியே[சத்குரு] தன் வயிற்றில் பிள்ளையாகப் பிறந்திருப்பதாகக் கூறுகிறார்> “ஐயோ, இந்த ஆள் எந்த அளவுக்கு நம் பெண்களை மடச்சிகளாக ஆக்கியிருக்கிறார்!” என்று வாய்விட்டு அலறத் தோன்றுகிறது].

அசாத்தியத் துணிச்சல்:
தான் எள்ளி நகையாடப்படுவதைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல், சத்குரு[பரம்பொருளின் குரு] என்று தனக்குத்தானே பட்டம் சூட்டிக்கொண்ட அசாத்தியத் துணிச்சல்.

மக்களின் பலவீனங்களைப் படித்தல்:
மக்களின் பலவீனங்களைப் புரிந்துகொண்டு, சிவராத்திரியில் பிரபல நடிகைகளை வரவழைத்து, ஆண்டுதோறும் விடிய விடியக் கூத்து நடத்திக் கும்மாளம் அடித்துத் தன்னை உலகப் பிரபலம் ஆக்கிக்கொண்ட தந்திரப் புத்தி. 

நடித்தல்:
பொதுமக்களிடம் உரையாற்றுகையில், பார்வையை உயர்த்தி அந்தரத்தில் எதையோ தேடுதல், நெஞ்சில் கை வைத்து பக்தியில் திளைத்தல், தன்னைத்தானே மெச்சும் வகையில் குலுங்கிக் குலுங்கி நகைத்தல், எதிராளி எதிரியாக இருந்தால் நெற்றிக் கண்ணைத் திறப்பதுபோல் சினந்து நோக்குதல் என்றிப்படியான அங்கச் சேட்டைகள் மூலம் கூடியிருப்போரைக் கவரும் நடிப்பாற்றல்.

நவீன தொழிநுட்பம் பயன்படுத்தல்:
பரவசத்தில் ஆழ்ந்திருப்பதுபோல் முகத்தில் பாவனைகள் காட்டி அவற்றைக் காணொலி ஆக்கி, தன் அடிப்பொடிகளின் மூலம்[மையத்தில் 4000 பேருக்குக் குறையாமல் யோகா தவிர வேறு வேலை இல்லாமல்[?!] தங்கியுள்ளனர் என்பது செய்தி]யூடியூப் போன்ற தளங்களில் இணைப்பது.

உலக அளவில் ஆகச் சிறந்த ஆன்மிகவாதி என்று புகழ் பெற்று, அதை நிலைநிறுத்த, மேற்கண்டவற்றோடு ஜக்கி கையாளும் தந்திர உத்திகள் இன்னும் எவையெவையோ என்பதை கடவுளின் குருவான அவர் மட்டுமே அறிவார்!