எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

செவ்வாய், 29 ஜூலை, 2025

“இந்தப் பிரபஞ்சம் அழியும்”... விஞ்ஞானிகளின் அண்டப்புளுகு!!!

அளவுக்கு அதிகமாகப் பொய் பேசித் திரிபவனை ‘அண்டப் புளுகன்’என்று கிண்டலடிப்பது நம்மவர் வழக்கமாக உள்ளது. 

அதென்ன அண்டப்புளுகு?

அண்டம்[பிரபஞ்சம்> சமஸ்கிருதச் சொல்.  தமிழில் அண்டம்’ அல்லது ‘புடவி’] என்பது நீளம், அகலம், சுற்றளவு, எல்லை[விளிம்பு], கனபரிமாணம் என்றிவற்றில் எந்தவொன்றையும் அளந்து கணக்கிட இயலாதவாறு விரிந்து பரந்து கிடக்கிற ஒன்றாகும். ‘அண்டப் புளுகன்’ என்னும் சொல்லாட்சி உருவானதன் பின்னணி இதுதான்.

விஞ்ஞானிகள் எதைச் சொன்னாலும் அதை இந்த உலகம் நம்புகிறது.

இந்த அண்டத்தின் ஆயுள் பற்றி இவர்கள் வெளியிட்ட ஒரு புளுகுச் செய்தி[?] அண்மையில் வெளியாகியிருக்கிறது.*

அது.....

அண்டத்தின் மொத்த ஆயுட்காலம் சுமார் 33.3 பில்லியன் ஆண்டுகளாம்.

அந்த ஆயுளில் கிட்டத்தட்ட 13.8 பில்லியன் ஆண்டுகள் முடிந்துவிட்டன. எஞ்சியிருக்கும் ஆயுட்காலம் 20 பில்லியன் ஆண்டுகள்தான். அவை கழிந்த பிறகு இது அழிந்துபோகும்[அண்டமே அழிந்தால் மிஞ்சுவது என்ன? அதை இவர்களால் படமெடுத்துக் காட்சிப்படுத்த இயலுமா?] என்கிறார்கள் இவர்கள்.

ஐயாயிரம்... பத்தாயிரம் ஆண்டுகளுக்கப்புறம் இந்த அண்டம்[பிரபஞ்சம்] எப்படியிருக்கும் என்று சிந்தித்தாலே நமக்கெல்லாம் தலை சுற்றுகிறது.

மில்லியன்> பத்து லட்சம்;  பில்லியன் என்பது 100 கோடி அல்லது ஆயிரம் மில்லியன் ஆண்டுகள். 'அண்டத்தின் மொத்த ஆயுட்காலம் 33.3 பில்லியன் ஆண்டுகள்(வேலைவெட்டி இல்லாமல் சும்மா இருந்தால் 33.3ஐ 100ஆல் பெருக்கிக் கோடிகளாக்கி, லட்சங்களாக்கி, ஆயிரங்களாக்கி, நூறுகளாக்கி மொத்த ஆண்டுகளைக் கண்டறியுங்கள்); 13.8 பில்லியன் ஆண்டுகள் கழிந்துவிட்டன; எஞ்சியிருப்பவை 20 பில்லியன் ஆண்டுகள் மட்டுமே' என்றெல்லாம் இவர்கள்[விஞ்ஞானிகள்] எப்படிக் கணக்கிட்டார்கள்?

நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, இந்த விஞ்ஞானிகளும் அவ்வப்போது எதையாவது புளுகிவைத்துப் ‘பந்தா’ பண்ணுகிறார்கள் என்பது என் எண்ணம்! ஹி... ஹி... ஹி!!!

                                          *   *   *   *   *

*//In a stunning new twist to the story of our cosmos, scientists say the universe may not expand forever.....// https://www.indiatoday.in/science/story/our-universe-will-die-astronomers-have-calculated-when-2761068-2025-07-25