எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வியாழன், 27 ஏப்ரல், 2023

கவர்ச்சிக் கன்னி ‘சமந்தா’[நடிகை] காக்கும் கடவுள் ஆனார்!!!

டவுள் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டால், நம்மில் பெரும்பாலோருக்கு உறக்கம் வராது; உண்ட உணவு செரிக்காது.

கடவுளின் பெயரால் கற்சிலைகளையோ, களிமண் பொம்மைகளையோ, பாம்பையோ, பன்றியையோ, குரங்கையோ கடவுளாக்கி வழிபடுவது பரம்பரைக் குணம் என்றாகிவிட்டது.

இந்தக் குணம்தான், தங்களைத் தாங்களே கடவுள் என்று சொல்லிக்கொள்ளும் காமச் சாமியார்களையும் மதப் பூசாரிகளையும் சுகபோகமாய் வாழச் செய்கிறது.

கண்ணுக்குத் தெரியாததும், உணரவே சாத்தியம் இல்லாததுமான ஒரு சக்தியையோ, சமயச் சாயம் பூசித் திரியும் சாமியார்களையோ கடவுளாகப் போற்றிக் கொண்டாடுவதையும்விட, நாலு பேர் அறிய, கொஞ்சமேனும் நல்ல காரியம் செய்யும் நடிகைகளைக் கடவுளாக்கிக் கோயில் கட்டி வழிபடுவது கண்டிக்கத்தக்க செயலல்ல.

நடிகைகளுக்குக் கோயில் கட்டிக் கொண்டாடுவது புத்தம் புதியதொரு வழக்கமும் அல்ல.

குஷ்பு, நயன்தாரா, நமீதா, ஹன்சிகா மோத்வானி என்று ஏற்கனவே கடவுள் ஆக்கப்பட்ட நடிகைகள் கணிசமாக உள்ளனர்.

இந்த வரிசையில் கடவுளாகியிருப்பவர் நடிகை சமந்தா அவர்கள்[நவராத்திரிக் கும்மாளத்தில், ஜக்கி சமந்தாவின் இடுப்பைச் செல்லமாகக் கிள்ளியபோதே அவரும் ஜக்கியைப் போலவே கடவுள் ஆகிவிட்டார்].


‘ஆந்திரா’ மாநிலம் ஆலபாடு என்னும் கிராமத்தில் ‘தெனாலி சந்தீப்’ என்பவர்தான் சமந்தா கடவுளுக்குக் கோயில் கட்டி, புண்ணியம் தேடிக்கொண்டிருக்கிறார்.

கோயிலுக்குள் பெண் தெய்வம் சமந்தாவின் அழகிய சிலையையும் நிறுவியுள்ளார். சமந்தா அம்மையார், அறக்கட்டளை மூலம் ஆற்றிவரும் சமூகப் பணிகள் இப்படியானதொரு நல்ல காரியத்தில் தன்னை ஈடுபடச் செய்ததாகக் கூறியிருக்கிறார் தெனாலி சந்தீப்.

தெனாலி சந்தீப்பிடம் நாம் வைக்கும் ஒரு கோரிக்கை:

கோயிலுக்குச் ‘சமந்தா தேவி கோயில்’ என்று பெயர் வையுங்கள். சமந்தா ஒரு நடிகை என்பதை மறந்து அவர் ஒரு பெண் தெய்வம் என்னும் நினைப்புக்கு வழிவகுக்கும் செயல் அது.

இயலுமாயின், இந்தப் புண்ணியப் பூமியில் நிறுவப்பட்டுள்ள ‘சத்துக்குரு’வின் ஆதியோகி சிலையையும், சர்தார் வல்லபாய்ப் பட்டேல் அவர்களின் சிலையையும்விட உயரமானதொரு சிலையைச் சமந்தா தேவிக்கும் வைத்திட முயற்சி செய்யுங்கள்.

உங்களுக்கு மேலும் மேலும் புண்ணியம் சேரும்.

‘தெனாலி சந்தீப்’ அவர்களுக்கு நம் மனம் நிறைந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்! 

***நாளை[28.04.2023] கோயில் திறக்கப்படவுள்ளது என்பது இன்றைய[27.04.2023]ச் செய்தி.

https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/after-nayanthara-samantha-gets-a-temple/articleshow/99805198.cms?story=5

இவன் ‘பாதிரி’யா, மனித உயிர் பறிக்கும் கொலைகாரப் பாவியா!?!?

‘கென்யா’ நாட்டின் வடகிழக்குப் பகுதியில் உள்ளது ‘மாலிண்டி’ என்னும் நகரம்.

இங்கு 'குட் நியூஸ் இன்டர்நேஷனல் தேவாலயம்' என்னும் பெயரில் தேவாலயம்[800 ஏக்கர் பரப்புளவுள்ள பண்ணையில்] உள்ளது. இதன் தலைமைப் பாதிரியாராக இருப்பவர் ‘பால் மெக்கன்சி’. 


மற்றப் பாதிரியார்களின் போதனை எவ்வாறிருப்பினும், இவர் தன்னைப் பின்பற்றும் மக்களிடம், “உண்ணாவிரதம் இருந்தால் ஏசுவைப் பார்க்கலாம்” என்று தொடர்ந்து போதனை செய்துள்ளார். மிகப் பல முட்டாள்கள் பட்டினி கிடந்து செத்தொழிந்திருக்கிறார்கள்.

 

அண்மைத் தகவல்களின்படி, 90 பிணங்கள் மீட்கப்பட்டிருக்கின்றன[பெண்கள், சிறுவர்கள் உட்பட்]. சுமார் 213 பேர் காணாமல்போயிருக்கிறார்கள்.  உடல் மெலிந்து, காவலரின் பிடியில் சிக்காமலிருக்க  அருகிலுள்ள காடுகளில் பலர் ஒளிந்துகொண்டிருக்கிறார்கள்.



பாதிரி கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


இந்த நிகழ்ச்சி, மூடநம்பிக்கை வளர்ப்பில், இந்துச் சாமியார்களைக் கிறித்துவச் சாமியார்கள் மிஞ்சிவிட்டனர் என்பதைக் காட்டுகிறது.


“பாதிரியே, நீ முதலில் உண்ணாவிரதம் இருந்து ஏசுவைக் காண்பதற்கான பயணத்தை மேற்கொள். நாங்களும் பட்டினி கிடந்து ஏசுநாதரைக் காண உன் பின்னால் அணிவகுக்கிறோம்” என்று சொல்லும் அறிவு அங்குள்ளவர்களுக்கு இல்லை.


பலநூறு பேரின் உயிரைப் பறித்த இந்த மாபாதகனுக்கு ‘கென்யா’ தேசம் என்ன தண்டனை வழங்கப்போகிறது?


தண்டனை வழங்குமா, அல்லது, கட்டிய பெண்டாட்டியைக் கொன்று புதைத்துவிட்டு, மகாசமாதி அடைந்துவிட்டதாகப் புளுகித் திரிகிறவனையெல்லாம் இங்கே மகான் ஆக்கிக் கொண்டாடுவது போல், கொலைகாரப் பாதிரியையும் அந்த நாட்டு அரசு விடுதலை செய்து கொண்டாடுமா?!


கென்யாவில் கொஞ்சமே கொஞ்சம் புத்திசாலிகளேனும் உள்ளார்களா இல்லையா என்பது வரும் நாட்களில் தெரியக்கூடும்! 


https://www.dailythanthi.com/News/World/kenya-cult-deaths-hits-90-as-authorities-expand-operation-951772?infinitescroll=1