எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

செவ்வாய், 31 ஜனவரி, 2017

கடவுள்...மனிதன்...சாம்பார்...ரசம்...பாயசம்!!!

100% இது நகைச்சுவைப் பதிவல்ல!

“உலோகக் கம்பிக்குள் மின்சாரம் பாய்வதைப் பார்க்க முடியாது; ஆனால், உணர முடியும். அது போல, கடவுளையும் கண்களால் காண இயலாது; உணர மட்டுமே முடியும்” என்றிப்படிச் சொன்னார்கள்... சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் ஆன்மிகவாதிகள்.

‘கனியின் சுவையை அதை உண்ணும்போது உணரலாமே தவிர கண்களால் காண முடியாது[வார்த்தைகளால் விவரிப்பதும் சாத்தியமில்லை]. மலரின் வாசனையை நுகர்வதன் மூலம் உணர இயலுமே தவிர, பார்க்க இயலாது. மென்மையானவற்றைத் தொடுவதன் மூலம் ஒருவித இன்பத்தை உணரக்கூடுமேயன்றி அச்சுகத்தை விழிகளால் காண்பது இயலாது. இன்னிசையில் பெறும் சுகமும் இப்படித்தான்’ என்று இவை போன்ற உதாரணங்களைச் சொல்லிச் சொல்லி, கடவுளைக் காண முடியாது;  உணர மட்டுமே முடியும்’ என்று சாதித்துக்கொண்டிருக்கிறார்கள் அவர்கள்.

கம்பிக்குள் மின்சாரம் பாய்வதைத் பார்க்க முடியாதுதான். ஆனால், அதைத் தொட்டு உணர முடியும். அது போல எதைத் தொட்டால் கடவுள் இருப்பதை உணர்வது சாத்தியப்படும்?

கனியின் சுவையை, அதைச் சுவைப்பதன் மூலம் உணர முடியும்.  பூவின் வாசனையை, அதை நுகர்வதன் மூலம் உணர முடியும். எதைச் சுவைத்தால், எதை நுகர்ந்தால் கடவுளை உணர முடியும்? 

எந்தவொரு பொருளாயினும், அதனுள் ஊடுருவியிருக்கும் சக்தியை அல்லது சுவையை அல்லது மணத்தை அல்லது சுகத்தை ஐம்புலன்கள் வாயிலாக நம்மால் உணர முடிகிறது.

பார்த்தறிய இயலாத சினம், சீற்றம், பொறாமை, இரக்கம் போன்ற உணர்ச்சிகளை, உடம்பில்[குறிப்பாக நரம்புகளில்] நிகழும் அதிர்வுகளின் மூலம் உணர்கிறோம்.
இவ்வாறு, ஐம்புல நுகர்ச்சியின் மூலமோ அதிர்வுகளின் மூலமோ கடவுளை உணர்வதற்கான சாத்தியம் கொஞ்சமும் இல்லை என்பது அறியற்பாலது.

கடவுளை உணர இயலாத நம்மால் நமக்குள்ள ஆறாவது அறிவை மட்டும் உணர்வது சாத்தியமாகிறது. அது எப்படி?

ஐந்தறிவுவரை உள்ள பிற உயிரினங்கள் செய்யாத செயல்களை நாம் செய்வதால்[சோறு சமைப்பது, சாம்பார் ரசம் பாயசம் வைப்பது, புதிய புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவது முதலானவை] அது சாத்தியமாயிற்று.

மனிதர்களாகிய நம்மைப் போல அல்லது நம்மைக் காட்டிலும் அறிவுபூர்வமானதும் உயர்வானதுமான செயல்களைக் கடவுள் செய்திருந்தால், அச்செயலின் மூலமாகவேனும் அவரை நம்மால் உணர முடியும்.  அவ்வாறு அவர் செய்திருப்பதற்கான ஆதாரம் ஏதும் இன்றளவும் கிடைத்திடவில்லை. இல்லை...இல்லவே இல்லை.

“இல்லையில்லை. கடவுளின் இருப்பை உணர்ந்ததாக[பார்த்ததாகச் சொல்வது 100% புருடா] அந்த ஞானி சொன்னார்; மகான் சொன்னார்; அவதாரம் சொன்னார்; தூதுவர் சொன்னார்; புதல்வர் சொன்னார்; அவர் சொன்னார்; இவர் சொன்னார்” என்றெல்லாம் பரப்புரை செய்வதும், கடவுளின் பெயரால் எண்ணற்ற மூடநம்பிக்கைகளை வளர்ப்பதும் மனித குலத்துக்குக் கேடு விளைவிக்கும் செயல்களாகும்.

[ஆறாவது அறிவின் ‘அனுமானங்கள்’ வாயிலாக அவரின் இருப்பை உறுதி செய்வதும் சாத்தியமல்ல[தொடர்புடைய பதிவின் முகவரி:  http://kadavulinkadavul.blogspot.com/2016/03/blog-post_93.html ].

எனவே, மேற்குறிப்பிட்ட செயல்களைத் தவிர்த்து,  பொருள்களின்/உயிர்களின் தோற்றம், இயக்கம், அழிவு குறித்தெல்லாம் நடுநிலையுடன் சோர்வின்றி ஆராய்ந்துகொண்டிருப்பதே அறிவுடையோர் ஆற்ற வேண்டிய இன்றியமையாப் பணியாகும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++